அது என்ன உன் வீடா? அவர்கள் இரு என்றால் அப்படியே இருந்து விடுவாயா? உன் சொந்த வீட்டையும் உற்றவர்களையும் பராமரிப்பது போல நீ நடந்து கொள்ளவில்லையா? வெட்கமே இல்லாமல் அவர்களின் கரிசனைகளையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளவில்லையா?
ஏதோ தவறுதலாக உளறிவிட்டேன் என்று மன்னிப்புக் கேட்டவன் அந்தளவு உரிமையாக தொப்புள் கொடியை வெட்ட தைரியம் கொண்டது யாரால்?
என்னதான் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும் நம் பழக்கவழக்கங்கள், வரைமுறை மிகவும் நன்றாகத் தெரிந்தவன்; அதன்படி வாழ்பவர்கள் அவர்கள்.
இத்தனைநாள் உன்னிடம் தள்ளியே நின்றவன்; இன்று அவ்வளவு சுலபமாக உன்னை நெருங்கி நின்றானே! அது யார் கொடுத்த தைரியம்!” அவளின் மனசாட்சியோ, தயை தாட்சன்யமின்றி ஒரேயடியாக அவளைக் குற்றவாளியாக்கி விட்டது. மிக மிக கலங்கித் துடித்தாள் அவள்.
“இப்ப நீ என்னதான் சொல்லிக் கொண்டாலும், ஊசி இடம் கொடாது நூல் நுழைவது சுலபமில்லை மதுரா. அவன் கரத்தைப் பற்றிக்கொண்டு போய்விடாதே என்று நீ சொல்லவில்லையா?” மனசாட்சியின் தொடர்ந்த சீறலுக்குப் பதில் சொல்லத் தெரியாது வெட்கி நின்றாள் அவள்.
‘நானா அப்படியெல்லாம் நடந்து கொண்டேன். சிலமணித்தியாலங்களுக்கு முன் அந்நியன் என்று எண்ணியவரை, என்னைவிட்டு விட்டுப் போய்விடாதே என்று சொல்லி, கணவன் மட்டுமே நுழையும் குழந்தை பெறும் இடத்துக்கு எப்படி அழைத்துச் செல்லச் சம்மதித்தேன்.’ நினைவுகளின் மோதல் வெகுபயங்கரமாக அவளையே அதிரச் செய்தது.
“நான்..நான் எப்படி அப்படி நடந்து கொண்டேன்!” மெல்ல மெல்ல விறைப்பு எடுபட்டு அடிவயிற்றில் வலியை உணரத் தொடங்கியிருந்தவள் அதையே இலேசெனச் சொல்ல வைக்கும் வகையில் மிகையான வலியை உள்ளத்தில் உணர்ந்தாள்.
பச்சை இரணத்தில் அரைத்த மிளகாயை அழுந்தப் பூசியதுபோல தேகம் முழுவதும் எரிச்சல் எடுக்க, துடித்துப் போனாள் அவள்.
“இல்லையில்லை; நான் தப்பான எந்த நோக்கத்திலும் அவரைப் பார்க்கவில்லை.” வாய்விட்டே அரற்றியவள், கணேஷ் இறுதியாகச் சொன்ன சொற்கள் காதுகளில் எதிரொலிக்க, ‘கடைசியில் அதையெல்லாம் நிஜமாக்குவது போலவா நடந்து கொண்டேன்!’ பெரிய தலையணைக்குள் தலையின் பின்புறத்தை பலம் கொண்டமட்டும் அழுத்தினாள்.
“திடீரென்று அப்படி நடந்ததும் குழந்தைகளுக்கு என்னவோ ஆகிவிடும் எனக்கு எதுவோ ஆகிவிடும் என்று என்னைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாது பயந்து போனேன்.
அந்த நேரம் என்னை அறிந்திருந்தவர் அவர் ஒருவர் தானே! என்னையும் அறியாதுதான் அவர் அருகாமையைத் தேடினேன்.” தன்னைத் தானே குற்றம் சுமத்தத் துணிந்த மனச்சாட்சியின் முன்னால் கூனிக்குறுகி நின்றவாறே பரிதாபமாக அரற்றினாள்.
‘அவர் கூட நீ நித்தி போல என்றுதானே சொன்னார். உயிர் பிழைத்து குழந்தைகளையும் சுகமாகப் பெற்றுக்கொண்டு வருவேனோ என்று நான் தவித்த தவிப்பை எப்படிச் சொல்வேன்! அந்த நேரத்தில் அவர் அருகாமை எனக்கு எவ்வளவு தெம்பைத் தந்தது! நான் தனியில்லை என்கின்ற அந்த உணர்வே என்னை அமைதியாக்கியது. ஆனால் அவரோ…’ கண்ணீர் விட்டாள்.
‘மற்றவர் கைப்பொம்மையாக ஆவதே என் வாழ்வா?’ தைரியம் அனைத்தும் வடிய வாய்விட்டு அழுதவளைக் கண்டு, உள்ளே வந்த கார்த்திகேயன் அதிர்ந்து போனான்.
“ராது..ராதும்மா என்ன செய்யுது?! வலிக்குதாடா?” பதறியவாறு நெருங்கியவன், அவள் பார்வையின் தீட்சண்யத்தில் அப்படியே சிலையானான்.
“என் கிட்ட வராதீங்க! என் பெயர் மதுரா. அதைக் கூட உங்க வாயிலிருந்து கேட்க நான் விரும்பவில்லை.” அத்தனை ஆத்திரம் எங்கிருந்து வந்ததோ அவளுக்கே தெரியாது.
அப்போதும், மனதில் புகையும் புகைச்சலை அவன் முகத்துக்கு நேரே கேட்டு, அவனை ஒரு குற்றவாளியாகச் சுட்டி, எதிர்த்து, அவமானப்படுத்தி என்று எதையும் செய்யும் எண்ணம் அவள் மனதில் துளியும் எழமாட்டேன் என்று அடம் பிடித்தது.
இப்போதும் அவன் முகம் பிரதிபலித்த சொல்லவொண்ணா அதிர்வில் இவள் மனம் சுருண்டுதான் போனது.
‘அதற்கு ஒன்றே ஒன்றுதான் காரணம். அந்தளவுக்கு நான் ஒன்றும் நன்றிகெட்டவள் இல்லை. என்னை இவரும் இவர் தங்கையும் கவனித்துக்கொண்டது போல யாராலும் பார்த்திருக்க முடியாது.
என்னை, என் மன அழுத்தத்திலிருந்து முழுவதும் மீட்டது இவர் வீடுதான். எனக்குள் நம்பிக்கையைக் கொண்டு வந்தது, என் குழந்தைகள் மீது பாசத்தைக் கொண்டு வந்தது எல்லாம் அந்த வீடும் இவர்களும் தான்.’ மனஉணர்வுகளோடு கலந்து, சூடான விழிநீர் அவள் காதோரம் வடிந்தது.
‘அதற்கென்று இவர் நினைப்பது போன்றவளும் நான் கிடையாது.’ மனதில் கடுமை பரவ அவன் பார்வையைத் தயங்காது எதிர்கொண்டாள்.
அவள் முகத்தின் சோர்வையும் மீறி ஆவேசம் குடிகொண்டிருப்பதைக் கண்ட கார்த்திகேயன் சுதாகரித்துக் கொண்டான். அவன் மனதில் இலேசான பயம் கூட எட்டிப் பார்த்தது .
“நீ இப்போது எதுவும் பேச வேண்டாம்; பேசாமல் நித்திரை கொள். நான் வீடு வரை போயிட்டு வாறேன்.” சட்டென்று திரும்பியவன், “கொஞ்சம் நில்லுங்க.” அவளின் உயர்ந்த குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
“இங்க பாருங்க, முடியாமல் படுத்துக் கிடக்கிறேன் அதுவும் வைத்தியசாலையில்; அந்த ஒன்றுக்காக நீங்க தப்பி விட்டீங்க என்பதை நினைவில் வைத்திருங்க .”
“உங்களில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தேன். இந்த நிமிடம் அது எதுவுமே என் மனதில் இல்லை. மிகவும் சராசரியான மனிதன் நீங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டீங்களே!” என்றவள் விழிகள் நிறைந்து வழிந்தன.
“ராது..” அவளை நெருங்கியவன், அவள் கரம் எழுந்து ‘நில்’ என்பதாகக் காட்ட, நின்று விட்டான்.
“அப்படி என்னைக் கூப்பிட வேண்டாம்; அருவருப்பாக இருக்கு. நீங்க இப்படிச் சொல்வதையும் செய்வதையும் பார்க்கையில் அந்த கணேஷுக்கும் எனக்கும் வித்தியாசமே இல்லை போல இருக்கு..” கசந்த குரலில் சொன்னவள் ஒரு சிரிப்புச் சிரித்தாள். அதில் நிறைந்து வழிந்தது வேதனையும் விரக்தியும்.
“என்ன சார், என்னைப் பார்த்ததும் நெஞ்சு முட்ட பரிதாபம் கொண்டு விட்டீங்க போலவே! அனாதையாக குழந்தைகளோடு நிற்கிறாள்; வாழ்வு கொடுப்போம் என்று வெளிக்கிட்டு விட்டீங்க போல!” அப்பட்டமான இகழ்ச்சி!”
பேசத் துடித்த நாவை அடக்கப் பெரும் பாடுபட்டான் அவன். “எதைப் பேசுவது என்றாலும் வீட்டுக்கு வந்து பேசலாம் மதுரா. தயவு செய்து அமைதியாக இரம்மா.” அவனின் கனிவு அவள் கோபத்தை எகிற வைத்தது.
“என்ன வீட்டுக்கா? எங்க, உங்க வீட்டுக்கு இனியும் வருவேன் என்று நினைக்கிறீங்களா? இருக்க இடமில்லாமல் குழந்தைகளோடு ரோட்டில் நின்றாலும் இனி அங்கு வரமாட்டேன். நீங்க இதுவரை எனக்குச் செய்தது எல்லாம் போதும்; இனி இந்தப் பக்கம் வர வேண்டாம்.” கிறீச்சிட்ட அவள் குரலில் ஓடி வந்தாள் தாதிப் பெண்.
“என்ன நடந்தது? ஏன் சத்தம் போடுறீங்க?” தாதி கேட்டதற்கு பதில் சொல்லாமல் நகர முயன்றவன் மீண்டும் மதுராவின் குரலில் நின்று திரும்பினான்.
“என் விருப்பம் எது என்பது தெரிந்த பின்னும் உங்கள் விருப்பத்தை என்னில் திணிக்க, என்னை அதிகாரம் செய்ய எங்கிருந்து உங்களுக்குத் துணிவு வந்தது? யாருமில்லாதவள் என்கின்ற நினைவு தந்த துணிவா?”
“மதுரா இதென்ன! எதுவென்றாலும் பிறகு பேசிக் கொள்ளுங்கள். இப்போது கொஞ்சம் அமைதியாக இருங்க.” அவர்கள் தமிழில் பேசுவது விளங்காவிடினும் நிலைமை சரியில்லை என்றுணர்ந்த தாதி குறுக்கிட்டாள்.
“தயவு செய்து என்னை இப்படியே விட்டு விடுங்கள். எனக்கு என்னையும் குழந்தைகளையும் பார்க்கத் தெரியும். இனி இந்தப் பக்கம் நீங்க யாருமே வரத் தேவையில்லை.” ஆங்காரமாக ஆரம்பித்தவள் குரல் உடைந்து விழிநீரோடு கையெடுத்துக் கும்பிட்டாள்.
கல்லென இறுகிவிட்டது கார்த்திகேயன் இதயம்!
அவளின் மனநிலையை புரிந்துகொள்ள முயன்றாலும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவளையே வெறித்தவன் மறுகணம் மௌனமாக வெளியேறிவிட்டான்.

