செம்பருத்தி 14 – 3

சேச்சியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு மறுபடியும் பாய்ந்து வந்து ஓவியாவை அடிக்க, 

“இங்கென்ன சத்தம்… “ என்று உறுதியாக ஒரு குரல் கர்ஜித்தது. 

நீச்சல் குளத்தை ஒட்டியிருந்த அந்த சின்ன பால்கனியிலிருந்து அபிராமின் குரல்தான் காளியம்மாவை அடக்கியது. 

“செம்பருத்தி… என்ன ஆச்சு? ஓவியா என்ன தப்பு செஞ்சா?”

“டான்ஸ் ஆடினா சார்”

“டான்ஸ் ஆடுற வயசுதானே அவளுக்கு… “

“அய்யா… “ திணறினாள் காளியம்மா.

“உங்க வழக்கப்படி பாட்டு முடியுற வரைக்கும் கரகத்தை நிறுத்தாம ஆடிட்டு நிக்கணும் அப்படித்தானே… “ என்றான் காளியம்மாவிடம்.

“கோபன்… அந்த குடத்தை எடுத்து காளியம்மாகிட்ட தா… “

அங்கிருந்த அலமாரியில் இருந்து வெள்ளிக் குடத்தை காளியம்மாவிடம் தர, அவரும் கண்ணீரை அடக்கியபடி அதில் அரிசியை  நிரப்பி ஓவியாவின் தலையில் வைத்தாள். ஓவியாவோ பேந்த பேந்த பயத்தில் விழித்தாள். 

“ஓவியா… மூணாம் கல்லு வரை பார்த்துட்டேன். இனி  நாலாங்கல்லில் இருந்து ஆரம்பி” என்றான் அதே பால்கனி தூணில் சாய்ந்து  நின்று கொண்டு. 

அப்ப  இங்க நடக்குறது எல்லாத்தையும் பார்த்துட்டே இருந்திருக்கான் என்று செம்பருத்தி நினைத்த பொழுது தனது நடனத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கண்டு குஷியுடன் விட்டதிலிருந்து தொடர ஆரம்பித்தாள் ஓவியா…

“நாலாங்கல்ல  எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

நாகரத்தினம் செஞ்சு போட்டுக்கோ…. “

முத்தம்மா அஞ்சாம் கல்லில் அரக்கு மஞ்சளை அள்ளிப் பூசிக் கொண்டு அடுத்த அடுத்த கற்களில் அட்டியல், ஏழுசரம், எட்டுசரம், ஒட்டியாணம் பத்துசரம் எல்லாம் அணிந்து கொண்டாள். 

எல்லோரின் மனமும் நிமிடத்திற்குள் ஓவியாவின் நடனத்தில் லயித்தது. வெற்றிகரமாக நடனம் ஆடி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆரவாரிக்க, காளியம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி நடனத்தை முடித்தாள் ஓவியா. 

அந்த கலைச் செல்வியை தொடரச் சொல்லி வாழ்த்தவும் வழியில்லாமல் , நிறுத்தவும் சொல்ல  முடியாது கண்களில் கரகரவென நீர் வழிய நின்ற அம்மாவை அப்படியே கட்டிக் கொண்டாள்.

“உன் ஆசைப்படியே படிக்கிறேன்மா… ஆனா ஒரு நாளைக்கு அரைமணி நேரம் டான்ஸ் மட்டும் ஆடிக்கிறேன். நல்ல பாட்டு கேட்டா என் காலு தானா ஆட ஆரம்பிச்சுடுது” 

காளியம்மாவும் தேம்ப “இந்த கரகாட்டத்தை ஆடி என்னடி சாதிக்கப் போற… இப்ப நம்மை ஆடக் கூட்டிட்டுப் போறவன் கவுரவமா நடத்துவான்னு நினைக்கிறியா? அரைகுறை ட்ரெஸ் மாட்டிவிட்டு, அசிங்கமா எல்லாரு முன்னாடியும் பேசச் சொல்லுறான். அப்படி இருந்தாத்தாண்டி நமக்கு சாப்பாடு. அதெல்லாம் வேண்டாம்னு தானே இங்க ஒதுங்கி வந்தோம்”

“நான் வீட்டுக்குள்ளேயே ஆடிக்கிறேன்மா… என்னால இதை நிறுத்த முடியல. ப்ளீஸ்மா… நான் டான்ஸ் ஆட வேணாம்னு நினைச்சா என் காலை வெட்டிப் போட்டுடு”

“உஷ்… அம்மா சம்மதிப்பாங்க… நீ ஒழுங்கா படிக்கணும். மொத்த மார்க் 82 எல்லாம் வேலைக்கு ஆகாது. ஒவ்வொரு பாடத்துலையும் 70க்கு மேல எடுத்தா உனக்கு பிடிச்ச படிப்பா நானே படிக்க வைப்பேன்.”

ஓவியாவின் முகம் பிரகாசமானது. 

“டான்ஸ் படிக்க வைக்கிறிங்களா சார்”

“உனக்கு ஆர்வமிருந்தா டான்ஸ்லேயே ரிசர்ச் வரை படிக்க வைக்கிறேன்.  இட் இஸ் எ ப்ராமிஸ்”

“அம்மா… நர்சிங்… “ தயங்கினாள். 

“அரைகுறை ட்ரெஸ் போட வேண்டாம். அசிங்கமா பேச வேண்டாம். கலையை முறையா படிச்சுட்டு இளைய தலைமுறைக்கு முறையா எடுத்துட்டு போகலாம்னா அம்மா வேண்டாம்னா சொல்லப் போறாங்க?”

காளியம்மாவிற்கு பதிலே பேச முடியாது மூச்சடைத்து விட்டது. 

“செம்பருத்தி டான்ஸ் எல்லாம் சொல்லித் தர காலேஜு இருக்கா என்ன? “ என்றார் செம்பருத்தியை இழுத்துக் கொண்டு நடந்தபடி. 

“பைன் ஆர்ட்ஸ் டிகிரி இருக்குகா… இந்த மாதிரி நாட்டுப்புற கலைகளைப் பத்தி ஆராய்ச்சி செய்ய… “ என்று அவர்களிடம் விளக்கிக் கொண்டே சென்றாள். 

தனது பேப்பர்களை நீச்சல் குளத்தின் மேஜையிலேயே வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வர, எடுத்து வர சென்றாள் செம்பருத்தி. 

இருட்ட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் வானத்தைப் பார்த்தபடி அங்கேயே நின்று இருந்தான் அபிராம் . 

இருட்டில் அவள் கீழே நின்றது தெரியாமல் பாலனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

“எப்படி பட்டாம்பூச்சி மாதிரி சுத்தி சுத்தி ஆடினா அந்தப் பொண்ணு. ஆடுறதை நிறுத்தணும்னா காலை வெட்டணுமாம். புவர் கேர்ள், கால் இல்லாதவங்க கஷ்டம் எல்லாம் இவளுக்கு என்ன தெரியும் பாலன்” 

“அய்யா நீங்க ஆயுர்வேத சிகிச்சை தொடர்ந்து எடுத்துக்கிட்டா நல்ல முன்னேற்றம் தெரியும்”

“பழையபடி நடக்க முடியுமா? இல்லை முன்னாடி கலந்துக்கிட்ட மாதிரி மாரத்தான் ரேஸ்ல ஓட முடியுமா?”

பாலன் ஒன்றும் சொல்லவில்லை. 

“கம்பீரமா ஏறி ஓடி வந்த படியில் விந்தி விந்தி நடந்து வர்றது எவ்வளவு கொடுமை தெரியுமாடா? ”

“அய்யா… “

“விடுடா… நானே என் ரூமுக்கு போய்க்கிறேன்”

“ரெண்டு நிமிஷம் கழிச்சு வாங்கய்யா… “

“எத்தனை நாள் வீட்டுல இருக்குறவங்க எல்லாரையும் கமுக்கமா வெளிய அனுப்பிட்டு நான் நடக்க வழி செய்யப்போற… என்னை ஏண்டா வாழவும் விட மாட்டிக்கிறிங்க சாகவும் விட மாட்டிக்கிறிங்க?”

“அப்படி எல்லாம் பேசாதிங்கய்யா… கடவுள் நிச்சயம் நல்லது செய்வார்”

“செஞ்சார்… செஞ்சு கிழிச்சார்… எனக்கு ஒரு சிகிரெட் கொடுத்துட்டு போ… “

அந்த சிகிரெட் குடித்து முடித்ததும் மெதுவாகத் திரும்பி சற்று சாய்ந்து சாய்ந்து நடந்து அவனது அறைக்கு சென்ற அபிராமைக் கண்டதும் ஏனோ செம்பருத்தியின் மனதை யாரோ இறுக்கி கசக்கியத்தைப் போல தோன்றியது. அன்றைய நாளின் உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வுகளின் தாக்கத்தால் அவளையும் அறியாமல் அவள் கண்களிலிருந்து கண்கள் கர கரவென்று வழிய ஆரம்பித்தது. 

 

error: Alert: Content selection is disabled!!