ரோசிகஜனின் சுடரி 12- 1

தெரிந்தும் தெரியாமலும் போதைப் பழக்கத்துக்கு உள்ளாகுபவர்கள் அதிலிருந்து மீள்வதற்கு, இயல்பாகத் தம் வாழ்வை வாழ்வதற்குரிய வழிகள் செய்யப்படுவது கட்டாயமாகிறது. அதிலும், எதிர்காலச் சொத்தான மாணவர்கள், இளையவர்கள் சிறை செல்வதை விடவும் அதிலிருந்து மீண்டு நற்பிரசை ஆவது மிகவும் முக்கியமானதொன்றாகும்.

எப்படி, பரவலான போதைப்பொருள் விழிப்புணர்வு நடவடிக்கைகள், கட்டுப்பாடுமிக்க தடுப்பு நடவடிக்கைகள், இறுக்கமான சட்டங்கள்  முக்கியமோ, அதேபோல், பாதிப்புற்றவர்களுக்கான புனர்வாழ்வு என்பதும் அதிமுக்கியமானதே! அதற்காக, குடும்பத்தினர் மட்டுமின்றி, அரசும் தனியார் ஆர்வல நிறுவனங்களுமே முனைப்போடு செயல்பட வேண்டும். திட்டங்கள் தீட்டி, முறையான கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தவும் வேண்டும். 

“வாம்மா, வீட்டில எல்லாரும் சுகமா?” அன்போடு வரவேற்றார், சுகி.

“ஓம் ஆன்ட்டி, அம்மா இத உங்களிட்டக் குடுக்கச் சொன்னவா.” ஒரு கடதாசிப் பையைக் கொடுத்தாள், நிலா.

இவள் குரல் கேட்டு, “ஓ! முதலே ஆன்ட்டியைத் தெரியுமா?” என்றபடி வந்தாள், பைரவி. 

“நல்லாத் தெரியுமே!” என்ற சுகி, “என்னப்பா கண்ணெல்லாம் வீங்கிக் கிடக்கு! வடிவாத் தூங்கேல்லையா?” என்ற நிலாவுக்கு, தானே பதில் சொல்லியிருந்தார். 

“பிள்ளைக்குக் கொஞ்சம் சரியில்ல. தலையிடி. வெயில் ஒத்துக்கொள்ளேல்லப் போல!” என்றுவிட்டு, லெமன் பஃப் பிஸ்கட்டும் தேத்தண்ணியும் கொண்டு வந்து கொடுத்தார். 

அவரோடு கதைத்துக்கொண்டே  தேனீரைக் குடித்துவிட்டு, “என்ர ஸ்கூட்டியிலயே போவம்.” என்று, பைரவியை அழைத்துக்கொண்டு சென்றவள், தம் வீட்டின் முன்னால்  நிறுத்திவிட்டு, பைரவியைப் பார்த்தாள்.

“இதா உங்கண்ட வீடு? எத்தனை தடவை இதால போயிருக்கிறன். சொல்லவேயில்ல.” என்று நிலாவைப் பார்த்தால்…

சங்கடமா தயக்கமா? நசியலாக, அவள் நின்ற நிலை பார்த்த பைரவியின்  நெற்றி சுருங்கியது.

“என்னப்பா? வீட்டுக்கு வா வா எண்டு கூட்டிக்கொண்டு வந்து போட்டு, வாசலில நிண்டு கனக்கத்தான் யோசிக்கிறீர்?” பகிடியாகச் சொன்னாள்.

“இல்ல, உள்ள வந்தா உமக்குப் பெரிய சர்ப்ரைஸ் இருக்கு. ஆனா… என்னோட கோவிக்க மாட்டன் எண்டு ப்ரொமிஸ் பண்ணும். எப்பவும் ஃபிரெண்ட்ஸ் எண்டதில இருந்து மாறக் கூடாது.” அவள் குரலில் கெஞ்சல். பைரவி முகத்தில் யோசனை; அதையும் மேவி முறுவலித்தாள். 

“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கே!” என்றவள், “என்ர நிலாவில  கோவிப்பனா என்ன?” பகிடி பகிடியாகச் சொல்லிக்கொண்டே தான் உள்ளிட்டாள்.

“என்ன உங்கட வீட்டு வளவே இவ்வளவு பிசியா இருக்கு. வீடு புதுசா கட்டுறீங்களா?” என்றவள், “ஐய்… இந்த இடத்தில…ம்ம்ம்” விழிகளைச் சுழற்றியவள் உதட்டைப் பிதுக்கினாள். 

“சரியாச் சொல்லத் தெரியேல்ல நிலா, இந்த ஏரியா எண்டு தான் நினைக்கிறன், அம்மாக்கு ஒரு வீடு வளவு இருக்கு. நான் ஒருக்காலும் போனதில்ல.” என்றவளை, கடைக்கண்ணால் பார்த்த நிலா, அதற்குப் பதில் சொல்லவில்லை.

“ஓம். வீடு கட்டத் தொடங்கி, கொரோனா வர இடையில நிக்குது. இது பழைய வீடு. சின்னது தான்.” என்றவள், “உள்ள வாரும்!” வீட்டினுள் உள்ளிட்டவாறே, தாயை அழைத்தாள். 

“வாங்க… வாங்கம்மா!” என்றபடி வந்து, பைரவி கரங்களைப் பிடித்தவரை கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள், அவள். அவரில் இருந்து சாப்பாட்டு வாசம் கலவையாக வந்தது. “புரியாணி செஞ்சீங்களா என்ன?” மீண்டும் கட்டிப்பிடித்தாள்.

“ஓமன, உங்களுக்கு ஆட்டிறைச்சிப் புரியாணி விருப்பம் எண்டு நிலா சொன்னவா. செய்து கொண்டிருக்கிறன்.”  என்றவரை, முதற்பார்வையிலேயே இவளுக்குப் பிடித்திட்டு. 

“ஆன்ட்டி, உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!” என்றபடி, மீண்டும் கட்டிப்பிடித்துக் கொஞ்சினாள். அவர், எதையோ சொல்ல வர இடையிட்டிருந்தது, மதியின் குரல்.

“ஹலோ டொக்டர், வாங்கோ வாங்கோ!  எங்களையும் கட்டிப் பிடிக்கிறது.” என்று வந்தவளைக் கட்டிப்பிடித்து, கதைத்துச் சிரித்தபடி உள்ளிட்டார்கள்.

சிறு வரவேற்பறை தான், சுத்தமாக இருந்தது. ஐந்து பிரம்பு நாற்காலிகள், ஒரு சிறு பிரம்பு முக்காலி, ஒரு ஓரத்தில் சோக்கேஸ், ஒரு மூலையில் சின்ன நீள மேசையில் தொலைக்காட்சி, அதன் அருகிலேயே தொலைபேசி, சுவரில் தந்தை படம் மாலையோடு, ஒரு மணிக்கூடு; அவ்வளவும் தான்.

மின்னலாகப் பார்த்தாள். அவர்களோடு சேர்ந்து நாற்காலிகளை நிறைத்தபடி கலகலத்தவர்களுக்கு, கடலைமா முறுக்குக் கொண்டு வந்து வைத்தார், கௌசல்யா. 

“ஐய் ஆன்ட்டி! எனக்குச் சரியான விருப்பம்.” வஞ்சனையின்றி, நறுக்கு முறுக்கு என்று சாப்பிட்டாள், பைரவி.

“மயூரன் ஆட்களும் லன்ச்சுக்கு வருவீனம் எல்லா?”

“ஓம் ஓம், பன்னிரண்டு போலத்தான் வாறம் எண்டவே.” என்ற நிலா, “மதி கதைச்சுக்கொண்டிரு ஓடி வாறன்.” சமையலறைக்குள் உள்ளிட்டிருந்தாள். 

அடுத்த பத்தாவது நிமிடத்தில், “எங்கட வீட்டுத் தோடம்பழச் சாறு!” என்றபடி, பரிமாறினாள். கண்ணாடிக் குவளையில், பளிச் மஞ்சள் நிறத்திலிருந்த சாறின் ஒவ்வொரு மிடறும், வெளியில் எறிக்கும் வெயிலுக்கு அமிர்தமாக  உள்ளே இறங்கியது.

குடித்து முடித்த கையோடு, அம்மாக்கு உதவி செய்யப் போறேன் என்று நழுவி விட்டாள், மதி. எத்தனைக்கு மறைப்பதும் நடிப்பதும் என்று தானே இன்று அழைத்ததே! எழுந்த நிலா, “வாரும், உமக்குக் காட்ட நிறைய இடங்கள் இருக்கு.” அவள் கரம் பற்றி வெளியே கூட்டி வந்தாள்.

பெரிய வளவு என்றில்லாவிட்டாலும் உள்ளிட்டதும் இந்த வீடு இருக்க, பின்னால் இருந்த வளவு சோலையாக அடர்ந்திருந்தது. இந்த வீட்டுக்கு அருகிலேயே புது வீடு; மாடி வீட்டின் கீழ் வீடு கட்டி, மேலே பிளேட் போட்டிருந்தாலும் சீமெந்து பூச்சோடு ஓட்டையாக நின்றது. 

error: Alert: Content selection is disabled!!