மலருமோ உந்தன் இதயம் 11 – 1

ஒரு கப் காஃபியோடு ஒதுக்குப்புறமாக இருந்த இருக்கையொன்றில் அமர்ந்த கார்த்திகேயனின் மனம், புஸுபுஸுவென்ற ஆத்திர மூச்சுக்களை வெளியேற்றிக் கொண்டிருந்தது!
‘இப்போ என்ன பெரிதாகச் சொல்லிவிட்டேன்! யாரோ எதுவோ விசாரித்தால் அவர்களிடமெல்லாம் இவள் ஜாதகத்தைச் சொல்ல வேண்டுமா? ஒருபேச்சுக்கு, என் மனைவி என்றதையே சகிக்க முடியாதா?’
தான் என்ன நினைக்கிறோம் என்றில்லாது சீறியது அவன் மனம்.
‘அட..அதுவும் நானாகவா சொன்னேன்! அவர்களாகச் சொன்னார்கள். அதையே அவளால் சகிக்க முடியவில்லையோ! பாஷை அவ்வளவாகத் தெரியாது என்பதால் தானே இவளோடு வந்தேன்! பார்ப்போம்; என்ன செய்கிறாள் என்று!’ மனதில் கடுகடுத்தவனுக்கு, கொஞ்சம் ஆற அமர யோசிக்கையில் தன் மீதே எரிச்சல் தான் வந்தது.
“ச்சா…நானும் அவர்களோடு சேர்ந்து பேச்சை வளர்க்காமல் வேறு கதைத்திருக்கலாம்.” முணுமுணுத்தவன், கைபேசியின் சிணுங்கலில் சட்டென்று எடுத்தான்.
“மதுரா!” என்றவாறே அவசரமாக இயக்கி காதில் வைத்தவன், அதற்கு நேர்மாறாக அமைதிகாத்தான்.
“நான்..நான்..மதுரா…”
“ஹ்ம்…சொல்லுங்க; அவ்வளவு விரைவாக முடிந்துவிட்டதா?” கேட்டவாறே மிகுதிக் காஃபியைக் குடித்தவன், எழ முனைய, “இல்லை, உங்களை…நீங்க…ஒருதரம் வர முடியுமா? இவர் ஏதோ எல்லாம் சொல்கிறார்; எனக்கு..எனக்கு….” கலக்கத்தோடு தடுமாறினாள் அவள்.
“ம்ம்.. இதோ வருகிறேன் மதுரா, ரிலாக்ஸ்..ரிலாக்ஸ்!” நடந்துகொண்டே சொன்னவன், அடுத்த இரண்டாவது நிமிடம் கதவில் மெல்லத் தட்டி விட்டு உள்ளே நுழைந்து, தன்னை அறிமுகம் செய்தவாறே மதுராவை ஒருபார்வை பார்த்தபடி அவளருகில் அமர்ந்தவன், ‘கொஞ்சமுதல், என்னோடு முகத்தை நீட்டிக்கொண்டு நல்லாத்தானே உள்ளே வந்தாள்! இப்போ ஏன் இப்படிக் கலங்கிப் போயிருக்கிறாள்?’ என, நினைத்தவாறே மிட்வைஃபை நோக்கினான்.
“நீங்க மதுராவின் ஃபாமிலி என்று சொன்னார்!” ஆரம்பித்த அப்பெண்மணிக்கு, மதுராவின் வாழ்வில் நடந்தவைகள், ஆரம்ப மாதங்களில் அவள் கவுன்சிலிங் சென்ற குறிப்புகளோடு தெரியுமாதலால் அவள் மீது ஒருவகையில் பரிதாபம்!
“உங்களோடு தானே இப்போது தங்கி இருக்கிறார்?” என, பொதுவாக ஆரம்பிக்க, ‘பரவாயில்லையே, அந்த மட்டில் சொல்லி இருக்கிறாள்!’ சட்டென்று அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு, “ம்ம்..ஆமாம்!” அவரோடு பேசுவதில் முனைந்தவன், “மதுராவுக்கு எல்லாம் நோர்மல் தானே!” என்றதும், அவனின் அவசரம் பார்த்து மென்னகை புரிந்தார் அப்பெண்மணி.
“ஹ்ம்…பிரச்சனை ஒன்றுமில்லை; எல்லாமே நோர்மல். ஆறுமாதம் வரை இருந்த அனிமியா குணம் கூட இப்போ சிறிதும் இல்லை; சொன்ன படி உணவு விடயத்தில் கவனித்து இருக்கிறீங்க. குழந்தைகள் வளர்ச்சி, தாயின் உடல் நிலை எல்லாம் நன்றாக இருக்கு!” முறுவலோடு சொல்லிக்கொண்டு வந்தவர், “ஆனால், குழந்தைகள் இன்னமும் திரும்பவில்லை!” அருகிலிருந்த சார்ட்டில் தான் சொல்வதை விளக்கினார்.
“குழந்தைகளின் தலைகள் இப்படித் திரும்பி வரவேண்டும், இல்லையோ, ஹ்ம்ம்… காலால் பிறக்க விடமாட்டோம்!” சிறிது நிதானித்தார்.
“இப்போதானே எட்டு மாதம், இன்னும் இரண்டு கிழமை பார்ப்போம்; அப்போதும் இப்படியே இருந்தால்…சீசேரியன் செய்வதுதான் சரியான தீர்வு!” என்றவர், கலவரத்தோடு இருந்த மதுராவை கனிவாகப் பார்த்துவிட்டு கார்த்திகேயனை நோக்கினார்.
“இதைத்தான் திரும்பத் திரும்ப விளங்க வைத்தேன். சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு எதுவும் பிரச்சனையோ என்று பயந்து விட்டார். நீங்க உங்க பாஷையில் விளக்கிச் சொல்லுங்க.” முறுவலித்தார்.
அவளின் கலக்கத்தை உள்வாங்கியவன், தன் மனதில் ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் தெளிவாகக் கேட்டறிந்து கொண்டான்.
அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்லி அழகாகப் புரிய வைத்தவர், “மதுராவுக்கு தெளிவாக விளக்கிச் சொல்லுங்க; வேறு ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று சொல்ல, தெளிவற்றுப் பார்த்திருந்தவளின் தலையில் சிறு அழுத்தத்தோடு ஆதரவாகத் தடவி, “ஒன்றுமே இல்லை மதுரா; கவலைப் படவேண்டாம்!” தேற்றியவாறே, மிட்வைஃபிடம் விடைபெற்று வெளியில் வந்தனர்.
அப்போதும் தெளிவில்லாமல் வருபவளை கனிவாக நோக்கினான் கார்த்திகேயன்.
‘இவளுக்கு, குழந்தைகளில் பாசமில்லை என்கின்ற ஐயமே தேவையற்றது!’ என்றது அவன் மனம்.
‘சின்ன விடயத்துக்கே இப்படிக் கலங்கிவிட்டாளே! தன்னையுமறியாது தேவையில்லாததை குழந்தைகளோடு முடிச்சுப் போட்டாலும் தாய்பாசம் அற்றுவிடுமா!’ என்றெண்ணிக் கொண்டவன்,
“இது ஒரு சின்ன விடயம் மதுரா, இதுக்குப் போய் இப்படி யோசிக்கவே தேவையில்லை. நானும் என்னவோ ஏதோ என்று பதறிப்போனேன்!” சமாதானமாகச் சொன்னவாறே சேர்ந்து நடந்தவன், அப்போதும் தெளியாது, கலக்கத்தோடு அவள் பார்த்த பார்வையில் ஏதோ ஒருவகையில் பெரிதும் தாக்கப்பட்டான்.
‘இப்போது, இந்த இடத்தில் நித்தி இருந்திருந்தால் உரிமையாக நெருங்கி ஆறுதல் சொல்லியிருப்பாளே! இவளின் கலக்கத்தைப் போக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பாள்.’ என்கின்ற எண்ணத்தோடு, அந்த உரிமையான ஆறுதலைக் கொடுக்கும் ஆவல் அவன் மனதிலும் மெலிதாகத் துளிர்விட முயன்றது.
அக்கணம், முன்னரும் சில தடவைகள் இவ்வெண்ணம் தோன்றியபோதெல்லாம் எப்படித் தடுமாறினானோ அவ்வாறே முற்றிலும் தடுமாறிப் போனான் அவன்.
ஆழமான மூச்சை இழுத்து வெளியேற்றித் தன்னைச் சமன்படுத்த முயன்றவன், தன்னையே கேள்வியாகப் பார்த்த மனதுக்கு மென்முறுவலோடு திடமாகவே பதில் சொல்ல முயன்றான்.
‘ஹ்ம்ம்…அது வேறு ஒன்றும் இல்லை; எங்கள் பொறுப்பில் உள்ளவள் கலங்கி நிற்கும் வேளையில் ஆறுதல் படுத்துவது எங்க கடமைதானே! அதுவும் இப்படியான நேரத்தில் அவளின் மனஅமைதி முக்கியமில்லையா? அதனால்தான்.” தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான்.
பதுமை போல அமைதியாக வந்தவளின் குழம்பிக் கிடந்த வதனம் அவள் மனதை எடுத்துச்சொல்ல, செய்வதறியாது தடுமாறி, “ஒன்றுமே இல்லை என்ற பிறகும் இப்படி வந்தால் நான் என்ன செய்வது மதுரா? உங்களுக்கு நித்திதான் சரி!” என்றதும், மெலிதாக முறுவலித்தவள்,
“நீங்க சொல்வதென்னவோ நூறு வீதம் உண்மைதான்; நித்தியோடு பேசினால் மனமே லேசாகிவிடும்!” என்றவளை, நின்று விறைப்பாகப் பார்த்தான்.
“இப்போ என்ன சொன்னேன் என்று இப்படி முறைக்கிறார்!’ அவள் மனதில் முணுமுணுக்க, அதைப் படித்தவன், “எங்களோடு பேசினாலும் மனம் லேசாகும் தான்; பேசிப் பழகிப் பார்க்காமல் சொல்லக் கூடாது!”
தங்கையைப்போல் அவளோடு மிகவும் நெருக்கமாக விளைந்தது அவன் மனம்! கேட்டவளோ, அமைதியாக நடந்தாள்.
‘ம்ம்…மௌனியாகி விட்டாள்.’ மனதுள் சலித்தவாறே வெளியே வந்தவன், “இதில நில்லுங்க, காரை எடுத்துக்கொண்டு வருகிறேன்!” நகர, “இல்லை, நானும் வருகிறேனே!” அவனோடு சேர்ந்து நடக்க, தன் நடையைத் தளர்த்தி, சேர்ந்து நடந்தான் கார்த்திகேயன்.
அவளும் ஏறிக்கொண்டதும் வசதியாக அமர்ந்திருக்கிறாளா என்று பார்த்துவிட்டு காரை பாதையில் இறக்கியவனுக்கு, வரும் பொழுதும் அவளது அமைதியை பொருட்படுத்தாது வந்தது போல் இருக்க முடியாது மூச்சுமுட்டுவதாக உணர்ந்தவாறே, சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்தான்.
‘அம்மாவுக்கு விஸாவுக்கு கொடுத்து இப்போதான் ஒருமாதம்; அவர் வரமுதல் குழந்தைகள் பிறந்து விடுவார்களோ?’ மனதில் கேள்வி எழுப்பி, ‘அம்மா வந்த பிறகே பிறக்க வேண்டும்!’ மனம் தவிக்க வெளிப்புறத்தை இலக்கற்று நோக்கிக் கொண்டிருந்தவள், கார்த்திகேயனின் பார்வை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
“மிட்வைஃப் அப்படி எதுவும் வித்தியாசமாகச் சொல்லவில்லையே மதுரா; அவர் பேசியது உங்களுக்கு சரியாக விளங்காமல் தான் இப்படிக் குழம்பீட்டீங்க!” என்றவன், “இதுக்குத் தான் நானும் உள்ளே வர நினைத்தேன்! உங்களுக்கு அவ்வளவு கோபம் ஏன் மதுரா?” என்றவனை, சட்டென்று சுட்டன அவள் விழிகள்.
அத்தம்பதியோடு இவன் நடத்திய பேச்சுகள் செவிகளில் ரீங்காரமிட விசுக்கென்று வெளிப்புறம் திரும்பிவிட்டாள்.
“சாதாரணமாகப் பேசியவர்களிடம் போய் உங்க கதையை விளக்கிச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா?
நீங்க யார் என்றும் உங்களுக்கும் எனக்கும் ஒரு உறவுமில்லை என்றும் விளக்க வேண்டுமா?
அவர்களாக ஏதோ சொன்னால் சொல்லட்டும் என்று பேசாமல் விட்டால் அதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு கோபம்!” சிடுசிடுத்தவனை, பதிலுக்கு, கோபமாகப் பார்த்தாள் அவள்.
“என் கதையை அவர்களிடம் சொல்லத் தேவையில்லை; ஆனால், நான் உங்க மனைவி இல்லை என்று சொல்லி இருக்கலாமே!” வெடுக்கென்று கேட்கவும் செய்தாள்.
“இங்க பாருங்க மதுரா, அவர்கள் அப்படிப் பேசியதில் எனக்கு ஆட்சேபனை இருக்கவில்லை!” கணமும் தாமதியாது வார்த்தைகள் உதிர்ந்தன!
மறுகணம், தன் மனதின் விருப்பை, பகுத்தறிய முடியாது மிகவும் திண்டாடினான் அவன்! அவள் விழிகளின் தீட்சண்யத்தில் தடுமாறினான்!
“இல்ல மதுரா; அதை நான் பெரிதாகவே எடுக்கவில்லை என்கிறேன்! நானும் நித்தியும் குழந்தைகளை ஒருபோதும் பிரித்து நினைக்காதபடியால் அதுவும் வேறுபாடாகத் தெரியவில்லை!” படபடத்தவனை, புதிதாகப் பார்த்தாள் அவள்.
“உங்களுக்கு அதை கேட்கச் சகிக்கவில்லை என்றால், அதுதான் என் மனைவி என்றதை…” இலேசாகத் திரண்டுவிட்ட நீரோடு தத்தளித்த அவள் விழிகளை ஊன்றிப் பார்த்தவாறே தொடர்ந்தான்.
“உடனே, ‘இவனெல்லாம் எனக்கு புருஷனா? என்னோடு துணைக்கு வந்தவன்.’ என்று சொல்லி இருக்கலாமே! ஏன் சொல்லவில்லை?” முற்றிலும் புதியவனாகப் படபடத்த கார்த்திகேயனை இமைக்கவும் மறந்து பார்த்தவள் மனதுள் சங்கடமே தலை தூக்கியது.
“இப்போ…இப்போ ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?” தடுமாறினாள் அவள். அதோடு, இந்தப் பேச்சே அவளுக்கு பிடிக்கவில்லை. வாழ்வில் தோற்று, தனியாகி நிற்கையில் எதெதற்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம் என்பதன் ஆரம்ப அறிகுறியா இது? அக்கணம் அவள் மனம் இப்படித்தான் எண்ணியது.
அவளையே பார்த்திருந்தவன் கணத்தில் சகஜமானான். அவன் எதையோ சொல்ல முற்படுகையில், “நான்…இன்றைக்கு ஸ்கேன் பண்ணினார்கள்! அதனால்…தனியாகப் போகலாம் என்று நினைத்தேன்!” இடையிட்டு மென்று விழுங்கினாள்.
சரேலென்று அவளை ஒருபார்வை பார்த்துவிட்டு பாதையில் கவனம் பதித்தவன் முகம் சுருங்கி நெற்றியில் முடிச்சுக்கள் விழுந்திருந்தது.
“அப்போ, நீ யாருடா வேற்று மனிதன், எப்படி என்னோடு வரலாம் என்று சொல்லாமல் சொல்லீட்டீங்க இல்லையா?!” என்றவன், குரல் இறுக்கத்தோடு வந்திருந்தது.
அப்படிச் சொன்னவனை சில கணங்கள் பார்த்திருந்துவிட்டு நேரே பார்த்தாள் மதுரா. ‘தான் அப்படி நினைத்ததில் தவறேதும் உண்டா என்ன?’ மனதுள் கேட்டுப் பார்த்துக்கொண்டாள். விடை ‘இல்லை’ என்றே வர மௌனம் காத்தாள்.
“என் செல்லங்களைப் பார்க்கலாம் என்று எவ்வளவு ஆவலோடு வந்தேன் தெரியுமா?” அவன் குரலின் தடுமாற்றத்தில் தானும் தடுமாறினாள்.

error: Alert: Content selection is disabled!!