புது வீட்டுக்கும் பின்னால் நடக்க, ஒரு மூலையில் கட்டுக்கிணறும் அதைச் சுற்றி மாதுளை மரங்களும் பப்பாளி மரங்களும் நின்றன. மாதுளை மரங்கள், சிறு சிறு துண்டுகளால் கட்டப்பட்ட மாதுளைகளோடு சிலிர்த்து நின்றது. அப்பால், நாலைந்து வாழைகள் குலைதள்ளி நின்றன. அப்படியே மா, தோடம்பழம், தென்னை என்று குளிர்மையாக இருந்த இடத்தில், நீளவாக்கில் ஒரு கொட்டில் இருந்தது. அதன் மேல், அருகில் என்று தொங்கிய சாக்குகள், பார்த்ததும் வித்தியாயமாக இருந்தன.
ஈரச் சாக்குகளோ, மழை பெய்யேல்லையே!
“என்ன இடம் அது?”
“வாரும் காட்டுறன்”
சற்றே தள்ளி, இரு ட்ரம் அடுப்புகள்; சீமெந்தில் இழுத்த நிலத்துண்டு. பார்த்துக்கொண்டே நடந்தாள், பைரவி.
அந்தக் கொட்டிலில் இருந்து எட்டிப் பார்த்த தலை, நிலாவைப் பார்த்துச் சிரித்துவிட்டு மறைந்தது.
“ஏதாவது வேலை நடக்கிற இடமா?” கேட்டவள் கண்களைப் பட்டென்று பொத்தினாள், நிலா.
“பைரவி…” தயக்கத்தோடு அழைத்தவள், “முதல்… பெரிய பெரிய சொறி! கோவிக்க மாட்டன் எண்டும் சொல்லி இருக்கிறீர், நினைவில வச்சிரும். இப்ப உள்ள நடவும் ஒண்டு காட்டுறன்.”
பெரிய பீடிகையோடு அழைத்துச் சென்றவள், “அண்ணா, நாங்க ஒருக்கா பாக்கப் போறம். இவா என்ர ஃபிரெண்ட்.” என்றது, அங்கு நின்றவனிடமாக்கும் என்று விளங்கிக் கொண்டாள், பைரவி.
“பாருங்கம்மா. அண்ணா வந்திட்டாரா?” அந்த மனிதன்.
“கம்பசில படிச்ச ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து வவுனியால பார்ட்டியாம். கொஞ்சம் லேட்டா தான் வருவன் எண்டவர். உங்களுக்கு எடுக்கேல்லையோ?”
“என்ன என்ன செய்ய வேணும் எண்டு வாட்சப்பில போட்டிருக்கிறார்.” என்றவன், அப்பால் சென்றான் போலும் .
“சரி, இப்பக் கண்ணைத் திறந்து பாரும். இது எங்கட அண்ணாவின்ர கனவு! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருசங்களுக்கு முதல், இந்தக் கொட்டில் போட்டுச் சின்னனாத் தொடங்கினது, இண்டைக்கு, பெயர் தெரியிற அளவுக்கு வளர்ந்திருக்கு!” பெருமையாகச் சொல்லிக்கொண்டே கைகளை விலக்கினாள்.
பைரவிக்கு ஒன்றும் தெரியவில்லை; மனதுள் வலு ஆர்வம் ஏற்பட்டிருந்ததே! கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு சுற்றிலும் பார்த்தவளுக்கு, அப்பவும் ஒன்றும் விளங்கவில்லை.
“நிலா இது.. இது காளான் தானே? அம்மாடியோ! நீங்க காளான் செய்யிறனீங்களோ? வாவ்! ஐயோ! மஷ்ரூம் எண்டா எனக்குச் சரியான விருப்பம் தெரியுமா? அம்மா முழுசா கோட்டிங் போட்டுப் பொரிப்பா யம் யம் சாப்பிட வேணும் போல இருக்கே! தொட்டுப் பார்க்கலாமா?” தட்டுத் தட்டாக இருந்த ரேக்கில், வரிசையாக அடுக்கியிருந்த உருளை வடிவ பாக்குகளில் இதழ் மலர்ந்து தள்ளியிருந்தது, காளான்.
ஆச்சரியத்தோடு, மெல்ல வருடப் போன பைரவியின் கரம் அப்படியே நின்றது. சடக்கென்று நிலாவைத் திரும்பிப் பார்த்த பார்வையில் கூர்மையும் கேள்வியும் மட்டுமல்ல, முகம் இறுகியும் விட்டிருந்தது.
“இது காளான்… அப்ப… நீர்…” பார்வையில் இருந்த கூர்மைக்கு, பேச்சு வரவில்லை. பலமாக ஏமாற்றப்பட்டு விட்ட உணர்வு!
“சொல்லும், கம்பஸுக்கு முன்னுக்கு இருக்கிற, ‘ஆரூர் மஷ்ரூம் பூட் கோட்’ உங்கட ஹோட்டலா? நிலா… உங்கட பெயர் நிலா! எப்பிடி எனக்கு இது தெரியாமல் போச்சு? அப்பவும், அண்டைக்கு உங்கள முதல் முதல் கண்ட நேரம், எங்கயோ கேட்ட பெயர் எண்டு நினைச்சனான்.” என்றவளுக்கு, நிலா, மௌனமே பதில் என்று நிற்க, “ஓம் தங்கச்சி.” பல்லை இழித்துக் கொண்டு அப்பால் சென்றான், வேலை செய்கிறவன்.
விசுக்கென்று வெளியேறினாள், பைரவி. பின்னால் ஓடி வந்தாள், நிலா.
“பைரவி நில்லும். இதான் முதலே கோவியாதேயும் எண்டு சொன்னனான். அண்ணால உமக்கு இருக்கிற கோவத்தில, நான் அவரிட தங்கச்சி எண்டு சொல்லி இருக்க… கதைச்சா இருப்பீர்?” கரம் பற்றி நிறுத்திக் கேட்டாள்.
“அதுக்காக? இவ்வளவு நாட்களுக்கு மறைச்சுப் பழகுவீங்களோ! கள்ளர் படை! அவர் மயூரனும் சேர்ந்தோ! அப்பா! எல்லாம் போதும், ஆளை விடுங்கோ!” என்று நகர முயல, “என்ன பிள்ளையள் சின்னாக்கள் போல இழுபறிப் படுறியல்?” என்றபடி வந்தார், ஆரூரன் அன்னை.
“நிலா, ஃபோன் ஒண்டு வந்திருக்கு. காளான் பக்கற்றுகள் கேக்கினம். என்ன எண்டு பார்த்து விபரம் எடம்மா!” மகளிடம் சொன்னவர் பார்வை பைரவியில். சந்தோசமாக வந்து கலகலப்பாக இருந்த பிள்ளை முகம் இறுகி, கண்கள் கலங்கி நின்றால் தெரியாது போகுமா?
“என்னம்மா ஏதாவது பிரச்சினையா? ஏதோ போல நிக்கிறீங்கள்?” அன்போடு கேட்டவரிடம் முகம் நீட்ட முடியவில்லை.
“இல்ல… ஒண்ணும் இல்ல ஆன்ட்டி…” என்றவள் கரம் பற்றியவர், “அங்க பார்த்தீங்களா?” வீட்டோடு பின்புறம் இருந்த இடத்தைக் காட்டிக் கேட்டார்.