அத்தியாயம் 16 – 2

“இந்தக் கதைய நம்பச் சொல்றீங்களா மிஸ் பைரவி? ம்ம்ம்” வெகு மரியாதையாகவே கேட்டான், எல்லாளன். இருந்தாலும் குரலில் தொக்கி நின்ற நக்கல் முன்னாலிருந்த இருவருக்குமே விளங்கியது. பைரவி முகம் மேலும் இருண்டது. அதற்கு மாறாக மனதில் கோபம். 

“எங்களில கோவப்பட்டு?” மனதைப்  படிப்பவனாகக் கேள்வி கேட்டான், எல்லாளன்.

நெரித்த புருவங்களோடு பைரவியைப் பார்த்தவன், “உம்மட ஃபிரெண்ட் சத்யன் என்ன விசயத்துக்காக கைதானான் எண்டு தெரியுமா?” என்று கேட்கையில், முழுமையாகச் சுதாகரித்து விட்டிருந்தாள்,பைரவி.

அதுவும், எல்லாளன் வாய் உதிர்த்த, ‘உம்மட ஃபிரெண்ட்’ என்ற பதம் சுதாகரிக்க வைத்திருந்தது.

“எக்ஸ்கியூஸ் மீ சேர்!” என்று தான் ஆரம்பித்திருந்தாள்; எழுந்தும் விட்டாள்; குரலில், அவளையும் மீறியே கோபம் வெளிப்பட்டிருந்தது. 

“நீங்க விசாரிச்சதில என்ன மாதிரிக் கேள்விப்பட்டு இருந்தாலும் அதுக்கு நான் ஒண்ணும் செய்யேலாது. என் மட்டில, நான் சொன்னது தான்  உண்மை. அதோட, அந்தப் பெடியன் எதுக்காகப் பிடிபட்டு இருந்தாலும்  எனக்குப் பிரச்சினை இல்ல. என்ன ஏதென்று தெரிஞ்சு கொள்ள வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” அவள் சீறிக்கொண்டு போக, எழுந்து நின்றான், ஆரூரன். வாய் மட்டும்  திறக்கவில்லை. அவளுக்கு அவளே போதும். எண்ணமோட, பார்த்து நின்றான்.

“உங்களுக்கு ஒண்டு தெரியுமா?அந்தப் பெடியனிட இனிசல் என்ன எண்டு கூட எனக்குத் தெரியாது. இதுக்கு மேலே உண்மை என்ன எண்டு விசாரிச்சு கண்டறியிறதுதானே உங்கட வேலை? சும்மா ஒராள் தனியாக் கிடைச்சு இருக்கிறாள் எண்டோன்ன என்னோட தேவையில்லாமல்…” என்றவள், கோபத்தில் மூச்சு வாங்கினாள்.

“நான் எம்பசியோட கதைக்கிறன், இதுபற்றி…” அதட்டலாகச் சொன்னவளை, சட்டென்று உதித்துவிட்ட முறுவலோடு பார்த்தான், எல்லாளன். 

எல்லாளனுக்கே அதட்டல்! அக்கணம், அவன் மனதுள் ஒரு உருவம் மின்னி மறைந்தது. அவன் ஆதினி! அவனை அதட்ட முழு உரிமை கொண்டவள் அவள் மட்டும் அல்லவா? முகத்தில் வந்துவிட்ட மலர்வைக் கடினப்பட்டு மறைத்துவிட்டு, பைரவியை நேராகப் பார்த்தான்.

“நீங்க நான் சொல்லுறதை நம்பேல்லையா? பிறகு என்னத்துக்கு மினக்கட்டு என்னைக் கூப்பிட்டு விசாரிப்பான்? இங்க பாருங்க, நீங்க என்ன கேள்விப்பட்டாலும் நான்  என்ன செய்யிறது? அவனா நான் தன்ர கேர்ள் ஃபிரெண்ட் எண்டா… அது உண்மை ஆயிருமா? எவ்வளவு காசு கட்டி இங்க நம்பிப் படிக்க வந்தனான் தெரியுமா? வாங்கோ வாங்கோ, எல்லா வசதியும் செய்து தந்து பாதுகாப்புக்கும் நாங்க பொறுப்பு எண்டவே. கட்டின காசு ஒரு டொலர் குறையாமல் திரும்பித் தாங்க, நான் என்ர நாட்டுக்கே போறன்.” படபடவென்று சிலிர்த்தவளை, ”பைரவி!” அடிக்குரலில் அதட்டினான், ஆரூரன்.

எல்லாளன் முகத்தில் மின்னலாக ஒரு முறுவல் வந்து போனது.

“இங்க படுற கோவத்துக்கு முதல், ஆரோட எந்த அளவில பழகிறது எண்டதில கவனமாக இருந்திருக்கலாம். ம்ம்… இனிச் சரி கவனமாக இரும்.” என்றவன், “கதிரவன்” என்றழைத்தான். 

செவிகள் இங்கேயே இருந்திருக்கும் என்ற கணக்கில், தாமதமின்றி வந்து விறைப்போடு நின்றான், அந்தக் கதிரவன். 

“இவவிட்ட வாக்குமூலம் வாங்கிட்டு அனுப்பும்.” என்றுவிட்டு, “தேவையெண்டா திரும்பவும் வர வேண்டி இருக்கும் மிஸ் பைரவி!” சிறு முறுவலோடு சொல்லிவிட்டு, “இப்ப இவரோட போங்கோ!” கதிரவனைக் காட்டினான். 

விசுக்கென்று எழுந்தவளோடு சேர்ந்து எழுந்து, விடை பெறும் நோக்கில் எல்லாளனைப் பார்த்தான், ஆரூரன்.

“மிஸ்டர் ஆரூரன், உங்களோட கதைக்கோணும், கொஞ்சம் இருங்க!” கணீரென்று ஒலித்தது, இரும்புக் குரல்.

கதிரவன் பின்னால் நாலெட்டு எடுத்து வைத்த பைரவியும் நின்றுவிட்டாள். எல்லாளன் பார்வையைத் தொடர்ந்து திரும்பிய ஆரூரன், “நீர் போம், வெளில வெயிட் பண்ணும், வாறன்.” என்று விட்டு மீண்டும் அமர்ந்து கொண்டான்.

அவளோடு வந்ததால், அவனுக்கும் வீணான பிரச்சினை. அசௌகர்ய உணர்வோடுதான் வெளியேறினாள், பைரவி.

எல்லாளன் பார்வை, நிதானமாக ஆரூரனை எடை போட்டது. ஆரூரனுக்கு ஏனோ சிரிப்பாக இருந்தது; காட்டிக்கொள்ளவில்லை.

“சொல்லுங்க சேர்!” வெகு மரியாதையாகக் கேட்டவனை கூர் பார்வையால் துளைத்தபடி, “மிஸ் பைரவி உங்களுக்குச் சொந்தம் எண்டா, டினோ… டினோசனும் சொந்தம் தானே?” என்றானே பாருங்க. பட்டென்று, அவன் எதைக் கேட்க வருகிறான் என்று புரிந்து போயிற்று, ஆரூரனுக்கு. இதைக் கேட்கவில்லை என்றால் தானே ஆச்சரியம். அதுவும் எல்லாளன் பார்வையில் ஒன்று தப்பி விடுமா? ஊருக்கே தெரிந்த விடயமாச்சே!

சிறு முறுவலோடே கதைத்தான், ஆரூரன். “அவேக்கும் எங்கட  குடும்பத்துக்கும் ஒரு தொடர்பும் இல்ல சேர். ஆனா, பைரவிட மாமா குடும்பத்தோட எங்களுக்குத் திருமணத் தொடர்பு ஏற்படப் போகுது. அந்த வகையில தான் சொந்தம் எண்டனான்.” நறுக்கென்று சொல்லிவிட்டு அமைதியானான். 

“ஓ!” என்ற, எல்லாளன் பார்வை மட்டும் மாறவேயில்லை.

“பைரவிட மச்சானுக்கும் என்ர மூத்த தங்கச்சிக்கும் கலியாணம் செய்ய இருக்கிறம்.” என்று அவன் சொன்னது, எல்லாளனுக்குப் புதிய செய்தியே! அதன் பின்னர் கேட்க என்ன இருக்கு? விடைபெற்றுக் கொண்டான், ஆரூரன். 

வெளியே வந்தால், கைகளைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தாள், பைரவி.

அவ்வளவு வீராவேசமாகக் கதைத்துவிட்டு அவள் நிற்கும் நிலை சிரிப்பை வரவழைத்தது. வந்த வேகத்தில், “ஹலோ! என்னம்மா இதெல்லாம்?” சீண்டினான்.

பதில் சொல்லாது நடந்தாள்,அவள்.

“விசாரணைக்கு வந்திட்டு, அவரையே வெருட்டி அதட்டுறீர்! பிடிச்சு உள்ள போட்டா? உம்மோட வந்த குற்றத்துக்காக என்னையும் சேர்த்துப் போட்டிருப்பினம்.” முகம் இறுக அவள் இருந்த விதம் பார்த்து இலகுவாகத் தான் சொன்னான்.

விசுக்கென்று திரும்பிப் பார்த்தாள், பைரவி.

“என்ன சொன்னவர்? உங்கள ஏதாவது கேட்டவையளோ? அதுக்குத்தான், நானே போய்க் கொள்ளுறன் எண்டனான். உதவி செய்ய நினைச்சு வந்ததுக்குப் பெரிய நன்றி!” கையெடுத்துக் கும்பிடாத குறையில் சொன்னாள்.

“நான் ஓட்டோவில போறன். நீங்க போங்கோ. என்னால ஆருக்கும் வீண் பிரச்சனை வரத் தேவையில்ல.” என்று சொல்லி, திரும்பவும் மலையேறிவிட்டவளை, அதட்டித்தான் தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டான், ஆரூரன்.

“வீட்டில இவா வச்சதுதான் சட்டமாக்கும். நம்மட தலைவிதி! நிலா, மதிக்குப் பூப்போட்டுக் கும்பிடோணும்.” சீறிச் சென்ற மோட்டார், அவன் முணுமுணுப்பை, அவள் காதுகளுக்கு எட்ட விடவில்லை.

“இதால ஏன்? என்ர அறையில இறக்கி விடுங்க.” காதோரம் கத்தியவள் குரலுக்குச் செவியே சாய்க்காது, ஒரே சீறலில் வந்து, தம் வீட்டு வாயிலில் நிறுத்தியிருந்தான்,ஆரூரன்.

“உள்ள போம்!” அவன் முடிக்கவில்லை, ஓடி வந்திருந்தார்,கௌசல்யா.

“பைரவி! கண்டு எத்தினை நாளாச்சு ஆச்சி? ஆன்ட்டிய மறந்திட்டிரோ?” அவளை உள்ளே அழைத்துச் செல்ல, இவன், மயூரனுக்கு அழைத்தான். 

மதி பல்கலை, நிலா பாடசாலை. அதனால் என்ன என்றளவுக்கு, பைரவியோடு கலகலவென்று கதைத்துக்கொண்டு தோடம்பழத்தைக் கரைத்தார், கௌசல்யா. 

விழிகள் கலங்க அவள் இருந்த விதமே பாவமாக இருந்தது. “இதெல்லாம் ஒரு விசயமா? சும்மா தட்டிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேணும். அம்மா ஆக்களுக்குச் சொல்லிப் பயப்படுத்தவா போறீர்? விட்டுப்போட்டுப் படிப்பைப் பாரும்.” என்று கொண்டிருந்த தாயிடம், “அம்மா, எனக்கு ஒரு தேத்தண்ணி தருவீங்களா போகோணும்.” என்றவன், “இன்றைக்கு கம்பஸ் இருக்கா? இல்லாட்டி, பின்னேரமாப் போகலாம். இங்க நில்லும்.” என்றுவிட்டு, பதிலுக்கு நிற்காது வெளியே சென்றிருந்தான்.

அவள் விடயங்களில், தாய் தகப்பனே செய் செய்யாதே என்பதில்லை. ‘இவர் ஆர் கட்டளை போட?’ சிலுப்பிக்கொண்டு பதில் சொல்ல முயன்றவள், “இந்தா பதினோரு மணி ஆகப்போகுது. கம்பசுக்கு ஒரு நாள் போகாட்டி ஒண்ணும் நடவாது, நில்லும் பிள்ளை. பின்னேரமா நிலா கொண்டு போய் விடுவாள்.” என்று, கௌசல்யா சொல்லவும் மறுக்க முடியவில்லை. அதன்பின், ஆரூரன் கண்ணில் படவும் இல்லை.

அடுத்து வந்த நாட்களில், பைரவியால், வழமை போல் பல்கலைக்கழகம்  சென்று வர முடியவில்லை. பார்வைகள், குசுகுசுப்புகள் என்று, ஒன்று மாறி ஏதோவொன்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. 

நிர்வாகத்தில் வேறு அழைத்துக் கதைத்திருந்தார்கள். இவள் நடந்ததைச்  சொல்லவும், “உங்களுக்குப் பிரச்சினை இருந்திருந்தா உடனே வந்து சொல்லியிருக்க வேணும்!” கண்டித்தார்கள். 

“இனி எதுவென்றாலும் உடனுக்கு உடன் சொல்லிர வேணும். அப்பத்தான் எங்களால உங்களுக்குப் பாதுகாப்போ, தேவையான உதவிகளோ  செய்யேலும். இன்னொரு தடவை, இப்பிடி நடக்காமல் பாத்துக் கொள்ள வேண்டியது உம்மட பொறுப்பு!” கடினமாகச் சொல்லியே அனுப்பியிருந்தார்கள். 

‘உன்ர இந்த நிலைக்கு நீயும் தான் காரணம் பைரவி!’ என்றே, எல்லோரும் சொல்வதாகப்பட்டது. ஓரளவுக்கு அது உண்மை என்றும் தெரியும் தான். இருந்தாலும்… ‘அவன் ஒரு மெண்டல்’ அவனோடு சேர்த்து தன்னை… பயனில்லாது கோபம் கொள்ள மட்டுமே முடிந்தது. 

இந்த விடயமே, பல்கலைக்கழகத்தில் எவரோடும் அவ்வளவாக  நெருங்கவிடவில்லை. 

சத்யனுக்கும் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குமான தொடர்பு பற்றி, அக்கு வேர் ஆணி வேராக ஆராய்ந்த ஆதாரங்கள் கிடைத்திருக்கலாம் என்று பத்திரிகைகள் பரபரத்தன. அதுவே, என்னதான் ஆளணி அதிகாரம் இருந்தும், அவனை வெளியில் கொண்டுவர முடியவில்லை. 

அவன் சார்பாக, அரசுத் தரப்பில் இருந்து, காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தார்கள். அவர்களால் என்ன செய்யவியலும்? இப்போதெல்லாம் நடப்பது போல், எவரிடம் இருந்து என்றில்லாது கிடைத்த தகவல்களில் தான் கைது செய்தார்கள். அது பார்த்தால், அவர்களுக்கு வேலையே வைக்காது அத்தனை சாட்சிகளும் ஆதாரங்களும் கொடுத்திருந்தார்கள். யார் இது? கேள்வி, தலையைக் குடைந்து, எல்லாளன் நிம்மதியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த இக்கட்டான சூழலில், ஆரூரன் தாய் மற்றும் சகோதரிகளுடனான பைரவியின் உறவு தன்பாட்டில் இறுகியது. ஆரூரன், அந்த வீட்டில் வசிக்கிறானா என்றளவில், இவள் பார்வையில் படவில்லை. அதுவே, இவளை, இலகுவாக வந்து போகவும் வைத்திட்டோ என்னவோ! அடுத்து உருண்ட மாதங்களை இலகுவாகக் கடந்தாள், பைரவி.

 

error: Alert: Content selection is disabled!!