செம்பருத்தி 14 – 2

“நர்சிங் எல்லாம் நல்ல படிப்பு. மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்”

“எனக்கு வேணும்னு யாரு கேட்டா? நர்சிங் சேவையை விரும்புறவங்களுக்கு இதைத் தந்தாத்தான் அந்தப் படிப்புக்கு ப்ரோஜனம்”

“அப்ப என்னதான் உனக்குப் படிக்கணும்”

கண்களில் கனவுடன் “எனக்கு டான்ஸ் படிக்கணும்கா… கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு சலங்கை கட்டிட்டு ஆடும்போது இந்த உலகமே எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?” என்றாள்.

“டான்சா… எனக்கு தெரிஞ்ச ஒரே டான்ஸ் குத்துப்பாட்டு அப்பறம் திருவிழாவை சமயத்தில் நடக்குற மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் தான்”

“அதுதான்கா… அதே டான்ஸ்தான்”

வெளியே யாரும் வருகிறார்களா எட்டிப் பார்த்துவிட்டு வந்தவள் 

“க்கா அம்மா வர இன்னும் அரைமணி நேரம் இருக்கு. நான் டான்ஸ் ஆடுறேன் பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றியா”

“இதா பாரு, பரீட்சை முடிஞ்சதும் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் வச்சுக்கோ. இப்ப படிப்பு மட்டும்தான்”

“இப்படியே சொல்லுக்கா… அந்த ராட்சசி என்னடான்னா டான்ஸ் ஆடினா கால்ல சூடு போடுவேன்னு சொல்லிருக்கு. எனக்குப் பிடிச்சதை வேண்டாம்னு சொல்றிங்க. பிடிக்காததை செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணுறீங்க”

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்ட ஓவியாவைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது. 

“சரி ஒரே ஒரு நிமிஷம்தான். அதுக்கப்பறம் இந்த பாடம் பூராவும் என்கிட்டே படிச்சு ஒப்பிக்கணும். சரின்னா பாக்குறேன்”

“சரிக்கா… சத்தியமா படிக்கிறேன்”

வேகமாய் அங்கிருந்த அலமாரியைத் திறந்து காலி வொயின் பாட்டில் ஒன்றை எடுத்தவள் அதனைத் தனது தலையில் வைத்துக் கொண்டு ஆடாமல் நின்றாள். 

“பாட்டில் விழுந்து உடையப்போகுதுடி. சும்மாவே ஆடு”

“அதெல்லாம் உடையாது. இதை கரகம்னு நினைச்சுக்கோ. இப்ப பாட்டைப் போடு”

ஓவியா பாட்டைப் போட்டுவிட்டு ஆட ஆரம்பித்தாள். 

“ஒண்ணாங்கல்லை எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

ஒட்டியாணம் செஞ்சு போட்டுக்கோ….

ரெண்டாங்கல்ல எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

ரத்தின கொலுசு செஞ்சு போட்டுக்கோ….

மூவனம் ராவணன் சந்தையிலே, முத்துராசா பந்தியிலே

மூவாட்டி ஆத்துல, ராமேஸ்வரத்தில…

மூவா மூவா நல்லெண்ண, மூணாழாக்கு வேப்பெண்ண 

மூணு தோப்பு இலுப்பெண்ணெ, முழுகி குளிச்ச விளக்கெண்ண

மூணாங்கல்ல எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

முத்துச்சரம் செஞ்சு போட்டுக்கோ…. “

அவளது கால் தரையிலேயே நிற்காமல் அந்த இடத்தில் சுற்றி சுற்றி ஆட ஆரம்பிக்க, விழிகளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் செம்பருத்தி. 

இம்மி கூட பாட்டில் தலையில் இருந்து நகராமல் நிற்க, நளினமான அங்க அசைவுகளுடன் அந்த நையாண்டி பாட்டிற்கு நடனம் ஆடும் இவள் பெண்ணா இல்லை நடனத்திலேயே மயக்கும் இந்திர லோகத்து சுந்தரியா?

அந்த தாளத்திற்கு இவளுக்கே நடனம் ஆட வேண்டும் போல இருந்தது. அப்படி இருக்கும்போது மற்றவர்களைக் கேட்கவா வேண்டும். சத்தம் கேட்டு அங்கு வந்த சிலரும் மெலிதாக கைகளை அசைத்து கூட ஆட, அந்த இடமே கலகலப்பாக ஆனது. எல்லாம் காளியம்மா வரும்வரை தான். 

“ஏய்… ஓவியா… “ என்ற காட்டுக் கத்தல் கேட்க, பேருக்குத் தகுந்தாற்போல காளியம்மனின் அவதாரமாக நின்றுக் கொண்டிருந்தாள். 

அவ்வளவு நேரம் சுழன்று ஆடிக் கொண்டிருந்த ஓவியா நிற்க கூட முடியாமல் தடுமாற, 

“அந்த பாட்டில் கீழ விழுகக் கூடாது. ஜாக்கிரதையா ஆட்டத்தை முடிச்சு வணக்கம் வை”

காளியம்மாவின் கோபத்தைப் பார்த்த அனைவரும் நைசாக நழுவி விட்டிருக்க. அந்தப் பெண்ணை தனியாக மாட்டிவிட மனமின்றி அங்கேயே நின்றாள் செம்பருத்தி. 

“அக்கா… இந்த பாட்டு முடிஞ்சதும் படிக்கிறேன்னு சத்தியம் பண்ணிருக்காக்கா… அதான்… “ தயங்கித் தயங்கி சொன்னாள் செம்பருத்தி. 

“நீ பேசாம இரு… “ என்று செம்பருத்தியை அடக்கினார் காளியம்மா. 

ஓவியா பாட்டிலை எடுத்து வைத்த மறுவினாடி. அவரது கைகள் பளார் பளார் என அவளது கன்னங்களைப் பதம் பார்த்தது. 

“உன்னை டான்ஸ் ஆடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது. திருந்த மாட்ட…  “

“அக்கா… விடுங்கக்கா விடுங்கக்கா… “ என்று செம்பருத்தி நடுவில் நின்று கொள்ள…

அதற்குள் சேச்சியை யாரோ கூட்டிக் கொண்டு வந்துவிட…

“காளியம்மா… விடுடி, சின்ன பொண்ணு ஏதோ ஆடிட்டா… அதுக்காக இப்படியா அடிப்ப”

“ எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேக்கலாமா சேச்சி. அவ கரகாட்டம் ஆடிருக்கா… அதுவும் சாராய பாட்டிலைத் தலையில் வச்சுக்கிட்டு… ஏண்டி நம்ம குலம் காக்குற மாரியம்மாவை வச்ச தலைல இப்படி சாராய பாட்டிலை வச்சுக்கிட்டு ஆட எப்படிடி தோணுச்சு”

 

error: Alert: Content selection is disabled!!