ரோசிகஜனின் சுடரி 13- 1

இலங்கையில், சட்டவிரோதமாகப் போதைப்பொருட்களைப்  பாவிப்போருக்கு சிகிச்சையளிப்பதற்கென, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க ‘போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குச் சிகிச்சையளித்தலும் புனர்வாழ்வளித்தலும்’ எனும் சட்டமொன்று உள்ளது. இதனடிப்படையில், இலங்கையிலுள்ள புனர்வாழ்வு மையங்களில், போதைப்பொருள்ப் பாவனை, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப்பொருளைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறை வைக்கப்படுபவர்கள், மற்றும் அக்கொடிய பழக்கத்திலிருந்து மீள, சுயவிருப்போடு முன்வருபவர்கள் இப்புனர்வாழ்வுத் திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். 

இவர்களின் கல்வி நிலை, சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணிக்கு ஏற்ற வகையில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. 

“மாதத்தில ரெண்டு தடவை இந்த வேனோடு வெளிக்கிட்டா உங்களுக்கு  ஊருப்பட்ட சோலிகள் வந்திரும் தம்பி!” எப்போதும் சலித்துக்கொள்வார், ஆரூரன் அன்னை. 

“ரெண்டு நாலு நாள்கள் எண்டு நிண்டு போட்டுச் சாம ஏமங்களில வாறது தான் வழமையாக் கிடக்கு!” அலுப்புக் கலந்த குரலில் சொன்னாலும் இதன் பின்னால், பிரதானமாக நிற்பதே, மகன், ஓய்வு ஒழிச்சல் இன்றி ஓடுகிறான் என்ற கவலையே! 

சரி, ஆரம்பத்தில் ஓடினதை விட்டுவிடலாம். இப்போ தான், எத்தனை பேர் வேலைக்கு இருக்கிறார்கள்? அவர்கள் தானே இந்த விநியோக வேலைகள் பார்ப்பதும்? உடையவன் பாரா வேலை ஒரு முழம் கட்டை என்றதை அவரும் ஒத்துக்கொள்கிறார் தான். மாதத்துக்கு ஒரு தடவை நேரில் சென்று பார்த்தால் போதாதா என்று வாதாடுவார்.

“மா, உங்களுக்கு விளங்குது இல்ல. எப்பவாவது போய்ப் பார்த்தால் காணும் எண்டு விடுற அளவுக்கு, இன்னும் நம்மட தொழில் வரேல்ல. அதோட, எப்பிடியும் சூட்டோட சூடா, மன்னாரிலும் திறந்திர வேணும்.’’ என்றவன், ‘‘இப்போதைக்கு இவ்வளவும் போதும்’’  என்று, இடையிட முயன்ற தாய்க்கு இடம் கொடுக்க மாட்டான்.

‘‘அதுக்குள்ள, இங்க வாசலில உள்ளதும் டவுனுக்க இருக்கிறதையும் விடலாம். அது நாம போய்ப் பாக்கக் கூடிய தூரம். சாவகச்சேரி கூட ஓகே. கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஸ்டோல்கள், என்னதான் பொறுப்பான ஆக்களே பார்த்துக் கொண்டாலும் இடையிடை நான் பார்க்க வேணும். எனக்கு முழுசா நம்பிக்கை வருமட்டுக்கும் அது கட்டாயம். வீடு கட்டுறது தொடங்கி எல்லா வேலைகளையும் நிப்பாட்டிப் போட்டு, கையில இருக்கிறது எல்லாம் வழிச்சுத் துடைச்சுப் போட்டுத் தொடங்கின தொழில் எல்லேம்மா? விளையாட்டா என்ன?” என்று, அவர் வாயை அடைத்து விட்டுத் தான் இவன் புறப்படுவது.

அப்போதும், உடனே திரும்புவதாகச் சொல்லிவிட்டுத்தான் புறப்படுவான்; முடிவதேயில்லை; வேலைகள் அப்படிப்பட்டவையே!

இதோ, “தம்பி, நாள் முழுதும் அலைச்சல், திரும்ப இரவிரவா ஓடப்போறியளோ? எங்கட வீட்ட தங்கிப்போட்டு விடிய வெளிக்கிடுங்க.” என்று, ஸ்டோலைப் பொறுப்பாகப் பார்ப்பவர் சொல்லிவிட, ஆமோதித்துத் தங்கிவிட்டான். ஒன்பது மணிக்கு ஸ்டோல் மூடும் வரை நல்ல வியாபாரம். சந்தோசமாக, தானும் சேர்ந்தே வாடிக்கையாளர்களைக் கவனித்தான், ஆரூரன். மறுநாள், அதிகாலையே புறப்பட்டும் இருந்தான்; இருந்தும் வீடு வர முடியவில்லை.

நண்பர்கள் திடீர் என்று பார்ட்டி அது இது என்றதும் தவிர்க்கவே முடியவில்லை. அதுவும் மூன்று நாட்கள் விடுமுறை வேறா! வெள்ளி, சனி இரண்டும் அங்கிருந்தே யாழ்ப்பாணத்து வேலைகளை நடப்பித்துக்  கொண்டவன், ஞாயிறு அதிகாலை, இரண்டு மணி போல் தான் வீடு வந்திருந்தான்.

வாசலில், முன்னங்கால்களை நீட்டி, அதில் தலை வைத்துக் கண் மூடிக்கிடந்த பொன்சோ, சந்தோச முனகலோடு பாய்ந்து வந்தது; அவனைச் சுற்றி முணந்தது; நக்கியது; முன்னங்கால்களை அவன் நெஞ்சில் நிறுத்தி செல்லங்கொஞ்சியது. பிரிவுத் துயராம்! கழுத்தடியைக்  கோதித் தடவிக் கொடுத்தான் ஆரூரன்; அதோடு, சில நிமிடங்களைச் செலவிட்டுவிட்டு, “ஓடிப் போய்த் தூங்கடா!” தட்டி அனுப்பினான். 

வாலாட்டியபடியே நகர்ந்த பொன்சோவின் பின்னால் நகர்ந்தவன் மனம், கசகசவென்று இருந்த உடலைக் கழுவிவிட்டு, நல்ல நித்திரை அடிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டது. அந்தளவுக்குக் களைத்துப் போயிருந்தான். 

அப்படியே கிணற்றடிக்குச் சென்றவன், சில்லென்ற நீரை அள்ளி நல்லதொரு முழுக்குப் போட்டான். கப்பிச் சத்தத்தில், தாய் எழுந்து விட்டாலும் என்றது உறைத்த கணம் நிறுத்திவிட்டு, கொடியில் கிடந்த, தாயின் வெள்ளைத் துவாயை இழுத்தெடுத்துப் பரபரவென்று துடைத்தான். அருகிலேயே படபடத்துக் காய்ந்து கொண்டிருந்த சாரத்தை எடுத்துக் கட்டிக் கொண்டான். ஒரு பெனியன் கிடைத்தால்… அவ்வளவு உடைகள் காய்ந்தன, ஒரு பெனியன் கிடைக்கவில்லை. 

வார இறுதி என்றால் இப்படித்தான், இரவு பகலாக உடுப்புத் தோய்த்துக் காயும்; தங்கைகள் வேலை. அநேக வேளைகளில், தன் ஆடைகளைத் தோய்த்து விடுவான், ஆரூரன். இப்படிச் சிலவேளைகளில், அவர்கள் கைகளில் அம்பிட்டும் விடும். 

தான் எப்போதும் எடுத்துச் செல்லும் கறுப்பு முதுக்குப் பையை எடுத்துக் கொண்டவன், இன்னமும் மென் ஈரத்தில் துவண்ட சிகைக்குள் கைவிட்டுத் துளாவியபடி வந்தான். எப்போதுமே வீட்டுத் திறப்பு கைவசமிருக்கும்; திறந்து, மெல்ல உள்ளிட்டான். 

அறைகள் இரண்டும் மூடியிருந்தன. சாமியறையில், தாய் தூங்குவார். மற்றதில்  தங்கைகள். மின்விளக்கைப் போட்டான். வீட்டில் என்றால் அவன் தூங்கும் இடம் வராண்டா. வீட்டில் தூங்குவானோ இல்லையோ, எப்போதும் வெளியே எடுத்து வைத்திருக்கும் பாய் தலையணை அங்கில்லை. 

“பச்! ரெண்டு நாள் இல்லை எண்டதும் மறந்திட்டினம் போல!” முணுமுணுத்தபடி, முதுகுப் பையை மூலையிலிருந்த கதிரையில் வைத்தான். தங்கைகள் தூங்கும் அறைக்குள் தான் பாய் இருக்கும்; கதவைத் திறக்க எண்ணி, கை வைக்கவும் அது திறக்கவும் சரியாக இருந்தது.

அச்சிறு நொடி, அவனில் மோதிய அதிர்வில், அவனுள் இருந்த களைப்பை மறந்தான், ஆரூரன். அதையும் விட, இது தன் வீடு தானோ என்ற சந்தேகம் வேறு! 

ஆ… அவனையும் மீறி வாயைத் திறந்தவன், தனையுமறியாதே ஈரெட்டுப் பின்னால் வைத்தான்.

கதவு நிலையோடு சாய்ந்துகொண்டாள், பைரவி. கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, கூர் பார்வையோடு மினி மவுஸ் குவியலாய் நின்றிருந்தாள். ஒரு வார்த்தை கதைக்கவில்லை. பார்வை, இப்போது, இமை வெட்டாத மிதப்பான முறைப்புக்குத் தாவிவிட்டிருந்தது. 

error: Alert: Content selection is disabled!!