“எங்கட அக்காவுக்கும் இரண்டு மகன்கள்; இரண்டாவது குழந்தை பிறப்புக்கு என்று புறப்பட்டுப் போய்த்தான்..” கடகடவென்று சொல்லிக் கொண்டு வந்தவள் மீண்டும் கலங்கினாள்.
“நித்தி என்ன இது?” சட்டென்று கடிந்து கொண்டான் கார்த்திகேயன். அவனின் இறுகிய முகத்தைப் பார்த்துவிட்டு நித்தியிடம் திரும்பினாள் மதுரா.
மீண்டும் அவள் கரம் நித்தியை ஆதரவாக அணைத்துக் கொண்டது.
“இரண்டும் பெண் குழந்தைகளாம்; சிலவேளை வேறு மாதிரியும் இருக்கலாம் என்றார்கள்!” நித்தி கேட்டவைக்கு எவ்வித பாவனையுமின்றி பதில் சொல்லி, அவள் நினைவை மாற்ற முயன்றாள்.
“வாவ்…இரண்டு ஏஞ்சல்ஸ்! ஹப்பா! அப்ப உங்களைப் போலவே ஒன்றுக்கு இரண்டா?” முகம் மலர கூறினாள் நித்தி.
கேட்ட மதுராவின் முகமோ கருமையைப் பூசி மீண்டது!
“தேத்தண்ணி எடுத்துக் கொள்ளுங்க!” எல்லோருக்கும் கொடுத்தார் சுபா.
மதுரா, எப்போதுமே குழந்தைகள் பற்றிய பேச்சை விரும்புவதில்லை என்பதை அறிந்திருந்த யோகம், “இந்தா மதுரா, நீயும் குடியம்மா! மத்தியானம் என்ன சாப்பிட்டாய்? பார், இரண்டு கிழமைக்கு முதல் பார்த்ததைவிட இன்னும் மெலிஞ்சிருக்கிறாய். கன்ன எலும்பெல்லாம் தள்ளிக்கொண்டு நிற்குது. நீ சொல்வதைக் கேட்க மாட்டாய் போலிருக்கே!” கடிந்து கொண்டார்.
“நல்லாத்தான் சாப்பிடுறன் ஆன்ட்டி. சுபா ஆன்ட்டி முழுநாளுக்கும் தேவையானதை இரவில தந்து சாப்பிடச் சொல்லி நிற்பார்! அதனால், மற்ற நேரங்களில் கொஞ்சமாகச் சாப்பிட்டு இடம் வச்சிருப்பன்.” சமாளிப்பாகச் சொன்னாள்.
“அட…இது நல்ல கதையாயிருக்கே! நம்பாதீங்க யோகம் அக்கா; ஒருநாளும், கொடுக்கிறதை முழுதும் சாப்பிடுறதில்லை. உனக்கில்லை என்றாலும் வயிற்றில் ஒன்றுக்கு இரண்டாக வைத்திருக்கிறாய் சாப்பிடு என்று திருப்பித் திருப்பிச் சொன்னால் தான் இறங்கும்!” என்ற சுபா,
“பெரியவர்கள் பிரச்சனைகளில் இன்னும் பிறக்காத குழந்தைகள் மீதும் கோபம் காட்டுவது என்றால்…” பேச்சைத் தொடர, மிகவும் அசௌகரியமாக உணர்ந்தாள் மதுரா.
நித்தியையோ மற்றவர்களையோ நிமிர்ந்து நோக்கவும் முடியாது தடுமாறி தேநீரைப் பருக முனைந்தவளை, அந்நேரம், அதிலிருந்து காப்பது போல அவள் கைபேசி மணிச்சத்தம் அழைத்தது.
“ஃபோன் அடிக்குது.. இருங்க பார்த்துவிட்டு வாறன்!” அவசரமாக எழுந்தாள்.
“எங்க இருக்கு, உங்கட அறையிலா? நீங்க இருங்க நான் எடுத்துக்கொண்டு வாறன்!” தானும் எழுந்த நித்தி, “உங்கட அறை எதுவென்று சொல்லுங்க!” என்றவள், “இல்லை, தேவையில்லை; நானே பார்க்கிறன்! கஷ்டம் ஒன்றுமில்லை!” என்ற மதுராவை பிடித்து அமர்த்தினாள்.
“சுபா ஆன்ட்டி, மதுராவின்ட ரூம் எது?” கேட்டுக்கொண்டே படிகளில் தாவி ஏற, “வலது பக்கம் முதல் அறை!” முறுவலோடு சொன்னார் சுபா.
கைபேசியை எடுக்க முன், அது அடித்து ஓய்ந்துவிட்டது.
“பச்!” என்றவாறே கைபேசியை எடுத்த நித்தியின் விழிகள், ஒற்றைக் கட்டிலோடு இருந்த அச்சிறு அறையை அளவெடுத்தது.
“அவசரமாகத் திரும்பினால் சுவரில்தான் மோதுப்பட வேணும்; இதில், குழந்தைகளோடு எப்படிச் சமாளிப்பார்! அல்லது, வேறு வீடு பார்ப்பாரா? அதுவும் இரு குழந்தைகள்!” முணுமுணுத்துக் கொண்டவளின் மனதில் மின்னலென ஒரு வழி தோன்றியது.
சட்டென்று தன் கைபேசியில் இருந்து ஒரு ‘எஸ்எம்எஸ்’ தட்டி விட்டவள், அதற்கு பதிலை எதிர்பார்த்துக்கொண்டே மெதுவாகக் கீழே இறங்க, மதுராவின் கைபேசி மீண்டும் சிணுங்கியது.
ஒரே தாவாக கைபேசியைக் கொடுத்தவள், தமையனைப் பார்த்துக்கொண்டே போய் அமர்ந்து கொண்டாள்.
கைபேசியோடு சிறிது தள்ளிச்சென்ற மதுராவின் பேச்சிலிருந்து, அவளோடு வேலை செய்பவர் பேசுகின்றனர் என்பது விளங்கியது.
வந்த குறுகிய காலத்தில் பாஷையை ஓரளவுக்கு நன்றாக அவள் கதைப்பதைப் பார்த்து வியந்தனர், அண்ணனும் தங்கையும்.
தன் கைபேசியை தட்டிக் கொண்டிருந்த நித்தி, அருகில் வந்தமர்ந்தவளிடம், “ஃபோன் பண்ணினால் எடுத்துப் பேசும் வழக்கமே உங்களுக்கில்லை என்றுதான் நினைச்சிருந்தம்! ஆனால், அப்படி இல்லை போலிருக்கே!” கேலியோடு கூற, புரியாமல் பார்த்தாள் மதுரா.
“அதென்ன, நாங்க ரிங் பண்ணினால் மட்டும் எடுத்துக் கதைக்க மாட்டீங்க போல! என்னண்ணா, எவ்வளவு தடவைகள் எடுத்திருப்பம் இல்லையா?” தொடர்ந்தவளைத் தவிப்போடு நோக்கியவள், வந்ததிலிருந்து அமைதியாக இருக்கும் கார்த்திகேயனை ஒருதரம் பார்த்துவிட்டு நித்தியிடம் திரும்பி, “நீங்க எனக்கு எடுத்தீங்களா நித்தி?” என்றவளுக்கு சட்டென்று நினைவு வந்தது.
“ஹைய்யோ…ஸாரி…ஸாரி நித்தி. தெரியாத நம்பர், அதுவும் இங்க அப்படி எனக்கு யாரைத் தெரியும் என்று பேசாமல் இருந்திட்டன். ஸாரி! ஸாரி!” நித்தியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
“அட…பரவாயில்லை விடுங்க; அதற்குப் பதிலாக நான் உங்களை நல்லாவே ஏசிட்டன். (நன்றாகவே திட்டிட்டன்) அண்ணா கூட நல்லாப் பேசினவர் (நன்றாகத் திட்டினார்)” மீண்டும் தமையனை இழுத்தாள் நித்தி.
எப்போதுமே கலகலப்பாக இருப்பவள் நித்தி. பெற்றோர் மறைவோடு அவள் கலகலப்பும் துள்ளலும் காணாமல் போயிருந்தது. அதை மீட்டு வர அவள் தமையனும் முயன்று தோற்றிருந்தான். இன்று, பழைய தங்கையின் சாயலைக் கண்டவனுக்கு மனதில் மகிழ்வு பொங்கியது.
சிறுமுறுவலோடு தங்கையைப் பார்த்திருந்தவனை மீண்டும் தவிப்பாகப் பார்த்த மதுரா, “ஸாரி…” ஆரம்பிக்க, அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பிய நித்தி, “அதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது மதுரா!” கண்டிப்பாகச் சொன்னாள்.
“இங்கு ஃபிளவர் ஷோ நடப்பது தெரியும் தானே; ஏப்ரல் கடைசியில் வரும்.”
“ம்ம்…தெரியும், போன தடவை பார்த்தன்!” என்றவள் வதனம், கணத்தில் இருண்டுவிட்டது!
சென்றவருடம் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டியிருந்தான் கணேஷ். அங்காங்கே நிறுத்தி நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். அவற்றை, மிகுந்த மகிழ்வோடு தங்கைகளுக்கு அனுப்பி வைத்திருந்தாள் மதுரா.
அவளின் இருண்ட வதனத்தில் பார்வை பதித்திருந்த நித்தி, “அப்ப உங்களை வந்து பார்க்கலாம் என்றுதான் நினைச்சிருந்தம் மதுரா!” சட்டென்று சொல்ல, கடினப்பட்டு, தன் நினைவிலிருந்து மீண்டு நித்தியின் பேச்சில் கவனம் செலுத்தினாள்.
“சுதாச் சித்தி விட்டாவா? உடனே போய்ப் பார் என்று ஒற்றைக்காலில் நின்றார். அவவின்ட தொந்தரவு தாங்காமல் தான் இங்க வந்தம்!” உண்மையை மறைக்காது சொன்னவளை, மதுராவுக்கு மிகவும் பிடித்துப் போனது.
‘இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளை என்றாலும் நம்மூர் பிள்ளைகள் போல கலகலப்பாக பழகுகிறாள்!’ மனதுள் எண்ணினார் யோகம்.
“இப்ப, நான் உங்களைத் தொந்தரவு செய்யப் போறன்! பிடிக்குதோ இல்லையோ, எனக்காக அதைச் செய்வீங்களா? சித்திக்காக உங்களை நாங்க பார்க்க வந்தது போல..” புருவம் உயர்த்திக் கேள்வி கேட்டவளை புரியாது பார்த்தவள், “சொல்லுங்க நித்தி, என்ன செய்ய வேணும்? எதுவென்றாலும் உங்களுக்காகச் செய்யிறன்!” அன்போடு அவள் கரம் பற்றினாள்.
“அது…” சட்டென்று மதுராவைக் கட்டிப் பிடித்துக் கொண்டவளின் பார்வை, தமையன் விழிகளோடு கதைபேசி மீண்டது!
“சரி, அப்ப எடுப்பதை எடுத்துக்கொண்டு கெதியா வெளிக்கிடுங்க!” கட்டளையாகச் சொன்னவள், இருந்த இடம் விட்டு எழுந்து , “சுபா ஆன்ட்டி எங்கட மதுராவைக் கவனமாகப் பார்த்துக் கொண்டதற்கு மிக்க நன்றி!” அவர் கரம் பற்றி குலுக்கிவிட்டு, குழப்பமாகப் பார்த்து நின்ற யோகத்தினருகில் சென்றாள்.
“ஆன்ட்டி, உங்களுக்கு நன்றியெல்லாம் சொல்ல மாட்டன். மதுரா உங்கட மகள் என்று சொன்னீங்க தானே? அப்ப, நன்றி தேவையே இல்லை. இனிமேல் மதுரா எங்கட பொறுப்பு; நீங்க கவலைப்படவே வேணாம்.” அவரின் முகம் வியப்பில் குளிப்பதைப் பார்த்தவாறே, “மதுராவை நாங்க கவனமாக பார்த்துக் கொள்ளுவம்!” யோகத்தை, அன்பாகக் கட்டியணைத்தாள்.
இதுவரை அவள் பேச்சு புரியாதிருந்த மதுரா, சட்டென்று இருந்த இடம் விட்டெழுந்தவள், “நித்தி! என்ன சொல்லுறீங்க!” அதிர்வோடு கேட்டாள்
யோகமும் சுபாவும் கூட வியப்பும் குழப்பமுமாக, அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திகேயனைப் பார்த்தனர்.

