மலருமோ உந்தன் இதயம் 16.2

“ஆமாம்டி ஆமாம்; எனக்கு இன்னொரு குடும்பம் உண்டு.” திமிராக ஏற்றுக் கொண்டு இவள் கண்ணெதிரில் அங்கு போய்வர இருந்தவனை விட்டு முழுமையாக விலகிவிடு என்றுதான் அவள் மனம் கட்டளை இட்டது.
அதற்கு கணேஷ் துளியும் விரும்பவில்லை என்று தெரிந்த போது அருவருப்பிலும் ஆத்திரத்திலும் துடித்தாலும், அவனை, காவல்துறையிடம் மாட்டிவிட எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தும் அவள் அதற்கு முனையவில்லை.
காரணம் என்ன? அவன் என் கணவன் என்கின்ற மூடத்தனமான நபிக்கையா? பற்றா? பாசமா? நிச்சயம் இல்லவே இல்லை. அவனது மற்ற குடும்பவிபரம் தெரிந்து விட்டது என்றதும் அந்தப் பெண்ணையும் அவன் மகனையும் வீட்டுக்கு அழைந்து வந்திருந்தான் கணேஷ். திடீரென்று வந்தவர்களை இன்னாரென்று புரிந்து கொண்டதும் ஒத்த வார்த்தை பேசாது யோகம் வீட்டுக்குப் போனவள் அதன்பின் அவன் வீட்டுக்குள் போகவில்லை.
ஆனால், அந்தக் கணம் அச்சிறுவன் முகத்தைப் பார்த்தவளுக்கு கணேஷைப் பழிவாங்கவோ, “என்னை அடித்தான், துன்புறுத்தினான்.” என்று போலீசில் பிடித்துக் கொடுக்கவோ மனம் வரவில்லை.
ஆனால் இப்போது, ‘என்னை மட்டுமா துன்புறுத்தினான்! கொஞ்சமும் யோசியாது என் குழந்தைகளையுமல்லவா பழிவாங்க முயன்றான். அடிபடக் கூடாத இடத்தில் பட்டிருந்தால்..’ நினைவே அவள் தேகத்தை நடுங்கச் செய்தது.
‘அதோடு, இவரைப் பார்த்து என்ன பேச்சுப் பேசினான்! அவன் பேச்சுக்கள் தான் இவரையும் ‘உன்னை நான் விரும்புகிறேன்.’ என்று சொல்ல வைத்திருக்கும்.’ என, எண்ணிக்கொண்டவள், “நன்றாக இருக்கட்டும் அப்போதான் இனி என் பக்கமும் வரமாட்டான்.” மனதில் நினைத்ததை வாய்விட்டே சொன்னாள்.
“நீங்க நினைப்பது போல அவன் அவ்வளவு கெதியாகத் திருந்தும் ஜன்மம் இல்லை.” இறுக்கமாகவே சொன்னான் கார்த்திகேயன்.
அவன் முகம் யோசனையில் சுருங்கி இருந்தது.
“உங்களுக்கு ஒன்றுமில்லை என்று டாக்டர் சொன்ன பிறகுதான் விடுவதைப்பற்றி யோசிக்கலாம் என்று சொல்லி அந்தப் பொம்பளையை அனுப்பி விட்டார்களாம்.
இப்போ ஒரு லோயரையும் அழைத்துக்கொண்டு அந்த மனிசி வந்திருந்திச்சி. இனி இப்படி நடக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்து விட்டிருக்கிறார்கள். இனிமேல் சின்னதாக ஏதாவது செய்தாலும் ஒரேயடியாக உள்ளே இருக்க வேண்டியதுதான்.” என்றவன், “அவனை இந்தளவில் விட்டத்தில் எனக்குச் சரியான கோபம்.” ஆத்திரம் மாறாது சொன்னான்.
“என்னதான் என்றாலும் நீ எப்படி கைவைக்கலாம் என்று எனக்கும் எச்சரிக்கை விட்டார்கள். ஆனால், அவனை இன்னும் துவைத்திருக்க வேண்டும்.” என்றவாறே,
“உங்களோடு நிறையக் கதைக்கவேண்டும்; இப்போ நேரமில்லை; மதியம் சாப்பிட வரும் போது பேசிக் கொள்வோம்.” முறைப்பு மாறாது சொல்லிவிட்டு க்ளினிக் நோக்கி விரைந்தவனை, பார்வையால் தொடர்ந்தவளுக்கு, அறை பார்க்கச் சொன்னதை அவ்வளவு இலேசில் விடமாட்டான் என்று தெரிந்தே இருந்தது.
அதே, போலிஸ் நிலையத்தில் தேவையில்லாத இழுபறி இருக்கவில்லை என்பதில் ஆசுவாசமாகவும் இருந்தது.
‘நான் தான் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டேனே! இன்னும் வந்து வந்து தொல்லை செய்யாது தன் வாழ்வைப் பார்க்க வேண்டியதுதானே. இதுதான் அவனுக்கு கடைசி. இனிமேல் சின்னப் பிரச்சனை செய்தாலும் கடுமையாக கம்பிளைன்ட் கொடுக்க வேண்டும்.’ மனதில் நினைத்துக் கொண்டவள் தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள்.
க்ளினிக்கில் இயல்பாக வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் கார்த்திகேயனின் மனம் இன்னமும் பொலிஸ் ஸ்டேசனில் நடந்தவற்றையே நினைத்துக் கொண்டிருந்தது. அங்கு நடந்தவற்றை மதுராவிடம் முழுமையாக சொல்ல அவன் விரும்பவில்லை.
‘சொன்னால் நிச்சயம் அதைப் பற்றி நினைத்துக் கலங்குவாள்.’ என, எண்ணிக் கொண்டவன் அங்கு நடந்த நினைவுகளால் ஆளப்பட்டான்.
இவன் போகும் போதே கணேஷ், அவன் காதலி, லோயர் என எல்லோரும் அங்கு காத்திருந்தனர்.
காவலதிகாரி இவனின் தந்தையின் நண்பர் என்பதால் இவனை வரவேற்று சிறிது நேரம் உரையாடிய பின்னரே அவர்களை வரச் சொன்னார்.

“இங்க பார் கணேஷ், உனக்கும் மதுராவுக்கும் விவாகரத்து ஆகிவிட்டுது. அதனால் நீ எந்த வகையிலும் அவவைக் கட்டுப்படுத்த முடியாது.” என்று நெதர்லாந்து மொழியில் ஆரம்பித்தவர்,
“இப்போது கூட, நீ தன்னைத் துன்பப்படுத்தியதாக ஒருவார்த்தை சொன்னாரென்றால் நீ உள்ளே இருக்க வேண்டி வரும். மதுராவோ பெரிய மனதாக தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.” என்றதும் இரத்தமெனச் சிவந்த விழிகளால் கார்த்திகேயனை உறுத்து விழித்தான் கணேஷ்.
“நான் அவளுக்கு உதவி செய்யத் தான் சென்றேன். என் குழந்தைகள் அவள் வயிற்றில் இருக்கிறார்கள். பிறகெப்படி நான் போகாமல் இருப்பது?” இவன் சொல்லச் சொல்ல, அவன் காதலியின் முகம் இரத்தமெனச் சிவந்தது.
“அங்கே போனால், இந்தாள் யார் எங்கள் இருவருக்கும் இடையில் வர?” கார்த்திகேயனை கைகாட்டி எரிந்து விழுந்தான்.
“இவரையா யாரென்று கேட்கிறாய்? இவர் மதுராவைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறவராமே! உனக்குத் தெரியாதா?” அந்த அதிகாரி சாதாரணமாகச் சொல்ல, “என்ன??” பெருங்குரலில் அதிர்ந்தான் கணேஷ்.
உள்ளத்தை அக்கிரமித்த ஆத்திரத்தில் மதுராவை இவனோடு இணைத்துப் பேசினானே ஒழிய, மதுரா அப்படிச் செய்வாள் என்று அவன் கனவிலும் கற்பனை செய்து பார்க்க மாட்டான். மதுரா பற்றி அவனுக்கு மிக நன்றாகத் தெரியும்.
“நான்…நா…அவள்…என் மனைவி! அவளை…ச்சா! உனக்கு கொஞ்சமும் வெட்கமாக இல்லையாடா” கார்த்திகேயனை பார்த்து தமிழில் சீறினான்; அவனோ, மிகவும் அமைதியாக இருந்தான்.
“நீ எப்படி ஒரு குடும்பத்தோடு வாழ்கிறாயோ அதை மதுராவும் செய்யலாம் தானே கணேஷ். அதனால், இனி மதுராவுக்கு தொந்தரவு செய்யாதே!” கண்டிப்பாகக் கூறினார் காவலதிகாரி.
“அவள் தாரளமாக யாரை வேண்டுமென்றாலும் கல்யாணம் செய்யட்டும்; எப்படியும் போகட்டும்.” சீறலாகத் தொடங்கியவன், வஞ்சினப் பார்வையை கார்த்திகேயன் மீது படரவிட்டவாறே, “ஆனால், குழந்தைகள் இரண்டு பேரிலும் அவளுக்குள்ள உரிமை எனக்கும் உண்டே!” கிரீச்சிட்டான்.
இதைக் கேட்ட அவன் காதலியின் முகம் கண்டிச் சிறுத்துப் போனது!
‘காதலித்து, பிள்ளை பிறந்த பின்னும் கல்யாணம் செய்து வந்தவனை அமைதியாக ஏற்றுக் கொண்டேன்தான். ஆனால், இப்போதோ, அவளே இவன் வாழ்விலிருந்து ஒதுங்கிய பிறகு இவனால் விட முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? அந்தளவுக்கு இவனுக்கு அவள் மீது விருப்பமா?’ பொறாமை உணர்வும் ஆத்திரமும் அப்பெண்ணின் மனதுள் கொழுந்துவிடத் தொடங்கியது.
“அட…குழந்தைகளில் உனக்கு எல்லா உரிமையும் உண்டு. யார் இல்லையென்றார்கள்? அதற்கு முதல் அவர்கள் சுகமாகப் பிறக்க வேண்டாமா? நீ இப்படிப் போய் கலகம் செய்தால் எல்லா நேரம் நேற்றுப் போலிராது கணேஷ்.” கடுமையாகச் சொன்ன அதிகாரி,
“அவர்கள் பிறந்த பின் நீ எதைவேண்டும் என்றாலும் செய்து கொள்; சட்ட ரீதியாக அணுகி முடிவெடு. உன்னிஸ்டத்துக்கு நடந்து இங்கு வருவது இனி நடக்காது பார்த்துக் கொள்.” எச்சரித்த அதிகாரியிடம் விடைபெற்று வெளியில் வந்த கணேஷ், கார்த்திகேயன் வரும் வரை காத்து நின்றான்.
கார்த்திகேயன் வெளியில் வர ஓரெட்டில் அவனை அணுகி, “ஏன்டா நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா? உனக்கு கொஞ்சமும் வெட்கமா மானம் என்பதே இல்லையா?” ஏக வசனத்தில் ஆரம்பித்தான்.
“இன்னொருத்தன் பெண்டாட்டியை கல்யாணம் செய்யப் போகிறேன் என்று பெருமையாகச் சொல்கிறாயே?! நீ எல்லாம் என்ன பிறப்பு?” என்றதும், கைமுஸ்டியை மடக்கிக் கொண்டு திறந்த கார்க் கதவை அடித்துச் சாத்திய கார்த்திகேயன் அவனை நெருங்க முன், அவன் காதலி கணேஷைப் பிடித்து இழுத்திருந்தாள்.
அப்போதும், “டேய், மானம் கெட்டவனே! அவளிடம் சொல்லி வை; பிள்ளைகள் பிறந்த மறுகணம் இரண்டுபேரையும் என்னோடு அழைத்து வந்துவிடுவேன் என்று. அதன் பிறகு யாரை வேண்டும் என்றாலும் அவள் வைத்திருக்கட்டும்.” தன்னை மீறிய ஆத்திரத்தில் நெதர்லாந்து மொழியில் கர்ஜித்தவனை சுண்டிப்போன முகத்தோடு இழுத்துச் சென்றாள் அவன் காதலி!
நடந்ததை நினைத்துக் கொண்ட கார்த்திகேயனின் மனமோ, ‘அவன் பிரச்சனை மேல் பிரச்சனை கிளப்பத்தான் போகிறான்! என்ன செய்வது? ஏதாவது செய்தாக வேண்டும். இந்த நேரத்தில் வேறு ரூம் பார்க்கிறேன் அது இது என்று இவளின் அட்டகாசம் வேறு!’ குழம்பியவாறே வேலையில் முழ்கினான்.

error: Alert: Content selection is disabled!!