5
“ஆமாம் மதுரா, நீங்க நினைக்கிறது சரிதான். இனிமேல் இப்படித் தனியாக இருக்கத் தேவையில்லை; இப்பவே எங்களோடு கிளம்பி வாங்க!”
“இதென்ன நித்தி! நான்…எப்படி? இல்ல…வேணாம் .” தடுமாறினாள் அவள்.
“ஸ்ஸ்…ஒத்த வார்த்தை கதைக்கப்படாது!” சட்டென்று மதுராவை நெருங்கி அவள் கரங்களிரண்டையும் பற்றிக்கொண்ட நித்தியின் விழிகளில் மெல்லிய நீர்ப்படலம்.
“அம்மா, அப்பா இல்லாத வீட்டில் நானும் அண்ணாவும் மூச்சுமுட்டிப் போகாத நேரமே இல்லை மதுரா!” அக்கணம், தான் உதிர்த்த வார்த்தைகளில் வாழ்ந்தாள் நித்தி.
“அண்ணாவை கல்யாணம் செய்யுங்க என்றால் அதற்குப் பதிலே இல்லை. கடைசியாக, வாய் ஓயாது அண்ணாவின்ட கல்யாணம் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த அம்மா…” தளும்பிய நீரைத் துடைத்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் மதுரா! உங்களுக்காக என்று நினைக்க வேணாம்; எங்களுக்காக வாங்களன். பாருங்க, நாங்க யார்? உங்கட அம்மாவின்ட ஃப்ரெண்டின்ட அக்காவின்ட பிள்ளைகள்; இந்த அறிமுகம் போதாதா? இப்ப, நான் உங்கட தங்கச்சியாக இருந்தால் இப்படிக் கேட்டால் பார்த்துக் கொண்டு இருப்பீங்களா? ப்ளீஸ்…” கெஞ்சியவளை, பல நாட்களுக்குப்பின் விழிநீரோடு கட்டிக்கொண்டாள் மதுரா.
‘வந்ததிலிருந்து, சிறு வார்த்தையில் என் நிலையை எண்ணி கலங்க வைக்கவில்லை! தலைகுனியவோ தடுமாறவோ வைக்கவில்லை! எனக்கு நடந்த கொடுமையைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றியே கதைத்துக் கதைத்து என்னைப் பரிதாபம் கொள்ள வைத்து, என் மனநிலையை மறந்து, தன்னை ஆறுதல் படுத்த வைக்கிறாள்! யாரிவள்? என்னைவிட வயதில் சிறியவளாக இருந்தாலும் பெரியவள் போல் பொறுப்பாக, நாசூக்காக நடந்து கொள்கிறாள்!’ மனம் அரற்ற, தன்னை மறந்து அழுதுவிட்டாள் மதுரா.
மதுராவின் மனவோட்டத்தை, அவளின் இறுகிய அணைப்பில் உணர்ந்தாள் நித்தி. கண்டவுடன் இரும்பாகி நின்றவளை மீண்டும் அப்படி ஒருநிலைக்குள் தள்ள நினைக்காது, தன்னைப் பற்றியே கதைத்துவந்த நித்தி, மதுராவின் அழுகையில் திடுக்கிட்டுப் போனாள்.
அவளுக்கு இப்படி நடந்துவிட்டது என யோகம் சொன்னபோது கூட, தம்மோடு அழைத்துச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவளுள் சிறிதும் வரவில்லை. இங்கே வந்து, அவளைப் பார்த்த பின், சட்டென்று, முதல் பார்வையில் நித்தியின் மனதில் நுழைந்தமர்ந்து விட்டாள் மதுரா.
ஏதோ ஒருவகையில் பாசம், பரிவு! தன்னந்தனியே ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகளையும் தாங்கிக்கொண்டு நின்றவளின் நிலையில், நித்தியின் மனம் பாகாக உருகிவிட்டது.
அதுவும், அவளின் அறையைப் பார்த்த பின், அவ்வளவு பெரிய வீட்டில் இருப்பவர்கள் இவளைத் தங்க வைத்துக் கொண்டால் என்ன என்றுதான் தோன்றியது இவளுக்கு.
‘அண்ணாவும் நானுமாக தனியே இருப்பதை விட மதுராவும் கூட இருந்தால் நன்றாக இருக்குமே!’ என, மனதில் பட்டதும் தமையனிடம் கேட்க, அவனும் பச்சைக்கொடி காட்டி விட்டான்.
இதுவரை கலங்காது இருந்தவளின் கலக்கத்தில் அரண்டவள், “இங்க பாருங்க மதுரா, இப்படி அழுதால் வயிற்றில் இருக்கும் ஏஞ்சல்ஸ் கோவிப்பார்கள் ; பிறகு, உங்களை உண்டு இல்லை என்றாக்கி விடுவீனம்!” பரிகாசமாகச் சொல்லத் தொடங்கியவளோடு சேர்ந்து கொண்டார், நித்தியின் கோரிக்கையில் திகைத்து நின்ற யோகம்,
“நித்தி சொல்லுறதுதான் சரி மதுரா! நீ இவர்களோடு போ ஆச்சி; அப்போதான் எனக்கும் நிம்மதியாக இருக்கும். உன்னைப் பார்க்க வேணுமென்றால் இன்னும் கொஞ்சநேரம் காரோட வேணும்; அவ்வளவும் தானே?” என்றார் அவர்.
“எங்களையும் பார்க்க வரலாம் ஆன்ட்டி; என்ன வருவீங்களா?” ஈர விழிகளோடு கேட்ட நித்தியை மிகவும் பிடித்துவிட்டது யோகத்துக்கு.
“ராசாத்தி, சின்ன வயசிலயே எவ்வளவு பொறுப்பு!” அவள் கன்னம் தடவியவர், “ஹ்ம்ம்..நித்தி சொல்லுறது தான் சரி மதுரா, குழந்தைகள் பிறந்த பிறகு நிச்சயம் இந்த அறை போதாது; புதுசா வீடு பார்க்க வேணும். அப்படி இப்படி என்று எவ்வளவு இருக்கம்மா! இப்போதைக்கு நித்தியோடு போயிரு; பிறகு யோசிச்சுச் செய்யலாம்.” அவள் வாழ்வில் அக்கறையுள்ளவராகச் சொன்னார்.
யோகம் அப்படிச் சொன்னதும், அமைதியாக அமர்ந்திருந்த கார்த்திகேயனை சங்கடமாகப் பார்த்தாள் மதுரா.
‘வந்ததிலிருந்து ஒரு முறை நித்தியை கடிந்துகொள்ள மட்டுமே வாய் திறந்தவர், பின் அமைதியாக இருக்கிறார். நான்…நான் எப்படி இவையோட போயிருப்பது?’
அவள் பார்வையைத் தொடர்ந்த நித்தி, “அண்ணா, மதுராவை நம்மோட கூட்டிக் கொண்டு போறது பற்றி உங்களிட்ட கேட்டுட்டுத்தானே இவரிட்டச் சொன்னன்?” தங்கை கேட்ட விதத்தில் முறுவலித்தான் அவன்.
“ம்ம்…நீங்க எங்களோடு வருவதில் எங்களுக்கும் சந்தோஷம்தான். அவ்வளவு பெரிய வீட்டில் ரெண்டு பேரும் தனியா இருக்கிறதைவிட இன்னொருவர் இருந்தால் ஆறுதலாக இருக்கும்!” இலகுவாகச் சொன்னான் அவன்.
“இதைப் பற்றி எப்போ தம்பி உங்களோடு கதைத்தாள்? நாங்களும் இங்கே தானே இருக்கிறோம்.” சந்தேகம் கேட்டார் யோகம். அதே சந்தேகம் தான் மதுராவுக்கும்.
“அட..அதுக்குத்தானே இது இருக்கு ஆன்ட்டி!” தன் கைபேசியை ஆட்டிக் காட்டினாள் நித்தி.
“அண்ணாவுக்கு மெசேஜ் அனுப்பி, சம்மதம் வாங்கினன்!” என்றவளை பொய்யாக முறைத்தார் யோகம்.
“எதிர் எதிர் இருந்து கொண்டு ஃபோனில்…ஹ்ம்ம்…இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இது இல்லையோ ஒன்றும் முடியாது!” என்றவர், அப்போதும், அவ்வளவாக விருப்பமின்றி நின்ற மதுராவை சமாளித்து மேலே அழைத்துச் சென்றார்.
*****
ஞாயிற்றுக்கிழமை மதியம்!
உணவுண்ட கையோடு, “இன்னும் கொஞ்சம் அட்மினிஸ்ட்ரேஸன் வேலைகள் இருக்கு; முடிச்சிட்டு வாறன் நித்தி!” என்றவாறே, ஹாலின் ஒருபக்கக் கதவைத் திறந்து பின்புறமாக அமைந்திருந்த தம் க்ளினிக்குக்குள் நுழைந்த கார்த்திகேயன், விட்ட இடத்திலிருந்து வேலைகளைத் தொடர்ந்தான்.
“சரிண்ணா…” என்ற தங்கை, தொலைக்காட்சியில் இருந்த விழிகளைத் திருப்பாது இலயித்திருந்ததைப் பார்த்தவன் முகத்தில் முறுவலும், மனதில் நிம்மதியும் ஒருங்கே தோன்றியது.
‘அம்மா அப்பா மறைந்து அந்தா இந்தா என்று இருவருடங்களாகப் போகிறதே!’ மனம் நம்ப மறுத்தது.
‘இத்தனை மாதங்களில் அந்தக் கவலையிலிருந்து நித்தியை மீட்க என்னபாடு பட்டிருப்பன்! ஹப்பா! இப்பத்தான் அவள்ட முகம் கொஞ்சமேனும் தெளிஞ்சிருக்கு!’ என நினைத்தவன், அதற்குக் காரணமான மதுராவை எண்ணியதும், அவள் மீதிருந்த பரிதாபத்தையும் கடந்து மரியாதைதான் தோன்றியது.
‘மதுராவின்ட நிலையில பரிதாபப் பட்டு அவளை இங்க கூட்டிக்கொண்டு வந்திருந்தாலும், உண்மையில எங்கட நிலைதான் பரிதாபகரமாக இருந்தது; அதை நேராக்க அவள் எல்லா விதத்திலும் உதவுகிறாள். ஒருநிமிடமேனும் தன் நிலைக்காக எங்களைத் திண்டாவோ, தடுமாறவோ வைக்க இல்லை!’ நினைத்தவன் உதடுகள், “போல்ட் நட்!” முணுமுணுத்தது.
இருகிழமைகளுக்கு முன், “நான் அங்கெல்லாம் வரவில்லை நித்தி; இங்கு எல்லாம் வசதியாகத்தான் இருக்கு!” என, மறுத்தவளுடன், மல்லுக் கட்டித்தான் அழைத்து வந்திருந்தார்கள்.
“இப்போதைக்கு வாங்க மதுரா, நீங்க வருவதால் எங்களுக்கு எந்தவிதத்திலும் கஷ்டமில்லை. வேலை செய்தே ஆகவேணும் என்றால், இப்போதைக்கு, எங்கட க்ளினிக்கில் உங்களுக்கு ஏற்றமாதிரி ஒரு வேலை ஏற்பாடு செய்து தரலாம். வந்து பாருங்க, பிடிக்கவில்லை என்றால் திரும்பி வரலாம்; யாரும் தடுக்க மாட்டீனம்.” அவர்களின் வாக்குவாதத்தில் இடையிட்டான் கார்த்திகேயன். அதன் பிறகு, எதுவும் பேசவில்லை அவள்.
இடியாக இறங்கிய வேதனையில் துணையாக நின்ற யோகமும், அன்போடு அழைக்கும் நித்தியும் கார்த்திகேயனும் இந்தளவு கேட்ட பின்னரும், மீண்டும் மீண்டும் மறுப்பது அவ்வளவு அழகாகத் தெரியவில்லை அவளுக்கு! அதோடு, ‘பழகாதவர்கள் என்றாலும் சுதா மிஸ்சின் அக்கா வீடுதானே?’ மனதைத் தேற்றிக் கொண்டாள்.
அதையும் கடந்து, இவர்களைக் கண்டதில், நித்தியோடு அளவளாவியதில் அவள் மனமெங்கும் நிம்மதியின் சுகந்தம் பரவத் தொடங்கியிருந்ததையும் இலேசாக உணர்ந்து கொண்டவள், தன் சொற்ப பொருட்களோடு அவர்களோடு புறப்பட்டு விட்டாள்.
அவளை அழைத்து வந்த அடுத்த நாள் சுதாவுக்கு அழைத்த கார்த்திகேயன், “மதுரா, நல்ல சுகமாக இருக்கிறார் சித்தி; அவர்கள் வீட்டுக்கு அழைத்துக் கதைப்பதாகச் சொன்னார்!” சுருக்கமாக முடித்துக்கொண்டான்.
சுதாவுக்கோ நிறைந்த மகிழ்வு! ‘சொன்னதும் பிள்ளைகள் செய்து விட்டார்களே!’ என்கின்ற பூரிப்பு!
“கமலா டீச்சர் கேட்டால் மிகவும் சந்தோசப்படுவார் தம்பி. மதுராவின்ட மூத்த தங்கச்சிக்கும் ஒரு இடம் சரி வரும் போலிருக்கு; உள்ளூர் தான்.” என்றிருந்தார்.
அதைக் கேட்டதும், “முதல் அந்தக் கல்யாணம் முடியட்டும்; பிறகு மதுராவின்ட விசயம் சொல்லிக் கொள்ளலாம்!” என, தங்கையிடம் சொல்லி இருந்தான் இவன்.
“அதற்கு முதல் தெரிய வந்தால்!” யோசித்த நித்தி, ‘எது எப்படியோண்ணா, மதுராவின்ட குழந்தைகள் சுகமாகப் பிறந்திட்டால் போதும். இப்பத்தான் ஒழுங்காகச் சாப்பிடவே தொடங்கி இருக்கிறார்!” பெரிய மனிஷியாகக் கவலைப்பட்டாள்.
தன் இழப்பை எண்ண நேரமின்றி, கண்முன்னால் நின்ற மதுராவுக்கு நடந்த கொடுமையே அவள் மனதை வியாபித்திருந்தது. அத்தனை வேதனைகளைத் தாங்கி நிற்பவளையும் குழந்தைகளையும் பரிவாக அணைத்துக் கொண்டது நித்தியின் அன்பு கொண்ட உள்ளம்.
இவர்களின் தாய், வீடு நிறைய அழகிய தொட்டிகளில் பூங்கன்றுகள் வைத்திருந்தார். அவரின் இழப்புக்குப் பின் அவையனைத்தும் ஒழுங்கான கவனிப்பின்றி மெல்ல மெல்ல கருகி மடிந்துவிட, அசிரத்தையோடு நடமாடிய நித்தியும் கார்த்திகேயனுமாக, பூச்சாடிகளை கராஜில் அடுக்கி வைத்திருந்தார்கள்.
“இவ்வளவு அழகான சாடிகளை ஏன் இப்படிப் போட்டு வைத்திருக்கிறீங்க நித்தி?” வந்த மறுநாள் அவற்றைப் பார்த்ததும் கேட்டாள் மதுரா.

