‘நடப்பு’ பல சமயங்களில் நம்மைக் கைவிட்டு விடும்; பலமாகவே ஏமாற்றிவிடும்; எதிர்வினையாற்ற முடியாத இக்கட்டில் நிறுத்தி மனசாட்சியேயில்லாது வேடிக்கை பார்த்துவிடும்; துயரை, வலியை மறைத்து நாடகமாடவும் வைத்துவிடும்.
நடப்புக்குள்ள சக்தி அது! அதன் ஆட்சியில் தயைதாட்சண்யம் இல்லாது போகையில், நம் விருப்பு வெறுப்புகள் மறுக்கப்படுகையில் உடனடியாக முதுகெலும்பாக மாறிவிடுவது, உள்ளத் துயர் துடைக்க உதவுவது என்னவோ கண்ணீரே!
கண்ணீர் பலவீனத்தின் வெளிப்பாடென்று யார் சொன்னார்? ஒருவர் தனிமையை, ஏக்கத்தை, வலியை, துயரைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் அளிக்க, தட்டிக்கொடுத்து ஊக்கமளிக்க, நான் இருக்கிறேன் என்று தோள் கொடுக்க இன்னொருவர் இருக்கும் பட்சத்தில்…கண்ணீர் என்ன எதுவுமே தேவையில்லை. எல்லோருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதும் இல்லையே! அப்படியொரு சந்தர்ப்பத்தில், விடாது கசியும் கண்ணீரோடு மனப்பாரமும் மெல்ல வெளியேறிவிடும். தட்டுத் தடுமாறி, தள்ளாடி அடுத்தென்ன என்பதை யோசியேன் என்று அழிச்சாட்டியம் செய்யும் சிந்தனா சக்தியைத் திடமாக்கி நாளை பற்றி யோசிக்கவும் வைத்துவிடும்.
அதுதான் இங்கும் நடந்தேறிட்டு. வாய் பொத்தி அழுதாள் கயல். தாயின் மறைவிலிருந்து எப்போதோ வெளிவந்துவிட்டதாக எண்ணியிருந்தாளே! அந்த நாட்கள், நிழலாக நகர்ந்த நினைவுகள் இதயத்தைச் சுள்ளென்று வலிக்க வைத்திட்டு. சத்தமேயில்லாது அதைத் தாங்கி வெளியேற்றிட முனைந்தது கண்ணீர்!
கடந்த மூன்றரை வருடங்கள்…காயுவின் அழகிய நட்பு, முதன் முதலாய் உணர்ந்த பிரணவ் நேசம், அது தந்த ஏமாற்றத்திலிருந்து மீட்ட குழந்தைகளின் பாசம்…மனம் தான் எத்தனை வேகமானது? சுற்றிச் சுழன்றிற்று. அத்தனையும் சற்று முன் தான் நிகழ்ந்தது போல் உணரச் செய்திட்டு.
பிள்ளைகளின் அருகாமைக்காக ஏங்கிய மனமே, சத்தமேயில்லாது, எப்படிப் புகுந்ததென்று தெரியாது, நட்பில் ஆரம்பித்து மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டுவிட்ட பூபாலனின் நேசத்தின் வாசத்தையும் நுகர்ந்து பார்த்திட்டு. உடல் நடுங்கிற்று, அவளுக்கு. அப்படியே புரண்டு படுத்தவள் முகம் தலையணைக்குள் மிக அழுத்தமாகவே அழுந்திட்டு.
கண்ணீர் தானாகக் கசியக் கிடந்தவளை அந்தக் கண்ணீரே நடப்புக்கு அழைத்து வந்திட்டு.
கண்கள் கசிந்து தொய்ய தொய்ய மனம் இறுகீற்று. எதிர்காலம் என்றதும் வெறுமை தான் கரம் விரித்தபடி வரவேற்றது. சரி, எந்த எல்லை வரை போகிறாய் பார்ப்போமே என்று சிறு முறுவலோடு ஏற்றுக்கொள்ளத் தயாரானாள், கயல்விழி. இத்தெளிவு கிடைக்க ஏறக்குறைய விடிகாலையாயிற்று. அதன் பின்னரே மெல்ல மெல்ல அவளையுமறியாதே உறக்கம் ஆட்கொண்டிட்டு.
அப்போதுமே மனம் உறங்கவேயில்லை. தன்னுள் உறுதியாகச் சம்மணம்மிட்டு அமர்ந்துவிட்ட குழந்தைகளோடு விளையாட ஆவல் கொண்டிட்டு. பட்டுப் போகவில்லை என்றுணர்த்திய நேச மொட்டு மெல்ல மெல்ல மலர்ந்து பூபாலனின் ஒவ்வொரு அசைவுகளையும் பத்தரப்படுத்தி வைத்திருக்கே; அவற்றை மீட்டிடத் துடித்திட்டு. விழித்திருக்கையில் நிம்மதியற்று உழன்றவளா இவள் என்ற வகையில் உதட்டில் முறுவல் நெளிய ஆழ்துயிலில் கிடந்தாள், கயல்விழி.
விழித்த பின்னரே, ‘இது கனவேவா!’ என்று எண்ணிப் பார்க்கப் போகிறாள்!
இப்போதோ ….
பஞ்சுப் பொதிகளென வந்து மோதினார்கள், ஆதித்தும் லாதியும். ஒரே தாவலில் அவள் மறுபுறம் வந்து குறண்டிக்கொண்டாள், லாதி. “ஸ்வீட்டி மிஸ் யூ லொட்!” சின்னக்குரலில் சொன்னவள் முகம் அவள் தோள் வளைக்குள் புதைய, அவள் பாவிக்கும் கிரீம் வாசத்தை நுகர்ந்திட்டு இவள் நாசி. அவள் சிறு கரம் உரிமையோடு கட்டிக்கொள்ள அந்த மென்மையை உணர்ந்தது இவள் உணர்வு. காலொன்றைத் தூக்கிப் போட்டுக் கொண்டு கண்களை மூடிக்கொண்டவள் வெளிப்படுத்திய பாச உணர்வு அப்படியே இவள் உள்ளத்தைக் கரைத்திட்டு.
ஆதித் முகம் கயல்விழியின் முகத்தின் கிட்டே நெருங்கிற்று! சந்தோசமும் உறக்கமும் கலந்து நின்ற அவன் விழிகள் அவளையே உற்றுப் பார்த்து நின்றன.
“சூட்டி!” மெல்ல உச்சரித்தவன் உதடுகள் துடித்தன. வாய் கோண அழுகையை ஆரம்பித்தவன் கரங்கள் அப்படியே அவள் கன்னத்தில் பதிந்திட்டு. கயல்விழியைச் சில்லென்று குளிர் தாக்கிற்று! அதோடு இணைந்து, “ஆதித் வந்திட்டன் சூட்டி!” கன்னத்தில் பதிந்த அவன் உதடுகளின் குளிர்மை அவள் நெஞ்செல்லாம் வியாபித்திட்டு!
மேவிப் பரவியது குற்றவுணர்வு! “சொறி குஞ்சுகள்! உங்கட சூட்டி வெரி பேட்! அவா உங்களுக்கு வேணவே வேணாம்.” கத்திச் சொல்ல முயன்றாள். குரல் எழும்பியதாகவே தெரியவில்லை. கண்கள் குபுக்கென்று நிறைந்து வழிய அவர்கள் இருவரையும் தன் கரங்களுள் கொண்டுவந்திட முயன்றாள். கரமிரண்டும் அசையோம் என்றன; மரக்கட்டைகள் போலவே கிடந்திட்டு.
‘என்ர மனமும் தான் மரக்கட்டை ஆகிப் போயிற்று! இரவு அத்தனை யோசித்துத் திடப்பட்டவளால் கனவில் கூட குழந்தைகள் முன்னால் நின்று பிடிக்க முடியவில்லையே! விக்கியழுதாள், கயல்விழி.
“சூட்டி! சூட்டி! எழும்புங்கோ, ஆதித் வந்திட்டானே! அழக்கூடாது சூட்டி!” மீண்டும் கன்னமிரண்டிலும் பட்டுப் பட்டென்று தட்டு விழுந்திட்டு. அப்படியே, தன் மீது பாரமுணர்ந்தாள் கயல்.
மறுநொடி, பட்டென்று விழித்து விட்டாள். சில கணங்கள் இல்லையில்லை, சில நிமிடங்கள் என்றே சொல்லாலாம் விழிகள் விரித்தபடியிருக்க, திறந்த வாய் மூடாது அப்படியே கிடந்தாள் கயல்.
கனவா? தன்னையே தான் கிள்ளப் பார்த்தாள். முதல் அவள் கைகள் எங்கே? ‘உண்மையாவே கனவு தானோ!’ தலையை அப்படியும் இப்படியும் அசைத்துப் பார்த்தாள்.
“அவேயிட சந்தோசத்தைப் பாருங்கவன்!” கண்ணீரோடு அவள் அறைவாயிலில் நிற்பது…சாந்தா ஆன்ட்டியே தான்! அங்கால அம்மம்மாவும் சித்தியும் பக்கத்தில் சுடர்!
பட்டென்று அவள் முகம் நேராகிற்று. மின்னலெனப் பாய்ந்த புத்தம்புது இரத்தத்தில் முதலில் உரம் பெற்றவை கரங்களே; தன் மீது அழுந்தி கிடந்த லாதி, ஆதித்திடமிருந்து விடுபட்டு மேலெழுந்து அவர்கள் இருவரையும் தன்னோடு சேர்த்தணைத்துகொண்டன.