“இந்தநேரம் பயணத்துக்கு உகந்தது இல்லை.” என்று அதையும் இதையும் சொல்லித் தடுத்துவிட்டார்கள் நித்தியும் கார்த்திகேயனும்.
அதில் உண்மையும் இருக்கவே குழந்தைகள் பிறந்ததும் வரலாம் என்று அமைதியானார் கமலா. அப்படியிருந்தும், ‘குழந்தைகள் பிறக்கும் பொழுது பெரியவர் துணையின்றி என் மகள் எப்படிச் சமாளிப்பாளோ!” என்று கலங்கிக் கொண்டிருந்தவர், கார்த்திகேயன் இப்படிக் கேட்டதும் குபுக்கென்ற மகிழ்வால் நிறைந்துதான் போனார்.
ஆனாலும், “நானா? எப்படித் தம்பி! அதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை என்று மதுரா சொன்னாளே!” என்று சொல்ல, கேட்டிருந்த மதுரா தலை குனிந்தாள்.
“அது…உங்களுக்கு இவர்கள் பிரச்சனை தெரிய முதல் ஆன்ட்டி; நான் எல்லாம் ஒழுங்கு செய்கிறேன்!” என்ற கார்த்திகேயன், சொன்ன மாதிரியே அனைத்து ஒழுங்குகளையும் செய்து விட்டான்.
“எப்படியும் இரண்டு மாதங்களில் விஸா வந்துவிடும்; குழந்தைகள் பிறப்புக்கு நீங்க வரலாம்!” கார்த்திகேயன் சொல்லக் கேட்ட கமலா, “தம்பி, நீங்க செய்வதற்கெல்லாம் நான் எதைச் சொல்ல, எதைத் தர, தீர்க்கவே முடியாதளவு நன்றிக் கடன் பட்டுள்ளோம் தம்பி!” கண்ணீர் விட்ட தாயைப் போலவே, நன்றியால் நெஞ்சம் முட்டிப் போனாள் மதுரா.
உறவோ, அதிக பழக்கமோ இல்லையென்றாலும், நித்தி கார்த்திகேயன் இருவரும் தன் வாழ்வில் வகிக்கும் அங்கம் போல் மற்றவர்கள் இல்லை என்றே இவளுக்குத் தோன்றியது.
“மதுரா ரெடியா! நேரமாச்சு.” கார்த்திகேயனின் குரல் செவிகளுள் நுழைய, திடுக்கிட்டு நினைவுகளிலிருந்து விடுபட்டு எழுந்தவள், ஒன்பதென முறுவலித்த கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “அண்ணா எது செய்வதென்றாலும் எங்கு போவதென்றாலும் டைம் என்றால் டைம்!” என்று நித்தி சொல்வதை நினைத்துக்கொண்டே, “நான் இன்னமும் தயாராகவில்லையே!” முணுமுணுத்தாள்.
“இதோ இதோ..ஐந்தே நிமிடம்!” உரத்துச் சொன்ன வேகத்தில், பரபரவென்று உடைமாற்றிப் புறப்பட்டு வெளியில் வர, ஹாலில் அமர்ந்திருந்தவன், “டைம் இருக்கு மதுரா ஆறுதலாக வாங்க.” என்றான்.
“இல்ல, நான் ரெடி போவோம்!” என்றவளிடம், “இன்சூரன்ஸ் கார்ட், ஹாஸ்பிடல் கார்ட் எல்லாம் எடுத்தீங்களா?” வினவியவாறே முன்னே நடக்க, தயங்கியவாறே பின்னால் சென்றாள் அவள்.
முன்னிருக்கைக் கதவைத் திறந்து இருக்கையை பின்னுக்குத் தள்ளி அவள் வசதியாக இருக்க வழிசெய்துவிட்டு, “ம்ம்.. ஏறுங்க!” கதவைப் பிடித்துக்கொண்டு காத்து நின்று, அவள் ஏறியதும் சாத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் வந்தமர்ந்து காரைச் செலுத்த தொடங்கினான் கார்த்திகேயன்.
குழந்தைகளுக்கு ஆறுமாதத்தில் இவர்கள் வீட்டுக்கு வந்திருந்தவள், ஏழாம் மாதத்துக்கு நித்தியோடுதான் வைத்தியசாலைக்குப் போயிருந்தாள். இவளை விட சிலவயது குறைவாக இருந்தாலும், பெரிய மனிசி போல, தானே கதைத்து இவளுக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லி இருந்தாள் நித்தி.
வீட்டிலும் தாயைப் போன்ற அக்கறையோடு கவனித்துக் கொள்பவளின் கரிசனையில் இவள் நிச்சயம் அசௌகர்யத்தை உணரவில்லை. ஆனால் இப்போது, கார்த்திகேயனின் உரிமையான கரிசனை இவளுக்கு எதுவோ போலிருந்தது. அவனோடு வைத்தியசாலை செல்வதில் மிகவும் சங்கடத்தையே உணர்ந்தாள் இவள்.
மாறாக, அவனோ அவளுக்கு உதவுவதில் மகிழ்வோடு வந்தான். இந்த சில நாட்களிலேயே தன் தங்கை போலவே இவளும் தன் பொறுப்பு என்கின்ற ஒரு எண்ணம் இவனுள் ஆழப் பதிந்து போயிருந்தது அதற்குத் துணை செய்தது.
காரிலேறியதிலிருந்து அமைதியாக வருபவளை ஓரிருமுறை பார்த்தவன் பேச்சுக் கொடுக்கும் எண்ணமின்றி காரைச் செலுத்தினான். கால்மணிநேர காரோட்டத்தில் வைத்தியசாலையை வந்தடைந்து, மதுராவை வாயிலில் இறக்கி விட்டவன், “உள்ளே போய் நில்லுங்க, காரைப் பார்க் பண்ணிவிட்டு வருகிறேன்!” நிறுத்துமிடம் நோக்கிப் போனான்.
சிலநிமிடங்களில் வேகநடையில் ஒரு ஓரமாக நின்ற மதுராவை அணுகி, “போவோம் வாங்க; முதல் மாடிதானே? ஸ்டெப்ஸால் போவோமா?” அவள் தலையாட்டுதலோடு மெதுவாக இணைந்து நடந்தான்.
“ஹ்ம்ம்…இன்றைக்கு ஸ்கேன் பண்ணுவார்கள்; என் செல்ல ஏஞ்சல்ஸ்சை நான் பார்க்க முடியாதே!” காலையில் தங்கை புலம்பியதிலிருந்து இவனுள் ஏற்பட்டிருந்த ஆர்வக் குறுகுறுப்பு அதிகரித்துக் கொண்டே சென்றது!
இவனின் தமக்கைக்கு இரு பிள்ளைகள் இருந்தாலும் அருகில் இருக்காததால் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. மதுராவின் குழந்தைகள் விடயம் அப்படி இல்லையே! அதுவும், அவள் குழந்தைகள் பற்றிய பேச்சை ஒதுக்க ஒதுக்க, இவனும் நித்தியுமாக அப்பேச்சை வளர்த்தார்கள். அதுவே, இவர்களையும் அறியாது குழந்தைகள் மீதான பாசத்தை இவர்களுள்ளும் ஆழமாக மலரச் செய்திருந்தது.
‘ஒன்றுக்கு இரண்டாக குழந்தைகள்!’ இப்புத்தம் புது அனுபவம் அவனுள் ஆர்வக் குமிழிகளை சரமாரியாகப் பரவவிட்டு கிச்சுக் கிச்சு மூட்ட, தன்னைமறந்து தன்னருகில் வருபவளை நோக்கினான்.
அவளோ, தொலைத்த பொருளைத் தேடுகிறேன் பேர்வழி நிலத்தையே பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் பதற்றமாக இருப்பது போலிருக்கவே, “என்ன மதுரா? யோசனை பலமாக இருக்கு! ஒ.கேவாகத் தானே இருக்கிறீங்க?” சந்தேகத்தோடு வினவியவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், “ம்ம்ம்..எனக்கு ஒன்றுமில்லை; நல்லாத்தான் இருக்கிறேன்!” மென்று விழுங்கினாள்.
எதையோ சொல்ல நினைத்து தயங்குவது போலிருக்கவே, “என்ன மதுரா, எதையாவது சொல்ல வேண்டுமா?” மீண்டும் கேட்டவன், “இல்லை, ஒன்றுமில்லை!” என்றவள், மெல்லிய முறுவலோடு படிகளில் ஏற, தானும் சேர்ந்து ஏறினான்.
மதுராவின் முறைக்கு இன்னமும் கால்மணி இருக்கவே, அங்கே காத்திருப்போருடன் இணைந்து கொண்டார்கள் இவர்களும். அவளை அமர விட்டு தானும் அருகில் அமர்ந்து கொண்டவன், தன் முன்னால் இருந்த ஆடவனைப் பார்த்து, சிநேகமாக முறுவலித்தான் .
அவன், மதுராவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “எத்தனையாவது மாதம்? கார்த்திகேயனிடம் விசாரித்தான்.
“எட்டாவது!”
“ஓஹ்! சந்தோஷம் சந்தோஷம்!” என்றவன், “இவளுக்கும் எட்டாவது மாதம் தான்!” தன்னருகில் இருந்த பெண்ணைக் கைகாட்ட, அவளும் பேச்சில் இணைந்து கொண்டாள்.
மதுராவோ, முன்னாலிருந்த சிறுமேசையில் வைக்கப்பட்டிருந்த ஒரு மகஸினை புரட்டியவாறே, வாசிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
“நாட்கள் நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு அதிகரித்து, மனதுக்குள் எதுவோ செய்கின்றதல்லவா?!” கேட்ட அவ்விளைஞன் தன்னருகில் அமர்ந்திருந்தவள் கரங்களைப் பற்றி, தன் மனம் உணர்ந்ததோடு நேசத்தைக் கலந்து பார்வையால் அவளுக்கு உணர்த்தினான்.
அதைப் பார்த்திருந்த கார்த்திகேயனின் பார்வை, சட்டென்று மதுராவின் முகம் நோக்கிப் பாய்ந்தது!
அவள் பார்வையும் கணத்தில் இவன் விழிகளைத் தொட்டுவிட்டு சங்கடத்தோடு விலகிக் கொண்டது.
“எங்களுக்கு முதல் பிள்ளை; ஆண்குழந்தை! நீங்களும் என்ன குழந்தை என்று பார்த்தீர்களா? முதல் குழந்தையா?” ஆர்வமாக வினவினாள் அப்பெண்.
“ம்ம்.. முதல் குழந்தை, இல்லை இல்லை குழந்தைகள்; இரட்டையர்கள். பெண் குழந்தைகள்!” மகிழ்வும் கனிவுமாக தயங்காது வந்தது கார்த்திகேயன் குரல்.
“வாவ் சூப்பர்! சூப்பர்! அதனால் தான் உங்க வைஃப் வயிறு இவ்வளவு பெரிதாக இருக்கு!” என்ற அப்பெண்மணியின் குரல் செவிப்பறையில் மோதிய அக்கணம், மீண்டும் அவன் பார்வை மதுராவின் முகத்தில் பட்டு, அதிர்ந்த அவள் விழிகளைத் தொட்டு, ஒரு கணம் நிலைத்து விலகியது.
அதோடு, அவனே காரணமறியாது தடுமாறும் வகையில் அவன் மனமோ பரபரப்பானது!
கால்மாற்றிப் போட்டு வசதியாக இருப்பது போல பாவனையெல்லாம் செய்தான் கார்த்திகேயன். அக்கணம், தன்னைத் தானே முற்றிலும் புதியவனாக உணர்ந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். இலேசான சங்கடம் கலந்த பிரித்தறிய முடியாத உணர்வுக்கோளம் அவன் நெஞ்சைக்கவ்வி இம்சை செய்தது. மீண்டும் ஒரு தரம் அருகிலிருப்பவளை பார்க்க வேண்டும் போன்றதொரு எண்ணம் தோன்றி அந்த வேகத்திலேயே மறைந்தும் போனது!
தன் முன்னால் இருப்பவள் தன்னோடு பேச்சைத் தொடர்வதை உணர்ந்து முறுவலோடு உரையாடியவன், மறந்தும் மதுராவின் புறம் திரும்பவில்லை. தன் ஒவ்வொரு பேச்சுக்கும் பக்கவாட்டில் அவள் பார்வை சுட்டுப் பொசுக்குவதை உணர்ந்தும் உணராதவன் போல் பேச்சைத் தொடர்ந்தான் அவன்.
முன்னால் இருந்த ஜோடி, இவர்களை தம்பதிகள் என்று முத்திரை குத்தி தம் பேச்சைத் தொடர, சளைக்காது பதில் கொடுத்து அளவளாவினான் கார்த்திகேயன். அக்கணம் அவ்வாறன பேச்சை அவன் மனம் வெகுவாக இரசித்ததோ என்று ஐயம் கொள்ளத் தேவையே இல்லாதவகையில் அப்பேச்சை இரசித்தான் அவன்.
ஏற்கனவே அவனோடு வந்ததில் மிகுந்த சங்கடம் கொண்டிருந்தாள் மதுரா. அவனை எப்படி உள்ளே அழைத்துச் செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தவள், “நீங்க வெளியே இருங்க; அவர்கள் சொல்வதேதாவது விளங்கவில்லை என்றால் உள்ளே வரலாம்.” என, அவன் முகத்திற்கு நேராகச் சொல்ல தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
அவனோ, உன் மனைவி என்று அவர்கள் சொல்லச் சொல்ல அதை மறுக்கும் எண்ணமின்றி சாதாரணமாக பேச்சைச் தொடர, உச்சகட்ட அதிர்வோடு கோபம் கொண்டாள்.
‘இந்தாளை எந்த வகையில் சேர்ப்பது!? இவள் என் மனைவி இல்லை; ஒருவரும் இல்லாததால் அழைத்து வந்தேன் என்று சொல்வதால் இப்போ என்ன நடந்துவிடும்! இவர்கள் கதைக்கும் வேகத்துக்கு பாஷை விளங்காது என்று எண்ணிக் கொண்டாரா!?’ மனம் குமுற பார்வையால் அவனைச் சுட்டவள், அவன் தன்னைப் பார்க்காது உரையாட இன்னும் கோபம் கொண்டாள்.
அவனைக் காக்க வந்தது போல் மதுராவை உள்ளே வரும் படி அழைத்தார் ‘மிட் வைஃப்’.
சட்டென்று எழுந்தவள் முன்னே இருந்த மேசையில் காலை இடித்துக் கொண்டு தடுமாற, “பார்த்து, பார்த்து மதுரா! இப்போ ஏன் இவ்வளவு அவசரம்?” அவளது மேல்கையில் அழுந்தப் பற்றியவாறே தானும் சேர்ந்து எழுந்தவனை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“நீங்க வெளியில் இருங்க நான் போய்ட்டு வருகிறேன்!” என்று தொண்டைவரை வந்ததை எப்படிச் சொல்வதென்று தடுமாறிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது சிறிதும் தடுமாற்றம் வரவில்லை.
“எனக்கு…நான்…தனியாக உள்ளே போகிறேன்; நீங்க வர வேண்டாம்!” அளவுக்கு அதிகமான அழுத்தத்தோடு வார்த்தைகள் வந்துவிழ, சட்டென்று திகைத்துப் போனான் கார்த்திகேயன்.
கணத்தில் சுதாகரித்துக் கொண்டவன், அவளை உற்றுப் பார்த்தவாறே, “ஓ! சரி.” விலகி, “கீழே கன்டீனில் இருக்கிறேன்; இங்கு முடிந்ததும் கால் பண்ணுங்க!” நகர்ந்தவன், மீண்டும் அவளருகில் வந்து, “ஃபோன் நம்பர் இருக்குதா?” அவளோ பதில் பேசாது நின்றாள்.
தான் சொன்னதில் அவன் முகத்தில் கணத்தில் வந்துபோன அடிபட்ட பாவனையில் மனதுள் தடுமாறிவிட்டாள் மதுரா. அதேநேரம், தான் சொன்னதில் பிழை காணவும் அவளால் முடியவில்லை.
‘இதுதான் நான் தனியாக போய்க்கொள்கிறேன் என்று நித்தியிடம் தலைப்பாடாகச் சொன்னேன். இப்போ, வீண் மனஸ்தாபம்.’ அவள் மனதில் கலங்க, அவள் கரத்திலிருந்த கைபேசியை வாங்கி தன் இலக்கத்தை டயல் செய்துவிட்டு, “ஸேவ் பண்ணிக் கொள்ளுங்க!” பதிலை எதிர்பாராது திரும்பி நடந்தான் அவன்.
கன்டீனில் இருக்கிறேன் என்று நகர்ந்தவன் திரும்பி வர, “உனக்கு பாஷை அவ்வளவாகத் தெரியாதல்லவா? நித்தி திருப்பத் திருப்பச் சொல்லி அனுப்பினாளே, நானும் உன்னோடு வருகிறேன்!” என்று சொல்லப் போகிறான் என்றுதான் இவள் நினைத்தாள்.
அவனோ, கைபேசி எண்ணைத் தந்துவிட்டு திரும்பியும் பாராது நகர அசையாது பார்த்து நின்றவள், ‘அவர் மனதை வருத்தி விட்டேனா?’ என்றதையும் மீறி நிம்மதியுணர்வோடு தன்னை அறிமுகம் செய்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

