10
மதிய உணவுக்காக வந்திருந்தான் கார்த்திகேயன்.
“காலையில் நேரம் செல்லச் சாப்பிட்டதில் இப்போது பசிக்கவில்லை; நீங்க சாப்பிடுங்க!” மேசையிலிருந்த உணவுப் பதார்த்தங்களின் மூடிகளை அகற்றியவாறே சொன்னவளிடம்,
“நீங்களும் சாப்பிடுவதென்றால் மட்டும் நானும் சாப்பிடுகிறேன்!” உறுதியாக சொன்னவன், மறுக்க முடியாது அமர்ந்தவளை முறுவலோடு நோக்கினான்.
“உண்மையாகவே பசிக்கவில்லை!” கொஞ்சமாகத் தன் தட்டில் பரிமாறினாள்.
“வழமையாக சாப்பிடும் நேரத்துக்கு கொஞ்சமாகச் சரி சாப்பிட வேண்டும் மதுரா; உங்களுக்குத் தேவையில்லாமல் இருக்கலாம்; எங்க ஏஞ்சல்ஸுக்காக சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்!”
அவனின் உரிமையையான பேச்சுக்கு சிறிதாக முறுவல் செய்தவளுக்கு, பிறக்க முன்னரே அண்ணனும் தங்கையுமாக தன் குழந்தைகளைப் பாராட்டுவதைப் பார்க்கையில், மனதில் ஒருவகையில் மகிழ்வு பூத்தாலும், சேர்ந்து கசப்பும் சுரந்தது!
‘நானல்லவா உருகி உருகி அவர்களைப் பாராட்ட வேண்டும்! பார்த்துப் பார்த்துச் செய்ய வேண்டும்! நினைத்து நினைத்துப் பூரிக்க வேண்டும்!’ நினைவெழ, இடது கையினால் தன் வயிற்றில் தடவியவள், ‘என்னால் அதை முழுமையாக செய்ய முடியவில்லேயே!’ ஏங்கிப் போனாள்.
‘குழந்தைகளின் ஸ்பரிசத்தை உணரும் கணத்திற்காக ஏங்கும் அதேவேளை, அக்கொடியமிருகத்தின் நினைவுகளும் முள்ளாகக் குத்துகின்றதே!’ கசந்து வழிந்த தொண்டைக்குள் உணவு சுவையற்றுத் தட்டுத் தடுமாறி முட்டி மோதி இறங்கியது.
‘கடந்தவற்றை அப்படியே மறக்க முடிந்தால்!’ இப்படி எண்ணாமல் இருக்க முடியவில்லை அவளால்!
‘உன்னால் அது முடியுமா?’ அவள் வாழ்வின் கசப்பான பக்கங்களில் விகாரமாகச் சிரித்த ஒவ்வொரு எழுத்துக்களும் அவளை ஏளனத்தோடு பார்த்து நகைத்தன!
எதிரே அமர்ந்திருந்தவளில் அடிக்கடி பார்வை நிலைக்க உண்டு கொண்டிருந்தவனுக்கு, அவள் முகம் மாறிமாறிக் காட்டிய உணர்வுகள் மூலம் மனதை அறிய முடிந்தாலும், உரிமையாக ஆறுதல் சொல்ல முடியாது திண்டாடினான்.
‘;ஆறுதல் சொல்ல வேண்டும்; இவளைத் தேற்றியே தீர வேண்டும்.’ என, அவனுள் முளைவிட்ட உணர்வுகளின் வாசத்தை நுகர்ந்தவனுள் தடுமாற்றமே அதிகரித்தது.
சட்டென்று சூழ்ந்த மௌனத்தின் பிடியில் உணவுண்டு கொண்டிருந்தவர்களை, திடுமென்று கலைத்தது மதுராவின் கைபேசி!
சற்றுத் தள்ளியிருந்த கைபேசியை எடுக்க எண்ணி எழ முயன்றவளைத் தடுத்து தான் எழுந்தவன், “விதுஷா?” சத்தமாகச் சொல்லிக்கொண்டு கைபேசியைக் கொடுத்தான்.
“என் பெரிய தங்கச்சி…இப்போ கல்யாணம் பேசி இருக்கே, அவள் தான்!” அவனுக்குப் பதில் சொன்னவாறே அழைப்பை ஏற்றவள், மறுபுறம், தங்கை பேசப்பேச முகம் கன்றிச்சிறுக்க, கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டாள்.
“என்னாச்சு மதுரா?” மீண்டும் உணவுத் தட்டில் கை வைத்திருந்தவன் எழுந்தான்.
அங்குமிங்குமாக ‘ஒன்றுமில்லை’ என்று தலையசைத்தாலும், தங்கை சொன்னதைக் கேட்டவளின் விழிகளால் நீர் கோடுகளாக கசிய, கைபேசியை செவியோடு அழுத்திப் பிடித்தாள்.
பொறுமையின்றி, எட்டி அவள் கரத்திலிருந்து கைபேசியை தனதாக்கிய கார்த்திகேயன், அவளின் அதிர்வை சிறிதும் பொருட்படுத்தாது பேசிக்கொண்டே அப்பால் நகர்ந்தான்.
விறுவிறுவென்று முன்வாயிலால் வெளியேறி தணிந்த குரலில் சிலநிமிடங்கள் பேசியவன், “மதுரா ஒரு பத்து நிமிடத்தில் திருப்பி எடுப்பார்!” என்றவாறே, திரும்பி வந்து கைபேசியை மேசையில் வைத்துவிட்டு, கண்ணீரோடு அமர்ந்திருந்தவளை தீர்மானமாக நோக்கினான்.
“இப்போ புதிதாக எதுவும் நடக்கவில்லையே மதுரா! வீட்டுக்குச் சொல்வதாகத் தானே இருந்தோம்; இப்போ என்ன? சுதா சித்தி சொல்லி உங்க அம்மாவுக்கு விடயம் தெரிந்திருக்கு!” என்றவன், கட்டுப்பாடின்றி வழிந்த அவள் விழிநீரில் அமைதியானான்.
“ஹ்ம்…யோசித்துப் பார்த்தால் இதுவும் ஒருவகைக்கு நல்லதுதான் மதுரா. நீங்க திடீரென்று சொல்லும் பொழுது, முதல் சொல்வதும் அப்படி ஒன்றும் இலகுவாக இருக்காதல்லவா!” எப்படியும் அவளை அமைதிப்படுத்திவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு சொல்ல, கேட்டவளோ வெற்றுப் பார்வையால் உணவுத் தட்டை வெறித்தாள்.
“இப்போ ஆன்ட்டிக்கு விஷயம் தெரிந்துவிட்டது. உங்களை நினைத்து கட்டாயம் கவலைப்படுவார் தான்; அது தேவையில்லை என்று நீங்க விளங்க வைத்தால் சரி!” சொல்லிக்கொண்டே சென்றவனை நிமிர்ந்து ஒருமாதிரிப் பார்த்தவள் விழிகளில், இலேசாகச் சினம் துளிர்த்திருந்தது.
“வெளிநாட்டில் பிறந்து வளர்ந்ததில் உங்களுக்கு இதுவெல்லாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அப்படி இல்லை. நடந்தவற்றை அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்வது கடினம்.” இதுவரை, ஒருநாளும் தன் வாழ்வு பற்றி பேசாதவள் படபடத்தாள்.
“நான் செய்தவற்றை அம்மா விளங்கிக் கொள்வாரா? அல்லது ஒருவார்த்தை சொல்லாது என் இஷ்டத்துக்கு நடந்து கொண்டேன் என்று ஆத்திரம் கொள்வாரா?” அரட்டினாள்.
“வெளிநாட்டில் உள்நாட்டில் என்று இதில் என்ன இருக்கு மதுரா! எங்கே இருந்தாலும் இப்படியொரு துரோகம் நடந்த பிறகு அந்த வாழ்வைப் பிடித்துத் தொங்குவதில் என்ன பயன்?” இடையிட்டான் கார்த்திகேயன்.
“அதனால், உங்க செய்கையில் துளியும் பிழையில்லை!
அதோடு, உங்க துணிவும் நிமிர்வும் கண்டு நாங்களே வியந்து நிற்கிறோம்; அதைப் பார்த்து உங்க அம்மாவும் நிச்சயம் சந்தோஷம் தான் கொள்ள வேண்டும்!” என்றவன்,
“முதல் சாப்பிட்டு முடியுங்க; பிறகு அம்மாவோடு சாதாரணமாகப் பேசுங்க மதுரா. துக்கம் இருக்கும் தான், அதை அவவிடம் காட்டாமல் தைரியமாகப் பேசுங்க!”
அவள் மீது அதிகமாக இரக்கம் காட்டி அவளை இன்னமும் குன்ற வைக்காது தைரியம் சொன்னவன், அவள் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு, “ம்ம்…சாப்பிடுங்க..” வற்புறுத்தி உண்ண வைத்தான்.
“நான் வர கொஞ்சம் லேட்டாகும்!” க்ளினிக்குக்கு அழைத்துச் சொன்ன கார்த்திகேயன், அவளை வீட்டுக்கு அழைக்க வைத்தான்.
அன்னைக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என தங்கை மூலம் அறிந்திருந்தாலும், வீட்டுக்கு அழைக்கையில் உடலும் உள்ளமும் நடுங்கிவிட்டது தான். ஏனோ, தனிமையில் அவர்களைச் சந்திப்பதை விட, அவன் இருப்பதில் நிச்சயம் தெம்பாகவே உணர்ந்தாள் மதுரா.
ஒரே ரிங்கில் ஸ்கைப்பில் தெரிந்தனர் அன்னையும் தங்கைகள் இருவரும்! மூவரின் தோற்றமும் அவர்களின் மனநிலையை பளிங்கு போலக் காட்டியது!
“பாடசாலை முடிந்து வரும் பொழுது சுதா மிஸ் சொன்னாராம்; கேட்ட அம்மா இடிந்து போய்ட்டார்கா! இத்தனை மாதங்களாக எங்களிடம் மறைத்து…எப்படிக்கா?” அழுது விட்டாள் பெரியதங்கை.
“எங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் பார்த்துக் கொண்டிருப்பாயா? உன் கஷ்டத்தை எங்களிடம் சொல்லத் தோன்றவில்லையே! அம்மா இங்கு எத்தனை நாட்களாக புலம்பிப் கொண்டிருந்தார் தெரியுமா? கடைசியில், அவர் பயந்த மாதிரியே நடந்திருக்கு!” தொடர்ந்து அழுதாள்.
‘சுதா மிஸ் வேறு என்ன சொன்னாரோ! ஏற்கனவே நான் இங்கிருப்பதை அவர் விரும்பவில்லை; அது சம்பந்தமாகவும் எதுவும் சொல்லி இருப்பாரோ!’ என்ற குழப்பங்களோடு தாய் தங்கைகளைப் பார்த்தவள் விழித்திரை நீர்த்திரையால் மறைய, இதயம் பிசையத் தடுமாறினாள்.
வாய்ப்பேச்சு மறந்திருக்க, மகளை, இயலாத் துயரோடு வருடிய கமலாவின் விழிகள், உள்ளே எழுந்த கொதிப்பும் கேவலும் விழிகளால் வடிய, மதுராவின் பின்புறமாக நின்ற கார்த்திகேயனை ஏறிட்டார்.
அடுத்த கணம், கரமிரண்டையும் கூப்பியவாறே, “தம்பி….தம்பி…!” அவர் தடுமாற, பதறிப் போனான் கார்த்திகேயன்.
கரமிரண்டாலும் விழிகளை அழுந்த துடைத்துவிட்டு திரையைப் பார்த்த மதுரா, தாயின் செய்கையில் பின்புறம் திரும்பி கார்த்திகேயனை நோக்கிவிட்டு தாயிடம் திரும்பினாள்.
“உண்மைதான்மா! யாருமே இல்லாத இடமென்றாலும் யோகம் ஆன்ட்டியும் நித்தியும் இவரும் இல்லையென்றால், இன்றைக்கு, இப்படி உங்கள் முன்னிருந்து பேசிக்கொண்டிருப்பேனோ தெரியாதம்மா!” என்றவள் முகத்தைப் பொத்திக் கொண்டு குமுறி அழ, மறுபுறம் அவள் தங்கைகளும் தாயும் கதற, செய்வதறியாது மலைத்து நின்றான் கார்த்திகேயன்.
இதுவரை எப்போதுமே இப்படி இவள் கலங்கி அவன் கண்டதில்லையே!
சட்டென்று அவளுக்கு ஆறுதல் சொல்லும் வழிபுரியாது தட்டுத் தடுமாறித் தத்தளித்தவனை, முன்வாயில் அழைப்பு மணியின் ரீங்காரம் தன்புறம் திருப்பியது.
நொடியில் சுதாகரித்து, ‘ஐ பேட்’டையும் எடுத்துக்கொண்டு தன்னறை செல்ல முயன்ற மதுரா, “வாங்க வாங்க ஆன்ட்டி! இவர் உங்க மகனா? உள்ள வாங்க!” கார்த்திகேயன் அழைத்து, உள்ளே வந்தவர்களைக் கண்ட அடுத்த நொடி, கேவலோடு ஓடிச் சென்று யோகத்தைக் கட்டிக் கொண்டாள்.
மதுராவை பார்க்கும் ஆவலில், “திடீரென்று போய் நின்றால் பிள்ள சந்தோசப்படுவாள்!” என்று, இலண்டனிலிருந்து வந்திருந்த சின்னமகனோடு வந்த யோகம், அவள் இப்படிக் கதறித் துடித்து வர, “மதுரா பார்த்து, மெல்ல மெல்ல!” பதறி விட்டார்.
அதேநேரம், அவர், கூர்மையும் கேள்வியுமாகத் தன்னைப் பார்த்த பார்வையில் முகம் இறுகிவிட்டது கார்த்திகேயனுக்கு! ‘நாங்க எதையோ செய்த மாதிரி இப்படிப் பார்க்கிறார்!’ மனம் கடுகடுத்ததை மறைக்கப் பெரும்பாடுபட்டான்.
“என்னம்மா ஆச்சு!? இங்க பார் மதுரா; இப்போ ஏன் இப்படி அழுகிறாய்?” அவள் பதில் சொல்லவில்லை என்றதும்,
“என்னாச்சு தம்பி? என்ன நடந்தது? உங்களோடு சந்தோஷமாக இருக்கிறாள் என்று நினைத்தேன்; கதைக்கும் பொழுது அப்படித்தான் சொன்னாள்.” குற்றம் சாட்டும் தொனியில் அவர் ஆரம்பிக்க, சட்டென்று விலகிய மதுரா, கார்த்திகேயனை தவிப்பாகப் பார்த்தவாறே,
“இல்ல இல்ல ஆன்ட்டி, இங்க நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்.” என்றதும்,
“நடந்தது எல்லாம் மதுராவின் வீட்டுக்கு தெரிந்துவிட்டது; இப்போதான் அவர்களோடு கதைத்துக் கொண்டிருந்தோம்.” என்றான் கார்த்திகேயன்.
“ஒஹ்! நானும் என்னவோ எதுவோ என்று பயந்து போனேன். வயிற்றுப் பிள்ளைக்காரி இப்படி அழுது கொண்டு, என்னம்மா இதெல்லாம்!” கண்டித்தவாறே அவளை அணைத்துக்கொண்டார் யோகம்.
“மனதிலிருந்து பெரிய பாரம் அகன்றது போலிருக்கு மதுரா! நீ என்ன சொன்னாலும் வீட்டுக்குத் தெரியாமல் இருப்பதில் கொஞ்சமும் சரியாகப்படவில்லை; எப்போடா சொல்வோம் என்றிருந்தேன்!” என்றவாறே, அவளை அழைத்துச் சென்று சோஃபாவில் இருத்தி தானும் அமர்ந்து கொண்டார் யோகம்.
அநாதரவாகக் கிடந்த ஐபேட்டை எடுத்து மதுராவின் மடியில் வைத்துவிட்டு, அவரின் மகனோடு எதிரில் அமர்ந்து கொண்டான் கார்த்திகேயன்.
மதுராவின் சகோதரிகளையும் தாயையும் பார்த்த யோகம், தன்னை அறிமுகம் செய்து உரையாடத் தொடங்கினார்.

