செம்பருத்தி 15 – 3

“அவ்வளவு சுலபமா எல்லாம் நடக்கல”

“அப்பறம்”

“எங்க ஊருக்குப் போனப்பத்தான் சின்னத்தம்பியைப் பார்த்தேன். அவரு அப்பாவுக்கு பெரிய வீட்டு சார்பா இறுதி மரியாதை செஞ்சுட்டுப் போக வந்திருந்தாரு.

அப்பத்தான் மூத்தாள் போன் போட்டு எனக்கு பதிலா எங்க பொண்ணு கண்ணாத்தாளை கூத்து கட்ட கூட்டிட்டு போயிட்டான்னு சொல்லி அழுதா. கேள்விப்பட்ட உடனே தம்பி என்னை கூத்து கட்டுற கூட்டிட்டு போயிருச்சு. 

அங்க நடந்ததை இப்ப நினைச்சாலும் என் வயிரே பத்திக்கிட்டு எரியுது. தான் பெத்த பொண்ணுக்கு ஓவியான்னு பேரை மாத்தி குட்டை பாவாடை போட்டு ஆட விட்டிருக்கான்மா அந்தப் பரதேசி. இந்த புத்தி கெட்டவளும் அவனுங்க சொல்லித் தந்த விரசமான வசனத்தை எல்லாம் அர்த்தமே தெரியாம ஒப்பிச்சுட்டு இருக்கா… 

வழக்கமா தம்பி மாதிரி ஒரு அமைதியான பையனை நீ பாக்கவே முடியாது. ஆனா அன்னைக்கு இந்த பச்சை மண்ணுக்கிட்ட இவனுங்க பேசின பேச்சைக் கேட்ட நிமிஷம் தம்பிக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சது. என் பொண்ணுகிட்ட ஆபாசமா பேசினவன் கையை முறுக்கி வாயிலேயே குத்து விட்டுச்சு“

“தம்பின்னா யாருக்கா?”

“ஓ உனக்குத் தெரியாதுல்ல, பெரிய வீட்டு மேனேஜர்”

“அவரு பேரு என்ன?” ஏனோ நெஞ்சம்  படபடத்தது செம்பருத்திக்கு.

“அவினாஷ்” ஒரு கூடை சன்லைட் ஒரு கூடை மூன்லைட் தலையில் ஒருசேர கொட்டியதைப் போன்றதொரு குளிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். 

அவினாஷ் காளியம்மாவின் கூற்றுப்படி அடித்து துவம்சம் செய்திருந்தான் அங்கிருந்தவர்களை. 

“தம்பி இனி அங்க போக எனக்கு விருப்பமில்லை. வேற எங்கேயாவது கூலி வேலை வாங்கித் தாங்க பொழைச்சுக்குறோம்”

“நீங்க சரி, இந்தப் பொண்ணு கண்ணாத்தா… “

“நானும் அம்மா கூட வரேண்ணா. தினமும் அப்பா நிறைய இடத்துல டான்சுக்கு கூட்டிட்டுப் போறாங்க. அங்க மாமா எல்லாம் கண்ட இடத்தில் தொடுறாங்க. எனக்கு பிடிக்கல” என்றாள் அந்தக் குழந்தை. 

“இடியட்…  பிள்ளைக்கறி தின்கிற பேய்ங்க” என்ற அவினாஷின் கைகள் ஸிடியரிங்கை இறுக்கின. 

“வீடியோ எல்லாம் பிடிச்சு போட்டிருக்காங்க தம்பி. எங்கப்பாவைக் கொன்ன இதெல்லாம் என் புள்ளையை என்ன செய்யுமோ. எங்களை உயிரோட கொல்லுறாங்க தம்பி”

“உங்களுக்கு இப்ப என்ன வேணும்?”

“மாடு மாதிரி நான் உழைக்கத் தயார். ஆனா ராத்திரியானா எவன் கை எங்க படுமோன்னு பயம் இல்லாம தூங்கி எந்திரிக்கணும். எவன் இந்த வீடியோ பார்த்தானோன்னு வெலவெலத்து போகாம நிமிர்ந்து நடக்கணும்”

யோசித்தவன் “உங்களை ஒரு இடத்துக்கு அனுப்புறேன். இந்த  வீடியோ கவலை எல்லாம் படாதீங்க. உங்களுக்கு நிக்க நிழல் மட்டும் போதும்னு தோணலாம். ஆனா உங்க பொண்ணுக்கு இதுக்கு மேல கண்டிப்பா படிப்புன்னு ஒண்ணு வேணும்.கண்ணாத்தா படிச்சு முடிக்கிற வரை அங்கேயே இருங்க”

“கண்ணாத்தா இல்லைண்ணே ஓவியா. எனக்கு அந்த பேருதான் பிடிச்சிருக்கு”என்றாள் அவர்கள் சூழ்நிலை புரியாமல்.

“சரி ஓவியா… புது ஊர்ல நல்ல பிள்ளையா படிப்பியாம். உன் அம்மா நிஜம்மாவே தலை நிமிர்ந்து நடக்கணும்”

அவினாஷ் சொன்னதும் கண்கள் கலங்கிவிட்டது காளியம்மாவுக்கு.. கண்ணாத்தாவின் அம்மா தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஆனால் அவள்?

“கண்ணாத்தா, உங்கம்மா வேணும்னு கேக்க மாட்டியே தங்கம்” என்றாள் மகளிடம். 

“நீதானே என் அம்மா. அப்படித்தான் நெனச்சுட்டு இருந்தேன். நீ என் அம்மா இல்லையாம்மா?” என்று கேட்ட கண்ணாத்தா என்ற ஓவியாவைக் கட்டி உச்சி முகர்ந்தாள். 

“ஆமாண்டி… நான்தான் கண்ணு உன் அம்மா”

பிள்ளை பெற்றுக் கொண்டால் ஆடி சம்பாரிக்க முடியாது என்று வலுக்கட்டாயமாக தடுத்திருந்தது இந்தக் குழந்தைக்கு எப்படி தெரியப் போகிறது.

 

மூத்தாளிடம் தொலைபேசியில் அழைத்து “அக்கா… நம்ம பொண்ணை இவன் கிட்ட வளக்க முடியாது. நான் காப்பாத்தி வளக்குறேன்கா. என்னை நம்பி விடுறியா?”

“இங்க பாருடி காளி… அவளை நான் பெத்ததோட சரி. நீதான் இத்தினி வருஷமா என் குடும்பத்துக்கே சோறு போட்டிருக்க. இனிமே அவ உன் மகள்” 

“நீ… “

“மத்த மூணும் ஆம்பளப் புள்ளைங்கடி. அவனுங்க வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டானுங்கனா நான் சமாளிச்சுடுவேன். இந்த கண்ணாத்தாவைத்தான் என்னால பாதுகாக்க முடியல. என்னை விட நீ நல்லாவே வளப்ப”

வண்டியை அப்படியே ராப்பகலாக ஓட்டிக் கொண்டு கொச்சியில் வந்து இறக்கிவிட்டான். மறுநாள் என்ன செய்தானோ யாரிடம் சொன்னானோ  தெரியவில்லை பெரிய வீட்டிலிருந்து காரில் வந்து அழைத்து சென்றார்கள். அங்கு சென்றதும் அபிராமின் பெண்கள் பழக்கம் தெரிய வர, அவினாஷை அழைத்து தனது கவலையைப் பகிர்ந்தார். 

“அபிராம் வயசுக்கோளாறு காரணமா தப்பு செஞ்சிருக்கலாம். ஆனா பிள்ளைக்கறி கேக்குறவனில்லை. நீங்க அந்த வீட்டில் பாதுகாப்பா இருக்கலாம்” என்று உறுதியளித்தான். 

என்னவோ தெரியவில்லை காளியம்மா கதையினை முடித்தபொழுது செம்பருத்திக்கு ராஜாவின் சிம்பொனி இசையில் இதயம் பாடியது. 

“இப்ப அவினாஷ் எங்க?”

“தம்பி ஊரு சுத்திக்கிட்டே இருப்பாரு. ரெண்டு வீட்டுக்கும் அவருதான் பாலம். ஆனால் நம்ம அய்யாவுக்கு அவினாஷ் தம்பியைப் பிடிக்கவே பிடிக்காது. அதனால இந்த வீட்டுக்கு வரமாட்டார்”

“இந்த வீட்டுக்கு வந்ததே இல்லையா”

“அப்படி சொல்ல முடியாது. ஒரு நாள் இக்கட்டான சமயத்துல அவரைத்தான் கூப்பிட்டோம். அதை பத்தி இன்னொரு நாள் பேசலாம்”

“சரி, கொச்சிக்கு வருவாரா?”

“மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்துடுவார். அதுவும் சின்னையா கணக்கு வழக்கு பாக்க வரும்போது கண்டிப்பா அவினாஷ் தம்பியும் வந்துடுவார்”

“சின்னையாவா? அது யாரு?”

“ஆதவன் அய்யா… நம்ம அய்யாவோட தம்பி”

“நம்ம அபிராம் அய்யா தம்பிங்களா? அப்பறம் ஏன் இங்க வர்றதில்லை” 

“பெரியய்யாவுக்கு அடுத்து  யாருக்கு பட்டம் கட்டுறதுன்னு பிரச்சனையாம். தனக்குத்தான் பட்டம் கட்டணும்னு நம்ம அய்யா பிடிவாதமா நிக்கிறார் ”

“இதில் என்ன பிரச்சனை? மூத்தவருக்குத்தானே பட்டம்”

“அட மூத்தவரா இருந்தாலும் ரெண்டு பேரும் வேற வேற மனைவிக்குப் பிறந்தவங்கள்ல. அதுவும் இளையவர் முறைப்படி கல்யாணம் செஞ்சு வச்ச பொண்ணுக்குப் பிறந்தவர். ராஜ குடும்பத்து வாரிசா வளர்த்தவர். நம்ம அய்யாவோட அம்மா மந்தாகினியம்மா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்க வந்தவங்க. அவங்க உயிரோட இருந்த வரைக்கும் அய்யாவுக்குத்தான் அடுத்து வாரிசுப் பட்டம் கட்டணும்னு போராடிட்டு இருந்தாங்க. பெரிய இடம் இல்லையா ஏகப்பட்ட சிக்கல் இருக்கும். நமக்கு தெரிஞ்சது ஒன்னு ரெண்டு இருந்தால் அதிகம்”

ஓ இப்போது கேள்விகளுக்குத் தெளிவான விடை கிடைத்துவிட்டது செம்பருத்திக்கு. ஆனால் அவளுக்கு வெகு முக்கியமான விடை ஒன்று அவினாஷ் பற்றி தெரிய வேண்டுமே!

“சின்னையாவும் மேனேஜரும் வரவு செலவு  கணக்கு பாப்பாங்களா? அது எப்பக்கா?” 

“தெரியலையே… அது எதுக்கு உனக்கு?”

“அவரு கிட்ட காமிக்கிறதுக்கு முன்னாடி கணக்கெல்லாம் நானும் எழுதணும், ஏற்கனவே இருக்கிறதை சரி பார்க்கணும்”

“ஆமாமில்லே… பாலனுக்கு தான் அந்த விவரமெல்லாம் தெரியும்”

“நான் அவருகிட்டயே கேட்டுக்குறேன்க்கா” 

மறுபடியும் ஒரு தரமாவது பார்க்க மாட்டோமா என்று எண்ணி ஏங்கிய அவினாஷ் இங்குதான் இருக்கிறானா? அதுவும் கைக்கெட்டும் தொலைவிலா?

அனைவரும் அன்று நன்றாக உறங்க செம்பருத்தியின் கண் மலர் மூட முடியாமல் தவித்தது. அவளது கை விரல்களில் நகங்கள் எல்லாம் பற்களாலேயே கடித்து சீராக்கப்பட்டன. 

error: Alert: Content selection is disabled!!