மலருமோ உந்தன் இதயம் 7 – 2

“அவள் பாவம் இல்லை என்று எப்ப சொன்னன்? பாவம் தான்டா! பரிதாபம் தான். அதற்காக? தன்னிஷ்டத்துக்கு விவாகரத்து வாங்கியவளுக்கு மிகுதியையும் பார்க்கத் தெரியாதா? நீ ஏன் வலியப் போய் தலையைக் கொடுக்கிறாய்?” என்றவர், தன் பிடியில் நிற்பதை உணர்ந்தவனுக்கு ஆயாசமாக இருந்தது.

சிறியதாயார், அவன் மிகையாக மதிக்கும் அன்பான நெருங்கிய உறவு! அதுவும், அத்தூரமாக இருந்தாலும் பெற்றோர் மறைவுக்குப் பின் பெரியவர்களின் அரவணைப்பை எப்போதும் உணர வைத்துக் கொண்டிருக்கும் பாசமான உறவு!

‘அதற்கென்று? அவரே ஒருத்தியைப் போய்ப்பார் என்று ஒற்றைக்காலில் நிற்பாராம்; தவித்து, தன்னந்தனியாக நிற்பவளுக்குக் கைகொடுக்க நினைத்தால் தடை போடுவாராம்! அதை நான்…இல்லை முடியாது.’ அவன் மனமோ, ஒரேயடியாக சிறியதாயாரின் பேச்சுக்கு செவிகொடுக்க மறுத்துவிட்டது.

அதேநேரம், “தொடர்ந்து இங்கயே இருக்கப் போவதாக மதுரா முடிவெடுத்தால், எங்களோடுதான் இருப்பார் சித்தி! வேறு எங்கும் தனியாக இருக்க விடுவதாக இல்லை.” தன்னையுமறியாது தீர்மானமாக வார்த்தைகளை உதிர்த்தான்.

அவனின் சொற்களைக் கேட்ட சுதா பேச்சின்றி அதிர்ந்து நின்றார்.

“இன்றைக்கு அம்மா இருந்திருந்தாலும் இதையேதான் சொல்லியிருப்பார் சித்தி; நாங்க செய்ததைத்தான் செய்தும் இருப்பார்! அதுவும் உங்களுக்குத் தெரியும்” என்றவன், சுதாவைக் கதைக்க அனுமதிக்கவில்லை.

“தேவையில்லாமல் யோசிக்காமல் அமைதியாக இருங்க சித்தி; நித்தி வெளியில் போக வேணும் என்றாள், போயிட்டு வரப் போறன்!” சொல்லி, அலைபேசியைத் துண்டித்துவிட்டுத் திரும்பியவன், வாயிலோரம் இறுகி நின்றவர்களைக் கண்டதும் திடுக்கிட்டான்.

கண்ணிமைக்கும் பொழுதில் சுதாகரித்துக் கொண்டவன், “நீங்க ரெடியா? வாங்க போவம்.” எதுவுமே நடவாத பாவனையில் தம்மை நோக்கி வந்த தமையனை, அதிர்வு மாறாது பார்த்து நின்றாள் நித்தி.

தங்கையின் கலங்கிய விழிகளை ஓரு கணம் உற்று நோக்கியவனின் பார்வை, மெல்ல மதுராவின் விழிகளைச் சந்தித்தது. மனதுள் கொந்தளிக்கும் பிரளயத்தின் வெளிப்பாடாக, கன்றிச் சிவந்த வதனம்; துடிக்கும் உதடுகள்; விடைக்கும் நாசி; நீர்ப்படலத்தில் தந்தளித்துக் கொண்டிருந்த கருவிழிகள்! இத்தனைநாளும் இல்லாமல், ஒருவித அவசரத்தோடு அவள் வதனத்தை ஆராய்ந்தன, கார்த்திகேயனின் விழிகள்!

பலத்த அடிபட்டு உயிர்பிரியும் வேதனையில் முக்கி முனகும் நிலையில் நின்றவளின் ஒரு கரம் நித்தியை கெட்டியாகப் பற்றியிருக்க, மறுகரமோ நிலைப்படியை ஆதரவாகப் பற்றியிருந்தது. ஆடாமல் அசையாமல், அவனைத்தான் இவளும் பார்த்து நின்றாள்.

மீண்டும் அவன் விழிகள் அவள் நேத்திரங்களை ஸ்பரிசித்த கணம், பார்வையை விலக்கிக் கொண்டவள், மெல்ல, தன் கைப்பிடியினுள் இருந்த நித்தியின் கரத்தை விடுவித்தாள்.

அதிர்வோடு தமையனை நோக்கியிருந்த நித்தி, சட்டென்று மதுராவை ஏறிட்டாள்.

“அப்போ, சுதா மிஸ்ஸுக்கு எல்லாம் தெரிஞ்சிட்டுதா?” குரல் இறுகக் கேட்ட மதுரா, மீண்டும் ஒருகணம் கார்த்திகேயனின் விழிகளைச் சந்தித்தாள். மறுகணம், மெல்லத் திரும்பி நடந்து ஹாலுக்குள் நுழைந்து சோஃபாவின் ஓரத்தில் அமர்ந்து கொள்ள, அவளையே பார்த்திருந்த நித்தி, “அண்ணா!” தமையனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“நீங்க சித்தியோடு கதைக்கத் தொடங்கும் போதே வந்திட்டம்! உங்களைக் கூப்பிட முயன்ற என்னை மதுரா விட இல்லை; அத்தனையையும் கேட்டுவிட்டார்ணா!” முகம் கசங்கச் சொன்னாள்.

“பச்..இப்பத்தான்ணா சிரிக்கத் தொடங்கினார்; அதுக்குள்ள..” கண்ணீர் விட்ட தங்கையை கண்டிப்போடு பார்த்து, “ஸ்ஸ்…இப்ப ஏன் இந்தக் கண்ணீர்?” கடிந்து கொண்டான்.

“இப்ப என்ன நடந்திட்டு? இதுவெல்லாம் மறைக்கிற விசயமா நித்தி! மதுராவின்ட வீட்டுக்கு எல்லாமே தெரியிறதுதான் சரி; அதனால் சித்திக்குத் தெரிந்ததில நிம்மதிதான்!” ஹாலை நோக்கி நடந்து கொண்டே, மதுராவுக்கும் கேட்கட்டுமென்று சத்தமாகவே சொன்னான்.

அவன் தங்கையோ, தமையனின் கரம் பற்றி இழுத்து நிறுத்தி, “மதுராவை இங்க கூட்டிக்கொண்டு வந்ததில் சித்திக்கு விருப்பம் இல்லையா?” தணிவாக வினவினாள்.

“மதுராவின் விசயத்தில் சித்திக்கு சந்தேகம் வந்து எடுத்துக் கேட்டார்மா! கமலா ஆன்ட்டிக்கும் மனதில் குழப்பம் தீரவில்லையாம்!” தங்கையின் கரத்தைப் பற்றியவாறே நடந்தவன், மதுராவின் முன்னிருந்த சோஃபாவில் அமர்ந்து, வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவளை சிலகணங்கள் ஊன்றிப் பார்த்தான்.

“இந்த விசயத்தைக் கேட்ட அதிர்ச்சியில் சித்தி ஏதேதோ உளறுகிறார்; அவ்வளவும் தான்! வேறெந்த யோசனையும் தேவையில்லை மதுரா. என்னைப் பொறுத்தவரையில், உங்கட அம்மாவிட்ட நடந்ததைப் பக்குவமாக எடுத்துச் சொல்லுறதுதான் நல்லது. நாளைக்குக் காலையில எடுத்துக் கதைப்பம்.” என்றவன், “எவ்வளவையோ தனியாகவே கடந்தாயிற்று; இப்ப, உங்களோடு நாங்க இல்லையா மதுரா? ஏனிந்தக் கலக்கம்!” அவனையும் அறியாது கனிந்தொலித்தது அவன் குரல்!

தமையன் சொன்னதற்கு ஆமோதிப்பாகத் தலையாட்டியவாறே, “அதுதானே மதுரா! இப்ப ஏன் இப்படி இருக்கிறீங்க?! இங்க பாருங்க..” அவளருகில் நெருங்கி அமர்ந்த நித்தி, அவள் முகம் பற்றி, தன் புறமாகத் திருப்பி ஆறுதல்படுத்த விழைந்தாள்.

மதுராவின் தளர்ந்த தோற்றம்; அவளின் வெறுமையான அமைதி; கார்த்திகேயனை இதுவரையில்லாதவாறு மிகவும் பாதித்தது! இதுதான் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாதவகையில் பல்வேறு உணர்வுகளின் அலைமோதலில் அல்லாடியது அவனுள்ளம்! உள்ளத்தோடு சேர்ந்து உடலும் மின்னலென அதிர்வலைகளின் ஆக்கிரமிப்பில் சிக்கிக்கொள்ள மிகவும் தடுமாறினான் அவன்.

“உனக்கு இந்தக் கலக்கம் தேவையே இல்லை. இப்ப நீ தனியாள் இல்லை; உனக்கு நான் இருக்கிறன்!” என்றுரைக்க, அவன் நெஞ்சம் மிகுந்த ஆவல் கொண்டது! அடக்க முடியாது எழுந்த அவ்வுணர்வால் அவன் மனம் அதிரவே செய்தது! அதிலிருந்து மீண்டுவிட எத்தனித்து திக்கித் திமிறியவன் சட்டென்று எழுந்து கொண்டான்.

“போய்…முகத்தைக் கழுவிக்கொண்டு வாங்க; நான் வெளியில் நிற்கிறன்!” அவர்களைப் பார்க்காது சொன்ன வேகத்தில் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

காரணத்தை வரையறுக்க முடியாது அலைபாய்ந்தவன் கால்களிரண்டும் இயந்திரமாக வெளிவாயிலை நோக்கி நகர்ந்தன! அவ்விடத்தில் இன்னும் சில கணங்கள் தாமதித்தால் மதுராவின் அநாதரவான நிலையில் தான் என்ன செய்வோம் என்றே அவனால் வரையறுக்க முடியவில்லை.

அவளின் அவல நிலையை அறிந்த கணத்தில் ஊற்றெடுத்த பரிதாப உணர்ச்சி, அவள் இங்கு வந்த சில நாட்களிலேயே அதைக் கடந்து ஒருவித பாசத்தில் பின்னிப் பிணைந்திருந்தது. அதோடு, வரையறை செய்ய முடியாத ஒருவகை உரிமையுணர்வும் நட்புணர்வும் தம் அழகிய வர்ணங்களால் அதை அலங்கரிக்கவும் முயன்றன. இதை அவன் மனமும் அறிந்தே இருந்தது.

‘என் அக்கா தங்கைக்கோ சொந்தத்தில் யாருக்குமோ இப்படி ஒரு பிரச்சனை என்றால் விட்டு விடுவேனா? பதறமாட்டேனா? அதிலிருந்து அவர்களை மீட்க முனைவேன் தானே? அவர்களுக்கு உதவுவது என் கடமையும் தானே?

அதைப்போலத்தான் இவளும். அதுவும், தன் கஷ்டத்தை மறைத்து எங்களை சந்தோஷப்படுத்த நினைப்பவளை எப்படித் தவிக்க விடுவது? இது என்ன அவர்களின் ஊரா? நமக்கென்ன என்னவாவது செய்யுங்க, எப்படியும் இருங்க என்று அமைதியாக விலக! அவளிருக்கும் நிலைக்கு மனநிம்மதி அவசியமில்லையா? தனிமையும் ஏக்கமும் அவளுக்கு ஆபத்தாக அமையாதா? அதை எங்களால் போக்க முடியுமென்றால் உதவுவதில் என்ன பிழை வந்துவிட்டது!?’

இப்படி, அவளுக்காகப் பாடுபட நினைக்கும் தன்னுள்ளத்துக்குத் தானே விளக்கமளித்துக் கொண்டாலும் கலங்கிக் கிடந்த உள்ளத்தைச் சீர்செய்ய வேண்டி, தனிமையை நாடியது அவனுள்ளம்! அதுமட்டுமின்றி, இப்போது மதுராவை மீண்டும் சந்திக்க அவன் மனம் சற்றே தயங்கியதோ என்னவோ!

மெல்லத் திரும்பி வாயிலைப் பார்த்தவன் அவர்கள் வரும் அரவமின்றியிருக்க, விட்டால் போதுமென்று விடுவிடுவென்று பாதையில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

error: Alert: Content selection is disabled!!