7
அழைப்பை ஏற்காது யாரென்று பார்த்தவன், “பச்…இப்பத்தானே கதைச்சார்? நித்தி வேற கத்தப் போறாள்!” முணுமுணுத்துக்கொண்டே, “சொல்லுங்க சித்தி!” சுதாவின் அழைப்பை ஏற்றான்.
அடுத்த நொடி, “இங்க பார் தம்பி, நீங்க இரண்டுபேரும் பெரியவேண்ட துணை இல்லாமல் இருக்கிறீங்க!” அவசரமாகக் குறுக்கிட்டது அவர் குரல்.
கேட்டவன் முகம், பெற்றவர் நினைவில் இறுகிப் போனது.
“அதனால், எது செய்தாலும் ஒன்றுக்குப் பத்தா யோசிச்சிட்டுச் செய்ய வேணும் ராஜா! இளம்பிள்ளையையும் வச்சுக் கொண்டிருக்கிறாய்!” அவன் அமைதியை அசட்டை செய்து, தவிப்போடு தொடர்ந்தார் சுதா.
சிறியதாயின் பேச்சில் இவன் நெற்றி சிந்தனையாகச் சுருங்கிய வேளையில், “என்ன விசயம் சித்தி? எது என்றாலும் நேரவே சொல்லுங்க.” என்றவனுள், ‘மதுரா விசயமாக ஏதும் சந்தேகம் தோன்றி இருக்குமோ!’ என்ற எண்ணம் எழாமலில்லை.
“அதைத்தான் தம்பி நானும் சொல்லுறன்; எதுவென்றாலும் மறைக்காமல் நேர சொல்லிரு! அதுதான் எல்லாருக்கும் நல்லது.” என்றவர் குரல், வெளிப்படையாகக் கண்டிப்பைப் பிரதிபலித்தது.
“இப்பச் சரி சொல்லு பார்ப்பம்; மதுரா ஏன் உங்களோடு வந்திருக்கிறாள்?”
சுதாவின் கூர்மையான கேள்வியில் கணம் தடுமாறினான் கார்த்திகேயன். அடுத்தநொடி, இவ்விடயத்தை மறைப்பதில் மிகவும் அசௌகரியத்தை உணர்ந்திருந்தவன் சொல்லிவிடத் தீர்மானித்து, “ஓம் சித்தி, உங்கட ஊகம் சரிதான் …” என ஆரம்பித்து, நடந்தவை அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்.
கேட்டிருந்தவரோ, தோழியின் மகள் வாழ்வில் நடந்த விபரீதத்தை அறிந்து இடி விழுந்தது போல் அதிர்ந்து போனார்.
“மதுராவுக்கு நடந்த கொடுமை, அவள் தன்ர விருப்பத்துக்கு வாங்கின விவாகரத்து…” தனக்குத்தானே சொல்லிக்கொண்டவர், நடப்பை கிரகிக்கவே மிகவும் தடுமாறினார்.
“உண்மையாகவே மதுவின்ட வாழ்க்கையில பிரச்சனை ஒன்றும் இருக்காது தானே சுதா?” நீண்ட நாட்களின் பின், மகளின் முகம் பார்த்துக் கதைத்த மகிழ்வையும் மீறிய கலவரம் கமலாவுக்கு.
“மனமே சரியில்லை சுதா! என்றாலும் அவள் தனிய என்ற நிலை போய், உங்கட அக்காவின்ட பிள்ளைகள் துணைக்கிருக்கிறது யானைப் பலம் தருது!” என, தன்னைத்தான் தேற்றிக்கொண்டே சென்றிருந்தார் அவர்.
‘இதைக் கேட்டால் அவர்ட நிலைதான் என்ன!?’ இப்படி, சுதா பதற, ‘ஹப்பாடா! சித்திட்ட சொல்லியாச்சு!’ சுமையிறக்கிய பாவனையில் கதிரையில் சாய்ந்தமர்ந்து விட்டான் கார்த்திகேயன்.
“தம்பி லைனில் இருக்கிறயா?”
“ம்ம்…சொல்லுங்க சித்தி!”
“எப்படிப்பா இவ்வளவு பெரிய விசயத்தை மறைத்து, அந்தப் பிள்ளையை உங்களோட கூட்டிக்கொண்டு வந்து வச்சிருப்பீங்க?! நாளைக்கு ஏதாவது பெரிசா நடந்தால் யார் பொறுப்பு? கொஞ்சமும் பொறுப்பில்லாமல் இப்படியா நடந்து கொள்வாய்? நித்தி விருப்பப்பட்டாள், கூட்டிக்கொண்டு வந்தன் என்கிறாயே; போய்ப் பாரென்று சொன்ன என்னட்ட ஒருவார்த்தை கேட்டிருக்கலாமே!” படபடத்தார்.
“மதுரா, இவ்வளவு பெரிய விசயத்தை ஒற்றையாளாகச் சமாளித்தாள் என்பதே பெரிய ஆச்சரியம் தான்; அதற்கென்று, பெற்ற தாயிட்ட கூட மறைக்கிறதா? விளைவுகள் தெரிஞ்சு தான் இப்படி நடந்து கொண்டாளா? விவாகரத்து என்று போக முதல் கலியாணம் செய்து வைத்த தாயிடம் சொல்லுறதில்லையா? தன்னிஷ்டத்துக்கு நடந்து கொள்வதா?” தொடர்ந்தவர் மனமோ ஆற மறுத்தது.
“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எல்லாமே இலகுவாகிப் போச்சே! பெரியவேட ஆலோசனைகள் தேவையே இல்லையா?” மதுராவின் செயலில் மிகுந்த கோபம் கொண்டவராகவே கதைத்தார்.
நடந்ததைக் கேட்ட அதிர்வில் அவர் பேசப்பேச அமைதியாக இருந்தவன், மதுரா பிழை இழைத்தாள் என்பதுபோல் சொன்னதும் சட்டென்று நிமிர்ந்தமர்ந்தான்.
“என்ன சித்தி உங்கட கதை? அந்த ராஸ்கல் இந்தளவுக்குப் போன பிறகும் வாயை மூடிக்கொண்டிருக்க வேணுமா? அவனை அப்படி விட்டதே பிழை என்று நாங்க சொல்லுறம்!” என்றவன் குரலில் மிகையான சினம்!
“அப்படி நான் சொல்ல இல்லைத் தம்பி. பெரியவேட்ட சொல்லியிருந்தால் அவன்ட வீட்டுக்குச் சொல்லி, பேசித் தீர்த்திருக்கலாமே! வாழ்க்கையை அறுத்துக் கொள்வது, அதுவும் வயிற்றில பிள்ளைகளோடு அவ்வளவு புத்திசாலித்தனமா? அதுவும் எத்தனை காலத்துக்கு!?”
“சித்தி! உங்களிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்க இல்லை. வயிற்றில பிள்ளையிருந்தால் அவன் செய்தவற்றையெல்லாம் ஏற்க முடியுமா? பெரியவேட்ட சொல்லிச் சமரசம் செய்து வைக்கிற விசயமா இது!? முதல், இப்படியான விசயங்களை சகித்து வாழ வேண்டிய அவசியமென்ன வந்தது?! இவன்களை எல்லாம் அந்த இடத்திலேயே வெட்டிப் போட வேணும்!” சீறினான்.
“தாயிட்ட சொல்லாமல் விட்டது என்னவோ பிழையாக இருக்கலாம் சித்தி. தட்டத்தனியாக இவ்வளவையும் சமாளிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதில்லையே! அதுவும் வேற்று நாட்டில்!”
“அதைத் தான் நானும் சொல்லுறன்; தட்டத்தனியாகச் சமாளிக்க வேண்டிய அவசியம் தான் என்ன? எவ்வளவு நாட்களுக்குச் சமாளிக்க முடியும்? மறைக்க முடியும்? இப்ப கதைக்கேக்க அவள்ட முகத்தைப் பார்த்து மனக்கலக்கம் மறையாமல் தான் வீட்டுக்குப் போறார், அவளின்ட அம்மா. எனக்கும் பார்த்ததும் சந்தேகம் வந்திட்டு!” கண்டனம் மறையாது தொடர்ந்தார் சுதா.
“மதுரா தன்ட தாயிட்டம் மறைத்தாள் என்பது வேறுகதை; அதை விடுவம். அது அவளுக்கும் அவள்ட அம்மாவுக்கும் இடையில உள்ள கதை. அவளை உடனே போய்ப்பார் என்று சொல்ல, அண்ணனும் தங்கையும் எவ்வளவு யோசிச்சீங்க? சரி, பார்த்து இப்படிப் பிரச்சனை என்றதும் என்னட்டச் சொல்லி இருக்க வேணும்; அதை விட்டுட்டு அவளைக் கையோடு கூட்டிக்கொண்டு வந்து…உனக்குப் புத்தி இல்லையா ராஜா?” அவரின் சீறலில் இவன் முகம் இறுகியது.
மதுராவை அழைத்து வந்ததற்கு, இப்படி ஒரு எதிர்ப்பு, அதுவும் தன் சிறியதாயாரிடமிருந்து வருமென அவன் துளியும் எண்ணியிருக்கவில்லை. அதில் பிழையிருப்பதாக உணர்ந்திருந்தால் அல்லவா அந்த எண்ணம் தோன்றியிருக்கும்!
“வீட்டில நித்தியும் இருக்கிறாள்; மதுராவின்ட புருஷன் ஒன்று கிடக்க ஒன்று செய்திட்டா என்ன செய்யிறது ? நானே உங்களுக்குத் தேவையில்லாத விசயத்தை கைகாட்டி விட்டது போல் ஆகீட்டுதே!” சுதாவின் குரல் புலம்பலுக்குத் தாவியிருந்தது.
“சும்மா அந்த ராஸ்களுக்குப் பயப்பட வேணாம் சித்தி. அவன் இங்க ஒன்றும் செய்ய முடியாது.” சீறிய கார்த்திகேயனின் பேச்சில் இடையிட்டார் சுதா.
“இல்ல இல்ல; இந்த சமாதானமெல்லாம் எனக்கு வேணாம் தம்பி! மதுராவின்ட நிலை பரிதாபம்தான்; நான் இல்லையென்று சொல்ல இல்ல. அவள்ட அம்மா என்ர சிநேகிதி; அதையெல்லாம் விட நீங்க ரெண்டு பேரும் எனக்கு முக்கியம் ராசா.
முதல் வேலையாக, அவளை அந்தப் பழைய ரூமில கொண்டு போய்விடு! நான் நாளைக்காலையில் கமலாட்ட விசயத்தைச் சொல்லுறன்!” என்று சுதா படபடக்க, தன்னையுமறியாது கதிரையைத் தள்ளிக் கொண்டெழுந்தான் கார்த்திகேயன்.
“இங்க பாருங்க சித்தி, நீங்க சொல்லித்தான் நாங்க மதுராவைப் போய்ப் பார்த்தம்; அதற்கு முன் மதுரா யாரென்றே எங்களுக்கு தெரியாது தான். ஆனால், இப்ப நீங்க சொல்லுறது போல என்ன பாடும் படு என்று விட ஏலாது!” கணீரென்று தீர்மானமாகச் சொன்னான்.
அவன் சொன்ன விதத்தில் அதிர்ந்தார் சுதா. “சொல்வதைக் கேள் தம்பி!” கெஞ்சலாகத் தொடங்கியவரிடம் திட்டவட்டமாகப் பேசினான் அவன்.
“அன்றைக்குக் கதைக்கேக்க என்ன எல்லாம் சொன்னீங்க! அயல் இடத்தில் அறிந்தவர் தெரிந்தவர் உதவி செய்ய இல்லை என்றால் எப்படி என்று கேட்ட நீங்களே இப்ப இப்படிச் சொன்னால் எப்படிச் சித்தி?”
“அட! அதுவும் இதுவும் ஒன்றா? ஒருதரம் எட்டிப் பார்த்துவிட்டு வாங்க என்றன். நீங்க என்னடா என்றால் வம்பை விலைக்கு வாங்கி மடியில் கட்டிக் கொண்டு வருவீங்க என்று கண்டேனா என்ன?”
மதுராவை வம்பு என்று அவர் விளித்ததை கார்த்திகேயன் சிறிதும் இரசிக்கவில்லை என்பதை, அவன் முகம் இறுகிய விதமே தெள்ளத் தெளிவாகக் காட்டியது.
‘அன்றைக்கு அப்படி உருகி உருகிக் கதைச்ச சித்தியா இன்று இப்படி?’ நம்ப முடியாது திண்டாடினான். அதுதான் வெகு இயல்பு என்று ஏனோ அவனால் ஏற்க முடியவில்லை.அவன் அமைதி காக்க, விடாது தொடர்ந்தார் சுதா. “உதவி செய்யிறதுக்கும் ஒரு அளவிருக்குத் தம்பி. நமக்குப் பொல்லாப்பு வரும் என்றால் அந்த உதவிக்கு ஏன் போவான்?”
“ஐயோ சித்தி! திரும்ப திரும்ப எங்களுக்கு எதுவும் நடந்திரும், அதுவும் அந்த வெத்து வேட்டால் என்று வீண் கற்பனை பண்ண வேணாம்.” அவன் குரலில் தெறித்த கண்டிப்பில் கலங்கினார் சுதா.
‘இவன் அவளை வெளியே அனுப்பமாட்டான் போலிருக்கே!’ அவரின் மன அலறலை இடையிட்டது அவன் குரல்.
“மதுரா விசயத்தை கமலா ஆன்ட்டிக்குச் சொல்லுறதுதான் சரி; அதை மதுராட்ட கேட்டிட்டே சொல்லலாம். அதுவரை, கொஞ்சம் பொறுமையாக இருங்க. மதுராவோடு கதைச்சிட்டுக் காலையில உங்களுக்கு எடுக்கிறன்.” என்றவன், “எனக்கும் ஒரு அக்காவும் தங்கச்சியும் இருக்கீனம் சித்தி. ஒருவேளை அவேக்கு இப்படியென்றால்…”
“ஏன்டா! உனக்கு என்ன விசரே? அபசகுனமாக உளறுகிறாய்!”
“இதிலென்ன அபசகுனமும் உளறலும்!” சுள்ளென்று ஆரம்பித்தவன், “கொஞ்சம் அப்படி எண்ணிப் பாருங்களன் என்று சொல்லுறன். வெளிநாட்டில், கொஞ்சமேனும் அறிந்தவர்கள் உதவியோடு இல்லையென்றால் மதுரா என்ன செய்வாள்? எத்தனைக்கு என்று தனியாகச் சமாளிக்க முடியும்? குழந்தைகள்; அதுவும் இரட்டைக் குழந்தைகள். நினைத்தால் பாவமாக இல்லையா சித்தி?” குரலைத் தணித்து அவரைச் சமாதானப்படுத்த முனைந்தான்.

