மலருமோ உந்தன் இதயம் 11 – 2

அவனுக்குமே அவன் மனதின் போக்கு புரிபடவில்லை. தன்னை இன்னொருவன் மனைவி என்று நினைத்துப் பேசினால் எந்தப் பெண்ணும் சங்கடம் கொள்வாள் தானே? அது புரிந்தும் இவள் சங்கடம் கொண்டதை நினைத்து வெகுவாக மனம் சுணங்குவதேன்? அதே, கணவன் அல்லாத வெளி ஆடவன் ஸ்கேன் பண்ணும் போது இருக்க விரும்பாததும் மிக இயல்பானதொன்று தானே? இதெல்லாம் புரிந்தாலும் சட்டென்று அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘குழந்தைகளைப் பார்க்கலாம் என்ற மிகுந்த ஆவலோடு வர, என்னை நீ ஒதுக்கிவிட்டாய்.’ இப்படித்தான் மல்லுக்கு நின்றது அவன் மனம்.
ஆனாலும் அவளின் வதனம் சுண்டிச் சிவந்திருப்பதைக் காண விரும்பாதவன், “சரி விடுங்க; இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக அவர்கள் வெளியே வரவிட்டு உங்க இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி போட வைக்கவில்லையோ நான் கார்த்திகேயன் இல்லை!” கணத்தில் கேலிக்குத் தாவியிருந்தான்.
இவர்களோடு இருக்க வந்த புதிதில் அளந்து அளந்து பேசிவிட்டு விலகிச் செல்பவன், என்று இவள் விடயம் அவள் வீட்டுக்கெல்லாம் தெரிய வந்ததோ அன்று நடந்த குழப்பங்களின் பின் மிகவும் சகஜமாகப் பழகத் தொடங்கியிருந்தான்.
‘நித்தியும் இவரும் தம் ஒவ்வொரு செயல்களிலும் என்னை அவர்களில் ஒருத்தியாகத்தான் கருதுகிறார்கள். என்னால் தான் லேசில் அப்படி எண்ண முடிவதில்லை!’ நினைத்துக்கொண்டே வெளிப்புறம் திரும்பியவளை, “குட்டிஸுக்கு பெயர்கள் செலக்ட் பண்ணியாச்சா மதுரா?” என்ற கேள்வி அவனை நோக்கித் திருப்பியது.
சிறு முறுவல் நெளிந்து மறைய, “அது தன் பொறுப்பு என்று உங்க தங்கச்சி சொல்லிவிட்டாள்!”
“ஓ! ஹ்ம்…ஆனாலும் அதெப்படி இரண்டு பெயரையும் அவளிடம் விடுவது!? உங்களுக்கு விருப்பமான பெயர்…” என்றவனை இடைமறித்தவள், “பச்…அப்படி எல்லாம் என் மனதில் எதுவுமில்லை!” குரலில் கசப்புடன் சொல்ல, சட்டென்று அருகில் காரை நிறுத்திவிட்டு, தீர்க்கமாகப் பார்த்தான் கார்த்திகேயன் .
“மதுரா, வேறு யாரிலும் உள்ள கோபத்தையும் கசப்பையும் பிறக்கப் போகும் குழந்தைகளிடம் காட்ட ஒருகணமும் நினைக்காதீங்க சொல்லிட்டேன். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?” திடுமென்று சீறியவனை அதிர்வோடு பார்த்தவளின் விழிகள் சிவந்துவிட்டன!
“நான்…நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை!” மென்று விழுங்கியவளை கோபம் மறையாது பார்த்தான் அவன்.
“அது! அப்போ ஒருபெயர் நித்தி செலெக்ட் செய்யட்டும்; அடுத்த குட்டிம்மாவுக்கு நானும் நீங்களும் ஒ.கேவா?” அவன் கேட்ட விதத்தில் ஆவென்று அவனையே பார்த்திருந்தாள் இவள்.
“இப்போ நான் என்ன மதுரா சொன்னேன்? இருவரும் சேர்ந்து ஒரு பெயர்…ஒ.கேவா இல்லையா?” சற்று முன்னர் கோபத்தைக் காட்டியவன் இவனா என்று ஆச்சரியம் கொள்ளும் விதத்தில் வம்படியாகக் கேட்டான்.
தன்னால் உதித்த சிறுமுறுவலோடு, “ம்ம் நீங்களே செலக்ட் பண்ணுங்க; நான் பிடிக்குதா இல்லையா என்று சொல்கிறேன்.” என்றவளை, அவன் பார்த்த பார்வையில் இவளுள் மெல்லிய குளிர் பரவியது.
“இவர்..இவர் ஏன் இப்படிப் பார்க்கிறார்?” அவள் குழம்பித் தடுமாறும் கணத்தில், தன்னையுமறியாது அவள் மீது கனிவோடு படிந்த பார்வையை மாற்றிக் கொண்டு, “ம்ம்ம் இன்றைக்கே பெயர் தேடுவோம்; நித்திக்கு முன்னதாக..” என்றவாறே காரை வீடு நோக்கிச் செலுத்தினான் கார்த்திகேயன்.
*****
“உங்க அண்ணாவிடம் நீர் சரி சொல்லும் பார்ப்போம்! எவ்வளவு சொன்னாலும் கேட்கிறார் இல்லை; இதெல்லாம் வீண் வேலைகள்; செலவுகள்!” சங்கடமாகப் பேசியவளை, குறும்பு கொப்பளிக்க ஆராய்ந்தாள் நித்தி.
“ஹ்ம்…அண்ணா எப்போதும் அப்படித்தான் மதுரா, நினைத்ததை எப்படியும் முடித்துக் காட்டுவார்!” பெருமை பேசினாள் தங்கை.
“அதோடு, நீங்க யார் மதுரா? ஹ்ம்…சொல்லுங்க, நீங்க யார்? எங்களுக்கு நீங்க யார்?” அவளைத் தடுமாற வைத்தாள்.
“இதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டீங்களே!” சலித்துக்கொண்டே, முறைப்பாக மறுபுறம் திரும்பிய மதுராவின் முகம் பற்றித் தன் பக்கம் திருப்பி, அவள் விழிகளையே உற்றுப் பார்த்தவளுக்கு நகைப்புப் பீறிட்டெழுந்தது!
“என்ன மேடம்! அன்புத் தொல்லையால் மூச்சு முட்டுதா? எவ்வளவுதான் சொன்னாலும், நாங்களும் பார்த்துப் பார்த்து எப்படித்தான் நடந்து கொண்டாலும் இது உங்க வீடு என்று மனதில் தோன்றவே தோன்றாது இல்லையா?” என்றவள், “சரி விடுங்க; நீங்க யாரோ நாங்க யாரோ!” விழிகளில் தெறித்த நகைப்பை, முறைப்பால் அடக்கினாள்.
“இல்லையில்லை, நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை நித்தி!”
“நம்பிட்டேன் மதுரா நம்பிட்டேன்! அதோடு, நாங்க எதையும் உங்களுக்காகச் செய்யவில்லை; அதை நினைவில் வைத்துக்கொண்டு சத்தம் போடாமல் இருங்க. எங்க வீட்டுக்கு வரப் போகின்ற செல்லச் சிட்டுகளுக்காக இதையெல்லாம் செய்யவில்லை என்றால் எப்படி?” என்றவள், கலங்கும் மதுராவை பார்த்து, “ம…து…ரா!” அன்பாக இராகம் இழுத்தாள்.
“நீங்க யார்? என் செல்ல லவ்வர் இல்லையா? அப்போ உங்களுக்காக அண்ணா இதையெல்லாம் செய்ய மாட்டாரா?” தொடர்ந்து வம்படித்தவள் காதைப் பிடித்து முறுக்கித் திருகினாள் மதுரா.
“நீர் இந்தப் பேச்சை விடமாட்டீரா? வெளியில் சொல்லிவிடாதேயும் நித்தி; இந்தக் காலத்தில்…இதில் ஏதுவும் உண்மை இருக்குமோ என்று யோசிப்பார்கள்!” பாதி கேலி மீதி கண்டிப்பாகச் சொல்லிக்கொண்டு வந்தவள்,
“ஹா..ஹா…அதுதானே நித்தி, உன்னை நீயே ஹா..ஹா..” பெரிதாக சிரித்தபடி அவர்கள் முன்னால் வந்தமர்ந்த கார்த்திகேயனைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டாள்.
நித்தியோ, காதை இறுக்கித் தேய்த்துக்கொண்டவள், “ஸ்ஸ்ஆஆ…மதுரா! என் காதைப் பிய்த்து விட்டிட்டீங்க!” செல்லமாக முறைத்தபடி, தலையைச் சரித்து தமையனை ஒரு வம்புப் பார்வை பார்த்தாள்.
அவள் பார்வையில், எதையோ சொல்லி கேலி செய்ய போகிறாள் என்று உணர்ந்தவன் சுதாகரிக்க முன், “அட…அட…என்னை யாராவது எதுவும் சொல்லிவிடுவார்களோ என்று இரண்டு பேருக்கும் எவ்வளவு அக்கறை!
ஹ்ம்ம்..அப்போ ஒன்று செய்வோம், இனி நீங்க எனக்கு வேண்டாம்; பேசாமல் அண்ணாவின் லவ்வராக இருங்க. என்ன அண்ணா சொல்றீங்க ஒ.கே தானே? நான் இனி அண்ணி என்றே கூப்பிடுகிறேன்பா!” அவள் சொன்ன மறுநிமிடம்,
“நித்தீ!” மதுராவின் குரல் நடுங்கினாலும் சன்னமாக உயர்ந்திருந்தது. இருந்த இடத்திலிருந்து விருட்டென்று எழுந்து நின்று நித்தியை சுட்டெரித்தாள். அவள் தேகம் நடுங்குவது வெளிப்படையாகத் தெரிய அதிர்ந்து போனான் கார்த்திகேயன்.
“நித்தி இதென்ன விளையாட்டும்மா?! பகிடி கேலிக்கும் அளவு இருக்கில்லையா? முதல் இதெல்லாமா பகிடி?” கடுமையாகவே கடிந்து கொண்டவன், தங்கையின் விழிகள் குளம் கட்டியதைப் பார்த்ததும் துடித்து விட்டான்.
“நித்தி என்னம்மா!” சட்டென்று தங்கையை அணைத்துக் கொண்டான் தமையன்.
“இங்க பார், ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்ற பின்னரும் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தலாமா சொல்லு பார்ப்போம்! முதல், நீ என்ன சின்னப் பிள்ளையா? பெரிய மனிசி போல நடப்பவள் இப்படி…இப்படியெல்லாமா….ஹ்ம்ம்..” சின்னக்குழந்தைக்கு சொல்வதுபோல் சொல்லி, தங்கையின் விழிகளைத் துடைத்து விட்டவன் விழிகளும் கலங்கி விட்டன!
‘அண்ணாவின் லவ்வர்’, ‘அண்ணி’ என்ற சொற்கள் தாக்கிய வேகத்தில் கோபத்தில் உறைந்த மதுரா, நித்தியின் கண்ணீர் கண்டதும் அப்படியே உருகிவிட்டாள்.
நித்தி, அன்பே உருவானவள்! பலசமயங்களில் அன்னையைப்போல அரவணைப்பாள்! இந்த இரண்டு மாதங்களும் அவளுக்கு அன்னையாகவே மாறியிருந்தாள். ‘மனதுள் மறுகி, கையில் கிடைப்பதைக் கிழித்துக்கொண்டு பைத்தியமாக அலையப் போகிறேனோ!’ என்றும் இவள் நினைத்துக் கலங்கி இருக்கிறாள். மனதின் பாரத்தை வாய்விட்டுச் சொல்ல ஜீவனில்லாது தனிமையில், மௌனத்தில் வெடித்துச் சிதறி இருக்கிறாள்.
நித்தியை கண்ட அடுத்த நொடியிலிருந்து இவள் மனதின் அழுத்தம், வேதனை, தன்மீது தானே கொண்ட பச்சாத்தாபம் அனைத்துமே புறமுதுகிட்டிருந்தனவே!
நித்தியின் ஒவ்வொரு அசைவும், அவளை, அவள் வீழ்ந்து கிடந்த கொடும் வேதனைச் சகதியிலிருந்து மெல்ல மெல்ல மீட்டு, தூய்மைப்படுத்துவதாகவே இருந்திருக்கிறது. அப்படியிருந்தவள், இப்போதெல்லாம் ஒரே துள்ளலும் துடிப்பும் சீண்டலும் கேலியுமாக ஆளே மாறிப் போனாளே!
“இவள் தான் எங்கள் நிஜமான நித்தி; இந்த வீட்டின் உயிர்ப்பு இவள்!” என்றான், தங்கையில் உயிரான கார்த்திகேயன்,
“நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை மதுரா! அம்மா அப்பா மறைவோடு என் தங்கை தன் சுபாவம் தொலைத்துப் போயிருந்தாள். அவளின் கலீர் சிரிப்பைக் காண இரண்டு வருடங்கள் ஏங்கி இருந்திருக்கிறேன்!” என, சிலநாட்களின் முன் ஒருநாள் மதிய உணவின் போது கண்கள் கலங்கி நின்றான்.
“உங்களால்தான், நீங்க இங்கு வந்தபின்தான் அவள் பழைய நித்தியானாள்!” என்று அவன் கூறிய வார்த்தைகளையும் நன்றிகளையும் இப்போது நினைத்த மதுரா, “நித்திம்மா!” மெல்ல அழைக்க, அவளோ, தமையன் நெஞ்சில் முகத்தை மறைத்தாள்.
‘சற்றுமுன் அவள் இருந்த நிலை என்ன? இப்போது, கண்ணீரோடு அதுவும் என்னால்..’ மதுராவின் விழிகள் கரிக்கத் தொடங்கின!
அன்று வைத்தியசாலையில், அவன் மனைவி என்று விளித்துப் பேசியதற்கு அமைதி காத்தான் என்று கோபித்துக்கொண்டவள், பின்னர், “யாரோ எவரோ, அறியாமல் கதைத்தால் நாம் என்ன செய்வது?” என்ற, கார்த்திகேயனின் வாதத்தில் நியாயம் இருக்கவே அமைதி காத்தாள்.
ஏற்கனவே இவள் இங்கிருப்பதில் சுதா அவ்வளவாக விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதையும் அறிந்திருந்தாளே!
“அவர் எப்போதும் போல் கதைக்கிறார்மா!” என, இவளின் தாய் சொன்னாலும், அதை இவள் முழுமையாக நம்பவில்லை. அதன் பின் அவர் இங்கு எடுத்துக் கதைத்து இவள் காணவில்லை.
இவள் இங்கு வந்த பின், தம்பி தங்கையோடு கதைத்த நித்தியின் அக்கா இவளோடும் கதைத்தவள், பின் அழைக்கும் போதெல்லாம் இவளோடும் உரையாடிவிட்டே வைப்பாள்.
அதுவே, இவள் விடயம் எல்லோருக்கும் தெரிந்த பின், அவள் எடுத்த போதெல்லாம் நித்தியும் கார்த்திகேயனும் இவளைத் தவிர்த்தே அவளோடு உரையாடினர். “அக்காவா நித்தி?” இவள் ஆவலாகக் கேட்டும், மெல்லத் தவிர்த்தனர்.
“நான் இங்கிருப்பதில் உங்க அக்காவுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருக்குமோ நித்தி!” எனக்கேட்டு, அவள் முறைப்பை வாங்கிக் கட்டியதுதான் மிச்சம்.
“வெளிநாட்டில் கண்டவர் வீட்டிலும் இருக்கிறாளாமே! அங்கு எப்படி வாழப் போகிறாள் என்று பார்க்கத்தானே போகிறோம்!” என்ற கணேஷ் வீட்டுப் பார்வையும் இவள் மேல் உள்ளதே! அவர்கள் இவளுக்கு யாரோ தான்; ஆனால், இளைய சகோதரிகளின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, ‘அவர்களின் வாய்க்குள் வீணாக ஏன் புகுந்து வருவான்!’ என, எண்ணினாள் மதுரா.
அப்படியிருக்க, நித்தியின் உரிமைப்பேச்சில் பலதடவைகள் தடுமாறியவள், ‘இன்று தமையனோடல்லவா ஜோடி சேர்த்து விட்டாள்!’ எண்ணியதும் மீண்டும் மனதுள் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். நித்தி பகிடியாகத்தான் கதைத்தால் என்பது விளங்கினாலும் மனதில் சங்கடம் ஏற்படத்தானே செய்தது.
அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு மெல்ல அவர்களருகில் சென்றவள், “நித்திம்மா.. ஸாரிடா!” அவள் தோளில் கைவைக்க, தன்னருகில் நின்ற மதுராவையே இமைக்கவும் மறந்து பார்த்தன கார்த்திகேயனின் விழிகள்.
‘அண்ணாவின் லவ்வர்’, ‘அண்ணி’ என்ற சொற்களைக் கேட்டவனும் தான் அதிர்ந்திருந்தான். ஆனாலும் அதைக் கேட்டு மதுரா அடைந்த அதிர்வே அவனை அதிகம் தாக்கியது. அதனால்தான் தங்கையைக் கடிந்து கொள்ளவும் செய்தான். இப்போதோ, அவளே தங்கையைத் தேற்ற முனைகையில் அவன் மனம் ஏதோ ஒரு வகையில் தடுமாறவே செய்தது. அவ்விரு சொற்களையும் மெல்லத் தன்னுள் மீட்டியவாறே அவளை ஆராயவும் முற்பட்டது.
தமயனின் நெஞ்சில் தலையைப் புதைத்திருந்த நித்தியோ, மெல்லத் தலையை அசைத்து கண்ணீரில் நனைந்த ஒற்றை விழியைச் சிறிதாகத் திறந்து மதுராவின் முகத்தை ஆராய்ந்தாள்.
அவள் இப்படிச் சொல்லவேண்டுமென்றெல்லாம் ஒருபோதும் நினைத்ததில்லை. மதுராவை கலகலப்பாக்க கேலி செய்து செய்து, அதை மதுரா விரும்பவில்லை என்று அறிந்தும் அவள் கோபத்தைக் காணும் ஆவலில் கேலியைத் தொடர்பவள், இன்று தமையனும் பேச்சில் கலந்தவாறே வந்தமர, தன்னையுமறியாது அப்படிச் சொல்லிவிட்டாள்.
அதற்கு மதுரா காட்டிய அதிர்வில் இவள் நெஞ்சம் துணுக்கிட்டு விட்டதுதான். ‘ஒன்று கிடக்க ஒன்று நடந்து விட்டால்!’ என்றும் தமையன் கடிந்து கொண்டதிலும் அழுதவள், மதுரா தன்னைத் தேற்றவும், ‘ஹப்பாடா!’ என, நிம்மதி மூச்சு விட்டாள்.
‘ஒரு சின்னப் பகிடி; அதுக்குப் போய் பெரிய ஆர்ப்பாட்டம் செய்து இந்த நித்தியையே கலங்கடித்து விட்டாரே!’ மனதில் சிணுங்கியவாறே தமையனை ஏறிட்டவள், அவன் பார்வை மதுராவின் முகத்தில் நிலைத்திருப்பதைப் பார்த்துவிட்டு சட்டென்று விலகினாள்.
“ஹலோ ஹலோ அண்ணா, இரண்டுபேரும் நான் உண்மையாகவே சொன்னேன் என்று நினைத்து விட்டீர்களா? அஸ்கு…புஸ்கு…ஏதோ சும்மா ஒரு பேச்சுக்கு அப்படிச் சொன்னேன். கண்ணுக்கு முன்னால் நின்ற ஒரே ஒரு ஆண்மகன் என்பதால் உங்களோடு ஜோடி சேர்த்தேன்.” மிடுக்காகச் சொன்னவள் மீண்டும் அதிர்ந்த மதுராவின் முகம் பார்த்து, “ஹே..ஹே … ஒரு பேச்சுக்கு மதுரா; ஒரு பேச்சுக்கு!
அதோடு என் லவ்வரை யாருக்கும் விட்டுத் தரும் ஐடியா எனக்கு இல்லையப்பா! அண்ணாவுக்கு அண்ணியை வேற இடத்தில் தேடிப் பிடிக்கிறேன். ஒ.கேவா?” இதழில் வம்பு முறுவலும் விழிகளில் நீர்க்கசிவுமாகச் சொன்னவளை கட்டிப் பிடித்திருந்தாள் மதுரா.
“அதுக்கென்று இப்படியா அழுவது? பயந்து போனேன் நித்தி.” கண்கள் கலங்கியவாறு அவள் இவளைத் தேற்ற, இவள் பாசமழை பொழிய இருவரையும் விட்டுவிட்டு அப்பால் நகர்ந்தான் கார்த்திகேயன்.
ஏனோ அவன் மனம் தங்கை உதிர்த்த இரு சொற்களையும் காற்றில் கரையவிடாது தன்னுள் பதுக்கிக் கொண்டது.
“நித்திம்மா, எதில் பகிடி பேசுவது என்று இல்லையாம்மா? நீர் இப்படிப் பேசுவதை யாராவது கேட்டால் என்ன நினைப்பார்கள்? அதுவும், ஏற்கனவே நான் இங்கிருப்பதில் சுதா மிஸ்ஸுக்கு அவ்வளவு விருப்பம் இல்லை..” மதுராவின் குரல் வேறு அவன் செவியைத் தீண்டிச் சென்றது.
“முதலே சொல்லி இருக்கிறேன் மதுரா, இது எங்கள் வீடு; இல்லை நம் வீடு!” என்றவளுக்கு, தன்னையும் மீறி முறுவல் அரும்ப, “உம்மைத் திருத்தவே முடியாது!” விறுவிறுவென்று மேலே ஏறினாள் மதுரா.
சற்றுத் தள்ளி, சிலகணங்கள் நின்று மேலே செல்பவளை பார்த்திருந்துவிட்டே நகர்ந்தான் கார்த்திகேயன்.
அசராது மதுராவை ஓட்டிப் பார்க்கும் தங்கையின் நினைவில் அவன் முகத்திலும் முறுவல் அரும்பவே செய்தது. அதோடு, தங்கையின் பேச்சுகள் ஒன்றொன்றும் இவன் மனதுக்கு மிகவும் பிடித்தே இருந்தது.
“ஹலோ மேடம் பார்த்து பார்த்து; மெல்லப் போங்கப்பா, என் செல்லங்களுக்கு நோகப் போகுது!” நித்தியின் பரிகாசக் குரல் விரட்ட அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்ட மதுரா, மெல்ல அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தாள்.
இங்கு வந்ததலிருந்து இவள் இருந்த கீழேயுள்ள அறையை, “குழந்தைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் போகிறோம்.” என்று சொல்லி, இவளுக்கு மேலே உள்ள அறையைத் தந்தவர்கள், மதுரா எவ்வளவு மறுத்தும் கேளாமல்,
“என்னது கொஞ்ச நாட்களில் இலங்கை போகப் போறீங்களா? ஹ்ம்ம் அப்போ இதெல்லாம் அநியாயம் என்று கவலைப்படுறீங்க இல்லையா? அதுவும் சரிதான்.” என்று யோசிப்பதுபோல பாவனை செய்துவிட்டு,
“கவலையே வேண்டாம் மதுரா. என் குழந்தைகள் அல்லது அண்ணாவின் குழந்தைகள் பாவிக்கலாம் தானே.” என்று அசட்டையாகச் சொல்லிவிட்டு, தாம் நினைத்தவாறே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் மும்முரமாக நிற்பது கார்த்திகேயன் தான்.
‘உன் விடயமெதிலும் உன் மறுப்பை நாங்கள் காதிலும் வாங்கப் போவதில்லை!’ என்ற வகையில், அவர்கள் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வதில், அவர்களின் அளவற்ற அன்பில் இவள் இப்போதெல்லாம் ஒருவகைப் பயத்தையே உணர்கின்றாள்.
அடிப்படையில், அது தந்த எரிச்சலில், இப்போதெல்லாம் நித்தியின் சீண்டல்களே இவளுக்கு மிகுந்த கோபம் ஏற்படுத்துகின்றதே!
“பேச்சு வார்த்தைகளில் தொடங்கி இன்று அழவும் வைத்து விட்டேன்.” வாய்விட்டே சொன்னவளுக்கு அதில் சிறிதும் ஏற்பிருக்கவில்லை.
‘என்னதான் பெரியவள் போல நடந்து கொண்டாலும் அவள் சின்னவள்; விளையாட்டுப் பிள்ளை. அன்பாக எடுத்துச் சொல்ல வேண்டும்.’ என்று எண்ணிக் கொண்டவள், வயிற்றினுள் குழந்தைகளின் அசைவை உணர்ந்ததும் தன்னையுமறியாது உள்ளம் சிலிர்க்க மெதுவாகத் தடவியவாறே அவர்களோடு அளவளாவத் தொடங்கினாள்.

error: Alert: Content selection is disabled!!