செம்பருத்தி 18 – 1

வினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே இது. 

அவினாஷ், அம்மா மந்தாகினியின்  பின்னாலேயே சுற்றிக் கொண்டு அவரது வார்த்தைகள் மூலமே உலகை இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் அபிராமிற்கு நேர் எதிர் குணாதிசயம் கொண்டவன். 

அபிராமிற்கு பணம் பஞ்சமே இல்லை. அன்னையின் அருகாமையும் அன்பும் தாராளமாகக் கிடைத்தது. தந்தையின் அன்பும் கூட, அது குறைந்தது அல்லது அபிராம் குறைத்துக் கொண்டது அவர் மேல் ஏற்பட்ட கோபத்தினால் மட்டுமே. இன்னமும் வீரபாகு ஒரு நாயைப் போல அவன் அன்புக்கு ஏங்கி கொண்டுதான் இருக்கிறார். இவன்தான் அவரை சந்திக்கவே மறுக்கிறான். 

அவினாஷுக்கோ எல்லாம் ரேஷன் முறையில்தான். பாகமங்கலம், நாகமங்கலம் குடும்பத்தினர் அனைவரும் உறவினர்கள் என்றாலும் அவனது தாய் குறிப்பிட்ட வயதில் தனது தனித்தன்மையை நிரூபிக்க விரும்பினார். அவரது கல்வித்தாகம் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு என்று விரிவடையச் செய்தது. இப்போது மும்பையில் ஒரு பெண்கள் பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணி புரிகிறார். 

பாகமங்கலம் நாகமங்கலம் பெண்கள் பலருக்கு இதெல்லாம் வியப்பாகவே இருக்கும். பொம்பளை எப்படி வீட்டுக்காரரை விட அதிகம் படிக்கலாம்? வேலைக்குப் போகணும்னு அவசியமா என்ன? இந்த வேலையை ஒரு ஆண்மகனுக்குத் தந்தா ஒரு குடும்பமே சாப்பிடும். ஒரு வேலை வாய்ப்பைத் தட்டிப் பறிச்சுட்டா… என்றெல்லாம் அவர்கள் நாக்கு நீளும். அதனாலேயே உறவினர்களைச் சந்திக்க அவர் ஊருக்கு வருவதே இல்லை. 

ஆனால் இவனுக்கோ அந்த ஜமீனின் குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறது. “இந்த பாரு அவி. இதை சரி படுத்த வேண்டிய பொறுப்பு உன்னுது. நீ பாட்டுக்கு நட்டாத்தில் விட்டுடாதே… “ என்று ஆதவனும் கேட்டிருந்ததால் முக்கியமாக அவனது தாத்தாவும் கேட்டிருந்ததால் அவனால் அதனை மீற முடிந்ததில்லை. 

அவன் அன்னை மங்கையர்க்கரசி மட்டும் அவனிடம் “அவி, அந்தக் குடும்பத்தில் இருந்தாலும் நீ அவங்க சொகுசுக்குப் பழகிடாதே. நம்ம குடும்பம் மும்பையில் இரண்டு படுக்கை அறையில் வசிக்கும் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் என்பதை உன் மனசில் இருந்து அழிக்கவே கூடாது” என்று அழுத்திச் சொல்லி இருந்தார். எப்படி முடியும்? அவனது சிறுவயதில் மிகச் சிறு வீடுகளில் இருந்திருக்கின்றனர். பாத்ரூமிலிருந்து எட்டிப் பார்க்கும் கரப்பான் பூச்சிகளைக் கண்டாலே பயம் அவனுக்கு. வேகமாக வேலையை முடித்துவிட்டு ஓடி வந்துவிடுவான். 

அதன்பின் தாத்தாவின் வற்புறுத்தலால் அவினாஷ் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தது பாகமங்கலம் குடும்பத்தினரின் ரெசிடென்ஷியல் பள்ளியில்தான். அவினாஷ் வீட்டினைப் பொறுத்தவரை குடும்பத்தினர் தாய்,தந்தை, மகன், தாத்தா நான்கு  பேரும் நான்கு திசையில் பயணிப்பவர்கள். ஏதாவது நாள் கிழமையில், விடுமுறையில்  சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் தூரம் அவர்களது அன்பைக் குறைக்கவில்லை. அடிக்கடி டெலிபோனில் உரையாடி தகவல்களைப் பரிமாறிக் கொள்வார்கள். 

எப்பொழுதும் வேலை வேலை என்று ராட்சச உழைப்போடு இருக்கும் தாய் தந்தையர் தர முடியாத நேரத்தை அந்த இடைவெளியை ஈடு செய்தவர் அவினாஷின் தாத்தா. அவரைப் போன்ற கள்ளம் கபடம் இல்லாத மனிதரைப் பார்ப்பது அபூர்வம். அவர் மண்ணுலகை விட்டு மறைந்த போது மிகவும் மன வேதனையுடன் இருந்தான். 

“அவினாஷ் கண்ணா  தாத்தா வேறெங்கேயும் போகல… அந்த வானத்தில் பறந்து போயி சாமிகிட்ட உக்காந்து நட்சத்திரமா ஜொலிக்கிறார்”

“போங்கம்மா… தினமும் எத்தனை பேரு செத்துப்போறாங்க. அவங்க எல்லாரும் மறுபடியும் பிறப்பாங்கன்னு சொல்றாங்களேம்மா?”

“சாமி நம்ம செஞ்ச நன்மை தீமை எல்லாத்தையும் பார்த்துட்டு ரெண்டு கேள்வி கேட்பார். நீ வாழ்ந்த வாழ்க்கைல நீ சந்தோஷமா இருந்தியா? ரெண்டாவது கேள்வி நீ மத்தவங்களை புண்படுத்தாத வாழ்க்கையை வாழ்ந்தியா? இந்த ரெண்டு கேள்விக்கும் ஆமாம்னு சொல்ல முடியுற அளவுக்கு வாழ்க்கை வாழ்ந்தவங்கதான் நட்சத்திரமா ஜொலிக்க  முடியும். முடியாதவங்க ஆமாம்னு சொல்ற வரை மறுபடியும் மறுபடியும் பிறப்பாங்க”

ஆசிரியராய் நல்லொழுக்கத்தை போதிக்கும் அவனது தாயார் அவனிடம் சொன்ன இந்தத் தகவல் அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. தன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவனது வாழ்க்கையின் குறிக்கோள், லட்சியம் எல்லாம். அதனாலேயே அபிராம் எத்தனை முறை தூற்றினாலும் வெட்கம் மானம் பார்க்காமல் ஓடி ஓடிச்  சென்று அவனுக்கு உதவுகிறான். 

அவினாஷ் டோக்கியோவில் ஜன சந்தடி மிகுந்த அந்த ரயில் நிலையத்தில் இறங்கியதும் முதலில் மிகுந்த களைப்பாக உணர்ந்தான். அவன் தங்க வேண்டிய கேப்ஸியூல் ஹோட்டல் அருகிலேயே இருந்தது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. 

பொதுவான கழிவறை, குளியலறை ரிசப்ஷன் இது தவிர உணவறை, இலவச உணவு, பொது நூலகம், பொதுத் தொலைகாட்சி, பார் ஒன்று என்று சகல வசதிகளுக்கும் குறைவில்லாமல் இருக்கும். கட்டணத்தைப் பொறுத்து வசதிகளும் சேவைகளும் அதிகமாகக் கிடைக்கும். சிலவற்றில் ஆபிஸ் மீட்டிங் ஹால் கூட உண்டு. நமக்குக் கடினமாகத் தோன்றுவது படுக்கை வசதிதான்.  நாம் ரயிலில் உறங்கும் பெர்த்தை  விட சற்று பெரிதான செவ்வக அலமாரி போன்ற ஒன்று. அந்தக் கூண்டுதான் படுக்கை. அதில் லைட், ஏசி போன்ற வசதிகளும் உண்டு. 

ஜப்பானில் இருக்கும் இடப்பஞ்சம் மற்றும் இட நெருக்கடி காரணமாக இத்தகைய கப்சியூல் எனப்படும் சின்னஞ்சிறு விடுதிகள் அதிகம். இது சற்று விலை அதிகமான லக்சுரி விடுதி. 

“அவினாஷ், எல்லாம் சரிதான் ஆனால் இதென்ன பெட்டில படுக்குற மாதிரி மூச்சு முட்டுதுடா. என் சொந்த சம்பாத்தியத்திலிருந்து தர்றேன். தயவு செய்து கஞ்சத்தனப்  படாம நல்ல ஹோட்டல்ல தங்குடா” என்று அவனது தந்தை சொல்லி அனுப்பி இருந்தார். 

இந்த முறை வேறு வழியில்லை இந்த விடுதிதான் அவன் சந்திக்க செல்லும் நபரின் அலுவலகத்திற்கு அருகில் இருக்கிறது. அதனால் இங்குதான் தங்க வேண்டும். 

 

error: Alert: Content selection is disabled!!