அத்தியாயம் 38 -1

கயல் பார்வை தவிப்போடு பாய்ந்த இடம் நோக்கினார், சாரதா. 

“தம்பி தான் கதைச்சுக் கொண்டிருந்தவன், நீர் வந்திட்டிரா எண்டு கேக்கத்தான் எடுத்தான். உம்மக் கண்டிட்டு அப்பிடியே வச்சிட்டு வந்திட்டன்.” அவர் ஐபாட் நோக்கி நகர முதல் ஓடிச்சென்று எடுத்துவிட்டாள், கயல்விழி.

“சூட்டி… நானும் வாறன் சூட்டி!” ஆதித்தின் கரங்கள் பொத்தியபடி அவள் நோக்கி நீண்டிருந்தன. உதடுகள் கோண பரிதாபமாக அழத் தொடங்கிவிட்டான். பார்வை மட்டும் கண்ணீரோடு அவளில் தான். 

“எங்கட குட்டியப்பர் இன்னுமா தூங்கேல்ல!?” கேட்டவள், “ஸ்வீட்டி எப்ப வீட்ட வருவீங்க?” என்ற லாதியின் குரலில், கன்னத்தில் கையூன்றி கலங்கிய கண்களோடு இருந்தவளில்.

என்ன பதில் சொல்லவியலும்? கலங்கித் தடுமாறி நின்றவளுக்கு அந்தக் கணமே அவர்களைக் கைவளைக்குள் கொண்டு வரவேண்டும் போலிருந்தது.

ஆதித் மடியிலிருக்க, லாதி தகப்பனில் அணைந்து நின்றபடி மேசையில் கையூன்றி நின்றுகொண்டிருந்தாள். பூபாலன் இடக்கை நாடிக்கு முண்டு கொடுத்து அப்படியே வாயைப் பொத்தியிருந்தது.

வெகு கூர்மையான பார்வை அவள் முகத்தில். பிள்ளைகளில் இருந்து மெல்ல நகர்ந்து அவன் விழிகளைப் பார்த்த கணமே அதன் கூர்மையால் தாக்கப்பட்டாள், கயல்விழி. அந்நொடியே பார்வையை விலத்திக்கொண்டவளுக்கு அவன் முகம் பார்க்க முடியவில்லை. இந்தா அந்தா என்றது அழுகை. அதற்குத் தொடர் அதட்டல் போட்டபடி, மீண்டும் பிள்ளைகளிடமே கவனம் பதிக்க முயன்றாள்.

“சரசுப் பாட்டி எங்க? சித்தி, மாமா ஆக்கள் தூங்கிட்டினமா? எப்பப் போகினம்? இனிமேல் இப்பிடி எல்லாம் முழிச்சு இருக்கிறேல்ல சரியா?” அவள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் லாதி பதில் சொன்னாள் என்றால், சின்னவனோ, “நானும் வரப்போறன் சூட்டி! அம்மம்மா பாக்க வரட்டாம், வரப் போறன்.” சிணுங்கியழுதபடி  இராகம் இழுத்தான்.

“ஒகே ஒகே, பள்ளிக்கூடம் லீவு விட்டோன்ன ஆதித் குட்டியனும் அக்காவும் அப்பாவோட இங்க வரலாம் சரியா? சூட்டி பாத்துக்கொண்டிருப்பன்.” அவள் சொன்னதும் பட்டென்று அழுகையை நிறுத்தினான், சின்னவன். சிலநொடிகள் அவனில் தெரிந்த அமைதி, இவள் சொன்னதை மீண்டும் மீட்டிப் பார்க்கிறானோ என்றவகையில் இருந்தது.

“ப்ராமிஸ் செல்லம்! அதுவரைக்கும் அழக்கூடாது!” கயல் ஆரம்பிக்க,  “அப்பா நான் வெளிக்கிடப்போறன், கெதியாப்போவம், சூட்டி பாத்துக்கொண்டு இருக்கிறா!” என்றபடி, தகப்பன் மடியிலிருந்து நழுவி இறங்கிவிட்டான்.

“இப்ப இல்லடா. ஹொலிடேஸ் ல, ஓமல்லா அப்பா!” அதில் சற்றும் திருப்தியில்லாது கேட்டாள், லாதி.

பதில் சொல்லாது கயலையே பார்த்தபடி இருந்தான், பூபாலன்.

“அப்பா வெளிக்கிடுவம் வாங்க!” மகன் பிடித்திழுக்க, மீண்டும் அவனைத் தூக்கி இருத்தி, நெளிந்து நழுவி இறங்க முனைந்தவனை இருகைகளாலும் வளைத்துக்கொண்டு, “ஆக…இவ்வளவுவையும் மறைச்சு வெளிக்கிட்டுப் போயிருக்கிறீர் என்ன?” பூபாலன் குரலுக்கும் மேலாக சின்னவன் அழுகை வலுத்திட்டு, ஐபாட் திரையருகில் முகத்தைக் கொண்டு வந்தான், ஆதித்.

“எனக்கு…வேற என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல. என்னால உங்கட  வீட்டுக்க ஒரு பிரச்சினையும் வேணாம் எண்டு நினைச்சன். யாருக்குமே என்னால பிரச்சினை வாறது எனக்கு விருப்பம் இல்ல.” மெல்லச் சொன்னவள், “கயல்…வந்து சேர்ந்தாச்சா?” என்றபடி வந்த  பூபாலன் தந்தையைப் பார்த்துப் பட்டென்று கண்களைத் துடைத்துக்கொண்டு முறுவலித்தாள்.

“ஓம் அங்கிள், கொஞ்சம்  முதல் தான் வந்தனாங்க. எப்பிடி… சுகமா இருக்கிறீங்களா?” நலம் விசாரித்தாள்.

“இந்தா  நீரே பாக்கிறீர்  தானே? ஏதோ இருக்கிறம் மா, நீர் எப்பிடி இருக்கிறீர்?” பாசத்தோடு அவள் தலையை வருடினார்.

‘நானா? எப்பிடி இருக்கிறன்?’ தானே தன்னைக் கேட்டுக்கொண்டவளால் பதிலிறுக்க முடியவில்லை. சிரிக்க முயன்றாள்.

“என்னவாம் உம்மட சின்னாக்கள்? உம்ம அவ்வளவு லேசில் வர விட்டிட்டினமா? கடைசிவரை விடாயினம் எண்டு நினைச்சன்.” சொன்னவர் பார்வை மின்னலாக மகனை உரசி மீண்டிட்டு.

‘ஓம் ஓம் தங்களில நானும் ஒருத்தி எண்டு போட்டுத்தான் அனுப்பினவே!’ மனம் முறுக்க பூபாலனை முறைத்தாள், இவள்.

“ஏன்  நிண்டு கொண்டு கதைக்கிறீர்? இருந்து கதையுமன். ” என்றவர், “நடந்திட்டு வந்தது கசகச எண்டு இருக்கு; ஒரேதா குளிச்சிட்டு வாறன், கதையும் என்ன?” என்றுவிட்டு, மீண்டும் மகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தவர், கண்ணீரோடு நிற்கும் மனைவியை ஊன்றிப் பார்த்தார்.

“பயணம் செய்து வந்த பிள்ளைக்குத் தேத்தண்ணி ஏதாவது குடுத்தீங்களா? குடுங்கோவன். எனக்கும் சேர்த்தே போடுங்க, இந்தா வாறன்.” சிலையென நின்றுகொண்டிருந்த மனைவிக்குச் சொன்னபடி நகர்ந்தார்.

சாரதா சமையல் அறை நோக்கி நகரவும் அங்கு கிடந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள், கயல்விழி. 

பிள்ளைகளை மாறி மாறி சமாதானம் செய்வித்தாள். அது ஒன்றும் இலேசாகவும் இருக்கவில்லை. முடிவில் இவளை அங்கு அழைத்தார்கள் இல்லையோ தாம் வருவதாக நின்றார்கள்.

“உங்களுக்கு… என்னில கோவம் என்ன?”  துளைக்கும் அவன் பார்வையைத் தாங்கி மனதில் உள்ளதைச் சொல்ல மிகவுமே அந்தரப்பட்டுப் போனாள், கயல். 

“எனக்குச் சுடர் இப்பிடி இப்பிடி எண்டு அண்டைக்குச் சொல்ல எப்பிடி இருந்தது தெரியுமா? நான் ஆர் வாழ்க்கையிலும் இடைஞ்சலா இருக்க வேணும் எண்டு எப்பவுமே நினைக்கேல்ல. நினைக்கவும் மாட்டன். அதான்  வந்திட்டன்.” 

‘வைக்கோல் பட்டறை நாய்’ என்ற பதம் அவளை, அவள் மனதின் மிக நுண்ணிய இடத்தில் மிக மிக ஆழமாகவே தைத்திருந்தது. அந்த வலி தந்த கோபமும் வெறுப்புமே அவளை இன்று இங்கே கொண்டுவந்து நிறுத்தியும் இருக்கின்றது. அதை விளங்கிக் கொள்ளுங்களேன் என்ற கெஞ்சல் அவள் பார்வையிலும் குரலிலும் இருந்திட்டு. 

 

என்னதான் இருந்தாலும் இப்படி ஒரு கதை வருகுது என்றதை அவனிடம் சொல்லியிருக்க வேண்டுமா இல்லையா? அதற்கான தீர்வுக்கு யாழ்ப்பாணம் வந்திருக்க வேண்டியும் இருந்திராது. விசுக்கென்று அவள் பிரிந்து சென்ற அந்தக் கண வலி இன்னமும் அதன் இருப்பை உணர்த்தி நிற்கின்றதே! அவனையும் குழந்தைகளையும் துடிக்க வைத்து விட்டுப் பிரிந்து போக அவன் தாய் உதிர்த்த வார்த்தைகள் போதுமாக இருந்ததோ! தன்னுள் அவளை உணர்த்தியதே இந்தப் பிரிவுதான் என்பதை துளியும் நினையாது கோபமே கொண்டான், பூபாலன்.  

 

error: Alert: Content selection is disabled!!