“இது என்ன நடவாத விசயமா?” என்றவர், ‘இந்த வீட்டை ஒன்றும் செய்யக் கூடாது; இன்னும் ரெண்டு பிள்ளைகள் இருக்கிறார்களே!’ என முடிவெடுத்து, தமக்குச் சொந்தமான நிலத்தை விற்று மாப்பிள்ளை வீட்டார் கேட்ட பணத்தைக் கொடுத்து, மகளையும் நிறைவாக மணமுடித்து அனுப்பி வைத்தார்.
“புருஷன் இல்லையென்றாலும் ஒரு குறையுமில்லாது நிறைவாகக் கல்யாணத்தை நடத்தி விட்டாரே கமலா!” அன்று, உறவும் சுற்றமும் வியந்தது!
இன்றோ? “அவர்ட மகள் வாழ்வு நகைப்பாகப் போய்ட்டுதே!” அவமானத்திலும் ஆத்திரத்திலும் முகம் சிவக்க முணுமுணுத்துத்தாள் மதுரா.
அவள் மனம் ஊமையாக அனத்தியது! நைந்துபோன உள்ளத்தின் வேதனையின் வாசனையை உணர்ந்தும், அவள் நயனங்கள் சிறிதும் கலங்க மறுத்தன.
‘மளுக்’ சரிந்து படுத்திருந்தவள் வயிற்றினுள் மெல்லதிர்வு! அவள் மேனி சில்லிட்டது! அவளையுமறியாது நகர்ந்த கரம் வயிற்றில் படிந்து, மீண்டும் அசைந்த சிசுக்களை உணர்ந்து கொண்டது. பரவசத்தை அள்ளித் தெளித்த சிசுக்களின் நகர்வில் கசப்பும் மிகையாகக் கலந்து கிடக்கின்றதே.
நெஞ்சைக் கவ்விய வேதனைகளையும் மீறி, எவ்வளவோ ஆலோசனைகளைக் கேட்டிருந்தாலும் பயப்பிராந்தியில் குலுங்கியது அவளிதயம்.
கிடையவே கிடையாது எனத் தெரிந்தும், ஆதரவுக்கு ஏங்கிய அவள் உள்ளம், அது நூலளவாவது கிட்டுமா என்கின்ற தவிப்பில் அங்குமிங்குமாக அலைபாய்ந்தது.
“இந்தப் பிள்ளையே வேணாம் ; எனக்குவேணவே வேணாம்!” அவள் கதறித் துடித்த நாட்கள் நினைவில் மின்ன, “ நீங்க ரெண்டு பேரும் என்ர குழந்தைகள் மட்டும் இல்லையே! ஒரு கொடிய மிருகத்தின் இரத்தமும் கலந்தவர்கள் தானே நீங்க!” எவ்வளவு முயன்றாலும் இந்த உணர்வை அவளால் வெல்ல முடியவில்லை. சட்டென்று எழும் வெறுப்பை, அருவருப்பை இலகுவில் கடக்க முடியவில்லையே!
‘என்னை போல் பிறக்காமல் அந்தக் காதகன் போலவும் பிறக்கலாமே! அப்படி மட்டும் நடந்தால் அக்குழந்தைகளை எதிர்கொள்வதென்பது இலகுவானதா?’ அவள் மனம் இரத்தக் கண்ணீரோடு புலம்பியது.
கருத்தரித்ததை முதலில் சந்தேகித்து பின் ஊர்ஜிதம் செய்துகொண்ட கணம் அவள் அனுபவித்த ஆனந்தம், அளவிடவோ, வார்த்தை வடிவமளிக்கவோ முடியாதது.
‘நானும் அம்மாவாகப் போகிறேன்! நமக்கே நமக்கென்று குழந்தை!” இதயம் விம்ம, அதே மகிழ்வைப் பகிர்ந்து கொண்ட கணவனில் ஒன்றினாள் மதுரா.
“அம்மா, உங்களை அம்மம்மா என்று அழைக்க ஒரு ஆள் வரப் போகிறார்!” ஸ்கைப் தொடர்பில் வந்த தாயிடம் உவகையோடு பகிர்ந்து கொண்ட கணம், பேச்சை மறந்து கண்ணீரோடு நின்றார் அவள் அன்னை. தங்கைகளோ, ஆனந்தத்தில் ஒருவர் ஒருவரை கட்டியணைத்துக் கொண்டனர்.
“உன் அப்பாவோ அண்ணாவோதான் உன் வயற்றில் பிறப்பார்கள் மதும்மா!” என்றிருந்தார் அவர் அன்னை.
“நிறைய நாட்கள் நிற்காவிட்டாலும் பரவாயில்லை, ஒருமாதம் சரி வந்துவிட்டுப் போங்கம்மா!” தாயிடம் இவள் போட்ட மனு.
“எனக்கும் வர ஆசையில்லையா செல்லம்? தங்கச்சிகள் தனியே, அதுதான் யோசிக்கிறன்.” என்ற கமலாவும், “சரி, ஒருமாதம் தானே? இவர்களை மாமா வீட்டில் விட்டுட்டு வாறன்!” என்றிருந்தார்.
அந்த மகிழ்வும் பூரிப்பும் அற்ப ஆயுளைக் கொண்டிருந்தது ஏனோ!?
சிலநாட்கள் மட்டுமே சீராட்டப்பட்ட கரு, தாங்கி நின்ற தாயே வெறுக்கும் படி என்ன பாவம் செய்தது?
உயிர் பெறா சதைப்பிண்டமாக இருக்கும் போதே அன்னையின் வெறுப்பை உணர வைத்தாள் மதுரா.
கட்டியவனே பொய்த்து, உதிரியாகி நாறிப் போகையில், அவன்மூலம் உருவான கரு எம்மாத்திரம்?!
“வேணவே வேணாம்! ஒருகணமும் இதை நான் சுமக்கத் தயாரில்லை!” அருவருப்போடு கதறித் தீர்த்தவளை அமைதிப்படுத்துவதே சவாலானதே!
எல்லாவற்றிலும் பெற்ற அன்னைபோல பொறுமையாகவும் அனுசரணையாகவும் துணை நின்றார் யோகம்.
உயிர் பெற முன்னரே தந்தையின் வண்டவாளம் வெளிப்பட்டு, தாயின் வெறுப்பை சுவாசித்து, தாய் மனதின் கசப்பையும் அமிர்தமாகச் சுவைத்து, எதற்கும் நாங்கள் அசைந்து கொடுக்க மாட்டோம் என்று ஒருவருக்கு இருவராக அவள் வயிற்றில் மொட்டு விட்டிருந்தனரே! யார் செயல்?!
என்னதான் வெறுப்பிருந்தாலும் தாய்மை என்கின்ற புனிதம், இயல்பிலேயே கனிவான மனம் கொண்ட மதுராவின் பிடியிலிருந்து விலகிவிடாது, அவள் குத்தினாலும் குதறினாலும் அவளுள்ளே வாசம் செய்யவே விரும்பி நிற்கின்றது. குழந்தைகளின் அசைவை உணரும் கணங்களில் தன்னையும் மறந்து அவளைச் சிலிர்க்க வைக்கவே, தன்னை மறக்க வைக்கவே விரும்புகின்றது.
“அம்மா என்றழைக்கப் போகும் குழந்தைகளிடம் நான் உண்மையாக நடந்து கொள்வேனா?” வாய்விட்டு அரட்ட, மீண்டும் வயற்றினுள் புரள்வது போலிருக்க, பயத்தோடு எழுந்தமர்ந்தாள்.
மெல்ல வயிற்றைத் தடவிப் பார்த்தவள் மனமோ, ஒரே ஓட்டமாக தாயிடம் ஓடிவிடவே ஏக்கம் கொண்டது.
“அப்படி ஓடி, இன்று நான் மட்டும் அனுபவிக்கும் வேதனையை அம்மா தங்கச்சிகள் எல்லோருக்கும் கொடுக்க வேணுமா? இத்தனையைத் தாங்கிய என்னால் இதையும் தாங்க முடியாதா?’ விழிகளை இறுக மூடிக்கொண்டாள்.
“டொக்…டொக்… மது…” சுபாவின் குரலில் சட்டென்று கலைந்தவள், “இதோ வாறன் ஆன்ட்டி!” மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள்.
“எழுந்து விட்டாயாம்மா?” இறுகியிருந்த அவள் முகத்தை கூர்ந்து நோக்கினாலும், எப்போதும் போல எதையும் விசாரிக்க முனையவில்லை அவர். அவள் பற்றி முழுவதும் அறிந்திருந்தவர், அவளோடு பெரிதாக கதை, பேச்சை வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
‘நான் ஒன்றைச் சொல்ல, அதற்கு அவள் வேறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டால் என்ன செய்வது? அதுவும், கவுன்சிலிங் அங்கு இங்கு என்று அலைந்து கொண்டிருக்கிறாள்; ஏன் வீண் பொல்லாப்பு? யோகம் அக்கா வருந்திக் கேட்டதால் அறையை வாடகைக்கு விட்டிருக்கிறேன். அவ்வளவுதான் நம் தொடர்பு!’ அளவாக இருந்து கொண்டார் சுபா.
“இரவுச் சாப்பாடு தாறன் ; அதற்கும், கரண்ட்பில்லில் ஒருபகுதிக்கும் வாடகையோடு சேர்த்துத் தந்துவிடு!” இவ்வளவுதான் இவர்கள் உறவு.
அவள் மனதைக் கிளறி துன்பப்படுத்துவதை விட, இப்படி, பட்டும் படாமல் இருப்பதே மேலாகத் தோன்றியது யோகத்துக்கு. அதனால் தான் அவளை இங்கே குடியமர்த்தினார்.
“உன்னைப் பார்க்க…” சற்று நிதானித்தவர், “யோகம் அக்கா வந்திருக்கிறார்; உன்னை வரச் சொன்னார். நித்திரை என்று நினைச்சன், தூங்க இல்லையா?”
“அப்படியே அசந்திட்டன் ஆன்ட்டி; இப்பத்தான் எழும்பினன். இதோ, இரண்டு நிமிசத்தில் வாறன்!” என்றவள், ‘கால் பண்ணாது வந்திருக்கிறாரே; என்னவாக இருக்கும்!’ யோசனையோடு குளியல றைக்குள் புகுந்து கொண்டாள்.

