அத்தியாயம் 21 – 2

சடக்கென்று திரும்பினான், அவன். என்ன செய்கிறாள் பார்ப்போம் என்றே எதிர்பார்த்திருந்தவனாச்சே! இவ்வளவு உரிமையோடு, நெஞ்சாழம் வரை சென்று அருட்டும் நெருக்கத்தோடு, இதுவரை,  அவனை, எந்தப் பெண் குரலும் அழைத்தது இல்லை. அவன் தாய், சகோதரிகள், சில நண்பிகள் என்று, தவிர்க்கவே முடியாத பெண்கள் அவன் வாழ்வில் உள்ளார்கள் தான்; மரியாதை ஒட்டி நிற்கவே, அந்த ஆரூரனை அல்லது அண்ணாவை உச்சரிப்பார்கள். 

சிறுவயதில், பரிவும் பாசமும் குழைந்து கிடந்த தாய் குரலில், இப்போதோ, மரியாதையும் அக்கறையும் அன்பும் கலந்துதான் ஒலிக்கும். 

ஆனால் இது? பல்கலைக்கழகக் காலம் தொடங்கி, அதிகப் பரபரப்பும் ஓய்வுமற்ற அவன் நாட்களில், முதன் முதலாக, சிந்திச் சிதறிப் பட்டுத் தெறிக்கும் மழைத்தூறலாய், அவன் மனதுள் இதம் உணர்த்துகிறாள், இவள்.

தலைகோத எழுந்த கரம் அழுக்காக இருந்தது. அருகில் தொங்கிய துணியை இழுத்தெடுத்து அழுந்தத் துடைத்து, மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டான், ஆரூரன். கணநேரத்தில், மனதுள் நிகழ்ந்துவிட்ட  மாற்றத்தை, நின்று நிதானித்து உணர முனையவில்லை, அவன். 

மீண்டும் அவளைப் பார்த்தான்; கேள்வியும் சேர்ந்திருந்தது.

 மேலும் கீழுமாக அளக்கிறானா என்ன? இடுப்பில் கை வைத்து முறைத்தவள், டைட் ஜீன்ஸ், தொள தொள டீ சேர்ட்டில் இருந்தாள். கொழும்புக்குப் போறாவாம்! 

அவன் பார்வையைத் தொடர்ந்து, தன்னைத் தானே  மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டவள், உதடுகளோடு சேர்ந்து நகைத்த விழிகளால் அவனை எதிர்கொண்டாள்.

“நாங்க கனடாக்காரர் ஓகே!” சீண்டல் சிரிப்போடு சொல்ல, அவனுக்கும் சிரிப்புத்தான் வந்தது.

“பயணம் போற மனுசர, கொழும்பு வரை கொண்டு வந்து விடாட்டியும் பரவாயில்லை, வாசலுக்கு வந்து அனுப்ப வேணும் எண்டு கூடத் தெரியாதா உங்களுக்கு?” வலு உரிமையான சீண்டல். அவனுக்கு என்னவோ போலிருந்தது. 

உள்ளெழுந்த தவிப்பை வெகுவாக முயன்று கட்டுப்படுத்த வேண்டியவனானான், ஆரூரன். தன் நிமிர்வாலும் தீர்க்கமான பார்வையாலும் வெகுவாகவே சமாளித்தான்.

“கண்டவையையும் வழியனுப்ப, கொழும்பு வரை வர, நாங்க என்ன வேலை வெட்டி இல்லாத மனுசரா என்ன?” வெடுக்கென்று தான் சொல்ல நினைத்தான். ஆனால், குரல் அவனைக் கைவிட்டுவிட்டதில், அதில் உச்சபட்ச சீண்டல் தான் வெளிப்பட்டுத் தொலைத்தது. 

“கண்டவே! நான் உங்களுக்கு கண்டவளோ!” என்றபடி, அவன்  பார்வையை, நிமிர்வாகத் தாங்கிய விழிகளை விட்டுப் பார்வையை  விலக்காது நிற்க வேண்டும் என்று,  முதல் முதலாக, ஆசை கொண்டது அவனுள்ளம். 

‘அடோய் ஆரூரா!’ மனதின் அதட்டல் சுதாகரிக்க வைத்திருந்தது. 

“சும்மா தான் சொன்னன். ஐஞ்சு வருசமும் படிச்சுப் போட்டு, ஒரேயடியா கனடா போவீர் எல்லா? அப்ப, நான் தான் வந்து ஏற்றி விடுவன்.” என்றவன் குரலில் என்ன இருந்தது? எதுவோ இருக்கு! மனதுள் ஏதோ செய்ய, அவன் முகம் பார்க்க முனைந்தாள், பைரவி. அவனோ, நடக்கத் தொடங்கியிருந்தான்.

“அப்ப, கவனமாப் போயிட்டு வாரும்.” என்றான், அவளைப் பாராது.

“அத முகத்தைப் பாத்துச் சொன்னா குறைஞ்சு போவீங்களா?” எட்டிச்  சேர்ந்து நடந்தவள் பார்வை, வழமைக்குத் திரும்பியிருந்த இறுகிய அவன் முகத்தில்.

அவள் பார்வையுணர்ந்து, பெரிய மனது பண்ணி வலு சிக்கனமாகச்   சிரித்தானேயொழிய, அவளைப் பார்க்கவில்லை. முகத்தைப் பிடித்தா அவள் முகம் பார்க்க வைப்பது? கற்பனை கொடுத்த சிறு முறுவலோடு  நடந்தாள், பைரவி. 

கொழும்பில், கொடுக்கல் வாங்கல்கள் பற்றி, மயூரனோடு கதைத்துக்கொண்டு நின்றவன், சிறு தலை அசைப்பில் விடை கொடுத்துமிருந்தான். 

error: Alert: Content selection is disabled!!