2
அக்டோபர் மாதம்! இந்நாட்டுவாசிகளுக்கு வஞ்சனையில்லாத காலநிலை!
அச்சிறு அறையின் யன்னலை, கொஞ்சமாகத் திறந்துவிட்டாள் மதுரா. அதற்காகவே காத்திருந்தது போல், அறையை நிறைத்திருந்த சந்தனக்குச்சியின் நறுமணப்புகை விட்டால் போதுமென்று கசிந்து வெளியேறத் தொடங்கியது.
சிறிது நின்று பார்த்து, “ம்ம்…புகை போயிரும்; இல்லை என்றால் அவரும் இல்லாதபோது அலாரம் அடித்தால் நான் என்ன செய்யிறது? பாசையும் விளங்காமல் தக்கதிமித்தோம் போட வேண்டியதுதான்!” முணுமுணுத்தவாறே மாடியிலிருந்து கீழே இறங்கினாள்.
வீட்டை ஆக்கிரமித்திருந்த தனிமை முகத்திலடித்து வரவேற்க, சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்தவள், ஒவ்வொரு தமிழ் சானலையும் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு, “பச்…ஒன்றும் உருப்படியாக இல்லை!” சலிப்புடன் முணுமுணுத்தவாறே அணைத்துவிட்டு எழுந்து யன்னலோரம் நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.
அவர்களின் வீட்டுக்கு முன்னாலிருந்த வெட்ட வெளியில் சிறார்கள் பலர் விளையாடிக் கொண்டிருந்தனர்.
‘மழையோ குளிரோ, பனியோ வெயிலோ இந்தப்பிள்ளைகள் வீட்டுக்குள்ள இருக்க மாட்டீனமோ!?’ நினைத்துக் கொண்டவளுக்கு, பத்துப் பாகையில் வீட்டினுள்ளேயே உடல் சில்லிட்டது!
கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு யன்னல் புறமாகப் பார்க்கும் வகையில் சோஃபாவில் ஏறி அமர்ந்து கொண்டவள், வீதியால் போவோர் வருவோர், விரையும் வாகனங்கள், பாதையின் இருமருங்கிலும் சைக்கிள் பாதையால் விரையும் சைக்கிள்கள் என பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திருமணத்தின் பின் எட்டு மாதங்கள் காத்திருந்து நெதர்லாந்து ‘விஸா’ பெற்றுக்கொண்ட மதுரா, இரு கிழமைகளுக்கு முன்பே இங்கு வந்திருந்தாள்.
இவள் கணவன் கணேஷுக்கோ கிழமையில் நான்கு நாட்களுக்கு இரவு வேலை! பலநாட்களில், “முக்கிய வேலை இருக்கு மதுரா!” மதிய உணவுண்ட கையோடு புறப்பட்டுச் சென்று விடுவான்.
அன்னை, தங்கைகள், தோழிகள் என, கலகல என்றிருந்து பழகியவள் இந்த வழமைக்குள் தன்னை புகுத்திக்கொள்ள மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறாள்.
இங்கு வந்ததும், முதல் முதல் வந்த விசேசம் சரஸ்வதி பூசை! ஒன்பதுநாளும் விரதமிருந்து இன்று வீட்டுப்பூசை செய்திருந்தாள்.
இதுவரை எந்த விசேசமென்றாலும் தாய், சகோதரிகள் என்று சேர்ந்திருந்தவள் இன்றோ தனிமையில்; மனம் மிகவும் ஏங்கியது.
‘இவரும் இல்லை; தனியாகப் படைச்சு நானே சாப்பிட்டு..’ அலுத்துக் கொண்டவள், ஒரு முடிவோடு எழுந்து சமையலறைக்குள் நுழைந்து பெரிய சில்வர் தட்டொன்றில் தயாரித்திருந்த உணவுப் பதார்த்தங்களை அழகாக எடுத்து வைத்தாள்.
இவர்கள் வீட்டின் வலப்புறம் வசிப்பவர்கள் தமிழ்குடும்பம்! காணும் போதெல்லாம் அன்பாகச் சிரித்து, கதைக்க முற்படுவார் அவ்வீட்டுப் பெண்மணி யோகம்.
இவள் புருசனோ, “அது சரியான வம்பு பிடிச்ச மனிசி; எரிச்சல் பொறாமை பிடிச்சது. நின்று சிரிக்காத! கதைக்கப் பிடிச்சா விடாது! இங்க நம்மட ஊர் போல இல்லை; யாரோட பழகுறதென்று அறிமுகம் செய்து வைக்கிறன்; மற்றவர்களோட சின்னத் தலையசைப்போட விட்டிரு போதும்!” என்று கண்டிப்புடன் கூறியிருந்தான்.
“இப்ப என்ன வம்புக் கதைகள் கதைக்கவா போறன்? ஒரு ஹலோ சொல்லி இதைக் கொடுக்கப்போறன்; அவ்வளவும் தானே? அந்த ஆன்ட்டியைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பொல்லாதவர் மாதிரியும் தெரிய இல்லையே! ஊரில எங்கட பக்கத்து வீட்டு ஆன்ட்டி போலவே இருக்கிறார். இவருக்கு, தனியே இருந்திருந்து பழகிப் போச்சு! என்னால் முடியாதப்பா!” என, முணுமுணுத்துக்கொண்டே வந்து அவர்கள் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி இருந்தாள் மதுரா.
அழைப்பு மணியோசையில் கையிலிருந்த வேலையை விட்டுவிட்டு விரைந்து வந்து வாயிலைத் திறந்த யோகம், அங்கே நின்றவளைக் கண்டதும் விழிகளில் மின்னிய வியப்போடு அன்பாக முறுவலித்தார்!
“அட! உள்ளே வாம்மா!” என்றவர், தன்னைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் முகபாவனையிலிருந்தே அறிந்து கொண்டாள் மதுரா.
“நேரத்துக்கே படையல் செய்து விட்டாய் போல இருக்கே!”
“ஓம் ஆன்ட்டி, இப்பத் தான் முடிச்சன்; அதுதான் உங்களுக்குத் தரலாம் என்று கொண்டு வந்தன்!” தட்டை நீட்ட, நன்றி கூறி வாங்கிக்கொண்டவர், “உள்ள வாம்மா! முதல் முதல் வந்திருக்கிறாய்; உள்ளே வா!” விலகி வழிவிட்டார்.
“பரவாயில்லை ஆன்ட்டி, இன்னொரு நாளைக்கு அவரோடு வாறனே!” வதனத்தில் புதுப்பெண்ணுக்கான நாணம் மின்னச் சொன்னவளை, ஒருகணம் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தார் யோகம்.
அவளின் குளிர்மையான யௌவனத்தில் இலயித்து, தன் வீட்டுக்கருகில் இரண்டு வருடங்களாக குடியிருக்கும் அவள் கணவனை அவளருகில் நிறுத்திப் பார்த்தவர் மனமோ, மிகவும் கோணியது! என்றாலும், அதைச் சிறிதும் வெளிக்காட்டாது இன்முகத்தோடு அவளை வரவேற்றார் யோகம்.
உள்ளே வா என மீண்டும் மீண்டும் அவர் அழைக்கவே, மிகவும் தர்மசங்கடப்பட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மதுரா.
“அட பரவாயில்லை, உன் புருசனோடு இன்னொரு நாளைக்கு வரலாம்; இப்ப நீ வா!” உரிமையாகக் கைபிடித்து அழைத்துச் சென்றார் யோகம்.
“இப்பத்தான் வடை பொரிக்கிறன்மா. என்ர வீட்டுக்காரர் வர இரவாகும்.” என்றவாறே, “இந்தா இதில் இரு!” கதிரை(chair) ஒன்றை எடுத்துச் சமையலறையில் போட்டார்.
“தேவையில்லை ஆன்ட்டி; நான் இப்படி நிற்கிறன்!” சமையல் மேடையில் சாய்ந்து நின்றுகொண்டாள் மதுரா.
வடையைத் தட்டி, கடகடவென்று எண்ணைத் தாச்சியில் போட்டவர், “மகன்களும் மகளும் வீட்டில இருக்கிற நாட்களில எந்த விசேசம் என்றாலும் ஆரவாரமாக இருக்கும். இப்பப் பார், மகளும் பெரிய மகனும் கல்யாணம் செய்து போய்ட் டீனம்; இங்கதான் ஒரே நாட்டில் இருந்தாலும் தமக்கு வசதிப்படி தள்ளி தள்ளி இருக்கீனம். எப்பயாவது லீவு கிடைச்சா வந்து போவீனம். அவரவர் சோலி அவரவருக்கு! சின்னவன் இப்பத்தான்மா படிச்சிட்டு வேலை பார்க்கத் தொடங்கினான். வேலை விசயமாக இலண்டன் போயிருக்கிறான்!” முறுவலித்தார்.
“அது சரி, உன்ர பெயர் என்ன? பார், பக்கத்து வீடு! ஒரே நாட்டாக்கள். நீ வந்தும் எத்தனை நாட்களாச்சு! இன்னும் உன்ர பெயர் தெரியாது!” வெள்ளையாகச் சிரித்தவரை, மிகவும் சங்கடமாகப் பார்த்தாள் அவள்.
இவர் பேச முற்படும் போதெல்லாம், சட்டென்று உள்ளே சென்று விடுவாளே!
“மது..மதுரா ஆன்ட்டி! அது வந்து…புது இடம் ஆன்ட்டி, பெரிதாக ஒருவரோடும் பழக்கமில்லை!”
“அட, இதிலென்ன இருக்கு சொல்லு பார்ப்பம்? இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகுவது.” என்றவர், “அழகான பெயர்; உன்னைப் போலவே!” அன்பாக முறுவலித்தார்.
“அம்மா அப்பா…” தொடர்ந்து, அவள் பற்றிக் கேட்டுக்கொண்டே தன் வேலையைத் தொடர, “நான் ஏதாவது செய்து தரட்டுமா ஆன்ட்டி!” இடையிட்டாள் இவள்.
“அதெல்லாம் தேவையில்லையம்மா; சாமி கும்பிடேக்க சேர்ந்து கும்பிட்டுட்டே போகலாம்!” என்றவர், அவள் மறுக்கும் முன், “உன்ர புருசன் இன்றைக்கு இரவு வேலை தானே?” வினவ, “ஆமாம் ஆன்ட்டி, நான்கு நாட்கள் இரவு வேலைதான்!” ஆமோதித்தாள்.
“ஓ…” இழுத்தவர், “வீட்டிலும் தனியாக என்னம்மா செய்வாய்?! நானும் தனியாத் தானே இருக்கிறன்; பேச்சுத் துணை; பொழுதும் போகும்!” இப்படி அவளோடு கதைத்துக்கொண்டே எல்லாவற்றையும் தயாரித்து எடுத்துக் கொண்டவர், “சரி வா, சாமி கும்பிடலாம்!” மிகவும் தயங்கியவளை, அன்போடு மாடிக்கு அழைத்துச் சென்றார்.
கடகடவென்று ஒரே மூச்சில் சொல்லிக்கொண்டு வந்த யோகம், “இப்படித்தான் ஆரம்பிச்சுது எங்கட பழக்கம்! நானும் அவளும் அம்மா பிள்ளை போல!” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
மதுராவை சந்திக்க முடியவில்லையே என்கின்ற குழப்பத்தோடு, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் விசாரித்திருக்கலாமே என்கின்ற எண்ணம் வந்ததும், திரும்பிப் போக இருந்தவர்களை அவரே வழியில் மறித்தார். தன்னை யோகம் என்று அறிமுகம் செய்து கொண்டவர், “உங்களுக்கு மதுரா யார்? சொந்தமா? எங்க இருந்து வாறீங்க?” என்ற விசாரணையோடு இவர்களை அணுகினார்.
கார்த்திகேயனும் நித்தியும் தாம் யார் என்பதைக் கூறியதும், “அப்படியா? உங்களோட கொஞ்சம் கதைக்க வேணும்; ஒரு கிலோமீற்றர் போனதும் பெட்ரோல் ஷெட் ஒன்று வருமே, அதில நின்று கதைப்போமா?” என்றவரின் விருப்பின் படியே அங்கு வந்தவர்கள், இதோ, பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டிறங்கி, காரில் சாய்ந்தவாறே நின்று கதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
“அதன் பிறகு ஒருவருடம் தம்பி, என்ர மகள் வீட்டில இல்லை என்ற குறை இல்லாமல் எங்களோட பழகினாள். தங்கமான பிள்ளை! அவனுக்கு இரவுவேலை என்றாலும், காலையில் வந்து மதியம் சாப்பிட்டதும் போயிருவான். ஞாயிறு மட்டும் இவளோட நிற்பான்!” சொன்னவர் முகம் அருவருப்பில் சுருங்கியது.
“அவளும் பாசை படிக்க போய்க்கொண்டிருந்தாள்; நல்ல பிரயாசையானபிள்ளை! (முயற்சியான பிள்ளை)” என்றவர், “மதுரா என்னோட பழகுறதில அந்தத் தடியனுக்கு விருப்பமில்லை. அவன் முறைப்போடுதான் என்னோட பழகி இருக்கிறாள் என்று எனக்குப் பிறகுதான் தெரியும்!” கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அவன் எங்கட வீட்டுக்கு அருகில் வீடு வாங்கி வந்த புதிசில கதைச்சிருக்கிறன் தம்பி. பிறகு, அவன்ட போக்குச் சரியில்லை என்று அரசல் புரசலா கேள்விப்பட்டதில் அவனோடு கதைக்கப் பிடிக்காமல் விட்டுட்டன். இருந்தும், கிளிபோல பெண்ஜாதி உள்ளவன் இப்படியெல்லாம் செய்வான் என்று நான் கனவிலும் நினைச்சிருக்க இல்லைத் தம்பி; கனவிலும் நினைச்சிருக்க இல்லை!” புலம்பினார் யோகம்.
“அப்படி மட்டும் நினைச்சிருந்தால் மதுராவிட்ட எச்சரிக்கை செய்திருப்பனே! கல்யாணத்துக்கு முன் அப்படி இப்படி இருந்தாலும், கல்யாணம் செய்ததும் பெஞ்சாதியை சந்தோசமாக வச்சிருக்கிறான் என்று, என் வீட்டுக்காரரிடம் கூடச் சொல்லியிருக்கிறனே! அது பார்த்தால், ச்சே!” முகம் சுளித்தார்.
இப்பெண்மணி, ஆரம்பத்திலிருந்து மதுராவின் கணவனைப் பற்றிப் பேசும் விதத்தில், அண்ணன் தங்கை இருவர் மனதிலும் சந்தேகம் தோன்றியது. அதோடு, ‘மதுராவுக்கு என்ன நடந்திருக்கும்!’ அறியும் ஆவல் மேலிட்டது. தமக்கு தேவையானதைச் சொல்லாது கதை பேசும் அப்பெரியவரை அடக்கிய பொறுமையோடு பார்த்தான் கார்த்திகேயன்.
நித்தியோ, பொறுமை பறக்க அவரருகில் நகர்ந்தவள், “சரி ஆன்ட்டி, இப்ப மதுரா எங்கே என்று சொல்லுங்கோவன்! சஸ்பென்ஸ் வைத்துக் கதை சொல்லுறது போல இருக்கு உங்கட பேச்சு!” கேலியாகச் சொன்ன நித்தியை அமைதியாகப் பார்த்தார் யோகம்.
வருத்த முறுவல் ஒன்றும் அவர் முகத்தில் தோன்றி மறைந்தது. “நீங்க தேடும் மதுராவின்ட வாழ்விலும், ஒளிவு மறைவும் இரகசியமும் தான் அவளைப் போட்டுப் பாடாய்ப்படுத்தி விட்டுதே!” அங்கலாய்த்தார்.
அதைக் கேட்ட நித்தியின் பொறுமை மின்னல் வேகத்தில் விடைபெற்றுக் கொண்டது. அது டாட்டா காட்டத் தயங்கிய தருணத்தில், “எல்லாம் சரி; என்ன நடந்தது? மதுரா எங்கே? கொஞ்சம் விளங்குற மாதிரி சட்டென்று சொல்லுங்க பார்ப்பம்!” என்றான் கார்த்திகேயன்.
நீ சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு நிற்கும் பொறுமை எனக்கில்லை என்பதை, அவன் பாவனையும் குரலும் காட்டியதைப் புரிந்து கொண்டார் யோகம். அதை அவர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இத்தனை நாட்களில் மதுராவை எவருமே அக்கறையாக விசாரித்ததில்லை. அவளும் தான், அவள் உற்றவர் தொடர்புகளை தர மறுத்துவிட்டாள். இப்போ, வலிய வந்தவர்களை விட்டுவிடுவாரா? தன் மனத்தாங்கல் முழுவதையும் கொட்டிவிட எண்ணினார் யோகம்.
“அதையேன் தம்பி கேட்கறீங்க!” மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.
“திடீரென்று ஒருநாள் இரவு ஒரு பதின்னொன்று பன்னிரண்டு இருக்கும், அவேன்ட வீட்டில ஒரே சத்தம்! ஒருநாளும் இப்படிக் கேட்டதில்லை; என்னவோ ஏதோ என்று பார்த்தால், புருசன் பெஞ்சாதி சண்டை!
ஓடிப்போய் என்ன ஏதென்று விசாரிக்க மனம் துடிச்சாலும் முடியேல்ல! ‘எங்கட வீட்டுப்பிரச்சனை நீ ஏன் தலையிடுகிறாய்’’ என்று கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும்? அதனால், அமைதியாக இரு என்று என் கணவர் சொன்னதும் சரியாக இருக்கவே, அமைதி காத்தன்!”
“பிறகு..” அவசரப்பட்டாள் நித்தி.

