அத்தியாயம் 21 – 1

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபார உலகக் குழப்பத்தின் உச்சகட்டமாக, இலங்கையை ஒட்டிய சர்வதேசக் கடற்பரப்பில் தரித்து நின்றது, கடல் நீல வண்ண, பாரிய சொகுசுக் கப்பலொன்று. அங்கு, அன்றிரவு ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்வு நடக்கவிருந்தது. அதற்காகவே, அந்த இரவில், அக்கப்பல் அங்கு நங்கூரமிட்டு நின்றது. போதைப்பொருள் வர்த்தகத்தின் தலைமையின் வலது கைகள் ஐவர் – ஆப்கான் நாட்டினர் மூவர், இலங்கை மற்றும் இந்தியா நாட்டினர் இருவர்; அன்று, அந்த கப்பலில், இலங்கைப் பிரதிநிதிகளுக்காகக்  காத்திருந்தார்கள்; உச்சபட்ச கொதிநிலையில்! 

புது வருடத்திலிருந்து, தன் செய்முறையில் தயாரிக்கும் ரோல்ஸ், ‘ஆரூர் மஷ்ரூம் பூட்’ ஸ்டோல்களில் வரப்போவதைக் கேட்ட பைரவிக்கு, அவ்வளவு மகிழ்வு. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. 

‘கொம்பருக்கு ஏறிரும்!’ உதட்டுச் சுழிப்புக்குள் மகிழ்வைப் பதுக்கிக்கொண்டாள். 

“நான் பகிடி பகிடியாத்தான் சொன்னனான் ஆன்ட்டி. உங்கட மகன் உண்மையாவே கேட்டவரா? இப்பிடிச் சரி, அவரிட ஸ்டோல்களில  வியாபாரம் கூடினாச் சரிதான். உங்கட முகத்துக்காகச் செய்முறையைச்  சொல்லித் தாறன்.” அவள் இப்படிச் சொன்னதும், மகன் முன்னிலையிலேயே, சந்தோசமாகக் கதைக்க ஆரம்பித்த கௌசல்யா தான் தவித்துப் போனார்.

“கனடாக்காரர் அம்மா, இப்பிடித்தான் இருப்பீனம்!” உதட்டைச் சுழித்தபடி அவன் நகரப் போனான்.

 “ஓம் தான், அது விளங்கினாச் சரி!” என்றவள், “ஆனா, எனக்கு வேலை தர வேணும் சொல்லிட்டன்?”அவன் முன்னால் சென்று நின்றாள்.

“நீர் இங்க என்னத்துக்கு வந்தனீர்? படிக்க எவ்வளவு இருக்கும். விளையாடாமல் படியும்.” கண்டிப்போடு சொல்லிவிட்டான், ஆரூரன்.

“ஹலோ! அதெல்லாம் எங்களுக்குத் தெரியும் சரியோ! இப்ப எனக்கு  வேலை தர ஏலுமா ஏலாதா? ஆன்ட்டி என்ன பாத்துக்கொண்டு நிக்கிறீங்க? இல்லாட்டி, தனுசன் எங்கயோ வேலை இருக்கு என்றவர், நான் அங்க போறன்.” அவன் முறைப்புக்கு எதிர் முறைப்பைக் கொடுத்தபடியே சொன்னவளை என்ன செய்வது? 

“தம்பி, பிள்ளை ஆசைப்படுறா எல்லா, கொஞ்ச நாளைக்குச்  செய்யட்டுமன்.” 

“ம்மா அதுக்கு…” என்று ஆரம்பித்தவன், “சரி, கணக்குகள் பாக்கிறது கொம்ப்யூட்டர்ல தான். எனக்கு உதவி செய்யும். மதிதான் உதவுறவா. இப்ப, இந்த ரெண்டு கொட்டில்கள் மேலதிகமா வந்திருக்கு. ஸ்டோல்  வருமானமும் கூடிக்கொண்டு போகுது. சேர்ந்து செய்யலாம்.” என்றதில் அவளுக்குத் திருப்தி இல்லை.

“காளான் அறுவடையில…” மெல்லச் சொன்னவளைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ, அன்றொருநாள், அதிகமாகவே முகத்துக்கு நேரே ஏசியதை நினைத்தானோ என்னவோ! சின்னச் சிரிப்போடு, “சரி, இங்க மூன்று கொட்டிலிலும் நடக்கேக்க செய்யலாம்.” என்று விட்டானா… அவள் முகம் அப்படியே மலர்ந்திட்டு. 

“ஆனா ஒண்டு, அதுக்கு நான் சம்பளம் தரமாட்டன். ஒரு நாளைக்குக்  கொட்டிலுக்க போய், காளானில கை வச்சா, நீர் தான் ஏழாயிரம் படி எனக்குத் தர வேணும். ஓகே எண்டா வரலாம்.”  விழிகள் சுருங்க, சீண்டல் சிரிப்போடு சொல்லிச் செல்பவன், முதல் முதல் அவள் கண்ட ஆரூரனா என்ன? அப்படியே நின்றிருந்தாள், பைரவி.

“என்ர மகன் இப்பிடி எல்லாம் பகிடியாக் கதைக்கிறதப் பாக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு!” முணுமுணுத்த கௌசல்யா, ஒரு கலியாணம் சரிவருதில்லையே என்ற கவலைக்குள் சென்றுவிட்டார். பெண் வீட்டுக்குப் பிடித்தால் இவனுக்குப் பிடிக்காதாம். அவன் அமைதியாக இருந்தால், ஏதோவொரு காரணத்தால் பெண் வீட்டுக்குப் பிடிக்காது போய் விடுகிறது.

முக்கால்வாசி நேரம், வெளிநாடு வெளிநாடு வெளிநாடு! தலை சுற்றித் திரிகிறார், கௌசல்யா. உள்ளூர் ஆண்கள் திருமணம், குடும்பம் என்று சிறப்பாக வாழ்வதில்லையா என்ன? அவர்களைக் கட்டிய பெண்கள் என்ன வக்கில்லாது திரிகிறார்களா? அல்லது, வெளிநாட்டில் மட்டும் எல்லோரும் அமோகமாக, மகிழ்வாக வாழ்கிறார்களா? 

இக்கரைக்கு அக்கரைப் பச்சை! மனதுள் குமைந்து போனார், கௌசல்யா.

‘ஆரையாவது காதலிச்சு இருந்தா?’ என்ற எண்ணம் கூட வந்திட்டு. அதோடு, “ஆர் இவனா?” அவர் மனமே, அவரை நக்கலாகப் பார்த்து வைத்தது.

நாட்கள், கிழமைகள், மாதங்கள்  உருண்டோடின!

இப்படியிருக்கையில், இரு மாதங்களில் வந்த வருடாந்த விடுமுறைக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி, ஐரோப்பாச் சுற்றுலா சென்றுவிட்டு, அப்படியே கனடா சென்று வரப் புறப்பட்டிருந்தாள், பைரவி. மயூரனும் நிலாவும் அவளை அனுப்பி வைக்கவென, கொழும்பு செல்லவிருந்தார்கள். 

அதிகாலையே எழுந்து தயாரானாள், பைரவி. இலங்கை வந்து இரு வருடங்களின் பின்னர் ஐந்து கிழமைகள், அதுவும் வெளிநாடுகளில் சுற்றிவிட்டுச் சொந்த ஊர் செல்லவுள்ளாள். மகிழ்வாக இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு வகையான தவிப்பு! புதுவுணர்வு! அதை விலக்கிவிட முனைந்தாலும் விடாது தொடர்கிறதே!

வெளிக்கிட்டுவிட்டு, கோப்பியோடு சென்று, தொங்கு கதிரையில் அமர்ந்தாள்; கால்கள், அவளையும் அறியாது மேலே வந்துவிட்டன; சம்மணமிட்டுச் சாய்ந்தமர்ந்தவள் பார்வை, மேலே, சன் ரூஃபினால் தெரியும் மென் வெளிச்சம் பரவிய வானில்! சிந்தையோ, எங்கெங்கோ… 

திரைச்சீலை விலக்கிக் கிடந்த யன்னல் கண்ணாடியால் தெரிந்த அவள் மோன நிலை, மனதுள் எதுவோ செய்ய, மெது நடையில், அவளையே  பார்த்தபடி, ஆரூரன் செல்வதை பைரவி அவதானிக்கவில்லை.

ஒரு கப் கோப்பியை, சொட்டுச் சொட்டாக உறிஞ்சியவள், “இனியும் இருந்தா…” எழுந்து கொண்டாள்.  நிலாவும் மயூரனும் ஆறரை போல்,  நிலா வீட்டுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். 

நேரத்தைப் பார்த்தவள், சிறிதும் பெரிதுமான இரு பயணப் பைகள், முதுகுப் பை சகிதம் வீட்டை விட்டு வெளியில் வரவும், காளான் கொட்டிலில் வேலை செய்யும் பெடியன் வரவும் சரியாக இருந்தது. 

மலர்வோடு காலை வணக்கம் சொன்னவன், “வெளிக்கிட்டாச்சா? கவனமாப் போயிட்டு வாங்கோ!” என்ற வேகத்தில், “தாங்க, நான் கொண்டு வந்து தாறன்.” இரு பைகளையும் வாங்கிக் கொண்டான்.

அவனோடு கதைத்தபடி நடந்தவள் பார்வையில், ஆரூரன் தலை தென்பட்டது.

 “அங்க வீட்டில வச்சு விடுங்க அண்ணா, இந்தா வாறன்.” குடுகுடுவென்று அவன் நோக்கி நடந்தாள், பைரவி.

“எஸ்க்கியூஸ் மீ மிஸ்டர் ஆரூரன்!” மிரட்டல் குரலே தான். ஆனால், அதில் மிரட்டலைத் தாண்டியும் செய்தி இருந்ததோ!

error: Alert: Content selection is disabled!!