3
மதுரா தங்கியிருக்கும் வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தனர் கார்த்திகேயனும் நித்தியும். அவர்களின் முன்னால் சென்று கொண்டிருந்தார் யோகம்.
இவளைச் சந்திக்கவெனப் புறப்படுகையில் கைபேசி அழைப்புக்கு பதிலில்லை என்கின்ற சலிப்பும், சிறியதாயாருக்காக ஒரு வேலையைச் செய்துமுடிக்கும் கடமை உணர்வுமே அவர்களில் வியாபித்திருந்தது. அதுவே இப்போது, கோபக்கனலைப் பூசி அனலாகத் தகித்தது.
‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியவனை அவ்வளவு இலகுவாக விட்டு விடுவதா?’ கணேஷை, மிதித்து நசுக்கும் ஆவேசத்தில் துடித்த மனதை அடக்கிக்கொள்ள, மிகவும் பிரயத்தனம் செய்தான் கார்த்திகேயன். பெயரால் மட்டுமே அறிமுகமாகியிருந்த, ‘மதுரா’ என்கின்ற அப்பாவிப் பெண் மீதான இரக்கமும் பரிதாபமும் அவன் மனதில் வெகுவாகச் சுரந்தது.
நித்தியும் அதே நிலையில் தான் இருந்தாள். “ஏன்ணா! இவன்களை எல்லாம் உள்ளே வைக்க வழியே இல்லையா? நல்ல சுகமாக விவாகரத்துக் குடுத்துவிட்டு அந்தப் பொம்பளை, பிள்ளையோடு இருக்கிறானே பாவி! இதை முதலிலேயே செய்திருக்கலாமே! ஒருத்தி வாழ்வில் விளையாடிவிட்டா செய்ய வேணும்? நாம இப்படியே வந்தது தப்பண்ணா! அவன்ட முகத்தில காறித் துப்பி, செருப்பைக் கழற்றி நாலு கொடுத்துவிட்டு வந்திருக்க வேணும்.” அடங்க மறுத்த ஆத்திரம் அவளுக்கு.
“அவன் கொடுமை செய்தான் என்று சொல்லி இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்; மதுரா அப்படிச் சொல்லவில்லை என்று யோகம் ஆன்ட்டி சொல்லவில்லையா?” ஏன் அவள் அப்படிச் செய்யவில்லை என்கின்ற கோபம் கார்த்திகேயனுக்கு.
“ம்ம்…இப்படியான வசதிகள் இருக்கும் போதே தண்டிக்காமல் இலகுவில் விடுவதால் தான் குளிர் விட்டுத் திரிகிறார்கள்! இரண்டில் ஒன்று பண்ண வேணும். பலர், தண்டிக்க வேண்டிய அந்த மிருகங்களை விட்டுட்டு தம்மைத் தாமே தண்டித்துக் கொள்வார்கள். அவனை ஏன் அப்படியே இலகுவில் விட்டிட்டீங்க என்று மதுராவிடமே கேட்கிறன்.” ஆவேசத்தில் குமுறிய தங்கையை கண்டிப்புடன் பார்த்தான் தமையன்.
“இங்க பார் நித்தி, நாம் போய் அவவின் வருத்தத்தைக் கிளறி விட்டு விட்டமாதிரி இருக்கக் கூடாது. அதனால, தேவையில்லாமல் கதைக்காத! நமக்கு எல்லா விபரமும் தெரியும் என்று அந்த ஆன்ட்டி எப்படியும் சொல்வார்தானே? பொதுவாகக் கதைத்து, அவர் அந்த வீட்டில் எப்படி இருக்கிறார்; உதவி ஏதாவது தேவையா என்று பார்த்துச் செய்துவிட்டு வருவோம்; அதுதான் முறை.” என்றான் கார்த்திகேயன்.
“ம்ம்…நீங்க சொல்லுறதும் சரிதான்ணா! ஆனால், அவனுக்கு ஏதாவது செய்ய வேணும்!” அவள் மனம் ஆற மறுத்தது.
“அவன் இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது நன்றாக வாங்கிக் கட்டுவான்; பார்த்துக்கொண்டே இரம்மா!” இப்படிக் கதைத்துக்கொண்டே வந்தவர்கள், வரிசையாக அமைந்திருந்த வீடுகளின் அருகில் காரை நிறுத்திய யோகத்தை தொடர்ந்து தாமும் நிறுத்தினார்கள்.
“இந்த வீட்டிலா இருக்கிறார்!” கேட்டுக்கொண்டே இறங்கினாள் நித்தி.
தானும் இறங்கி காரை லாக் பண்ணிய கார்த்திகேயனை, விரைந்து நெருங்கிய யோகம், “தம்பி, அவள் அப்படிப்பட்ட பிள்ளை இல்லை; என்றாலும், மனம் நோகும் படி நடந்துகொண்டால் குறை நினைக்காதீங்க!” தன் மகள் போல மதுராவை நினைத்து அவர் சொன்ன விதத்தில் அவரை மிகவும் பிடித்துப் போனது, அண்ணனுக்கும் தங்கைக்கும்.
“அதெல்லாம் நாங்க ஒன்றும் நினைக்க மாட்டம் ஆன்ட்டி; வாங்க, எது வீடு?” அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு நடந்தாள் நித்தி.
இவர்கள் அழைப்பு மணியை அழுத்தியதும் கதவு திறந்து கொண்டது!
“வாங்கக்கா.. நீங்க வரப் போவதாகச் சொன்னதும் வேலையிலிருந்து வந்தன்!” என்ற அவ்வீட்டுப்பெண்மணி, “வாங்க; உள்ளுக்கு வாங்க!” இவர்களையும் வரவேற்றார்.
“திடீரென்று வர வேண்டியதாப் போச்சு சுபா; உன்னை வேறு கஷ்டப்படுத்திட்டேனா?” என்றவாறே நுழைந்த யோகம், வீட்டினுள் விழிகளால் துலாவினார்.
“அதெல்லாம் பரவாயில்லையக்கா!” என்ற அப்பெண், “மதுரா, மேல அவள்ட அறையில் இருக்கிறாள்; இன்றைக்கு ஆஸ்பத்திரி போய் வந்திருப்பாள்; களைப்பில படுத்திருக்கிறாள் போல!” என்றவர்,
“கொஞ்சம் இருங்க, நீங்க வந்திருப்பதைச் சொல்லுறன்!” நகர,
“இல்ல சுபா, நான் போய்ப் பார்க்கிறன்!” மாடியேறத் தொடங்கிய யோகம், எதையோ நினைத்துக்கொண்டு திரும்பி வந்து, நித்தி கார்த்திகேயனுக்கு எதிரில் இருந்த இரட்டைச் சோஃபாவில் அமர்ந்து கொண்டார்.
“நீயே போய் வரச் சொல்லு; நான் போய் இவர்கள் வந்திருப்பதைச் சொன்னால் சிலவேளை வரமாட்டேனென்று சொல்லி விட்டால்!” தன் தயக்கத்தைச் சொன்னதும் மாடியேறினார் சுபா.
“நான் வந்திருக்கிறன் என்று சொல்லு சுபா!” என்ற யோகம், ‘இவர்களைக் கண்டதும் எப்படி நடந்துகொள்வாளோ!’ யோசனையோடு கார்த்திகேயனையும் நித்தியையும் ஏறிட்டார்.
*****
வழமையாகச் செல்லும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்று வந்த மதுரா, மிகுந்த களைப்புடன் கட்டிலில் சரிந்தவள் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.
இப்போது, திடீரென்று ஒலித்த அழைப்பு மணியோசையில் திடுக்கிட்டு விழித்தவள், கீழே சுபாவின் பேச்சுச் சத்தம் கேட்கவே, பார்வை கடிகாரத்தில் மோத, ‘என்ன ஆன்ட்டி நேரத்தோடு வந்திருக்கிறார்! யாரோ வந்திருக்கிறார்கள் போல இருக்கே!’ நினைத்தவாறே, கட்டிலை விட்டு எழும் எண்ணமின்றி சாய்ந்திருந்தாள்.
‘ஓய்ந்து கிடக்கும் மூளை சாத்தானின் உலைக்களம்!’ என, அறியாமலா சொன்னார்கள்! அவள் எண்ணங்கள் ஒன்றோடு ஒன்றாக, பலமாக உராய்ந்து கொண்டன.
சிறுவயதில், மூன்று பெண்குழந்தைகள் ஒரே செல்ல மகன் என, நால்வரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்த பெற்றவர்களின் நினைவில் மனம் கலங்கியது. வறண்ட விழிகளிரண்டும், ‘துளி ஈரம் கிடைக்குமா?!’ ஏங்கி நின்றன.
அநியாயமாக ஒன்றாக இழந்த தந்தை, தமையன் நினைவுகள் அவளை மிகவும் அருட்டிப் பார்த்தன. யாரை நோவது? நொந்தால் போன உயிர் ஓடி வந்திடுமா?
அன்று, தாய் கமலாவின் கையிலிருந்த ஆசிரியர் தொழிலும் சொற்ப சொத்துக்களும், இவர்கள் மரியாதையாக வாழ வழி அமைத்துக் கொடுத்தன. கல்யாணத்தின் பின் கணவனின் கைப்பற்றி நடந்த தாய், சுயமாக மகள்களை வழிநடத்தத் தொடங்கினார்.திடீர் பொறுப்பு! அது அவ்வளவு இலகுவானதா? வாழ்வை இழந்த கைம்பெண், மூன்று பெண்குழந்தைகள்! அசரவில்லை மதுராவின் தாயார்.
‘அம்மா எங்களுக்கு எதில குறை வச்சார்? பார்த்துப் பார்த்து பாதுகாத்து வளர்த்தாரே! அப்பாவாகவும் அம்மாவாகவும் இருக்க முயன்றார்; அதில் வெற்றியும் கண்டார்!’ ஆனால், ‘அவர் ஆசை ஆசையாகப் பொருத்தம் பார்த்துத் தேடிச் செய்த சம்பந்தம், அவர் மகள் வாழ்வில் சதிராட்டம் போட்டு விட்டதே!’ விரக்தியின் பிடியில் நெரிந்து மூச்சுமுட்டிக் கிடந்த மதுராவின் மனம் முனகியது.
“வெளிநாடா? அதுவும் நெதர்லாந்தா? அங்க எங்களுக்கு உறவென்றும் யாரும் இல்லையே!” கமலா, ஆரம்பத்தில் சற்றே பின்வாங்கினார் தான்.
“இதென்ன டீச்சர் உங்கட கதை? இப்ப உலகமே கைக்குள்ள; இப்பப் போய் வெளிநாடா என்று வியப்பாகக் கேட்கிறீங்க!” பொருந்திய வரனை சேர்த்து வைத்துவிட முயன்றார் தரகர்.
“பத்துக்கு எட்டுப் பொருத்தம் டீச்சர்! ஆஹோ ஓஹோ என்று வாழ்வார்கள்!” என்றதை, அச்சுப் பிசகாது நம்பியது அந்த அன்னையின் நெஞ்சம்.
“பெண்ணுக்கான நகையோடு தொகையாகக் காசு கொஞ்சம் கேட்கீனம் . மூன்று சகோதரிகளுக்கு மாப்பிள்ளைதான் சீதனம் கொடுத்துக் கலியாணம் செய்து கொடுத்தாராம். பொறுப்பான பிள்ளை; என்றாலும் தனக்கென்றும் பார்க்க வேணும்தானே! இப்பத்தான் சொந்தமா வீடு வாங்கி இருக்கிறாராம். அதனால், கடைசி மகள் கல்யாணத்துக்கு மகனுக்கு வரும் சீதனத்தை பாவிக்க நினைக்கிறார்கள்.” தரகர் சொல்ல, தயங்கவில்லை மதுராவின் தாய்.
மாப்பிள்ளை வீட்டாரின் வெளிப்படையான கோரிக்கை அவருக்கும்பிடித்தே இருந்தது.

