செம்பருத்தி 20 – 2

“யாருமே இல்லாத எனக்கு இன்னைக்கு வீடு பூரா துணை இருக்கு. ஆனால் நாங்க அத்தனை பேர் இருந்தும் அபிராம் தனியா இருக்கார். ரூமுக்குள்ளையே அடைஞ்சு இருக்கார். அவருக்கு அன்பைத் தரும் ஒரு துணையை ஏற்பாடு செஞ்சா இதெல்லாம் மறையுமா?”

 

“மறையலாம். அவங்க அம்மா ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து இருந்தாங்க. அந்தப் பொண்ணு அபிராமைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு வேளை அது நடந்திருந்தால் எல்லாம் மாறியிருக்கலாம். வேறு விதமான பிரச்சனைகள் வந்திருக்கலாம்”

 

“நம்ம வேணும்னா அவங்க கிட்ட இன்னொரு தடவை பேசிப் பார்க்கலாமா?”

 

“நான், எங்கம்மா அப்பா எல்லாரும் ட்ரை பண்ணிட்டோம். இருந்தும்  அந்தப் பெண்ணைக் கன்வின்ஸ் பண்ண முடியல”

 

“கன்வின்ஸ் பண்ண முடியாதது  விபத்துக்கு அப்பறமா?”

அவினாஷ் பதில் சொல்லவில்லை. அபிராமின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. விபத்துக்குப் பின்னர் கல்யாணத்தை மறுத்த அந்தப் பெண்ணால் காயம் பட்டிருக்கிறான். இவளுக்கு முன்பு வேலையிலிருந்து நிகிலா மனது காயப்பட்டிருந்த இடத்தில் தட்டியிருக்கிறாள். சுலபமாக அவளது வலையில் வீழ்ந்துவிட்டான் அபிராம். 

 

இவள் இப்படி கனக்குப் போட்டுக் கொண்டிருக்க, இன்னமும் தான் அழகில்லை அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை இவ கிட்ட இருக்கே. பல வருடங்களாக வளர்ந்து வேரூன்றி இருப்பது எப்படி மாதங்களில் சரியாகும். செம்பருத்தி அவளது பயணத்தில் இன்னும் தொலைவு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்த அவினாஷ் பெருமூச்சுவிட்டான். 

 

“உனக்கு எதனால இப்படி ஒரு நினைப்பு வந்ததுன்னு தெரியல, உன்னை செலெக்ட் பண்ணது நானில்லை. ஆனால் சுகுமாரன் அங்கிள் அப்ரூவலுக்கு அனுப்பியதும் உன்னோட பாசிட்டிவிட்டி அபிராமை சீக்கிரம் மீட்டெடுக்கும்னு நினைச்சே உடனே ஜாயின் பண்ண சொன்னேன். 

 

உனக்கு முன்னாடி இருந்த நிகிலா காமத்தைக் காமிச்சா பதிலுக்கு உங்க அய்யாவும் அவ பின்னாடியே சுத்தினார். இன்னொன்னு தெரியுமா காதல் பறவைகள் ரெண்டு பேரும்  ஊரை விட்டு ஓடிப் போக இருந்தாங்க. சொத்தெல்லாம் விக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் நிகிலா வீட்டில் இருந்த அபிராமோட   அம்மா மந்தாகினியின் நகை, பணம், வெள்ளிப் பாத்திரம் எல்லாம் சுருட்டிட்டு ஓடிட்டா… அது கூடத் தெரியாம உங்க அய்யா போதை மயக்கத்தில் இருந்தார். அவளை  மடக்கி பிடிச்சு எல்லாத்தையும் மீட்டோம்”

 

“நல்ல வேளை”

 

“எனக்கு கெட்ட வேளை . உங்கய்யா நான் காதல் கிளியை பிரிச்சுட்டேன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு ஒரு ருத்ர தாண்டவமே ஆடிட்டார்”

 

“ஹே நீங்க என்ன ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கிங்க? அக்காவை முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” என்றபடியே அங்கு ஓடி வந்து இருவருக்கும் நடுவே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் ஓவியா. 

 

“தெரியும். உனக்கு ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?”

 

“சூப்பரா போகுது. அக்காவும் கூட காலேஜில் சேர்ந்திருக்காங்க”

 

“சோசியாலஜி… எதனால இந்த ஸ்பேசிலைசேஷன்? ”

 

“ஒரு ஆர்வம் தான். எனக்கு இந்த சமூகத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை”

 

“எதனால?”

 

“ஆன்லைனில்  போல்ஸ், லைக்ஸ்  அண்ட் டிஸ்லைக்ஸ் மூலம் அபிப்பிராயத்தை உண்டாக்க முடியுது, போற போக்கில் அவங்கவங்க  தட்டிட்டு போற நெகட்டிவ் விமர்சனம் மூலம் இந்த சமுதாயத்தால் ஒருத்தரைக் காயப்படுத்த முடியுது. பாடி ஷேமிங்க் பண்ண முடியுது. 

சோசியல் மீடியா மூலமா ஒன்னு கூடி நல்லதும் பண்ண முடியுது, கூட்டமா சேர்ந்து ஒருத்தரை புல்லி பண்ணி, களங்கத்தை உண்டாக்கி தற்கொலைக்குத் தூண்ட முடியுது. கிட்டத்தட்ட கட்டுபாடில்லாத காட்டு விலங்குகள் முகத்தை மறைச்சுட்டு உலவுற சமூகத்தின் மாதிரியாத்தான் அதைப் பார்க்கிறேன். 

ஒரு குழந்தையை மனிதனா முழுமையா உருவாக்குறதும், அவனை நல்லவனாவே  உலவ விடுறதும்  அவனை சுத்தி இருக்குற சமூகம்தான். அரசியல், மதம், ஜாதி, பொருளாதாரம்னு அதோட தாக்கத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு தான் எடுத்தேன். என்னவோ அதெல்லாம் என்னை ரொம்ப கவருது அவினாஷ்”

 

“வெரி இன்டெரெஸ்ட்டிங். என்னவோ பேப்பர் சப்மிசன் கூட பண்றியாமே?”

 

“ஆமாம் பள்ளிக்கூடம் பத்தி. சமூகமும் சிறார் கல்வியும்னு இந்த டாபிக் கூட அபிராம் சார் தான் தேர்ந்தெடுத்தார். ஓவியா ஊரில் இருந்தப்ப அம்மா கரகாட்டம் ஆடுறவங்கன்னு தெரிஞ்சதும் கூடப் படிக்கிற பசங்க எல்லாரும் இவ கூடப்  பேசுறதையே நிறுத்திட்டாங்களாம். ஒரு குழந்தை மனசில் இதெல்லாம் எவ்வளவு பெரிய காயத்தை உருவாக்கும். படிப்பெல்லாம் இதெல்லாம் பாதிக்கப்படும் இல்லையா. இதெல்லாம் யோசிச்சுத்தான் இந்த டாபிக்கைத் தேர்ந்தெடுத்தோம்.”

 

“அதுதான் எங்கம்மாவோட இன்டெரெஸ்ட் கூட. எங்கம்மா ஒரு டீச்சர் தெரியுமா?” என்றான் பெருமையாக

 

“தெரியாது அவினாஷ்”

 

“ரொம்ப அன்பானவங்க. தைரியம் அதிகம். தனி ஒரு ஆளா மும்பைல இத்தனை தூரம் வளர்ந்திருக்காங்க. உனக்கு இதில் என்ன சந்தேகம்னாலும் எங்கம்மாவைக் கேளு” என்று தொடர்பு எண்ணைச் சொன்னான். 

 

‘டேய் உன் நம்பரைத் தருவேன்னு நினைச்சா உங்கம்மா நம்பரைத் தர்றியே’ என்று எண்ணிக்கொண்டே மங்கையர்க்கரசியின் எண்ணை சேமித்துக் கொண்டாள். 

 

“இந்த தடவை சைனா மொபைல் இல்லை போலிருக்கே. புது மாடல் போன் வேற…” என்றான் கிண்டலாக. 

 

“இல்லைதான்… ஆனால் இந்த தடவை காப்பியைத்  தட்டி விடலையே!”

 

சுவீட் நத்திங்ஸ் பேச்சை முடிவின்றி வளர்க்கவே அங்கு இரு உள்ளங்களின் விருப்பமும் இருந்தது. ஆனால் சூழ்நிலை அவ்வாறு விடவில்லையே… வீட்டிற்குக் கிளம்பித்தானே ஆக வேண்டும். 

 

ஆனால் அங்கு வீட்டிலோ தலைக்கு ஏறிய போதையுடன் தட்டுத் தடுமாறி நடந்து நீச்சல் குளத்திற்கு அருகே வந்த அபிராம் கண்முன் உலகமே கலங்கலாய் ஆடியது. எது தரை, எது தண்ணீர் என்று தெரியாமல் அதில் அப்படியே தலைகீழாக விழுந்தான். கீழே வேகமாக விழுந்தவனுக்கு மேலே எழ  சக்தியில்லை. அவனது நுரையிரல் மூச்சுக் காற்றுக்காகத் தத்தளிக்கத் துவங்கியது. 

error: Alert: Content selection is disabled!!