“அப்பாவால அப்பாவால” தகப்பன் மடியில் இருந்து எம்பி எம்பித் துள்ளியமர்ந்தான் ஆதித்.
“ஆங்! என்ன நடந்தாலும் பரவாயில்ல எண்டு முழுசிக்கொண்டிருக்கிற அப்பாக்கு அடி போட்டாச் சரி!” அவள் சொல்லி முடிக்கவில்லை, “நான் நான்…” ஆதித் எழுந்து நின்று துள்ளியபடி மேற்கையில் தட்டுப் போட்டான்.
“இப்பிடி இல்ல. அப்படியே மீசையைப் பிடிச்சு இழுத்து…” கயல் சொல்லி முடிக்கவில்லை, அவனுக்குத்தான் கை வந்த கலையாச்சே! இரு பிஞ்சுக் கரத்தாலும் தகப்பனின் மீசையைப் பிடித்து அப்படி இப்படி ஆட்டி நெற்றியால் முட்டி, துள்ளி என்று தகப்பனை ஒரு வழி பண்ணினான்.
அப்போதும் பூபாலன் பார்வை கயல்விழியின் கண்களைத்தான் தொட்டுச் தொட்டுச் சென்றிட்டு.
வீட்டில் ஓய்வாக இருக்கையில் பூபாலனோடு பிள்ளைகள் இப்படித்தான் விளையாடுவார்கள். அவனைப் படுக்கவிட்டு ஏறி உழக்கி உருண்டு பிரண்டு அவர்கள் விளையாடுவதைப் பார்கையில் டிஸ்கவரி சனலில் சிங்கக்குட்டிகள் தகப்பன் தாய் சிங்கங்களோடு விளையாடுவது போலிருக்கும். அந்த நேரங்களில், பூபாலன் ஏதாவது இடக்கு மிடக்காகச் சொல்லுவதும், “அப்பாக்கு நாலு போடுங்க, சேட்டை அவருக்கு!” கயல் சொல்வதும் வழமையாக நடப்பதுதான். அதுவும், கடந்த ஒன்றரை வருடங்களாக தாம் நால்வருமாகக் கழித்த, கலகலப்பான அத்தருணங்கள் நினைவில் உலாப்போக விழிகள் சுரக்கப் பார்த்திருந்தாள், கயல்விழி.
தம்மை மறந்து அவர்கள் நால்வருமாக ஒரு உலகில் இருப்பதை பூபாலன் அன்னை தந்தைக்கு நன்றாகவே புரிந்து உள்ளம் பூரித்திட்டு. இதை, இந்தப் பிணைப்பைத்தானே அவர்களும் விரும்பினார்கள். கைவிட்டுப் போய்விடுமோ என்று ஏங்கித் துடித்தார்கள்? சந்தோசத்தோடு விழிகளைத் துடைத்துக்கொண்டு கையில் இருக்கும் தேநீரைக் கயல்விழிக்குக்கொடுக்கும் நோக்கில் நகர்கையில் தான் வாயிலில் சிலையென நின்றிருக்கும் சுடரைக் கண்டார், சாந்தா.
“வாம்மா சுடர், சுகமா இருக்கிறீங்களா? அம்மா ஆக்களும் வந்திருக்கினமோ!” வரவேற்றார்.
“நல்லா இருக்கிறம்.” என்றவள் அவர் காட்டிய மகிழ்வுக்கு எதிரொளி காட்டவில்லை. காட்டப் பிடிக்கவில்லை. ‘அக்காவை என்ன எல்லாம் சொன்னவர்? கடைசில அம்மம்மா பயந்ததுதான் இங்க நடக்கப் போகுது போல! அப்ப இவா விட்ட வார்த்தைகளுக்கு ஆர் பொறுப்பு? முதல் இந்த அக்காவ என்ன செய்யிறது?’ மனதில் சிடுசிடுப்போடுதான், சாந்தாவின் குரலுக்குத் திரும்பிய தமக்கையிடம், “அக்கா, உங்கள அம்மம்மா உடனே வராட்டாம்!” இறுக்கமாகவே சொன்னாள்.
“போகலாம், நீ முதல் உள்ள வாவன்.”
“இல்லக்கா போவம், வாங்க.”
“என்ன அவசரம் சுடர்? கயல் தேத்தண்ணி குடியும்.” அவள் கையில் கோப்பையைக் கொடுக்க, “இது எனக்கா? சுடருக்கும் கொண்டு வாங்கவன்.” என்ற பூபாலன் தந்தை, “தாத்தாவோட கதை இல்ல அவேட ஸ்வீட்டியோட மட்டும் தான் என்ன?” ஐபாட்டைப் பார்த்துச் சொல்லிவிட்டு கயல்விழிக்கு எதிரில் அமர்ந்து கொண்டார்.
“என்னடி உள்ள வாவன்.” தமக்கை மீண்டும் மீண்டும் அழைக்க, வேண்டா வெறுப்போடு தான் வந்தமர்ந்தாள், சுடர்விழி.
“எப்பிடி இருக்கிறீர் சுடர்?” பூபாலன் நலம் விசாரித்தான். சிக்கன முறுவலோடு பதில் சொன்னவளை, தோளோடு அணைத்துக்கொண்ட கயல்விழி, “ஆதித் லாதி, சுடர் ஆன்ட்டியோட கதைக்கேல்லையா?” சின்னவர்களைப் பேச்சினுள் இழுத்தாள்.
“நோ!” வெடுக்கென்று சொன்னான், ஆதித்.
“ஹை சுடர் ஆன்ட்டி!” லாதி.
“என்னப்பர் நோ?” கயல்விழி கேட்க, “என்ர சூட்டி! நீங்க அங்கால தள்ளி இருங்க!” ஆதித், சுடரை முறைத்தபடி சொல்ல, “ஹா..ஹா” சிரித்துவிட்டாள், சுடர்.
“அதெல்லாம் அப்ப, உங்கட வீட்ட இருக்கிற மட்டுக்கும் தான் சரியோ? இப்ப இவா என்ர அக்கா! எனக்கும் மட்டும் தான்.” தமக்கையை இறுகக் கட்டிக்கொண்டு பெரியவர்களில் உள்ள மனக்கசப்பில் சின்னவர்களோடு பொருதுக்குத் தயாரானாள், சுடர்விழி.
“நோ நோ நோ… சூட்டி ஆதித் ட”
“லாதிடையும்”
சின்னவர்கள் அங்கிருந்து சொல்ல, இங்கிருந்து சுடர் சீண்ட, “எரும மாடு, இப்பத்தான் அவையள ஒருமாதிரி சமாளிச்சு வச்சிருக்க, பிறகு அழ வைக்கிற!” தங்கையின் காதைப் பிடித்து முறுக்கினாள், கயல்விழி.
“ஆஆஆஆ…அக்கா நோகுது!” அவள் சிணுங்கியதில் பிள்ளைகளுக்கோ, பெரும் மகிழ்வு.
“இனி முழிச்சு இருந்தது போதும், ரெண்டு பேருக்கும் குட் நைட் போய்த் தூங்குங்கோ! தூங்கி எழும்ப ஸ்வீட்டி கோல் பண்ணுவன், கதைப்பம் சரியா?” தேநீரைப் பருகியபடி சொன்னாள், கயல்விழி.
“நோ, துக்கம் வரேல்ல!” இருவருமே ஒரு சேரச் சொன்னார்கள். அதேநேரம், கண்களைக் கசக்கி பிடரித் தலையைச் சொறிந்தான் ஆதித். லாதியின் கண்களில் உறக்கம் அப்படியே தெரிந்திட்டு.
“அப்பிடி எல்லாம் சொல்ல ஏலாது ஓகே! போய்ப் படுக்க தூக்கம் வரும்” என்றவள், “தேத்தண்ணி நல்ல ருசியா இருக்கு ஆன்ட்டி, தாங்யூ!” சாந்தாவிடம் சொல்லிவிட்டுப் பூபாலனைச் சீண்டலாகப் பார்த்தாள்.
அவன் கண்களில் வெளிப்படையாகவே கசிந்திட்ட நேசம் தடுமாற வைத்தாலும், “கொஞ்சக் காலமா குறிப்பா உங்கட மகன் வீட்ட இருக்கத் தொடங்கின பிறகு பெரும்பாலும் விடிய வெள்ளன சுட சுட களனித் தண்ணிதான். குடிச்சுக் குடிச்சு நாக்குச் செத்தே போயிற்று ஆன்ட்டி!” அவனைக் கடித்து வம்பிழுத்தாள்.
“ஏன் சொல்ல மாட்டீர்? பாவம் பாத்து இருக்கிற இடத்துக்கு தேத்தண்ணி, சாப்பாடு எண்டு செர்வ் பண்ணின எனக்கு இது வேணும் தான்.” என்ற பூபாலன், “சுடர் இதுதான் கடைசில உங்களுக்கும், அதனால… உம்மட அக்காவ வந்த வேகத்தில இங்கயே அனுப்பி விட்டிரும் என்ன?” என்றவன், “எப்ப திரும்பி வருவீர் கயல்?” கேட்டவன், கலங்கிய விழிகளை சமாளிக்கப் பெரும் பாடுபட்டான்.
“ஓம் ஓம் இப்பவே வாங்க ஸ்வீட்டி!” லாதி கத்த, “அப்பா வெளிக்கிடுவம். சூட்டிட்ட போக” சின்னவன் திரும்ப ஆரம்பிக்க, “வேணும் எண்டா ஒரு ரெண்டு கிழமை நிண்டு போட்டு வந்திரும் என்ன? இன்னும் ஆறு மாசம் விசா இருக்கல்லோ!” என்றான், பூபாலன்.
சாரதாவும் கணவரும் கயல்விழியையே பார்த்திருந்தார்கள். சுடரோ , “அக்கா உனக்கு என்ன விசரா, மாட்டன் எண்டு சொல்லிக் கதைய முடி! இல்லையோ, கட்டாயம் வீட்டில பெரிய பிரச்சினை ஆகப்போகுது!” காதருகில் கடிந்து கொண்டாள்.
கயல்விழி வாய் திறந்து பதில் சொல்லவில்லை. அவளுக்கேயுரிய கம்பீரமான முறுவல் உதடுகளில் படரச் சிலகணங்கள் பூபாலனைப் பார்த்தவள், “குட் நைட்! மூண்டு பேரும் போய் வடிவாத் தூங்குங்கோ விடிய எடுக்கிறன். வீட்டில சரசு ஆன்ட்டி எல்லாருக்கும் சுகம் சொல்லிவிடுங்க! பை பை லவ் யு ஆல்!” அழைப்பைத் துண்டித்தாள்.
அந்த வீட்டினுள் வரும் வரை கொந்தளித்துக் கனத்திருந்த மனம் இலேசாகிட, நிர்மலமான மனதோடு பூபாலன் பெற்றோரிடமும் விடைபெற்று வந்தவளை சிடுசிடுப்போடு வரவேற்றார், அம்மம்மா.