அத்தியாயம் 20 – 1

நான், என் சுற்றம், என் சொந்த நாடு என்றளவுக்கு முழித்து விட்டார்களா என்ன? தம்மை வாரிச் சுருட்டவுள்ள, போதைப்பொருள் என்னும் கொடும் சூறாவளியை, இன மத மொழி மறந்து கைகோர்த்து, துகள் துகளாக்கி ‘ப்பூ’ என்று, ஊதித்  தள்ளிவிடுவோம் என்று, சபதம் எடுத்து விட்டார்களா என்ன? தம் பார்வையில், தலையாட்டி பொம்மைகளாக உறுதியாக நம்பப்பட்டவர்களாச்சே! எப்படிச் சாத்தியம்? போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபார உலகமே முழித்தது. 

நீ என்ன ரோல்ஸ் செய்வது? அதுவும், என் ஸ்டோல்களில் விற்க, நான் கெஞ்சிக் கொண்டு வருவேன் என்ற பெருத்த நம்பிக்கையோடு! அந்தளவுக்கு என்ன திரவிய ருசியாம்? 

அவள் முன்னால் வைத்து, ரோல்சை சுவைக்கவில்லை, ஆரூரன். அவள் எதிர்பார்ப்புக்கு ஒரு பெருங் குட்டுக் கொடுத்து விட்டான்! 

இது என்ன சிறுபிள்ளைத்தனம்? அவள் முகக் கன்றலில்  அல்ப சந்தோசம்? அவன் மனமே கேள்வி கேட்டாலும் பதிலிறுக்க முனையாது கடந்து விட்டான்.

மதியின் நண்பிகள், நண்பர்கள் வந்ததும் வீடு களை கட்டியது. 

இவளால், எல்லோரோடும் எப்படித்தான் இத்தனை இலகுவாகப் பழக முடிகிறதோ! இதுபற்றி, நிலாவும் மதியும் அடிக்கடிக் கதைப்பதுண்டு. அந்தளவுக்கு, சிறு பொழுதில், மதியின் நட்புகள் அவளுக்கும் நட்புகளாகியிருந்தார்கள். 

ஆரூரன், அன்று வெளியில் செல்லவில்லை. வீட்டு வளவில், மற்றும் பைரவி வளவில் உள்ள காளான் கொட்டில்களில் தான் மாறி மாறி நின்றான். 

பெரும் சிரிப்பலை, அதில், பளீரென்று தெரிந்த அவள் சிரிப்பு, அவனுள் சிடுசிடுப்பையும் மிகச் சில சமயங்களில் முறுவலையும் உற்பத்தியாக்கி கண்ணாமூச்சி ஆட்டத்துக்குத் தொடக்கப்புள்ளியிட்டது. சிடுசிடுப்பு என்னவோ ஆரம்பத்திலிருந்தே உள்ளதுதான். முதல், அவளில் மட்டுமா என்ன? இந்த முறுவல்? எப்போது முளைத்தது? சற்றே தடுமாறிப் போனான், ஆரூரன். 

கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா!

வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! 

வீதியால் சென்ற ஐஸ்கிரீம் வேனில் ஒலித்த பாடல் தேய்ந்து கொண்டு சென்றது. ஆரூரன் மனமோ கேட்டுக் கேள்வியில்லாது,கால் முளைத்த பூவோடு அவளைப் பொருத்திப் பார்த்திட்டு! 

பச்! அவள் நடவடிக்கைகள், கதை பேச்சு, சிரிப்பு என்று, பார்க்கவும்  ரசிக்கவும் வைக்கிறாளே! 

இப்படி எண்ணியவன் நினைவில் முன் வந்தார், பாமினி; பின்னாலே சுகுமார். மிகுந்த நம்பிக்கையோடு, கிட்டத்தட்ட அவர்கள் பொறுப்பில் விட்டிருக்கிறார்கள்; வயதில் மிகவும் சிறியவள். 

அவனுள், துளிர்விட முயன்ற சுவாரசியத்துக்கு, ஆரம்பத்திலேயே கொல்லி மருந்தடிக்க இது போதாதா? அதுவே, சின்ன விசயத்துக்கும் வேலை செய்யும் பெடியனில் சுள்ளென்று எரிந்து விழவும் வைத்திருந்தது.

“என்ன வச்சு அனுங்கிக் கொண்டிருக்கிற? இஞ்சால தள்ளு!” அவனை விலக்கி விட்டவன், உரிய அளவுகளில் ஒன்று ஒன்றையும் சேர்த்து, தானே தூள் கலந்தான். 

“இதில கையைப் பிசைஞ்சு கொண்டு நிண்டு!” பெடியனிடம் உறுமினான்; புதிதாக வேலைக்குச் சேர்ந்தவன் முகம் கன்ற தலை சொரிந்தான்.

“போ! போய், பக்கற் போடுற சாமான்களை எடுத்து வை! இல்லாட்டி வீட்ட நட,  நானே அதையும் செய்யிறன்.” 

அவன், இப்படி உறுமிக் கொண்டிருக்கையில், எதையோ எடுக்கவென்று, தன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பைரவி நடை சற்றே தயங்கியது. பெடியன் வேறு, வந்த சில நாட்களில் அவள் நண்பனாகியிருந்தானா… அவமானமும் முகக் கன்றலுமாக அவளைப் பார்த்துச் சின்னதாக முறுவலித்தான், அவன்.

அது, ஆரூரன் கழுகுக் கண்ணில் பட்டுவிட்டது. “நான் உன்ன வீட்ட போகச்  சொன்னனான். போ! வெளில போய் நிண்டு பல்லைக் காட்டு!” பற்களை நறும்பினான்; பார்வையோ, பைரவியைச் சுட்டது. 

“இரும்புக் கம்பி விழுங்கின கணக்கில திரியிற பைல்ஸ் கேசுகளுக்கு, மனசில இருந்து வாற, சின்னச் சிரிப்பிட பெறுமதி எங்க தெரியப் போகுது?”

அவனுக்குக் கேட்கட்டும் என்று, சத்தமாகவே சொல்லிவிட்டு ஓடி விட்டாள், அவள். இன்னுமே நின்று, அவனோடு வாயடி என்றது மனம். பாவம் அந்தப் பெடியன், வீட்டுக்கே அனுப்பியும் விடுவான். 

“சிடு மூஞ்சி!”

‘பைல்ஸ்? ஆர் எனக்கா?’ மனதுள் அலறி விட்டான், ஆரூரன். பரிசிகெடுக்கிறதே இவளிட வேலை! பெடியன் முகம் பார்க்க முடியவில்லை. அந்தச் சிரமம் புரிந்தோ என்னவோ, காளான் கொட்டிலுக்குள் நுழைந்து விட்டான், அவன். உள்ளே நின்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாலும் சிரிப்பான். பற்களை நறும்பியவனுக்கு, பின்னால் சென்று, அவளுக்கு நாலு குட்டுக் கொடுக்க முடிந்தால் என்றிருந்தது.

பிறந்தநாளுக்கு வந்த நண்பர்கள், பொழுது சாயத்தான் புறப்பட்டுச் சென்றிருந்தார்கள். வியர்க்க விறுவிறுக்க, அழுக்கு உடையோடு, கரங்களையும் முகத்தையும் மட்டும் கழுவிட்டு வந்து, முற்றத்தில் கிடந்த மரக்குற்றியில் அமர்ந்தான், ஆரூரன்.

“அம்மா!” அழைத்து முடிக்கவில்லை, “தம்பி, கோப்பி தரட்டா ராசன்.” கௌசல்யாவின் தலை தெரிந்தது.

“ம்ம்ம்… இலேசாப் பசிக்குது அம்மா. ஏதாவது இருந்தாத் தாங்கவன், சாப்பிட்டுப் போட்டு, குளிச்சிட்டு, வெளில கொஞ்சம் வேலை இருக்கு. இண்டு, ஹோட்டல் பக்கமும் போகேல்ல.”

“நீங்க சொன்னாக் கேட்கிற மனுசரா தம்பி? ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இராப் பகலாத் திரியுங்க. வேலைக்கு எடுத்த பெடியள நிக்க வச்சுப் போட்டு  நீங்க செய்யிறது எண்டா…” என ஆரம்பித்தவர், அவன் முறைப்பில் நிறுத்திவிட்டு, புறுபுறுப்போடு உள்ளே நுழைந்தார். 

அதேநேரம், பலகாரங்களோடு வெளிவந்தாள், நிலா. அவனிடம் ஒரு தட்டைக் கொடுத்துவிட்டு, மறு கையில் உள்ள தட்டோடு, சற்றே தள்ளி அமர்ந்திருந்த பைரவி, மதி நோக்கி நடந்தாள். 

மயூரன் வந்து நிலாவை அழைத்துச் செல்வான் என்றதில், அவளும் இங்கு தான்.

இப்போ சரி, தான் தயாரித்த ரோல்ஸ் சாப்பிடுவானா?  கடைக்கண்ணால் பார்த்தாள், பைரவி. ருசி பற்றி எல்லோரும் பாராட்டினார்கள். செய்முறை கூடக் கேட்டார்கள். பைரவி தான், அதையும் இதையும் சொல்லி மழுப்பி விட்டாள்.

“மதி, இங்க ஒருக்கா வா!” அழைத்தான், ஆரூரன்.

“என்ன அண்ணா?” என்று சென்றவளிடம், “எனக்கு இந்த ரோல்ஸ் வேணாம். கொண்டுபோய்ச் செய்தவாவிட்டயே குடு!” என்றதும், விசுக்கென்று எழுந்துவிட்டாள், பைரவி. 

“அண்ணா பகிடிக்கு பைரவி!” அவள் கரம் பற்றி அமர்த்த முயன்றாள், நிலா.

“எது பகிடி? நானும் பாத்துக்கொண்டு தான் வாறன். சும்மா சும்மா என்னோட தனகிற வேலை வச்சுக்கொள்ள வேணாம் எண்டு உங்கட கொண்ணாட்டச் சொல்லீருங்க. இல்லையோ!” விசுக்கென்று நகர்ந்து விட்டாள்.

“அம்மாடியோவ் நிலா! எனக்குச் சரியான பயமா இருக்கு. நான் சாப்பிடுறன், ஒண்டும் செய்திர வேணாம் எண்டு சொல்லிவிடு!” ரோல்ஸை எடுத்தவன், விசுக்கிக் கொண்டு செல்பவளையே பார்த்துக் கொண்டு கடித்தான்.

“பைரவி வாரும் எண்டுறன்.” நிலா அழைக்க அழைக்க அவள் போய்விட்டாள்.

“நல்லாத்தான் இருக்கு என்னம்மா? உங்கட வளர்ப்பு மகளிட்டக் கேட்டு நம்மட ஸ்டோலில விக்க ஏற்பாடு செய்யுங்கவன்.” கோப்பியோடு வந்த தாயிடம் அவன் சொன்னது,  சகோதரிகளுக்கும் சந்தோசம் . 

“உண்மையாவா தம்பி? பைரவி கேட்டாச் சந்தோசப்படுவா!”

“ம்ம்… அதோட மஸ்ரூம் பிரியாணியும் போடலாம் எண்ட பிளான்.  புது வருசத்தில இருந்து அறிமுகம் செய்யலாம் என்ன? நீங்க என்ன  சொல்லுறீங்க?” 

சற்று முன் தான், அதுவும் அத்தி பூத்தாற் போன்று இலகுவாகக் கதைத்தான்; அவனா இவன் என்றபடிக்கு, தொழில் பற்றிய பேச்சில் ஆழ்ந்து விட்டான்.

 

 

error: Alert: Content selection is disabled!!