அத்தியாயம் 18 – 3

“ம்ம்ம்… இனி உம்மட ஆசைப்படி எல்லாம் இருக்கா எண்டு பார்த்திட்டுச் சொல்லும் இளவரசியாரே!” நாடக பாணியில், நகைப்போடு சொல்லிக்கொண்டு கரங்களை விலக்கினாள், மதி.

மெல்ல மெல்ல சிமிட்டி இமைக்குடைகளை விரித்தவள் விழிகள் கொட்டைப்பாக்காய் விரிந்தன. வாயும் சேர்ந்து, ‘‘ஆ’’ என்றது. உண்மையில், அவள் மனதில் எழுந்த ஆசையைச் சொன்னாளேயொழிய, அது, இப்படி, அதை விடவும் வடிவாக, வலு நேர்த்தியாக வருமென்று கனவிலும் எண்ணவில்லை.

அவள் மகிழ்வைப் பார்த்ததும், ‘அப்பாடா!’ தனக்குள் சொல்லிக்கொண்டு நகர்ந்தான், ஆரூரன். அதுவரை, பார்த்து பார்த்துச் செய்யப்பட்ட மாற்றங்கள் எல்லாம் அவள் விருப்புக்கேற்ப இருக்க வேண்டுமே என்ற தவிப்பிருந்தது; இதை, வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவே மாட்டான். அதுபோலவே தான், அந்த அறை, அவளை, எப்படி ஆச்சரியப்படுத்தப் போகிறது  என்பதை, அருகிலிருந்து பார்க்கும் ஆவலும் அதிகமாகவே இருந்தது; அதையும் தான் ஏற்கானே!

 இப்போதோ, தவிப்பும் ஆவலும் கலந்துகட்டி அவனுள் உருவாகிவிட்டிருந்த பிரித்தறிய முடியாத உணர்வு, மெல்ல மெல்ல அமிழ்ந்து போனது, மிக்க  திருப்தியோடு! உதடுகளில், முறுவலின் சாயல் கூடத் தெரிந்தது. 

மலர் இல்லத்தில், அவளுக்கென்று ஒதுக்கியிருந்த பெரிய படுக்கையறையின் பக்கச் சுவரில், கறல் நிற மரக்கதவு போட்டிருந்தார்கள். அதோடு, நல்ல விசாலமாகவே கண்ணாடி அறையையும்  அமைத்திருந்தார்கள். மூன்று புறங்களும் கதவு நிறத்திலேயே மரச்சட்டங்களுள் உயரமான கண்ணாடிகள்; மேலே, சன் ரூப் போடப்பட்டு, மிகுதிக்கு ஓட்டுக்கூரை; அதன் கீழே உட்பக்கமாக, நல்ல மொத்தத்தில் சதுர மரத் துண்டுகள். 

“ஒன்று ரெண்டு…’’ எண்ணினாள் பைரவி.

 “12” மெல்ல நகர்ந்தவள் ஓரிடத்தில் நின்றாள். அந்த மரத்துண்டுகளில் இருந்து, இறுக்கமான பின்னல் வெள்ளைக் கயிறுகள் மூன்று பிரிவுகளாக கீழே வழிந்தன; அவை தாங்கிப் பிடித்திருந்ததுவோ!

கண்களை மூடித் திறந்தவள் விழிகள் கலங்கிவிட்டன.

முக்கால் வட்டத்தில் இருந்தது, அந்தத் தொங்கு கதிரை. அதே நிற மரத்தால் செய்திருந்தார்கள். பொருத்தமான குசன்கள் அடுக்கியிருந்தார்கள். கீழே, வட்டமாக, பிரவுன் கலரில் பட்டர் நிற புள்ளிகளும் பூக்களும் தூவிய அழகிய விரிப்பு! 

மெத்து மெத்தென்று கால்கள் புதைய அடியெடுத்து வைத்தவள், அந்தத் தொங்கு கதிரையில் அமர்ந்து கொண்டாள். மெல்ல ஆடியது, அது. கரத்தை நீட்டி, மதியின் கரம் பற்றி அருகில் இருத்தியவள், அவள் தோளில் முகம் புதைத்து வந்த விம்மலை அடக்கினாள்.

“சூப்பரா இருக்கல்லா பைரவி? பிடிச்சிருக்குத் தானே?” மதி கேட்க, “பின்ன? தம்பி அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் பாத்து பாத்து ஒண்டு ஒண்டையும் செய்விச்சவர் எல்லா!” என்றார், கௌசல்யா.

“எல்லாமே பிடிச்சிருக்கு ஆன்ட்டி! நான்… உண்மையாவே இந்தளவு எதிர்பார்க்கேல்ல!”  

குரல் குழையச் சொன்னவள் பார்வை, மெல்லச் சுற்றிச் சுழன்றது. அந்த தொங்கு கதிரையில் இருந்து எட்டி எடுக்கும் வகையில், அதே மரக்கலரில் ஒரு புத்தக அலுமாரி; அங்கங்கே இண்டோர் பிளாண்ட்ஸ்;  அதிலும், கன்னத்தில் கையூன்றி, அவளையே பார்த்த சிறு பெண், தலையில் மணிபிளாண்ட் தொட்டியைத் தாங்கி நின்றாளே! பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

மறுபுறம், ஒரு ஏஞ்சல் சிலை; அதிலிருந்து சென்ற வயர் இரவில் ஒளிரும் என்றது; இருபக்கமும் வெண்சிறகு விரித்துச் சற்றே தலை குனிந்து நின்ற ஏஞ்சல், இவள் மனதை இழுத்தெடுத்துத் தன்னுள் சுருட்டி வைத்துக் கொண்டது.

உள்ளே வந்ததும் எதிர் எதிரே இரு பிரவுன் லெதர் குசன்கள்; இரண்டுக்கும் பக்கத்தில் மரக்குற்றி ஒன்று, டிபோவாக! 

“எலிகண்ட் வேர்க்! உம்மட அண்ணாவுக்குத்தான் பெரிய பெரிய தாங்க்ஸ்  சொல்லோணும்.” மெல்ல இறங்கியவள் பார்வை, அவனைத் தேடியது;  கண்ணில் படவில்லை.

“அப்பாடா! இனி ஆரூரன் அண்ணாவோட மல்லுக்கு நிக்க மாட்டிரே மச்சாள்!” கண்ணடித்த மயூரன், “சரி சரி, இப்பச் சொல்லும், நாங்க ரெண்டு வருசம் இருந்திட்டுத் தரலாமா?” கடித்தான்.

“அத்தார் அடிதான் வாங்குவீங்க. நானும் பைரவியும் தான் இங்க.” மதி இடைபுகுந்தாள்.

“அதானே? அப்பவே சொன்னன், இதைவிட சூப்பரா உங்கட மனிசிக்குக்  கட்டிக் குடுங்கவன். என்ன நிலா?” என்ற பைரவி, “நாம ரெண்டு பேரும் இங்க. சாப்பாடு உம்மட வீட்டில், தேத்தண்ணியும் சேர்த்தே தந்திருங்கோ ஆன்ட்டி!” கண்ணடித்துச் சொல்ல, அந்த இடமே கலகலப்பானது.

“எல்லாருக்கும் தேத்தண்ணி போடுறன்.” கௌசல்யா செல்ல, பாமினி அழைத்தார். உவகையும் பரபரப்புமாக, ஒவ்வொரு அங்குலம் அங்குலமாகக்  காட்டிக்கொண்டு வந்தாள், பைரவி. சுகுமார் பாமினியும் இப்போதுதான் முழுமையாகப் பார்க்கிறார்கள். 

“எங்க ஆரூரன், ஒருக்காக் குடம்மா!” என்றார்,பாமினி.

“ம்ம்ம் பொறுங்க பாக்கிறன்.” என்று அவள் நகர , “அண்ணா காளான் கொட்டில் பக்கம் நிப்பார் எண்டு நினைக்கிறன்.” என்றபடி, அவளோடு கூடவே வந்த மதி, “தேத்தண்ணிய இங்கயே கொண்டு வாறன், ஊஞ்சலில இருந்து குடிப்பம்.” என்றபடி வீடு நோக்கி ஓடினாள்.

இரண்டாவது காளான் கொட்டிலடியில் நின்ற ஆரூரன், இவள் பார்வையில் பட்டான்.

“அம்மா ஒருக்கா கட் பண்ணிட்டு எடுக்கவா?”அவர், பதில் சொல்ல முதல் அழைப்பைத் துண்டித்தவள், விறுவிறுவென்று சென்று அவன் பின்னால் நின்று கொண்டாள்.

இதுவரை, அவனோடு ஒரு வார்த்தை சுமுகமாகக் கதைக்க நினைக்கவில்லை. இக்கணம், அப்படி இருக்க முடியவில்லை. என்னதான் காசு குடுத்து ஆள் பிடித்து வேலை செய்தாலும், ‘முழு கிரெடிட்டும் இவனுக்கே’ என்றது, அவளுள்ளம்.

“மிஸ்டர்…ஆரூரன்”  மெல்ல அழைத்தாள். உள்ளே இருந்த ஒருவரோடு கதைத்துக்கொண்டு நின்றான் போலும்; எதையோ சொல்லிக்கொண்டே திரும்பியவன் ஒற்றைப் புருவம் உயர்ந்தது. என்ன என்று கேட்கிறாராமே! வம்பு கொண்ட மனம் சிலுப்பியபடி சீற முனைய, பட்டென்று அதட்டி  அடக்கிக் கொண்டாள், பைரவி. அக்கணம், நிறைந்திருந்த அவள் மனம், மகிழ்வோடு வார்த்தைகளை எழச் செய்தாலும்  மூச்சு வாங்க தொண்டைக் குழிக்குள் தரித்து நின்றன, அவை. 

அவளை நோக்கித் திரும்பியவன், “என்ன?” என்றான்.

ஒன்றுமில்லை என்பதாக அசைந்தது, அவள் தலை; மனதுள் நிகழ்ந்த மாற்றங்களின் பிறழ்வு  கண்களில் கண்ணீரை நிரப்பிவிட்டது. அவதியாக நெளிந்தவளை, “என்ன விசயம்?” பார்வையில் கூர்மையோடு, அவளை நோக்கி வந்து நின்று கேட்டான்.

“இல்ல… நல்ல வடிவா எல்லாம் இருக்கு. தாங்க்ஸ்!” என்றவள், “அம்மா கதைக்க வேணுமாம்.” தாய்க்கு அழைத்து கைப்பேசியை நீட்டினாள்.

சற்றே ஏறியிறங்கிய புருவத்தோடு, அவளில் இருந்த பார்வை விலகி கைப்பேசிக்குச் செல்ல, வாங்கிக் காதில் ஒற்றிக்கொண்டவன் மீண்டும் பைரவி முகத்தைப் பார்த்தான்.

“ஏதாவது இன்னும் செய்ய வேணும் எண்டாலோ, பிடிக்கேல்ல எண்டாலோ சொல்லும் செய்யலாம்.” என்றபடி, “சொல்லுங்க ஆன்ட்டி.” பாமினியோடு கதைக்க ஆரம்பித்திருந்தான். 

“பைரவி… இதை ஒருக்காப் பிடியும்.”

மதி, இரு கைகளிலும் பாரத்தோடு வர, அவளை நோக்கி ஓடியவளை அவன் பார்வையும் தொடர்ந்தது.

 

error: Alert: Content selection is disabled!!