Skip to content
அறைக்குள் நுழைந்த வேகத்தில் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள், கயல்விழி. மனம் விரும்பிய வாழ்வு தான் அந்தரத்தில் தொங்குது, ஆரம்பித்த குளியலை முடிக்க எவர் விருப்பமும் தேவையில்லையே! பூத்தூறலாய்ச் சிதறிய மெல்லிய சூட்டிலிருந்த நீருக்குத் தலையைக் கொடுக்க, அவள் அனுமதி கேளாது மிக்க உரிமையோடு உடலையும் தழுவிச் சென்றிட்டு, அது. அந்நீருக்குப் போட்டியாய்ச் சுட சுட இறங்கியது கண்ணீர்.
நினைவுகளுக்குத் தடை போடுவதும் அவ்வளவு எளிதல்லவே! குட்டிக் கைகளை நீட்டித் தன்னை தொட்டுவிடத் துடித்தபடி, ” நானும் வரப்போறன் சூட்டி!” என்ற குரல் காதுகளில் ரீங்காரமாய் ஒலித்த வண்ணமிருக்க, “லாதி….” விழிகளை இறுக மூடிக்கொண்டாள், கயல்விழி.
சிறுமியே என்றாலும் வளர்ந்த படித்த சூழல், பழகும் மனிதர்கள் என்று எல்லாமே சேர்ந்து சற்றே முதிர்வான அறிவைக் கொடுத்திருந்தது. இயல்பிலேயே புத்திசாலியும் துடிதுடிப்புமானவள். ‘சித்தி’ என்ற சொல்லே பிடிக்காதவள், தந்தைக்கு இன்னொரு கலியாணம் நடந்து விடுமோ என்ற பயம் எந்தளவுக்கு அவளுக்குள் இருந்ததென்று இவளுக்குத் தெரியாதா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமேயில்லை என்று தேற்றியவளே இவள் தானே? அப்படியிருக்க, தந்தையைக் கலியாணம் செய்யச் சொல்லி அவள் கேட்டதும் அப்போதிருந்த அவள் முகபாவனையும் இவள் மனதில் கல்வேட்டெனப் பதிந்திட்டு.
பிள்ளைகள் நினைவோடு போட்டி போட்டுக்கொண்டு அவளை, அவள் நினைவுகளைத் தன் வசப்படுத்த உன்னியது, பூபாலன் பார்வை, அது சொன்ன நேசம்! கனவிலும் நினையா விசயம் என்பார்களே, அப்படித்தான் அவள் வாழ்வில் அவன் வருகையும். அதுவும் அருகிலிருக்கையில் உணராதது இப்போ…
அடித்துப் பிடித்துக் கொண்டு நெடிய பெருமூச்சு வெளியேற, முகத்தைக் கரங்களால் இறுக மூடிக்கொண்டு நின்றாளவள்.
சற்று முன்னர் எவ்வளவு இலகுவாக வார்த்தைகளை உதிர்த்தாள்! நீங்கள் எல்லோருமே எனக்கு மிகவும் முக்கியமானவர்கள், உங்களுக்குப் பிடிக்கவில்லையோ நான் அதைச் செய்யேன் என்ற ரீதியல் கதைத்தாளே! தன் மனதிற்கு ஒவ்வாத ஒன்றையும் செய்யவே மாட்டாளாம்! அப்போ, அங்கு இருக்கும் மூவரும்? அந்தளவுக்கு அவர்கள் முக்கியமற்றவர்களோ!
நினைக்க நினைக்க பெருமூச்சு கூட வெளிவரேன் என்றது. அக்கணம், பூபாலனிலும் கோபம்தான் வந்திட்டு. ‘அக்காவ வந்த வேகத்தில திருப்பி அனுப்பி விடும் என்ன? எப்ப திரும்பி வருவீர் கயல்?’ எண்டால் சரியா? பிள்ளைகள அன்பாப் பாக்கிறாள் எண்டது கடந்து அவரிட வாழ்க்கையில உண்மையில நான் தேவை எண்டா என்ன செய்யோணும்?’ சிடுசிடுத்திட்டு மனம். அப்படியேதும் கேட்டால் இங்க என்ன சொல்வார்கள் என்று தான் தெரியுமே! கேட்க மாட்டாரோ? குழம்பித் தவித்தாள்.
பார்வையால் நேசத்தை உணர்த்தினான் தான். அது போதுமா? உங்களுக்கு உண்மையாகவே என்னில விருப்பம் இருந்தா இவையளச் சம்மதிக்க வையுங்க பூபாலன்!’ மனதுள் சொன்னவளுக்கு, அவனிடம் நேரடியாக இதை எப்படிச் சொல்வதென்று இருந்திட்டு.
பூபாலன் ஒன்றும் பொறுப்பில்லாதவன் அல்லவே! ‘இண்டைக்குத்தானே வந்தனி கயல்? கொஞ்சம் பொறு பாப்பம்.’ கடைசியில் தன்னைத்தான் சமாதானம் செய்து கொண்டு குளித்து முடிக்கவும், “அக்கா, உங்கட மாமா வீட்டாக்கள் எல்லாம் வந்திருக்கினம்.” கதவில் தட்டிச் சொன்னாள், சுடர்விழி.
அதன்பின், மனத் தொய்வைக் காட்டாது அவர்களோடு கலகலத்துவிட்டு ஓய்ந்திருக்கையில், இலங்கையில் மாலை நாலரையும் இராது, நியூயோர்க்கில் பொழுது புலர்ந்திருக்க, கட்டிலை விட்டு எழாமலே இவளுக்கு அழைத்தார்கள், பூபாலனும் பிள்ளைகளும்.
அவள் அனுமதிக்கு எதிர்பார்க்காது அழைப்பை ஏற்றுவிட்டிருந்தது கரம். அதேநொடி மெல்ல நழுவி அறைக்குள் வந்தவளுக்கு பேச்சு வரவில்லை. மறுபுறம் வந்த கலகலப்பை, அவர்கள் பொழிந்த அன்பை, வார்த்தைகளை உதிர்க்காது பார்வையால் பூபாலன் உணர்த்திய நேசத்தை எல்லாம் துளித் துளியாக இரசித்தவள் மனமோ, ‘பூபாலன் வீட்டில கதையுங்கோ ப்ளீஸ்! சொன்னபடியிருந்தது.
“அங்க எல்லாம் ஓகேயா கயல்?” அவள் முகமாற்றத்தை உணர்ந்து விசாரித்தாலும் கல்யாணம் பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை, அவன்.
‘ பெரிய அக்கறை! ஆருக்கு வேணும்?’ என்ற சிடுசிடுப்பே தொண்டையை அடைக்கச் செய்திட்டு. ‘நீர் இல்லாமல் நாங்க இங்க ஒகே இல்லையே கயல், உம்மட வீட்டில கதைக்கவா?’ எண்டு கேட்டா குறைஞ்சிருவாராம். மனம் சரி கொஞ்சம் ஆறுமே! நான் மட்டும் ஏன் கலங்க வேணும்?
தலையை வேகமாக ஆட்டினாள், ஆம் என்பதாக!
“நாங்க ஓகே இல்ல….ஸ்வீட்டி ப்ளீஸ் இங்க வாங்கோ!” தகப்பனிடமிருந்து அவள் எதிர்பார்த்தைதைச் சொல்லியிருந்தாள், லாதி. ஆதித் சிணுங்கத் தொடங்கியிருந்தான்.
“அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் வேலை இல்லையோ? கெதியா எழும்புங்கோ! அப்பாக்கு வேலை, பிள்ளைகளுக்குப் பள்ளி… கெதியா. இல்லையோ…” கைபேசித் திரையூடாக காதை முறுக்குவது போல் செய்தாள். அவர்களும் இவள் காதைப் பிடிக்க வந்தார்கள். இப்படியே விளையாடி, அவர்களில் சிறிதாக வேனும் மலர்வை வர வைத்துவிட்டாள்.
“கயல் இவ்வளவு நேரமா ஆரோட கதைக்கிற? தேத்தண்ணி போட்டிருக்கு வந்து குடி!” அம்மம்மா கதவைத் தட்டிவிட்டுச் சென்றார். பிள்ளைகள் சிணுங்கிக் கொண்டிருக்கவே விடைபெற்றவள், அதன் பின் நகர மறுத்த பொழுதோடு சண்டையிடத் தொடங்கினாள்.
இரவுணவின் போது, “நாளைக்கு விடிஞ்சதும் வெளிக்கிடுவம் என்னம்மா?” என்றபடி வந்தமர்ந்த சுடர், “எனக்கு எண்டாப் பெரிசாப் பசிகேல்ல!” தாயிடம் முணுமுணுத்தாள்.
“சாப்பிட்டாத் தானாப் பசிக்கப் போகுது. உங்களுக்காகத்தானே இவ்வளவும் அந்தப் பிள்ள செய்தது. இல்லையோ, இத்தறிக்கு வேலை எல்லாம் முடிச்சு வச்சிப்போட்டு வீட்ட போயிருவா! நீங்க நிக்கு மட்டுக்கும் நிண்டு எல்லாம் பார்க்கச் சொல்லி இருக்கிறன், பிட்டு, இடியப்பம் எல்லாம் இருக்கு, விருப்பமானத வடிவாப் போட்டுச் சாப்பிடும்!” அம்மம்மா.
error: Alert: Content selection is disabled!!