“அதெல்லாம் அம்மா ஆசை ஆசையாகப் பார்த்து வாங்கியது மதுரா! எல்லாப் பிளான்ட்ஸும் பட்டுப் போய்ட்டுது; ஏனோ திரும்பவும் வைக்க மனம் வரவில்லை. பச்..விட்டுட்டம்!” என்றவளைச் சரிக்கட்டி, இவனையும் அழைத்துப் போய், மண்ணும் பூங்கன்றுகளும் வாங்கி வந்து தன் கைபடவே அழகாக நட்டு, ஆரம்பத்திலிருந்த இடங்களில் எல்லாம் வைத்து விட்டாள்.
அது மட்டுமா?
“நீங்க போய் அடுப்படியில் வேலை செய்யவேணாம் மதுரா!” சமையல் செய்கிறேன் என்று கிளம்பியவளை, தடுக்க எவ்வளவோ முயன்றும் முடியாது தோல்வியைத் தழுவினாலும், வாய்க்கு ருசியான உணவுக்கு பஞ்சமில்லாது போய்விட்டதே!
“வந்து நின்று பாருங்க நித்தி, பிறகு நீங்களும் சமைக்கத் தொடங்கீருவீங்க!” என்று, “நம்மூர் சாப்பாடு சாப்பிட விருப்பம் மதுரா; ஆனால் என்ன, சமைக்கத் தெரியாது!” என்றவளையும், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம் இழுத்து வைத்து சமையல் சொல்லிக் கொடுத்தாள்.
நித்தி, இடைநிலைப் பள்ளி ஆசிரியருக்குப் படிக்கிறாள். இறுதி வருடத்தில் படித்துக் கொண்டிருப்பவள், கல்லூரி போக மிகுதி நேரங்களை, மிகுந்த விருப்பத்தோடு மதுராவோடு கழித்தாள்.
தனக்கென ஒரு வட்டம் போட்டு, சிறுசிறுவிடயங்களுக்கும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த தங்கையின் மாற்றம் பற்றியும், அதை இலகுவாக ஏற்படுத்திய மதுரா பற்றியும் எண்ணிக்கொண்டே வேலையில் மூழ்கியிருந்தவனை, சுதாவின் ‘ஸ்கைப்’ அழைப்பு கலைத்தது.
“சொல்லுங்க சித்தி” என்றவன், இருக்கின்ற இடத்தை வைத்தே அவன் வேலையில் இருப்பதை ஊகித்துக் கொண்ட சுதா, முறைத்தார் .
“ஞாயிறு அன்றுமா தம்பி இங்கிருக்க வேணும்! ஒரு நாளைக்கென்றாலும் இதை மூடிட்டு நித்தியோடு எங்காவது வெளியில் போய் வந்தால் என்னய்யா? பிறகெப்படி அவள் மனம் தேறும்?! பார், நீ இங்கு, அவள் அங்கால என்ன செய்வாள்? தாய் தகப்பனைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாள்!” கடிந்து கொண்டார்.
“அவள் படம் பார்க்கிறாள் சித்தி; உடனே முடிக்கவேண்டிய வேலைகள், அதுதான் வந்தேன்; பின்னேரம் வெளியில போகப் போகிறம்.” இலேசாக முறுவலித்தான்.
மதுரா தம்மோடு இருப்பதை சிறியதாயாரிடம் மறைக்கிறோமே என்கின்ற குற்றவுணர்வில், அவரை நேராகப் பார்க்கவே சங்கடப்பட்டான் அவன்.
‘பேசாமல் சித்தியிடம் மட்டும் சொன்னால் என்ன?’ அவன் மனதில் இந்த எண்ணம் அடிக்கடி எழுந்து அடங்கியது.
“ஹ்ம்ம… என்னவோ செய் ராஜா. கல்யாணம் செய் என்றால் கொஞ்ச நாள் போகட்டும் என்கிறாய். உன் அம்மா இருந்தால் இப்படிச் சொல்வாயா?” சலித்துக் கொண்டார் சுதா.
“செய்வம் செய்வம்; இப்ப என்ன அவசரம் சித்தி? முதல் நித்தி படிப்பை முடிக்கட்டும்!”
“அவள் படிப்பு முடிப்பதற்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“இல்ல சித்தி, அவளுக்கு கல்யாணம் முடிய நான் செய்யலாம் என்று நினைச்சிருக்கிறன்; அம்மா அப்பா இருந்தால் வேறு கதை. இப்போ” என்றவனை, செல்லமாக முறைத்தார் சுதா.
“உனக்கு இப்போதே இருபத்தி எட்டு..” ஆரம்பித்தவரை,
“எனக்கு இப்பதான் இருபத்தி ஏழு சித்தி!” முறுவலித்தான் கார்த்திகேயன்.
நீண்டநாட்களின் பின் அவன் முகம் முறுவலில் மலர்வதைப் பார்த்த சுதாவின் கண்கள் கலங்கின!
‘அக்கா இருந்திருந்தால் இந்நேரம் மகன் கல்யாணத்தைச் செய்து வைத்திருப்பாரே! எவ்வளவு ஆசையாக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்!” அவர் மனம் அழுதது.
“நீ சின்னதா தலையாட்டு தம்பி, இங்கே பெண் பார்க்கத் தொடங்கீருவன்!” அதற்கும் முறுவல் செய்தவன்,
“முதல் நித்திக்கு எங்காவது நல்ல மாப்பிள்ளை இருந்தால் பாருங்க, நானும் இங்கே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன்; அக்காவும் அங்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்!” செல்லத் தங்கை பற்றியே மீண்டும் தொடர்ந்தான்.
“அவளுக்கு இங்கிருக்கத்தான் விருப்பம் சித்தி. எனக்கும் தூரமாகச் செய்து கொடுக்க விருப்பமில்லை!” என்றவனுக்கு, மதுராவும், அவள் திருமணம் அவளுக்கு அளித்த வாழ்வுமே நினைவில் வந்து போனது.
தங்கை பற்றியே கதைத்தவனின் தங்கை பாசம் தெரிந்த சுதா, “ம்ம்… பார்க்கிறன் ராஜா; இப்போதே பார்க்கத் தொடங்கினால் தான் அவள் பரீட்சை முடிய சரிவரும்.” என்றவர் ,
“அன்றைக்குப் போய் வந்தீங்களே மதுரா..” திடீரென்று ஆரம்பித்து இவனைத் திடுக்கிட வைத்தார்.
“நீங்க போய் அவளை பார்த்து வந்ததைக் கேட்டதிலிருந்து, கமலாவுக்கு உங்களோடு ஒருவார்த்தை கதைக்க விருப்பம். மதுராவும் எடுத்துக் கதைத்தாளாம். ஆனாலும், ஸ்கைப்பில் கதைக்கவில்லையாம்; ஏதோ பழுதாகிற்று, திருத்தியதும் கதைக்கிறன் என்றாளாம்!” என்ற சுதா,
“வாங்க…அட பரவாயில்லை வாங்க!” அருகில் யாரையோ அழைத்தவர், திரும்பவும் கார்த்திகேயனைப் பார்த்து, “கமலா வந்திருக்கிறார் கார்த்தி; உனக்கு நன்றி சொல்ல வேணுமாம். அந்தளவுக்கு மகளை நினைத்துக் கலங்கிப் போயிருந்தார்.” என்றவர் விலக, அந்த இடத்தில் வந்து நின்றார் மதுராவின் தாய் கமலா.
அவரைக் கண்டதும் சட்டென்று எழுந்தான் கார்த்திகேயன்! ஏனோ, அவனையும் அறியாது மனதில் சிறு பதற்றம்!
‘எவ்வளவு பெரிய விடயம், மகள் விவாகரத்தே வாங்கி விட்டாள் என்பதை நாங்களும் சேர்ந்து இத்தனை நாட்களாக மறைச்சிட்டோமே! அதைத் தெரிந்து கொள்ளும் பொழுது இவர் மனம் என்ன பாடுபடும்!’ நினைத்தவனுக்கு, அவரைப் பார்க்கையில் தன் அன்னையின் நினைவுதான் வந்தது.
தோற்றம் ஐம்பதுகளின் ஆரம்பத்தைக் காட்ட, மதுராவின் சாயலிலிருந்த கமலாவின் விழிகள் மட்டும் உள்ளத்துச் சுமையை தெள்ளத் தெளிவாகக் காட்டி நின்றது.
இவனைப் பார்த்து அன்பாகப் புன்னகைத்தவர், “மிக்க நன்றி தம்பி! எவ்வளவோ, எதையெதையோ நினைத்துக் குழம்பினன் தெரியுமா?” கலக்கத்தோடு ஆரம்பித்தார்.
“இரண்டாவது மகளுக்கு வெளிநாட்டுச் சம்பந்தம் வர ஒரேயடியாக மாட்டேனென்று சொல்லீட்டன். மதுவைக் கட்டிக் கொடுத்துத் தவிப்பதே போதும். ஆஹா ஓஹோ என்று இல்லையென்றாலும் என் கண்ணெதிரில் இருந்தால் போதும் தம்பி!” கனமாகப் பெருமூச்செறிந்தார்.
“நீங்க போய்ப் பார்த்து அவள் நல்லா இருக்கிறாள் என்று சொன்ன பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது தம்பி. வழமைபோல கதைத்துப் பேசி என்று இருந்திருந்தால் இந்தளவுக்கு கலங்கியிருக்க மாட்டன்; ஒரேயடியா ஆளே மாறிப் போயிட்டாள்; அதுதான் பயந்து போனேன் தம்பி. என் பிள்ளைக்கு என்னோடு கடிந்து பேசவே வராது; ஆனால், இப்போதெல்லாம் எடுத்தால் சுள்ளென்று விழுவாள்!” கண்கள் மின்னச் சொன்னார்.
“ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகளை சுமக்கிறாள்; கஷ்டம் தானே என்று மனதைத் தேற்றினாலும், மாப்பிள்ளைத் தம்பியும் வேலை வேலையென்று நிறைய நாட்களாகக் கதைக்க இல்ல. எப்பவுமே அளந்துதான் கதைப்பார் என்றாலும்…” விழிகளைத் துடைத்துக் கொண்டவர்,
“இப்ப எல்லாம் எங்களோடு ஒத்த வார்த்தை பேசவே உங்கட மகளுக்கு நேரமில்லை! எப்ப என்ர மகன் கதைச்சாலும் அவளுக்கு ஏதோ ஒரு வேலையிருக்கும்!” அடிக்கடி மருமகனின் தாய் தொலைபேசியில் முணுமுணுப்பதையும்,
“உள்ளுரில் வளர்ந்த பிள்ளை என்று மனதார நம்பித்தான் என் ஒரே மகனுக்கு செய்து வச்சன். எவ்வளவு பொறுப்பும் பாசமும் உள்ள மகன், இப்ப எல்லாம் கதைக்கிறதுக்கே நேரமில்லை என்கின்ற அளவில் வந்திட்டான்!” என்று, மகளில் குறை கூறுவதையும்,
“குழந்தை உண்டாகி இருப்பதைக் கூட உங்கள் மூலமாகவா அறிந்துகொள்ள வேணும்? அந்தளவுக்குத்தான் எங்களுக்கு மரியாதையா?” என, தன்னோடு சீறி முகம் திருப்பியதையும் எண்ணி, இப்போதும் கலங்கிக் கொண்டுதான் இருக்கிறார் கமலா.
இதையெல்லாம் மனம் விட்டு மகளோடு பேசுவோம் என்றால், அவள் தான் பேச்சை வளர்க்காது நறுக்குத் தெறித்தால் போல கதைத்து வைத்து விடுகிறாளே! மருமகனின் தாயின் கோபத்திலும் பிழைகாண முடியாது திணறுகிறார் கமலா.
“எப்படித் தம்பி இருக்கிறாள்? நீங்க போன பொழுது கணேஷ் தம்பி இருந்தாரா? என்னைத்தான் அங்கு வரவேணாம் என்றிட்டாள். ஸ்பொன்ஸர் செய்வதில் எதுவோ சிக்கல் இருக்காம்; உடனே சரிவராதாம். பிறகு வாங்கம்மா என்றாள். சரி பரவாயில்லை, சின்னவள் கல்யாண அலுவலும் இருக்கு என்று விட்டால், ஸ்கைப்பில் வாடியம்மா என்று கெஞ்சினாலும் ஏதேதோ சொல்லுறாள்.” பரிதாபமாகக் கேட்க, மனம் கரைந்துவிட்டான் கார்த்திகேயன் .
ஏற்கனவே அவர் மகள் விடயத்தை அறிந்தும் மறைக்கிறோம் என்கின்ற குற்ற உணர்வோடு, இவ்வளவு அருகில் மதுரா இருக்க அவர் இப்படிக் கலங்குவதை அவனால் பார்த்திருக்க முடியவில்லை.
கணேஷ் என்கின்ற பெயரும், அவனுக்கு அவர் மருமகன் என்று கொடுக்கும் மரியாதையையும் பார்த்து இரத்தம் கொதித்தாலும் அடக்கிக் கொண்டவன்,
“மதுரா பற்றி இனி யோசிக்க வேணாம் ஆன்ட்டி; நாங்க பார்த்துக் கொள்வோம். அதுவும், என்ர தங்கச்சிக்கு உங்கட மகளைச் சரியாப் பிடிச்சிட்டு!” முறுவலோடு சொன்னவன், மடிக்கணனியை தூக்கிக் கொண்டு,
“இப்ப என்ன, மதுரா எப்படி இருக்கிறார் என்று பார்க்க வேணும்; அவ்வளவும் தானே? கொஞ்சம் பொறுங்க!” என்றவன், அவர் புரியாது விழிப்பதைப் பார்த்து முறுவல் செய்தவாறே, க்ளினிக் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தான்.

