அத்தியாயம் 42 – 5

“அவன் அப்பிடித்தான். சும்மா நாளிலயே கயலுக்குப் பின்னாலேயே வால் பிடிப்பான். அப்ப இப்ப!” மடமடவென்று தேநீரைக் குடித்துவிட்டு எழுந்தான், பூபாலன். ‘இதுதான் சாட்டு’ மனம் வேறு ஊந்தித் தள்ளிற்று.

“தம்பி நாங்க போயிட்டு வந்திர்ரம்.” வெளியேறிய தாய் தகப்பனுக்கு தலையாட்டிவிட்டு நின்றவனுக்கு, உள்ளே செல்லத் தயக்கமாகவும் இருந்தது.

“நான்… போய்த் தூக்கிக்கொண்டு வரவோ அங்கிள்?” சற்றே தடுமாறியபடி கேட்டுவிட்டான்.

“அதுக்கென்ன வாங்கோ!” தானும் எழுந்து நடந்தார், கரன்.

‘மிக மிக நல்ல விசயம்!’ மனதுள் சொல்லுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை, பூபாலனுக்கு. 

ஒருக்களித்துச் சாத்தியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளிட்ட கரன் பின்னால் சென்றவன் பார்வை கயல்விழியைத் தேடிற்று. 

அங்கோ, கட்டிலில் லாதி படுத்திருந்தாள். 

“குஞ்சு, பயணத்தால வந்த கையோட அப்படியே பெட்டில படுதாச்சோ? எழும்புங்கோ!” 

“அதுக்கென்ன விடுங்க தம்பி, களைச்சுப்போய் வந்த பிள்ளைகள்.” என்ற கரன் பார்வை குளியலறைக் கதவின் முன்னால் குவிந்திட்டு.

“டோய் என்ன இது? பாருங்க அங்கிள் காவல் இருக்கிற வடிவ!” என்றபடி போய் கதவோடு அணைந்து அமர்ந்திருந்த மகனைத் தூக்க முயன்றான், பூபாலன்.

“நோ அப்பா விடுங்…கோ! ப்ளீஸ்! சூட்டி சூட்டி!” வளைந்து நெளிந்து கத்தினான், அவன்.

“விடுங்கோ தம்பி இருக்கட்டும்.”

“உன்னடா! பொல்லாதவன் அங்கிள் இவன்.” என்றபடி நகர, “என்ன…ஏன் பிள்ள அழுகிறார்?” வேதாவும் சுடரும் வந்துவிட்டார்கள்.

“அப்பா இங்க வந்திருங்க…” இழுத்த லாதியின் பிடியில் கட்டிலிலமர்ந்து கொண்டான், பூபாலன்.

ஆதித் எல்லோரையும் பார்த்தான். புது ஆட்களே என்று தகப்பனருகில் ஒன்றும் எழுந்து ஓடவில்லை. “சூட்டி கெதியா வாங்கோ!” கதவில் தட்டினான்.

“இந்தா வாறன் செல்லம், நீங்க கொஞ்சம் தள்ளுங்கோ கதவு திறக்கிறன்.” உள்ளிருந்து வந்தது கயல் குரல். பட்டென்று விலகி அமர்ந்தான், அவன்.

கதவைத் திறந்ததும் விசுக்கென்று எழுந்து தாவியவனை அணைத்துத் தூக்கியவள் பார்வை, கட்டிலில் அமர்ந்திருந்தவனில். நெற்றி மேலேறி இறங்க சிரிப்பு ஒட்டிக்கிடந்த விழிகளால் அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.

எப்போதும் போல ஒரு தொளதொள பிஜாமா. கலைந்து சிதறிக் கிடந்த தலை. தடித்த விழிமடல்கள். ‘முகம் வீங்கிக் கிடக்கு, அழுதாளோ!’ சட்டென்று எழுந்து அவளை இறுக்க அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது, பூபாலனுக்கு.

அவளோ அசைவின்றி நின்றிருந்தாள். பார்வை மட்டும் அவன் விழிகள் விட்டு அசையவில்லை. பிள்ளைகளைக் கண்ட கணமே இவனைப் பார்க்க வெகுவாகத் துடித்த மனம், இப்போது நிதானத்துக்கு வந்துவிட்டிருந்தது. எண்ணிச் சில நாட்கள் தான், அதற்குள் என்ன பாடுபட்டு விட்டாள்! என்ன எல்லாம் எண்ணி விட்டாள்! அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்றளவில், சத்தமே இல்லாது காரியத்தைக் கச்சிதமாக முடித்து விட்டு வந்தமர்ந்து இருக்கிறானே! அவன் மீதான அன்பு அதிகரித்தது. பார்வையால் அதை உணர்த்தியவள் ஓரடி எடுத்து வைத்திராள், “ஆதித்ட சூட்டி ஒகே! உங்கட அக்கா இல்ல!” குட்டி ஆட்காட்டி விரல் சுடர் நோக்கி நீண்டிருக்க சத்தமாகவே வெருட்டல் போட்டான், ஆதித்.

“ஐஸா! இங்க பாருங்கவன் அவரிட சேட்டைய! டோய் எங்கட வீட்ட வந்து நிண்டு கொண்டு  என்ர  அக்காவ உம்மட எண்டு சொல்லுவிரோ! இவர இண்டைக்கு…” விறுவிறுவென்று வந்தாள் சுடர். தமக்கையிடமிருந்து அவனைத்  தூக்க முனைந்தாள்.

“நோ நோ! ஒரே திருப்பலில் கயல் தோளில் திரும்பிப் படுத்தவன், கழுத்தை இறுக்கமாகவே வளைத்துக் கொண்டான்.

“விடடி..சின்னவனோட பொருதுக்குப் போற!” கயல்.

“ஆர் சின்னவன்? இவரோ! நுள்ளான் கணக்கில இருந்துகொண்டு வாயப் பாருங்கவன்?!“ என்றவள், “என்ர அக்கா எப்பவும் உங்கட இல்ல இல்ல இல்ல!” அவனுக்கும் மேலாகக் கத்தினாள்.

தகப்பன் மடியில் தலைவைத்துக் குப்புறக் கிடந்து வேடிக்கை பார்த்தாள், லாதி.

“எருமை மாடு! குழந்தையோட போட்டியாடி உனக்கு?” அவள் காதை முறுக்கினாள் கயல்விழி. அதுவே ஆதித்துக்குப் போதுமானதாக இருந்திட்டு. பலமாகவே  சிரித்து மகிழ்ந்தான். லாதியும் சேர்ந்து கொண்டாள். 

“அக்கா இதெல்லாம் கொஞ்சமும் நல்லம் இல்ல சொல்லிப்போட்டன். அடோய்! சின்னப் பெடியா எனக்கும் காலம் வரும்டா, அந்தநேரம், பழி வாங்குவாள் சுடர்!”

“இப்பிடிக் கதைக்கிறதுக்கு நீ இப்ப என்னட்ட வாங்குவ! கெதியா அங்கால ஓடிரு!” கயல்.

“அக்கோய் பாத்திங்களா? அம்மா அப்பாட்ட கெஞ்சிக் கூத்தாடி இவையல வர வச்சதில பெரிய பங்கு எனக்கு இருக்கு! வீணாப் பகைச்சுக்கொள்ளாதீங்கோ!” மிரட்டல் விட்டவள் சொன்ன செய்தி புதுசே! 

வாய்விட்டுச் சொல்லவில்லை என்றாலும் தன் மனம் புரிந்து அதை நடத்தி வைத்த வீட்டினரின் அன்பில் கயல்விழியின் கண்கள் கலங்கின. 

“தாங்க்ஸ் செல்லம்!” தங்கையை அணைத்துக்கொண்டவள் பார்வை தந்தையில். அவளையே தான் அவரும் பார்த்து நின்றிருந்தார். பூபாலன் அவளுக்கும் தமக்குமான உறவை மிகைப்படுத்திக் கூறவில்லை என்பதைக் கண்ணால் பார்த்துக் கொண்டு நின்றவர் மகளை நெருங்கினார்.

“இப்பச் சந்தோசமா?” மகள் தலையைப் பாசமாக வருடியவர் கண்கள் கலங்கி விட்டன.

 “சொல்லி இருக்கலாமேம்மா. சரி விடு, உன்ர மனசுக்குப் பிடிச்ச மாதிரி எப்பவும் நீ சந்தோசமா இருக்கோணும். அதான் எங்களுக்கு வேணும்!” உச்சியில் கொஞ்சியவர், தளம்பிவிட்ட விழிகளை மறைக்க வேண்டுமே! பட்டென்று வெளியே சென்றுவிட்டார்.

“உன்ர சந்தோசம் தான் எங்கட சந்தோசம்!” வேதாவும் வந்து அணைத்துக் கொண்டார். “தாங்க்ஸ் சித்தி! என்றவளை முறைத்தவர், தோள் வளைவில் இருந்து தன்னையே பார்த்த ஆதித் கன்னத்தில் மெல்லத் தடவினார்.

“செல்லம், அம்மம்மாவுக்கு ஒரு ஆய் குடுத்து விடுங்கோ!” கயல் சொல்லவும் வெட்கத்தோடு மெல்லக் கன்னத்தில் கொஞ்சினான் அவன். வேதாவோ, அவள் சொன்ன அம்மம்மா என்ற சொல்லிலேயே கண்கள் தளம்பிட நின்றார்.

“ஸ்ஸ்ஸ் சித்தி!” கயலின் ஒரு கரம் அவரை அணைத்துக்கொண்டிட்டு. “எங்க அம்மம்மா?”

“பின்னால நிக்கிறா போல, நீ தம்பியோட கதைச்சிட்டு வாவன்.” என்றுவிட்டு, “சுடர் வாம்மா குசினிக்க கொஞ்சம் வேலைகள் இருக்கு!” மகளோடு வெளியேறினார்.

“ஸ்வீட்டி வாங்க வாங்க!” லாதி.

“சரி, இனி உங்க மூண்டு பேருக்கும் கதைக்க நிறைய இருக்கும், நான் என்னத்துக்கு இதுக்க இருந்து?” சலிப்போடு எழ முயன்றான், பூபாலன். 

“அதானே..உங்கள ஆர் இங்க வரச் சொன்னது? எனக்கு என்ர செல்லங்கள் லாதியும் ஆதித்தும் மட்டும் போதும்!” சொல்லிக் கொண்டே சென்று அவனை இடித்துக்கொண்டு அமர்ந்தாள், கயல்விழி.

“கோ அப்பா… கோ… கோ அவுட்!” கணம் கூடத் தாமதியாது வில்லன் ஆகிப் போனான், ஆதித்.

“உன்ன…வெளில ஆரும் எனக்குத் தேவேல்லடா, நீயே போதும்!” மகன் வயிற்றில் குத்தியவன் பார்வை அருகில் இருந்தவளில். கலங்கிய விழிகளின் தத்தளிப்பும்  துடிக்கும் உதடுகளும் வாய் உதிர்த்தவற்றுக்கு எதிர்மாறாக வேறு கதைகள் சொல்லிற்று. 

அவன் நெற்றி ஏறியிறகிற்று!

“உங்கட சரசு சித்திக்கு நான் அங்க வந்தோன்ன இருக்குப்  பாருங்க. என்ன எல்லாம் சொன்னவா தெரியுமா? ஒரு வார்த்த சொல்லிப்போட்டு வந்திருக்கலாம் எல்லா? உங்கள…” சொல்லிக்கொண்டே சென்றவள் அவன் கழுத்தைப் பிடிக்க, “ஏய் என்ன இது?” அவன் தடுக்க முதல், மடியிலிருந்து துள்ளியெழுந்திருந்த லாதியின் கரங்களும் கயலில் இருந்து தாவியிருந்த ஆதித் கரமும் அவன் கழுத்தில்.

“இதுக்குத்தானா ஆசைப்பட்ட பாலா!” பயந்தவன் போல் சொன்னவன் ஒருகரம் மகளையும் மறுகரம் கயல்விழியையும் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டிட்டு. நடுவில் எல்லோர் கரமும் ஆதித்தில்!

“சந்தோசம் தானே?” இந்த வார்த்தை தவிர அவனுக்கு வேறு ஒன்றுமே கேட்கத் தோன்றவில்லை. விழிகளில் கண்ணீரோடு தனக்கு மிக அருகில் இருந்த அவள் கன்னத்தில் மின்னலாகக் கொஞ்சிவிட்டு, “ஆராவது வந்து காப்பாத்துங்கோ! நாடு விட்டு நாடு வந்தவன இங்க கொல்லீனம்!” அவன் கத்த, “உங்கள…” அவன் இடுப்பில் கயல் இறுக்கி நுள்ளினாள் என்றால், “மூச்!” வாயைப் பொத்தினாள், லாதி! “நோட்டி அப்பா!” ஆதித்தின் சிறுகரத்தின் பிடியில் பூபாலன் முன் உச்சி மயிர்கள்!

சத்தத்தில் மெல்ல எட்டிப்பார்த்தார், அம்மம்மா. இந்தக் காட்சியைப் பார்த்ததும் கண்கள் கலங்கிட, பார்வை மகள் படத்தில் குவிந்திட்டு. சம்மதம் என்றுவிட்ட போதும் நிம்மதியில்லாது தத்தளித்த அவர் மனதுள் நிம்மதி மெல்ல மெல்ல நிம்மதி பரவியது.

சுபம்

error: Alert: Content selection is disabled!!