அத்தியாயம் 37 -2

“போறது எண்டாலும் ஆறுதலாய்ப் போகலாம் கயல். அங்க இருந்து வந்த பிள்ளை ஒருக்காப் போறதில பிழையும் இல்ல.” மெல்லச் சொன்னார்,  வேதா.

 “அது என்ன தேவைக்கு எண்டு கேக்கிறன்? அங்க என்ர பேத்தி சும்மா இருக்கேல்லயே! அவேட பிள்ளைகளப்  பாராமரிச்சவள், முறைக்கு அவேதான் வந்து சுகம் கேட்டிட்டுப் போக வேணும். நீ போகத்  தேவேல்ல!”   என்றுவிட்டு, “கோப்பி போட்டியா பிள்ள?”  வேலைக்கு நிற்கும் பெண்ணை அழைத்தபடி சமையலறைக்குள் நுழைந்தார், அம்மம்மா.

பூபாலன், பிள்ளைகளை தனக்கு யாரோ போல் கதைப்பதைக் கேட்கவே பிடிக்கவில்லை, கயல்விழிக்கு. “இவேட சண்டைக்குள்ள அகப்பட நான் ஆளில்ல சித்தி, அவா கோப்பி கொண்டு வாறத்துக்குள்ள வந்திருவன்.” பதிலுக்குக் காத்திராது வெளியேறிவிட்டாள்.

“அவேக்கு  சொக்கிலேட் அப்பிடி ஏதும் கொண்டு வரேல்லையா?” வேதா.

“அதெல்லாம் பிறகு குடுக்கலாம், இப்ப ஒரு ஹை சொல்லிட்டு வந்திருரன்.” ஓடினாள்.

விமான நிலையத்தில் இறங்கியதும், ‘வந்திட்டன். டேக் கெயர் யாழ்ப்பாணம் போயிற்று எடுக்கிறன். பிள்ளைகள் பத்திரம்.’ சிக்கனமாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள், விடியட்டும் பிள்ளைகளோடு கதைப்பம் என்ற எண்ணத்தில். இப்போது வந்ததும் வராததுமாக இங்கு வர எண்ணியும் இருக்கவில்லை. ஆனால், யாழ்ப்பாணம் வந்ததும் பூபாலன் அன்னையைப் பார்த்துவிட்டால்தான் அடுத்த வேலை ஓடும் போலிருக்கவே வந்துவிட்டாள்.

வந்த வேகத்தில் கேற்றைத் திறந்தவள் நடை தயங்கிற்று. ஆழ மூச்செடுத்து விட்டாள். நச்சென்று சொல்ல வேண்டியதை மீண்டுமொருதரம் சொல்லிப் பார்த்துக் கொண்டவள் முகத்தில் எக்கச்சக்கமாகவே கோபம்! வாசல்வரை விரைந்த நடையில் அது பளிச்சிட்டிட்டு.

 

பூபாலன் தாயின் பேச்சுக் குரல் கேட்க, திறந்து கிடந்த கதவால் விழிகளை சுழற்றினாள். வாயில்புறம்  தெரியும் வகையில் அமர்ந்திருந்த சாரதா இவளைக் கண்டுவிட்டு விருட்டென்று எழுந்தார்.

கையில் இருந்த ‘ஐபாட்’டை வைத்துவிட்டு, “கயல்! வான,  உள்ள வாருமன். வந்து சேர்ந்தாச்சோ! கொஞ்சத்தில நானே  வர இருந்தன்.” விரைந்து வந்து கட்டிப்பிடித்து கன்னம் வருடியவர், அவள் அமைதியில் நெற்றி சுருக்கினார்.

“என்னம்மா!”

“இப்ப உங்களுக்கு நல்ல சந்தோசம் தானே? உங்கட மகனின்ட வாழ்க்கேல நல்லது நடக்க விடாமல் நந்தி போல அந்த வீட்டில இருந்த நான், நீங்க அப்பிடி நினைக்கிறிங்க எண்டு கேட்ட அடுத்த நிமிசமே அங்க இருந்து வெளிக்கிடுற அலுவல் பார்த்து இந்தா வந்திட்டன். இனி …” படபடத்தவளுக்கு தொண்டை அடைத்து, மூக்கு கரித்து விழிகள் நிறைந்து…

“ச்சேய்!” அக்கணம், தன்னிலே மிகவும் கோபம் கொண்டாள், கயல்விழி.  விழிகளை அழுந்தத்  துடைத்தபடி அவரிலிருந்து நன்றாக விலகி நாலெட்டு எடுத்து வைத்துவிட்டு, திகைத்து நின்றவரை கோபம் மறையாது பார்த்தாள்.

“எப்பிடி எப்பிடி, நான் அங்க இல்லாமல் இருந்திருக்க இத்தறிக்கு உங்கட மகன் புது வாழ்க்க தொடங்கி சந்தோசமா இருந்திருப்பார் என்ன? நான் நந்தி போல…இல்ல இல்ல வைக்கோல் பட்டறை நாய் போல அங்க இருந்து …” கடித்த பற்றைகளிடையே சொன்னவளை, பதறிப் போய்த்  தடுத்தார் சாரதா.

“ஐயோ கயல் அது, அண்டைக்கு உம்மட அம்மம்மா சொன்ன கதைகளுக்கு நானும் கோவத்தில் சொன்னதாச்சி! மனசில இருந்து ஒரு வார்த்த உம்மக் குறையா சொல்லியிருந்தாலும் நானே அழுகித்தான் சாவன்.” கண்கலங்கினார்.

“நீங்க ஒரு சாட்டும் சொல்ல வேணாம் ஆன்ட்டி. எல்லாம் முடிஞ்சிட்டு, விடுங்க. இனி உங்கட மகனுக்குக் கலியாணம் செய்து வைங்கவன் பாப்பம்!” முடிந்தால் செய்து வையுங்களேன் என்ற சவாலோ! அவள் பார்வையிலும் அதுதான் இருந்தது போலிருந்தது, சாரதாவுக்கு.  வந்த வேலை முடிந்தது என்ற கணக்கில் விசுக்கென்று திரும்பி நகர்ந்தாள். 

அவள் சொன்ன மாதிரியில் கணம் அசையாது நின்றுவிட்ட சாரதா,  “கொஞ்சம்  நில்லும் பிள்ள, நீர் முழுசும் தெரியாமல் கோவப்படுறீர்! பாக்கிற நேரம் எல்லாம் ரெண்டாம் தாரமா ரெண்டு பிள்ளக்காரனுக்கு என்ர பேத்தி கேக்குதோ எண்டு சண்டைக்கு இழுத்தா நானும் எத்தினைக்குப் பொறுக்கிறது சொல்லும்? அதில தான் அண்டைக்கு ஆத்தாமல் அப்படிச் சொல்லிப் போட்டன். அந்தளவுக்கு பாலன் என்ன சீரழிஞ்சு கிடக்கிறானா சொல்லும்?  எப்பப் பார் அவனப் பத்திக் கேவலமாக்  கதைக்கிறதுதான் உம்மட அம்மம்மாவுக்கு வேலையே! பெத்த தாய் எனக்கு எப்பிடி இருக்கும்?” கண்ணீர் வழிய வழிய நியாயம் கேட்கும் பாவனையில் கேட்டார், சாந்தா. கயலோ, திகைத்து நின்றுவிட்டாள். அவள் கண்முன்னால், அவள் அன்புக்குரிய பூபாலனும் குழந்தைகளும் வந்து சென்றார்கள்.

“அம்மம்மாவும் சாராதா ஆன்ட்டியும் பெரிய சண்டையாம் அக்கா. அதில இப்பிடி இப்பிடியெல்லாம் சாரதா ஆன்ட்டி சொல்லி இருக்கிறா. அம்மம்மாவுக்கு ஒரே காய்ச்சல். ‘என்ர பேத்தி இப்பிடியெல்லாம் கண்ட மனுசரிட்டையும் ஏச்சுப் பேச்சு வாங்க வேணுமோ!’ எண்டு சொல்லி சொல்லி அனத்தியபடி”  என்றுதான் சுடர் சொல்லியிருந்தாள்.

“எது எப்பிடியோ…” வந்த வேகமும் கோபமும் வடிந்துவிட, சுரத்தில்லாது ஆரம்பித்தவள், “சூட்டிடிடி…ஸ்வீட்டி…எங்கப்பா முகத்தக் காணேல்ல?” என்ற குரல்களில் சிலையாகி நின்றாள்.

error: Alert: Content selection is disabled!!