செம்பருத்தி 16 – 2

இதில் ஒன்றும் வித்யாசமாகத் தோன்றாததால் சந்தேகப் படாமல் சம்மதித்தாள். அதன்பின் தினமும் அவளது கல்லூரி மாணவன் ஒருவன் அவளிடம் கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றைத் தர, அதை எடுத்துக் கொண்டு வந்து அபிராமிடம் தருவாள். அது ஒன்றும் பிரம்மாதமில்லை. இருநூற்றி ஐம்பது  மில்லிலிட்டர் அளவே கொள்ளும் சிறிய பாட்டில். கைப்பையில் அடக்கிவிடலாம். அபிராமும்  அவளுக்காகக் காத்திருந்து ரகசியமாக வாங்கிச் செல்வான். 

“ஏன்கா இப்படி தொள தொளன்னு லூசா டிரஸ் பண்ணிட்டு வர்ற. புதுசு வாங்கலாம்ல” என்று இரு நாட்களாக ஓவியா நச்சரிக்கிறாள். 

இப்பத்தான் அஞ்சாறு மாசத்துக்கு முன்னாடி வாங்கின புது ட்ரெஸ். சிலதெல்லாம் ரெண்டு மூணு தரம் தான் போட்டிருக்கேன். அதுக்குள்ளே என்ன புதுசு வேண்டிக்கிடக்கு என்றபடி பெட்டியிலிருந்து ஊரிலிருந்து வாங்கிய சல்வாரை எடுத்து அணிய, நிஜமாகவே ஆங்காங்கே தொங்கியது போலவே தோன்றியது. 

சரி கொஞ்சம் நேரம் இருக்கிறது. தொங்கும்  இடங்களில் பிடித்துத் தைக்கலாம். என்று காளியம்மாவை அழைத்து துணியை இழுத்துப் பிடித்துக் கொண்டு மார்க் செய்யச் சொன்னாள். 

“பாப்பா, மடிச்சு தைக்கவெல்லாம் முடியாது வெட்டித்தான் தைக்கணும். டைலர்கிட்ட கொடு நான் தச்சு எடுத்துட்டு வரேன். இல்லைன்னா பேசாம புது ட்ரெஸ் வாங்கிக்கோ. இதெல்லாம் நைட்டி மாதிரி இருக்கு”

“நிஜம்மாவாக்கா… “ அப்ப உடம்பு குறைஞ்சுடுச்சா? சந்தோஷத்தில் மத்தாப்பூவாய் மலர்ந்தது செம்பருத்தியின் முகம். இத்தனைக்கும் மாரியம்மாக்கா எழுதித் தந்த டயட்டைக் கூட கடை பிடிக்கவில்லை. 

“இங்க எடை பார்க்க மெஷின் இருக்கா?”

“நல்லா கேட்ட போ… நம்ம அய்யாவை டாக்டர் பாக்க வருவாரே… அந்த ரூமில் இருக்கும். பாலா கிட்ட கேளு எடுத்துத் தருவான்”

குடுகுடுவென ஓடிச் சென்று எடை மெஷினைத் தேடி அதில் நின்று பார்த்தாள். எண்பது கிலோவிலிருந்து எவ்வளவு குறைந்திருக்கிறது? எழுபதா? இத்தனைக்கும் அவள் ஒன்றுமே செய்யவில்லையே. 

“இதென்ன வீட்டில் எல்லாரும் இப்படி இளைச்சுட்டே போறிங்க” என்ற பாலனின் முணுமுணுப்பு அவள் காதிலேயே விழவில்லை. 

மாரியம்மாவை அன்றே அழைத்து இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டாள். அவளது சாப்பாட்டு மெனுவை, சாப்பிடும் நேரத்தை மற்ற விவரங்கள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் மாரியம்மா. 

“இதில் எனக்கு ஆச்சிரியமே இல்லடி”

“எப்படிக்கா? இத்தனைக்கும் நீங்க சொன்ன உணவு வகை ஒன்னு கூட பாலோ பண்ணலையே”

“பண்ணிருக்கியே… முதலில் சுவீட்டை நிறுத்திருக்க, ரெண்டாவது உணவில் உப்பு உறைப்பு இல்லாம காலைல பழைய சோத்து தண்ணி மோர் சேர்த்து குடிச்சிருக்க. அதெல்லாம் உன் அசிடிட்டி குறைச்சுடுச்சு. சீரகம், இஞ்சி, பெருங்காயம், வெந்தயம்னு  ஹார்மோன், செரிமானம் ரெண்டையும் சரி செஞ்சுருக்கு. இன்னொன்னு கொத்தவரங்காய். அது கூட உன்னோட உடம்பு குறைய ஒரு காரணம்”

“இத்தனைக்கும் தேங்காய், தேங்காய் எண்ணெய், வெண்ணை எல்லாம் சாப்பிட்டேன்”

“எல்லாம் அளவோட எடுத்திருக்க. வீடியோ கால் வா… “

வீடியோ காலில் செம்பருத்தியைப் பார்த்த மாரியம்மா “அடியேய் செம்பருத்தி நீயா? முகமெல்லாம் பாதியா வத்திருச்சு. கேரளா செல்வதற்கு முன், பின் அப்படின்னு போட்டோ போடலாம் போல.  ஸ்கின் டோன் கூட இம்ப்ரூவ் ஆயிருக்கு. எடை குறைஞ்சதால இருக்கலாம். முடி கொட்டுறது எப்படி இருக்கு?”

“எவ்வளவோ குறைஞ்சிருக்குக்கா ஆனால் ஃபுல்லா நிக்கல”

“அதுக்கு நேரமாகும். நம்ம உடம்புக்கு பிரச்சனைன்னா முதல்ல கொட்டுறது முடிதான். பிரச்சனை எல்லாம் சரியானதும் கடைசியாதான் முடி கொட்டுறது நிக்கும். ஸ்கின்னுக்கு என்ன போடுற”

“இங்க வெளிய போக நேரமில்லைக்கா அதனால பக்கத்தில் கிடைக்குற ஆயுர்வேத வேப்பிலை மஞ்சள் கலந்த சோப்பு, ஷாம்புதான்”

“என்ன செஞ்சியோ தெரியல ஆனால் அதைத் தொடர்ந்து செய். முதல்ல புது டிரஸ் வாங்கு. இது கோணியை சுத்திகிட்டு நிக்கிற மாதிரி இருக்கு”

“சரிக்கா… இந்த வாரம் போயி வாங்கிடுறேன்”

“உனக்கு பீரியட்ஸ் சரியா வருதா?”

மாரியம்மா கேட்டதும்தான் யோசித்தாள். முன்னெல்லாம் எப்போது ஆரம்பிக்கும் எப்போது நிற்கும் என்றே சொல்ல முடியாது. இப்போது மாதத்திற்கு ஒரு முறை என்று சொல்ல முடியாவிட்டாலும் தோராயமாக நாற்பதிலிருந்து நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் வந்து விடுகிறது. 

“நல்லது இன்னும் எடை குறைஞ்சு டோன் ஆகும்போது நாள் இன்னும் குறையும். தூக்கத்துக்கு நடுவில் எந்திருச்சு சாப்பிடுவியே அது இன்னமும் தொடருதா?”

“அதெல்லாம் இப்ப நின்னுருச்சுக்கா. படுக்கைல விழுகுறதுதான்  தெரியும். பாத்ரூம் போகக் கூட நடுவில் எந்திரிக்கிறதில்லை”

“நல்ல உறக்கம் அப்படித்தான் இருக்கும். சரி, நீ ஒழுங்கா ஏழு மணி நேரம் தூங்குறியா?”

“எங்கக்கா முன்னாடி ஏழெட்டு மணி நேரம் நல்லா தூங்குனேன். இப்ப  ஈவினிங் காலேஜ்ல சேர்ந்திருக்கேன். தூங்க லேட் ஆயிடுது”

“அதுதான் நம்ம ஹெல்த்துக்கு எதிரி. ராத்திரி பதினோரு மணிக்காவது தூங்கிடு. காலைல சீக்கிரமா எந்திரி. ஏழு மணி நேரமாவது தூங்க முயற்சி பண்ணு. நடை பயிற்சி செய்”

“சரிக்கா”

“ஒரு தரம் ஊருக்கு வந்து எங்களைப் பாருன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு. ஆனால் இப்போதைக்கு வந்துடாதே”

“ஏன் கா?”

“என்னமோ தெரியலைடி உங்க அத்தைக்காரி உன்னைப் பத்தி ஜலப்பிரியாகிட்ட விசாரிச்சிருக்கா? எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ”

“சரிக்கா… “ என்றாள் யோசனையுடன். எதற்காக இவளைத் தேடுகிறார்கள்? இதற்கு மேல் விவரம் கேட்க முடியாது. மாரியம்மா அக்கா நோயாளிகளைப் பார்க்கும் நேரம்.

எதற்காக அவளைத் தேட வேண்டும்? ஜலப்பிரியாவை அழைத்தாள்.

“ஏய் நானே உன்னைக் கூப்பிடணும்னு பாத்தேன்டி. நீ வேற காலைல வேலைக்குப் போயிருவ, சாய்ந்தரம் காலேஜுக்கு போயிருப்ப. எப்ப வருவேன்னு தெரியாதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். உங்க அத்தைக்காரி வீட்டில் என்னவோ பிரச்சனை போலிருக்கு”

“என்ன பிரச்சனை? அதுக்கும் என்னை தேடுறதுக்கும் என்ன சம்பந்தம்?”

“தெரியலடி… உங்கத்தக்காரி என்கிட்டே கேட்டா… நான் மெட்றாஸ்ல காலேஜுல படிக்கிறன்னு சொல்லிட்டேன். போன் நம்பர் கேட்டுச்சு. வக்கீலுக்குத்தான் தெரியும்னு சொல்லிட்டேன். ஒருமுக்கியமான  விஷயம்டி உங்க அத்தையோட புது மருமக அந்த கவிதா கல்யாணமாகி இந்த ஆறு மாசத்துக்குள்ள ரெண்டு தரம் கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப்  போய்ட்டா… என்ன நடக்குதுன்னு தெரியலடி… எதுக்கும் நீ இந்தப்பக்கம் எட்டி கூட பாத்துடாத”

அவள் அத்தையைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோதே அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கின. 

எந்த அவினாஷை சந்திக்க முடியாமல் வெண்மேகம் வந்து நீந்தாத வானமாக ஏங்கினாளோ அவனை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்ப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் முன் கூனிக் குறுகி ஒரு குற்றவாளியாய் நிறுத்திய இந்த விதியை என்ன சொல்ல?

error: Alert: Content selection is disabled!!