ரோசிகஜனின் சுடரி 13- 2

“இந்தா வாறன் அந்தா வாறன் எண்டுற பெடியக் காணேல்ல” என்று, கௌசல்யா சொல்கையில் எல்லாம், ‘எனக்குப் பயந்துதான் எங்கோ ஒளிந்து கொண்டு, வீட்டுக்கு வராமல் இருக்கிறானோ’ என, மனதோரம் சிறு எண்ணம் தோன்றியும் இருந்தது. அதுவே, அந்தக் கிண்டலான பார்வைக்குக் காரணம். 

இது அவன் வீடு தானே? எதுவோ அத்துமீறி நுழைந்தது போல், இல்லை இல்லை, அனுமதி மறுத்திருந்தவன், களவாக வந்து பிடிபட்டு விட்டது போல் அல்லவா பார்வையும் நிற்கும் தோரணையும் கிடக்கு! 

‘அந்தப் பயம் இருக்கோணும்!’ அவள் எண்ணம் கெக்கெலியிட்டது.

சில நொடிகள்தான், சுதாகரித்து இருந்தான், ஆரூரன். ஆனான ஆரூரனே  ஆடிப்போயிட்டானே! மனம், கள்ளமாகச் சிரித்து, அவன் முறைப்பை வாங்கியிருந்தது. 

நிலாவின் நட்பு வீடுவரை கூட்டி வந்திருக்கே! தன் வீடு என்று தெரிந்தவள் என்ன மாதிரி வினையாற்றி இருப்பாள்! இந்த எண்ணம் மனதிலோட, நேராகவே பார்த்தான்.

‘பொம்பளைப்பிள்ளையல் இருக்கிற அறையை என்ன தேவைக்குத் திறந்தீர்? அதும் நட்ட நடு இரவில?’ பட்டென்று கேட்க உன்னிவிட்டு, அவள் பார்வையைத் தொடர்ந்தாள், பைரவி. 

 அப்படியே சிலை போல் நிற்க அவனுக்கு என்ன விசரா? விருட்டென்று வெளியேறிவிட்டான்.

கொக்குவில் காளான் பண்ணைக்குச் செல்ல உடல் அசதி விரும்பவில்லை. முற்றத்தில், ஒரு மர வாங்கில் கிடந்தது. கொடியில் கிடந்த, இன்னுமொரு சாறத்தோடு வந்தவன், மல்லாந்து படுத்துப் போர்த்திக் கொண்டான்.

சில நிமிடங்களும் இராது, “அண்ணோய்  என்னதிது? உள்ள வந்து படுங்க.” நிலா வந்தாள்.

“எப்ப வந்தீங்க? பாய் விரிச்சு விட்டிருக்கிறன், உள்ள வாங்க. என்னைக் கூப்பிட்டு இருக்கலாமே அண்ணா.”  

“இதில, நல்ல காத்து வருது. நான் இங்கயே சாயுறன். நீ போய்த் துங்கு!”

“அண்ணோய்! விளையாடுறீங்களா? எழும்புங்க எண்டுறன்.” என்றவள், “வியாழன் பைரவி சாப்பிட வந்தவா. அடுத்த நாள் போயா. பிறகு வீக்எண்ட் எல்லா? பம்பலா இங்கயே மறிச்சிட்டம்.” அவன் கேளாதே பதில் சொன்னாள்.

“ஓ! கனடாக்காரர் தங்கிற அளவுக்கு வசதியுள்ளனாமளா நாம! ஏன் மறிச்சுச்  சிரமம் குடுக்கிறீங்க? இது என்ர வீடு, நீ என்ர தங்கச்சி எண்டோன்ன வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கேல்லையா? உறவும் வேணாம் பகையும் வேணாம் எண்டு வெட்டி விடேல்லையா?” நக்கலாகக் கேட்டான்.

“ஐயோண்ணா! கேக்கும் மெல்ல.” தவிப்போடு வீட்டு வாயிலைப் பார்த்தாள், நிலா.

“பைரவி சரியான நல்ல பிள்ளை அண்ணா. நீங்க சும்மா கடிக்காதீங்க சரியா?” என்றவள், “நீங்க எங்கட அண்ணா எண்டோன்ன ஒரு வழி பண்ணினவா தான். ஒரு மாதிரி சரி செய்திட்டம்.” இரகசியமாகச் சொன்னவள், “எழும்பி வாங்கண்ணா, சரியில்லை, பிறகு தன்னால தான் நீங்க வெளில தூங்குறீங்க எண்டு நினைப்பா. சின்னப்பிள்ளை அண்ணா. மதி போலத்தானே… உள்ள வாங்க!” இழுத்துக்கொண்டு சென்றாள்.

மினி மவுஸ் அறைக்குள்; மூச்சும் கேட்கவில்லை; நல்ல பிள்ளை அதுவும் சின்னப்பிள்ளை என்றதைக் காட்ட வேண்டுமே! எண்ணியவனுக்கு, அந்த எண்ணமே வேண்டாத ஒன்றாகத் தெரிந்தது. நிலா சொல்வது போல், நாடுவிட்டு நாடு வந்து படிக்கும் பிள்ளையோடு ஏன் வீண் கதவழி? அதுவும், பழிவாங்க எந்தளவுக்கும் இறங்கும் ஆள் என்று தெரிந்த பின்னரும்… தோள்ப்பட்டையோரமாக, இப்போதும் சூப் சூட்டை உணர்ந்தான், ஆரூரன்.

அதுவே, “நீ போய்த் தூங்கு!” நிலாவை அனுப்பிவிட்டு, விரித்திருந்த பாயில் சரிய வைத்திருந்தது. நித்திரை தான் புறியம் காட்டியது. மண்டைக்குள் ஒன்றா இரண்டா? புரண்டு புரண்டு படுத்தவன் எப்போது உறங்கினானோ… மறுநாள் பேச்சுக் குரல்களில் தான் விழித்தான்.

“எழும்பியாச்சா தம்பி? என்ன காஞ்சு போய் இருக்கிறீங்கப்பு? கண்ணெல்லாம் சிவந்து!” தலைகோதி, கழுத்தில் கை வைத்துப் பார்த்தார், கௌசல்யா. எவ்வளவு வயதானாலும் பெற்றவருக்கு, குறிப்பாக, தாய்க்குப் பிள்ளைகள் சிறுவர்கள் தான்.

“நல்லாத்தான் இருக்கிறன் அம்மா. இங்க எல்லாம் ஓகேவா? ஒரு நாளும் இல்லாமல் இப்பிடி நேரம் போயிற்றே! எழுப்பி இருக்கலாமே! காளாண் பண்ணைகள்ல அறுவடை நாள் எல்லா? நாளைக்கு டெலிவரிக்கு எல்லாம் தயார் ஆகுதா?” பரபரத்தபடி எழுந்தவன், தாய் சொல்வதைக் கேட்டுக்கொண்டே, பாயைச் சுருட்டி வைத்தான்.  

“டொய்லெட்டுக்குப் போய்ட்டு, முகம் கழுவிட்டு வாறன். தேத்தண்ணி போடுங்க.” அவசரம் அவசரமாக வெளியே சென்றான்.

கழிப்பறைக்கென உள்ள வாளியில், தண்ணியை நிறைத்துக்கொண்டு சென்றவன், “என்ன செழியன் அறுவடை தொடங்கியாச்சா ?” காளான் கொட்டிலைப் பார்த்துக் கேட்டான்.

“தொடங்கியாச்சு அண்ணே.” என்றவன் குரலோடு சேர்த்து, ஒரு தலை எட்டிப் பார்த்தது. சடக்கென்று நின்றுவிட்டான், ஆரூரன்.

“இவா இதுக்க நிண்டு என்ன செய்யிறா?” அதுவரை, அவளை மறந்து விட்டிருந்தான். விறுவிறுவென்று சென்று நுழைந்தவன் செழியனைப் பார்த்த பார்வையில் அவன் நெளிந்தான்.

“தங்கச்சி தான்… தானும்… அதான்…”ஆரூரன் முகத்தின் கடுமை கோர்வையாகக் கதைக்கவும் விடவில்லை. 

இதைப் பாரன்! இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளோ? முதல், பெரிய ஆளோ இல்லையோ… செழியன், நாள் முழுதும் வேலை செய்து தானே சம்பளம் வாங்குகிறார். பிறகு என்ன இவருக்குப் பயப்படுறது?

“இதென்ன… செழியன் என்ன உங்களுக்கு அடிமையா என்ன?” என்ற பைரவி, ஆரூரன் முகத்தில் இருந்த கோபத்தைக் கருத்திலேயே எடுக்கவில்லை.

“அதோட, அவர் பிடுங்கிறத விட நான் வடிவாப் பிடுங்கி இருக்கிறன். இங்க பாருங்க.” ஒரு பெட்டியில் நிறைந்திருந்த காளான் இதழ்களை எடுத்து அவன் முன்னால் நீட்டினாள்.

“நான் காசு எல்லாம் கேட்க மாட்டன். பயப்பட வேணாம்.” வாயைச் சுழித்தாள். ஒரு நிமிடம், நீண்ட எரி பார்வை பார்த்த ஆரூரன், விசுக்கென்று வெளியேறியிருந்தான்.

“அந்தப் பயம் இருக்கட்டும். என்ன செழியன் நீங்க? இப்பிடியா பயப்படுவீங்க?” இவள், மீண்டும் காளானை வெட்டத் திரும்ப, “நிலா” என்ற, ஆரூரனின் கர்ண கடூரக் குரல் அசைய விடாது பிடித்துக்கொண்டது.

 

error: Alert: Content selection is disabled!!