Skip to content
அவளோடு இருந்தவன், அன்று, வைத்தியசாலையில் கண்டவனே தான். இவன் முகம் கன்றிட்டு. இருவரும் சூப் குடித்தார்கள். அவள் பார்வை, அடிக்கடி சுழன்று யாரையோ தேடுகிறதா? ஒருவேளை என்னையோ… ச்சே இராது. என்றாலும் இதை இப்படியே விடுவதா? மனம் கேட்கவில்லை. மயூரனோடு கதைத்திருந்தான்.
“ஐயோண்ணா! தவறிப்போய், அவனைப்பற்றி நீங்க அண்டைக்குச் சொன்னதச் சொல்லிட்டன். அவளுக்கும் அவனைப் பிடிக்கேல்ல தான். முதல் ஏசிக்கொண்டு இருந்தவள். பிறகு, வேணும் எண்டு அங்க வந்திருக்கிறாள். ஆளுக்கு உங்களோடு ஒரு தனகல்.” இலகுவாகச் சிரித்தான், அவன்.
“திரும்பவும் சொல்லுறன் மயூரன், அவா அவனோட பழகிறது எனக்குச் சரியாப் படேல்ல. இனி நீராச்சு அவவாச்சு. என்னோட தனக அவா ஆர் எண்டு கேக்கிறன்? முதல், என்னோட தனகிறன் எண்டு சொல்லி, தன்ர தலையில கொள்ளிக்கட்டையால சொறியிறா. சொல்லி வையும்!” அவன் கடுமை பார்த்து, மயூரன் பயந்து தான் போனான்.
“அண்ணா… என்ன அண்ணா?”
“பச்! எனக்கு அவனை பெர்சனலா தெரியுமா என்ன? பார்க்க ஆள் சரியில்ல எண்டு தெரியுது எண்டு சொன்னன். அதோட, அரசியல் செல்வாக்கு. அதும் நல்ல மாதிரியான சனம் இல்ல மயூரன். மற்றும்படி இனி என்னவும் செய்யுங்க.” என்றுவிட்டு, வைத்து விட்டான்.
இது நடந்து பத்து நாட்கள் இருக்கும்; அடுத்தடுத்த வேலை, அழுத்தங்களில் அவளை மறந்தே போயிருந்தவன், இன்னமும் அவனோடு நட்பில் இருக்கிறாளா என்பதை, மயூரனிடம் கேட்க வேண்டுமென்று மனதுள் குறித்துக் கொண்டான்.
இதே நேரம், தன் அறைக்குள் அமர்ந்திருந்த பைரவி, மிக மிகக் கோபத்தில் இருந்தாள்.
பல்கலைக்கழகம் ஆரம்பித்த அன்றே, இவளுக்காகக் காத்திருந்தார்களோ என்றெண்ணும் விதத்தில் ராகிங்கில் பிடிபட்டு இருந்தாள். சில நிமிடங்களும் சென்றிராது, பெரிய ‘ஹாய்’ உடன் வந்தான், அன்று, வைத்தியசாலையில் கண்ட மூன்றாம் ஆண்டு மாணவன், சத்யன். பல நாட்கள் பழகிய பாவனையில் இவளிடம் சிரித்துவிட்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்களிடம் கதைத்து இவளைத் தன்னோடு அழைத்தும் வந்து விட்டான். வளவளவென்று கதைத்தபடி, கேன்டீன் கூட்டிக்கொண்டு போய், தேநீரும் பற்றிசும் வேறு வாங்கித் தந்திருந்தான்.
ராகிங் என்று பிடித்தவர்களே பரவாயில்லை என்றளவில், பைரவிக்கு ஏதோவொரு அசௌகரியம். சிலர் சார்பில், பார்த்ததும் ஓர் எச்சரிக்கை மணி அடிக்குமே! அன்று, ஆஸ்பத்திரியில் அடிக்காத மணி இன்று பலமாகவே அடித்தது, அடித்துக்கொண்டேயிருந்தது. சத்யனின் உரிமையான பார்வையும் பேச்சும் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அடுத்தடுத்த நாட்களும், “ஓ கனடாக்காரியோ!” என்று, சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் இரண்டாம் வருட மாணவர்களிடம் பிடிபட்டாள்; எங்கிருந்து வருவான் என்றில்லாது வந்து, அழைத்துச் சென்று, நட்புப் பயிருக்குச் செயற்கை உரம் தெளித்தான், சத்யன்.
“நல்ல காலம் பைரவி, உம்மட மச்சான் மயூரன் அண்ணா பைனல் இயர். இங்க எல்லாம் வரத் தேவையில்லை. இல்லையோ, எனக்கு உம்மோட பழகிற சந்தர்ப்பம் கிடைச்சிராது!” வெளிப்படையாக வளிந்தான், சத்யன். தினமும் தன் செலவில் தேநீரும் சிற்றுண்டியும் வாங்கித் தந்தான். அதே வேகத்தில் சென்று, ராகிங் முடிய முதலே அவளை விரும்புவதாகவும் சொல்லிவிட்டானே!
அவன் நடத்தையில் ஏற்கனவே இதை யூகித்திருந்தாள், பைரவி; பதில் கூடத் தயாராகவே இருந்தது. பின்ன? “மச்சான், கனடா வாசியாகப் போறயப்பா! எங்களையும் கவனிக்க வேணும்” என்று, அவன் நண்பர்கள், இவள் காதுபடவே பகிடி பண்ணினால்!
“சொறி சத்யன். நான் கமிட்டட். மூணு வருசங்களா விரும்பிறம். ரெண்டு வீட்டிலயும் சம்மதம் தான். படிச்சிட்டுப் போனதும் கல்யாணம்.” வடிவான சிரிப்போடு சொன்னவள், தன்னை நக்கல் அடிக்கிறாளா என்று, ஒரு நொடி அவனுக்குச் சந்தேகம். என்ன முயன்றும் முகம் சுருங்கிக் கன்றிப் போனதை, அவளிடம் மறைக்காதிருக்க முடியவில்லை.
“சேயோனிட்ட ஒரு நாளைக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்கிறன்.” அவன் உள்ளக் குமுறல் தெரியாது, முகம் மலரச் சொன்னவளை என்ன செய்வதாம்?
சேயோன்! மண்ணாங்கட்டி! மனதில், முகமறியா சேயோனுக்குத் திமிரத் திமிர போதையைப் பழகினான், சத்யன். வெளியிலோ, “ஓ!” என்றதோடு எழுந்து சென்று விட்டான். அதன் பின்னரான சில நாட்கள், இவள் கண்ணில் பட்டான்; ஆனால், இவளைப் பாராதது போலவே இருந்துவிட்டான். நல்லதென்று, இவளும் தன் பாட்டில் இருந்து விட்டாள்.
முதல் வருட மாணவர்களுக்கு நடத்தப்பட்ட வரவேற்பு உபசாரத்தில்(வெல்கம் பார்ட்டி) வைத்து, “நீர் இந்த சாரியில நல்ல வடிவா இருக்கிறீர்!” வெகுசாதாரணமாக வந்து கதைத்தான்.
“நல்ல நண்பர்களா இருக்கிறதில உமக்கு ஆட்சேபனை இல்லையே?” அப்பாவியாகக் கேட்பவனை எப்படித் தவிர்ப்பது?அதன் பிறகு காண்கையில் நட்போடு கதைத்து விட்டுப் போவான்.
அப்படியிருக்கையில் ஒருநாள், ஒன்றாகப் படிக்கும் நண்பி வீட்டுக்குச் சென்றுவிட்டு பரமேஸ்வரா வீதியால் வந்த பைரவி, ஆரூரன் ஹோட்டலடியில் நின்ற சத்யனுக்குக் கைகாட்டிவிட்டுக் கடக்க நினைத்தாள். அவனோ, நிறுத்தினான். அந்த நேரம் மனதில் துளிர்த்த வம்புக் குணத்தில், நின்று சில வார்த்தைகள் கதைத்து விட்டுப் போகாமல், “ஏதாவது சாப்பிடுவமா?” அவனோடு உள்ளே சென்று அமர்ந்துவிட்டாள்.
இவனோடு பழக வேண்டாம் என்று சொல்ல ஆருரன் யார்? எதையாவது இழுத்து வைக்கப் போகிறேன் என்றானாமே! அதன் அர்த்தம் தான் என்ன? கோபம் தான் வந்தது.
‘பார், உனக்கு முன்னால நாங்க பழகிறதப் பார்!’ என்ற வீம்பில் வந்தமர்ந்தவளுக்கு, அங்கு, ஆரூரன் தென்படவில்லை என்றதும் சப்பென்று ஆயிற்று. அதுமட்டுமா? அதன் பிறகு, சத்யன் மீண்டும் வளியலை ஆரம்பித்துவிட்டது தான் பெரும் பரிதாபம்!
அதன் உச்சமாக, “என்ர முதல் காதல் நீர் தான் பைரவி. இப்ப, இந்தக் கணம், என்னை நீர் வேணாம் எண்டனீர் எண்டதையே நம்ப ஏலாமல் கிடக்கு!” என்று சொல்லி, கண்கலங்கியபடி அவன் பார்த்த போது, முகத்தில் இடிக்க வேண்டும் போலிருந்தது, இவளுக்கு.
“எனக்கு போய் ஃபிரெண்ட் இருக்கிறார் சத்யன்.”
“அது கனடாவில. நீர் இங்க இருக்க அவன் அங்க ஆரோட எல்லாம் போறானோ தெரியாது. வெளிநாட்டு ஆக்களைத் தெரியாதா? இங்க நான் உம்மத்தான் முதல் முதலா…”அவன் சொல்லிக்கொண்டு இருக்க, விருட்டென்று எழுந்து விட்டாள், பைரவி.
“இனி ஒரு வார்த்த என்னோட கதைக்கிறது இல்ல!” என்றவள், முகத்தில் ஏளனம் வந்திருந்தது.
“நானும் தான் வெளிநாடு ஓகே!” இகழ்ச்சிப் பார்வையோடு சொல்லிக்கொண்டு வந்தவளுக்குக் கோபத்தில் தமிழ் கதைக்கவும் வரவில்லை.
“எடுத்தோன்ன, வெளிநாட்டில நாங்க எல்லாரும் கண்டபடி அலைஞ்சு திரியிறது போலவும் நீங்க பவித்திரமான மனுசர் போலவும் கதைக்கிறது. இங்க வந்து இருந்து பார்க்கேக்கத் தான் வண்டவாளம் தெரியுது.” இன்னும் சொல்லி இருப்பாள், அருகில் இருந்தவர்கள் பார்வை திரும்பவும் விருட்டென்று வந்துவிட்டாள்.
அதன் பிறகு சரி முடிந்ததா? அவளைத் தன் ஆளாக எல்லோரிடம் சொல்லிக் கொண்டு திரிகிறான் என்று, இன்று தான் தெரிய வந்திருந்தது. விறுவிறுவென்று சென்றவள், யோசித்து, நின்று நிதானித்து எல்லாம் கதைக்கவில்லை. நல்ல ஏச்சுக் குடுத்தாள். தனக்கென ஒருவர் உள்ளார் என்று, தன்மையாகச் சொல்லி மறுத்தும் இப்படிக் கதை பரப்பினால்!
“இதுக்கு எல்லாம் நான் ஆள் இல்லைச் சரியா! இதோட நிப்பாட்டேல்லையோ, இந்தப் பிரச்சினையை நான் வேற மாதிரி அணுக வேண்டி இருக்கும்!” விரல் நீட்டி எச்சரித்தும் விட்டாள். அப்போ, அவன் பார்த்த பார்வை! அது, புதிதொரு சத்யனை இனம் காட்டிட்டு. அவள் நெஞ்சுக்குள் குளிர் பரவியது. விருட்டென்று வந்து விட்டாள்.
‘மயூரனிடம் சொல்லுவமா?’ தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவளுக்கு, தன்னிலேயே கோபம் வந்தது.
‘ஆர் அந்த ஆரூரன்? அவனைச் சினமேற்ற எண்டு ஹோட்டலுக்கு போயிருந்தனே! அதுக்குப் பிறகு தானே இவன் திரும்பவும் தொடங்கினவன். எல்லாமே என்னால’ தன்னைத்தானே ஏசிக் கொண்டாள்.
“பைரவி! என்ன ஒரு மாதிரி இருக்கிறீங்க?” ஒருக்களித்திருந்த கதவால் கண்டுவிட்டுக் கேட்டபடி கதவைத் திறந்தார், வீட்டு ஆன்ட்டி.
“இல்ல ஒண்ணும் இல்ல…” தடுமாறியவள், அவர் பார்வையில் கூர்மையைக் கண்டுவிட்டு, “இலேசாத் தலையிடி.” முணுமுணுத்தாள்.
“ஓ! இந்த வெயில் ஒத்துக்கொள்ளேல்லையோ என்னவோ! பொறுங்க, இஞ்சித் தேத்தண்ணி போடுறன். பிறகு கொஞ்ச நேரத்தில டின்னர் சாப்பிடலாம்.” பரிவோடு சொல்லிவிட்டுச் சென்றார், அவர்.
அந்த நேரம் நிலா அழைத்தாள். குறுகிய காலப் பழக்கத்தில் நல்ல நட்பாகியிருந்தாள்.
“நாளைக்கு மத்தியானச் சாப்பாடு எங்கட வீட்டில மறந்திராதேயும்.” என்றவள், இவள் கதைத்ததில் வைத்தே, “என்ன குரல் ஒரு மாதிரிக் கிடக்கு?” என்று, கேட்டுவிட்டாள்.
யாரிடம் சொல்வதென்று இருந்தவளாச்சே! சத்யனை, அன்று, வைத்தியசாலையில் கண்டதிலிருந்து நடந்தை ஒப்பித்துவிட்டே மூச்சு விட்டாள்.
அதே கையோடு, “ஐயோ நிலா, மயூரனுக்கு ஒண்டும் சொல்லுறது இல்ல சரியோ! பிறகு அவர் அந்தத் தடிமாடு ஆரூரனுக்கும் சொல்லுவார். அந்த மென்டல், இதைத்தானே முதலே சொன்னன் எண்டு உருண்டு பிரண்டு சிரிக்கும்.” கோபத்தோடு சொல்ல, நிலாவுக்கு சுர்ரென்று இருந்தது.
அவள் தமையன் பற்றி இவளுக்கு என்ன தான் தெரியும்? எத்தனைக்கு இப்படியெல்லாம் கதைப்பதை பொறுமையாகப் பார்த்துக்கொண்டு இருப்பது? கோபம் வந்தாலும், ‘நாளைக்கு இங்க வரேக்க தெரியவரும் தானே? அப்ப முகத்தை எங்க வைக்கிறா பாப்பம்.’ நினைத்துக் கொண்டவள், அப்போதைக்கு அவளைத் தேற்றவே செய்தாள்.
“நீர் ஒண்ணுக்கும் யோசியாதேயும். இனி அவனோட ஒரு கதையும் வச்சுக்கொள்ளாதேயும் பைரவி. சில பெடிகள் இப்படித்தான். ஒரு வேள, உம்மக் கட்டி கனடா சிட்டிசன் ஆகப் பாக்குறார் போல! இப்ப அதுதான் நிறையப் பேர் கனவே!” என்று, நிறைய நேரம் கதைத்ததில், பைரவி மனம் இலேசானது. பழைய நிமிர்வும் துணிவும் மீண்டிருந்தன.
மறுநாள் போயா நாள்! காலையில் நேரத்துக்கே, இவளை அழைத்துச் செல்ல வந்திருந்தாள், நிலா.
error: Alert: Content selection is disabled!!