அத்தியாயம் 40 – 2

“அவள் ஆள் வளந்தாலும் சாப்பாடுட்டுக் கள்ளி அம்மா.” என்ற வேதா, “ஓம் நேரத்துக்கே போவம். அப்பத்தான் நிண்டது போல இருக்கும், இல்லையோ வந்திட்டு உடனே போறீங்க எண்டு தங்கச்சி ஆக்கள் சண்டைக்கு வருவாளவையள்.” என்றபடி மகளுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்.

“இஞ்சாருங்கப்பா நீங்களும் வாங்கவன்.” சாய்வு நாற்காலியிருந்து ‘சக்தி’ தொலைகாட்சி பார்த்திருந்த தாத்தாவையும் அழைத்தார், அம்மம்மா.

 அம்மம்மா, தாத்தா, அவள் என்று இருக்கும் வீட்டில் முதல் முதலாக அப்பா, சித்தி, தங்கை! அதுவும் காலையில் வந்தும் வராததுமாக ஏற்பட்ட மனக்கசப்பு, கண்ணீர் எல்லாம் கடந்து எல்லோரும் எதுவுமே நடவாத பாவனையில் நடமாட முனைந்தார்கள்.

அம்மம்மா கதைத்த விதத்துக்கு மனதில் நன்றாகவே அடிவாங்கியிருந்தாலும் கயலுக்காகத்  தன்  வேதனையைத்  தள்ளி வைத்துவிட்டு அவரோடு கதைத்தார் வேதா.  அம்மா அம்மா என்று தணிந்து கதைக்கக் கதைக்க அம்மம்மாவுக்கே வேதாவோடு முகம் நீட்ட ஒரு மாதிரிப் போயிற்று. 

“நடந்தது எல்லாமே நடந்து போயிற்று. எப்பவோ நடந்ததுகளுக்கு இப்ப நிண்டு இவவோட முகம் நீட்டி ஏசிப் பேசி என்னத்தக் காணப் போறம்?” என்றிருந்தார் தாத்தா. 

“முதல் முதல் குடும்பமா வந்து நிக்கினம். அதும் நம்மட பேத்தியும் விரும்பியே கூட்டிக்கொண்டு வந்திருக்கிறாள். சுமுகமாக நடத்தி அனுப்ப வேணும் நாங்கள். அதான் மரியாதை!” என்றும் சொல்லியிருந்தார். கயலின் மாமா குடும்பமும் வரவே, ஆள் ஆளுக்கு மெல்ல மெல்ல கதைச்சு வீடு கலகலப்பாகியது. 

மனதில் இருந்த அத்தனை கனத்திலும் அந்த நேரத்தை மிகவுமே இரசிக்க முனைந்தாள், கயல். காலையில் ‘பூபாலன எனக்குப் பிடிச்சிருக்கு!’ என்று சொல்லியிருக்க, வலு நிச்சயமாக இந்தத் தருணத்தை அவள் இரசித்தேயிருக்க முடியாது. 

“ஏனாச்சி அங்க நிக்கிற? வா வா வந்து சாப்பிடு. பகலும் வடிவாச் சாப்பிடேல்ல,  கொறிச்சிட்டுப் போயிட்ட.” அம்மம்மா.

தகப்பன் அருகில் இருந்த நாற்காலி வெற்றிடமாக இருந்தது. வந்தமர்ந்தவள், சிவத்த அரிசிமாவில் அவித்திருந்த குழல் பிட்டில் ஒன்றை எடுத்துத் தட்டிலிட்டுக்கொண்டாள்.  

மாசிச் சம்பலும் நெத்தலிப் பிரட்டலும் அவளுக்கு மிகவுமே பிடிக்கும். அதுவும் சுதாவின் கைப்பக்குவம் தனி! இருந்தாலும் இப்போது உண்ண முடியும் போலிருக்கவில்லை. பூபாலன் வீட்டு உணவு மேசையும் சின்னவனுக்குக் கொடுத்தபடி உண்பதும் தான் நினைவில் வந்திட்டு.

“உங்களுக்கு என்னப்பா, இடியப்பமா பிட்டா?” எதிரில் இருந்த வேதா கணவரிடம் கேட்க, மனதை அடக்கிக் கொண்ட கயல் பார்வை தகப்பன் முகத்துக்குத் திரும்பிற்று. 

காலையில் ஒத்த வார்த்தை பேசாது வெளியேறி முற்றத்தில் ஓரமாக நின்று கொண்டவர் நீண்ட நேரம் தொலைபேசியில் கதைத்தபடி இருந்தார். பிறகு, வேதாவும் சென்று நின்று கதைத்தார். என்னவோ வாக்குவாதப்பட்ட மாதிரியும் இருந்தது. 

புறப்பட்டுப் போகப்போகிறார்களோ என்றுதான் எண்ணினாள், கயல். அப்படி நடக்கவில்லை என்றாலும் மதியமும் சாப்பிட வராது முழுநாளும் வெளியில் நின்றுவிட்டுச் சற்று முன்னர் தான் வந்திருந்தார். 

களைப்பில் சுருங்கிக் கிடந்த முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. நிச்சயம் அவர் இலகுவாக இருக்கவில்லை என்றது அவர் இருந்த பாவனை. மனைவி கேட்டது கூடக் காதில் விழாது வேறெங்கோ யோசனையில் இருந்தவரை எட்டித் தட்டினார், வேதா.

“ம்ம் என்ன?” சட்டென்று யோசனை களைந்திருந்தார்.

“என்ன சாப்பிடப்போறீங்க அப்பா? பிட்டா இடியப்பமா? எங்கட சுதாட சமையல் நல்ல ருசி.  ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம்  சாப்பிடுங்கவன். ” அவளுக்கு நினைவு தெரிந்து தகப்பனுக்கு முதல் முதல் பரிமாறுகிறாள். அவர் வாயே திறக்கவில்லை. தன்  தட்டில் வைத்தது போலவே அவருக்கும் எடுத்து வைக்க, வேதாவும் கரனும் விழிகள் கலங்கப் பார்த்திருந்தார்கள். சுடர் விழிகள் தளும்பி வழிந்தன. தமக்கையை எண்ணியெண்ணி தந்தை ஏங்குவதை நன்றாகவே அறிந்தவளாச்சே!  

“சாப்பிடும்” சுடர் முதுகில் மெல்லத் தட்டிய அம்மம்மாவும் கயலையும் கரனையும் பார்த்துக் கண் கலங்கித்தான் போனார். ‘இந்தச் சுமூக நிலையை எத்தனையோ வருடங்களுக்கு முதலே உருவாக்கியிருக்கலாமோ! பிழை விட்டுட்டமோ!’ கணவரைப் பார்த்தவர் பார்வையால் கேட்டுக் கலங்கினார்.

“என்னப்பா…சாப்பிடுங்கவன். வந்து கொஞ்ச நேரமும் வீட்ட நிக்கேல்ல, வெளில போய்ட்டீங்க?” சொல்லிக்கொண்டே, பிட்டைப் பிசைந்து வாய்க்குள் வைத்தபடி தந்தையைப் பார்த்தவளுக்கு, எப்பவோ, அவர் கடையால் வந்ததும் இறங்காது தொத்திக்கொண்டு திரியும் நினைவு… அவர் கையால்  உண்ணும் உணவின் நினைவு… தொண்டை இறுகீற்று.  புத்தம் புது அரிசிமா வாசத்தோடு இருந்த மென்மையான பிட்டு உள்ளே போகேன் என்றது.

எப்போதும் போல அமைதியாக இருந்தாலும் எல்லாரையும் கவனித்துக்கொண்டிருந்த தாத்தா, தொண்டயைச் செருமி நிலமையைச் சமாளித்தார். 

“எல்லாரும் வடிவாப் போட்டுச் சாப்பிடுங்க, நாளைக்கு எத்தனைக்குப் பயணம்? வட்டக்கச்சி என்ன வேதா? எத்தனை தங்கச்சிகள் ரெண்டு பேரா?” பேச்சையும் மாற்றினார்.

“இல்ல அப்பா, மூன்று பேர். நான் தானே மூத்தது.” அப்படியே பேச்சு வேதா குடும்பத்தின் பக்கம் சென்றிட்டு.

சாப்பிட்டுவிட்டு எழுகையில், “இரவுக்கு வந்திருவீங்களா சித்தி? இல்லாட்டி நிண்டுபோட்டு வருவீங்களோ!” என்றபடி எழுந்தாள், கயல்விழி.

 “இதென்ன கேள்வி, நீரும் தானே வாறீர்.”

“நானா? நான் வரேல்ல சித்தி.”

“ஏன் பிள்ள? சும்மா பிராக்கா போயிட்டு வா. ரெண்டு கிழமைகள் லீவு தானே? சும்மா வீட்டில நிண்டு.” தொடங்கிய அம்மம்மா, ‘நீ சும்மா இருந்தாலும் அவே விடாயினம். அறைக்க இருந்து கதைச்சா எனக்குத் தெரியாதா என்ன? சும்மா சும்மா ஃபோனப் போட்டு கொஞ்சுறதும் கெஞ்சுறதும்! அதுக்கு…இது மேல்.’ என்று சொல்ல வந்ததை விட்டுட்டு, “உன்ர சித்திட சகோதரிகள், தாய், தகப்பன் எண்டு பம்பலா போய்ப் பார்த்திட்டுப் வாவன் எண்டு சொல்லுறன்.” மெல்ல முடித்தார்.

error: Alert: Content selection is disabled!!