அவ்வளவாக, அபிவிருத்தி அடைந்திராத கிராமங்கள் தொடங்கி, நவீன மயமாக்களுள் அமிழ்ந்து கிடக்கும் நகரங்கள் வரை, போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். இதில், பாடசாலைகள், அதிபர்கள், ஆசிரியர்கள் முக்கியமானவர்களாகச் செயல்படல் அவசியமானதாகும்.மொட்டு விடும் பருவத்திலி ருந்து இளம் பருவம் வரை, அவர்களுக்கு விளங்கும் வகையில், கூட்டங்கள் நாடகங்கள் என, தெளிவை ஏற்படுத்த முனைதலும் அத்தியாவசியமாகும் . பல்கலைக்கழக மட்டங்களிலும் இது நடக்க வேண்டும். தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் சமூகப் பொறுப்புணர்ந்து செயல்படவும் வேண்டும்.
ஒரே ஒரு வாழ்வு! அதை, அற்ப ஆசைக்கு வீணாக்குவானேன்? விழித்திடு!
ஆரூரனுக்கு என்றில்லை, அவன் தாய் சகோதரிகளுக்கும் அங்கிங்கு திரும்ப, அவ்வளவு எளிதில் நேரம் கிடைப்பதில்லை. நிலாவுக்கு ஆசிரியை வேலை வேறு. சின்னவள் மதி, பல்கலைக்கழகத்தில் முதல் வருடம். இதோடு சேர்ந்து, காளான் உற்பத்தி, விநியோகம், ‘ஆரூர் மஷ்ரூம் புட்’ ஸ்டோல்களுக்கு உணவுகள் தயாரிப்பதென்று, இவர்கள் பார்வையில் தானே எல்லாம்.
தம் வீட்டின் பின், வீட்டோடு சேர்த்து நீளமாக, சற்றே உயரமான பத்தி இறக்கியிருந்தான், ஆரூரன். அங்கு வைத்துத் தான் காளான் கட்லட் தயாரிப்பு, பஜ்ஜிக்கான மாக்கலவை பக்கற்றுகள், பஜ்ஜிக்கான காளான்களை சுத்தப்படுத்தி அளவாகப் பிரித்து பாக் செய்வது மற்றும் காளான் சூப் செய்யத் தேவையான பொருட்களை பாக் பண்ணுவது எல்லாமே நடக்கும்.
கௌசல்யாவின் மேற்பார்வையில் நடக்கும் வேலைகளில், இரு பெண்கள் நிரந்தரமாக வேலை செய்தார்கள்.
கிழமையில் இரு தடவைகள், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் தாயாரித்து, பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட கட்லட்டுகள், பஞ்ஜி, சூப் பொருட்கள் எல்லாம் குளிருட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து வேனில் கொண்டு செல்லப்படும்.
சாவகச்சேரி – கிளிநொச்சி – வவுனியா என்று சென்று, அங்கிருக்கும் ஆரூர் மஷ்ரூம் புட் ஸ்டோல்களுக்கு கொடுத்துவிட்டு, அப்படியே முல்லைத்தீவுக்குப் பயணப்பட்டு அங்கும் கொடுத்துவிட்டு, மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர இரவாகிவிடும். இதற்காக, இரு சாரதிகளை பகுதி நேர வேலையில் வைத்திருக்கிறான், ஆரூரன். இருந்தாலும் மாதத்துக்கு ஒன்றோ இரண்டு தடவைகள் அவனே செல்வான்.
நான்கு இடங்களிலும், மிகவும் நம்பிக்கையும் பொறுப்புமுள்ளவர்களிடம் ஸ்டோல்கள் ஒப்பைடைக்கப்பட்டிருந்தாலும், உடையவன் சென்று பார்த்து வருவது போல் வருமா என்ன?
அவர்கள் வீட்டோடு இருக்கும் ஸ்டோலில், பகுதிநேரமாக, தனுசன் வேலை செய்கிறான். கௌசல்யாவும் நிற்பார். யாழ்ப்பாண டவுனுக்கு, அப்பப்போ வீட்டிலிருந்தே தேவைக்கு ஏற்ப பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
டவுனில், அவர்கள் வீட்டு ஸ்டோல், ஏன் ஹோட்டலிலும் பல்கலைக்கழக மாணவர்கள் பகுதி நேர வேலைக்கு வருவார்கள். இளவயதில், கடும் முயற்சியால் தொழிலதிபனாகி வளர்ந்து வரும் ஆரூரன், அவர்கள் எல்லோருக்குமே முன்னோடி. அவனில் அந்தளவு விருப்பமும். ஆரூரன் அண்ணா தான் எங்களுக்கு வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, அண்ணா அண்ணா என்று ஓடி வந்து விடுவார்கள்.
அன்று, காலை ஒன்பது போலவே வெளிக்கிட்டு விட்டான், ஆரூரன்.
“தம்பி இரவுக்கு வந்திருங்க என்ன? கவனம், தனியாளாப் போகாமல் கூட ஒராள் வந்தா நல்லம் எல்லா? சொன்னாக் கேக்கிறது இல்ல.” என்றபடி தான் அனுப்பி வைத்தார், அவன் தாய், கௌசல்யா.
ஒவ்வொரு இடமாகக் கொடுத்துவிட்டு, முல்லைத்தீவு வருகையில் பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. இவன் வந்தால் இப்படித்தான்; சாமான்களை இறக்கி அந்த அந்த ஸ்டோல்களில் உள்ள குளிரூட்டியில் நிறைத்து விட்டு வாகனத்தை எடுப்பானா? இல்லையே! நின்று நிதானமாக ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டுத்தான் கிளம்புவான். அறிந்தவர் தெரிந்தவர் என்று கதைக்க வேறு வருவார்கள். இவனும் தேடிச் செல்வான். அதுவே நேரம் பறந்துவிடும்.
வந்த களைக்கு, தேங்காய்ச் சிரட்டைக் கப்பில் நிறைத்துத் தந்த சூப்போடு, அங்கு கிடந்த மரக்குற்றியில் அமர்ந்துவிட்டான், ஆரூரன்.
அந்த ஸ்டோலை ஒரு கணவனும் மனைவியுமாக நடத்துகிறார்கள். “இப்பவே வெளிக்கிடுறியளோ தம்பி? நிண்டு போட்டுப் போகலாமே!” கணவன் சொல்ல, “அதானே. ஒரு கலியாணத்தைக் கட்டி வைக்கச் சொல்லி அம்மாட்டச் சொல்லோணும். அப்பத்தான், தம்பி இப்பிடி அலைஞ்சு திரியிறதக் குறைப்பார்.” மனைவியும் சேர்ந்து கொண்டாள்.
சிறு முறுவலோடு பார்த்தவன், “போகோணும் அண்ணே, எக்கச்சக்க வேலைகள் கிடக்கு.” களைப்போடு சொன்னான்.
“அது விடிய வெள்ளனப் போகலாம்.” என்றார், அந்த அண்ணே.
“இந்தாங்க, இதையும் சாப்பிடுங்கோ!” கட்லட் மற்றும் பஜ்ஜிகளை நீட்ட, நன்றி சொல்லிவிட்டு, “அங்க வையுங்க அக்கா, இதைக் குடிச்சிட்டு வாங்கிறன்.” என்றவன், ஸ்டோல் வியாபாரம், தேவைகள், மேலும் என்ன என்ன செய்தால் வியாபாரம் அதிகரிக்கும் என்று, காளான், காளான் வியாபாரம் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். சற்றே தள்ளி நின்றபடி, காளான் சூப் அருந்திக் கொண்டிருந்தவன் விழிகள், ஆரூரனையே அளவெடுத்தபடி இருந்தன.
சற்றே பொறுத்து, காளான் சூப்பிருந்த சிரட்டைக் கோப்பையை இடக்கைக்கு மாற்றிவிட்டு கைப்பேசியை இயக்கினான், அவன்.
‘இனியும் பின்தொடர்வது வேஸ்ட். அவன் ஒரு உழைப்பாளி!’ ஆரூரன் பற்றிய செய்தி பறந்தது. என்று டினோசனில் கை வைத்தானோ, அன்றிலிருந்து, போதைப்பொருள் கடத்தல்காரரால் பின்தொடரப்படுகிறானே!
ஆரூரனும் சுற்றிலும் பார்த்தான் தான். வெகுசாதாரணமாக நின்று, இவனுக்கு ஒரு சிரிப்பும் தலையாட்டாலும் கொடுத்த அந்த பின்தொடர்ந்து வந்தவனை, பிரதியேகமாக எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அந்தக் கணவன் மனைவியோடு கதைத்துக்கொண்டே சூப்பில் கடைசிக் கரண்டியை எடுத்து வாயில் வைத்தான். அந்த நேரம், அவன் அத்தனை தொழில் அலுவல்களையும் சற்றே தள்ளிக்கொண்டு, முட்டி மோதி, அழையா விருந்தாளியாக எட்டிப் பார்த்தன, பைரவியின் நினைவுகள்.
அவளுக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பித்திருந்தது. அன்றைக்குப் பிறகு இவன் காணவில்லை. சில தினங்களுக்கு முன், வழமைபோலவே ஹோட்டலில் ரெகோர்ட் ஆன வீடியோக்களை தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, அதில் அவளைக் கண்டான். மீண்டும் இங்கு வந்திருக்கிறாள். அவனையும் மீறிய குட்டி இரசிப்போடு பார்த்தால்… நெற்றி சுருங்கியது.