அத்தியாயம் 22 – 1

நடு இரவு தாண்டியிருந்தது; எங்கிருந்து வந்ததென்று தெரியாதே இலங்கைக் கடல் பகுதியில் முளைத்த நவீனரகப் படகொன்று, அந்த நவீன கப்பல் நோக்கிச் சீறிச் சென்றது; அங்கு, அதை எதிர்பார்த்து இருந்தார்களாக்கும். வந்தவர்கள், சர்ரென்று இறங்கிய ஏணியிலேறி, பெரிய கப்பலுக்குள் இறங்கினார்கள்.

 அவர்களை, சற்றே தொலைவில், கடலோடு கடலாக, தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த நவீன படகொன்றில் இருந்த நான்கு கண்கள் உற்றுப் பார்த்த வண்ணமிருந்தன. இருவர் பார்வையும் ஐபாட் திரையை விட்டு அசையவில்லை; நவீன கப்பலுள் உள்ளிட்டவர்களோடு சேர்த்து, இப்போது, அக் கப்பலிலுள்ள  நடமாட்டமும் பேச்சுகளும் கூட துல்லியமாக அவர்களை நாடி வந்தது.  

கொக்குவில் காளான் பண்ணையை விடவும் சற்றே பெரியது, பைரவி வீட்டு வளவில் உள்ள இரண்டு கொட்டில்களும். ஆரூரன், எப்போதுமே சுழற்சி முறையில் தான் காளான் விதைப்பான். அதுவே, தினமும் அவன் தேவைக்கான காளான்களைத் தந்து கொண்டிருந்தது. 

முதல் நாள், பாமினி வீட்டு வளவில், காளான் பெட் தயாரித்து, 3 மணிநேரம் அவித்து ஆற விட்டிருந்தார்கள். இரு கொட்டில்களுக்குமாக கிட்டத்தட்ட 1000 பெட்கள். இன்று, முதல் வேலை அவற்றுக்கு விதையிடல்.

இருள் பிரியாப் பொழுது! வேலைக்கு வரும் இருவரும் வர முன்னரே, தானே ஊற்றிய ஆவி பறக்கும் கோப்பியோடு வந்து விட்டான், ஆரூரன். அவன் மனம், ஒரு நிலைக்கு வர மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது; அதுவே, சில மணித்தியாலங்கள் என்றாலும் ஆழ்ந்து நித்திரை கொள்பவனை, உருண்டு பிரண்டு கொண்டு கிடக்கவும் வைத்திருந்தது. 

அவனையும் அறியாதே, அண்மைய நாட்களில் வந்து விட்ட பழக்க தோசம், புதிதாகக் கட்டிய, அந்தக் கண்ணாடி அறையைப் பார்த்தபடியே பைரவி வீட்டைச் சுற்றி வர வைத்திருந்தது. இருண்டு கிடந்த அவ்விடம், மனதின் அவாவோடு இணைந்து தவித்த பார்வைக்கு, ஏமாற்றம் கொடுத்தது; முதல் நாள் காலை, அவள் சென்று விட்டதை, மீண்டும் ஒரு தடவை உணர்த்தியும் நின்றது.

அதைவிடவும் புதினம் என்னவென்றால், அண்மைக்காலமாக, அவன் அந்த வீட்டைச் சுற்றி வரும் காரணம், வேறு எதுவும் இல்லை, அந்தத் தொங்கு கதிரைக்குள் சுருண்டு கிடப்பவளே என்று, தலையில் தட்டி உணர்த்தியும் விட்டது.

இந்தளவுக்கு, பைரவியால் அவன் பாதிப்படைகிறானா? சத்தியமாக ஏற்க முடியவில்லை. முதல், அது நல்லதில்லையே! மனதைக் குட்டி அடக்க முயன்றாலும் முடியவில்லை. இப்போ, ஏன் குட்டி அடக்கப் பார்க்கிறாய் என்று, வீம்பு பிடித்த மனதுக்கு, ஏன் தான், வெட்ட வெளிச்சமாகக் கிடக்கும் உண்மை விளங்குதில்லையோ?

“உள்ளூரில் இருப்பவரே வெளிநாடு வெளிநாடு என்கையில், வெளிநாட்டு மருத்துவச்சி, அவளை விடவும் பத்து வயது மூத்தவனைக் கட்டி இங்க வாழச் சம்மதிப்பாளா?” என்று, கேட்டே விட்டான். வார்த்தைகள் ஒன்று ஒன்றும் செவிவழி நுழைந்து முகத்தைச் சுளிக்கவே வைத்தது.

இப்போது, காளான் அறுவடை தொடங்கி, அது தொடர்பான எந்த வேலை என்றாலும் ஆர்வத்தோடு வந்து தலை கொடுக்க நிற்பவள், இதுதான் வாழ்க்கை முழுவதற்கும் என்றால்? தெறித்து ஓடுவாளா இல்லையா? அவன் நெஞ்சம், உச்சபட்ச கசப்பை உணர்ந்தது.

இந்தா அந்தாவென்று வந்து, முறிந்து போன கல்யாணப் பேச்சு வார்த்தைகள் ஒன்றொன்றும் நினைவில் வர, வாய்விட்டுச் சிரிக்கத்  தோன்றியது. எல்லாம் கடந்து, தனக்காக, கனடாவில் ஒருவன் காத்திருப்பதாகத் சொல்லியும் இருக்கிறாளே! சேயோனாமே! அதை, இவன் சகோதரிகளும் மயூரனும் பகிடியாகவே கதைத்தாலும் இப்போது, அவனால் அதைப் பகிடியாக எடுக்க முடியாதிருந்தது. 

மொத்தத்தில், உனக்கு இது தேவையே இல்லாதது ஆரூரன். மனதை, அதன் ஆசைகளை, விருப்புகளை அடக்கியாள்வது அவனுக்குத்தான் கை வந்த கலையாச்சே! மடமடவென்று கோப்பியைக் குடித்துவிட்டு அமர்ந்தவன், விதை போடும் வேலையைத் தொடங்கி விட்டான். 

இதேநேரம், அதிகாலை ஒரு மணிக்கு, நெதர்லாந்து நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கண் மூடியபடியிருந்தாள், பைரவி. விமானத்தினுள் படர்ந்திருந்த மெல்லிய இரவு வெளிச்சம், முக்கால்வாசிப் பயணிகள் உறக்கம் என்றது. 

அடுத்து வரவிருக்கும் மூன்று கிழமைகளுக்காக, பதின்ம வயதின் பின் பகுதியில் இருந்தே ஏங்கியிருக்கிறாள், பைரவி. அவள் மனதோடு ஒத்துப் போகும் பால்ய கால நட்புகள் நால்வரோடும் ஊர் சுத்துவதென்பது, இதுவரை, அவளுக்கு வாய்க்கவில்லை. காலை போய் மாலை வருவதென்றால், இவள் வீட்டில் தலையாட்டி இருக்கிறார்கள். அதுவும் இடையிடை, தாயும் தந்தையும் மாறி மாறி ‘all ok ?’ அனுப்பிவிடுவார்கள். பதில் அனுப்பத் தாமதமாக தாமதமாக, கேள்விகளின் நீளம் கூடும். அந்தத் தாமதம், பத்துப் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் செல்லுமாயின், பாமினி அழைத்தே விடுவார்.  

இரு ஆண்கள், இரு பெண்கள்; சேயோன் தவிர, மிகுதி மூவருமே  கனேடியர்கள் தான்; இதோ, இனி மூன்று கிழமைகளுக்கு, ஐரோப்பா கண்டத்தின் முக்கிய இடங்களில் எல்லாம் இவர்கள் நிற்கப் போகிறார்களே! இப்படி, மனதுள் பரபரப்போடு இருந்தவள் நினைவில் அனுமதியேயின்றி நழுவி நுழைந்தது… ஓர் உருவம்!

“ஆ…ரூ…ர…ன்” சத்தமே வராது உச்சரித்தன, உதடுகள்; மனதுள் இதம் படர்ந்தது; முகத்தில், அவளே உணராது மலர்வு வந்திருந்தது. 

அவன் பற்றியதான அவள் கணிப்பு, நாளுக்கு நாள் மாற்றம் கண்டுகொண்டே தான் இருக்கிறது. அதுவும், மலர் இல்லத்திற்கு எப்போ வந்தாளோ, அதன் பின்னர், அவன் குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில், அவன் மீது மரியாதை கூட வந்திருந்தது. அவனால், தானும் பாதுகாக்கப்படுகிறோம் என்று அவள் உணர்ந்த கணம், அந்த உணர்வு கூட, மிகவும் இதம் தருவதாக இருந்தது. அப்படி என்னதான் பாதுகாத்தான்? என்ன தேவைக்காம்? என்பவற்றைப் புறம்தள்ளி, அந்த நினைவே, மென்முறுவலை உதடுகளில் உரசிச் சென்றது. 

பைரவி, ஒரு சாமக்கோழி! இரவிரவாக இருந்து படிப்பாள்; எழுதுவாள்; கதைப்புத்தகம் வாசிப்பாள்; படம்… மொழி பேதமின்றி இரசித்துப் பார்ப்பாள். பகலில், முடிந்த நேரங்களில் நித்திரை கொண்டுவிடுவாள். அப்படித்தான், அந்தக் கண்ணாடிப் பகுதிக்குள்ளிருந்து அவள் படித்துக் கொண்டிருக்கையில், இரவேறிய நேரத்தில், அவள் வீட்டை ஒரு தடவை சுற்றினால் தான் நித்திரை வரும் என்ற வகையில், அவன், மெல்ல நடந்து போவதைப் பார்த்தும் பாராது இருந்திருக்கிறாள். 

தினம் வீட்டில் தங்கும் ஆள் இல்லை, அவன். அரைவாசி நாட்கள், கொக்குவில் காளான் பண்ணையில் தூங்கி விடுவான் என்று கௌசல்யா சொல்வார். இப்போது, இங்கும் காளான் உற்பத்தி அதிகரித்துள்ளதால், இரவேறிய நேரத்திலும் வேலை செய்து கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும். 

 

ஒரு நாள், அதிகாலை ஒரு மணியிருக்கும், அவன் அப்படிச் செல்கையில், “என்ன மிஸ்டர் ஆரூரன், எப்பப் பாத்தாலும் ரோந்து போறீங்க?” கதவைத் திறந்து எட்டிப் பார்த்துக் கேட்டு விட்டாள். 

 

அந்த அந்தகாரத்தில், இவள் இடையீட்டை எதிர்பார்க்கவில்லைப் போலும். அதுவும், வெளிச்சம் இருக்கே ஆள் எங்கே என்று, பார்வையால் துழாவிக் கொண்டு வந்தவன், கண்ணாடிக் கதவோரமாக இருந்த இருக்கைக்குள் பதுங்கியிருந்து விட்டு, எட்டிப் பார்த்து அவள் கேட்கவும் சற்றே நெளிந்தான். எல்லாம் கணம் தான்; நன்றாகவே முறைத்தான், ஆரூரன். 

 

இந்த முறைப்பெல்லாம் யாரிடமாம்? நெற்றி ஏறியிறங்க, பதிலுக்காகப் பார்த்து நின்றவள் விழிகளில் விசமமும் குறும்பும். 

 

“மணி என்ன? இன்னும் தூங்காமல் என்ன செய்யிறீர்? போய்த் தூங்கும்!” அதட்டல் தான் பதிலாம். 

 

அது போதாதா அவளுக்கு?

 

“நான் இப்ப என்ன கேட்டனான்? நீங்க என்ன சொல்லுறீங்க?” என்றுதான் ஆரம்பித்தாள். அடுத்த கால் மணித்தியாலம், அவனை, அசைய விடாது நிற்க வைத்து வாயடித்திருந்தாள். 

 

சிலு சிலு குளிர்காற்றுப் போதாதென்று, குளிர்மையை வாரியிறைத்துக்கொண்டு இருந்தான், சந்திரன்; அந்த, இரம்மியமான சூழலில், இருவரும் சண்டைக்கோழிகளாகச் சிலிர்த்துக் கொண்டு நின்றார்கள்.

 

முடிவில், “ஐயோ தாயே! தவறிப்போய்ச் சொல்லிப்போட்டன். நீர் உம்மட மூப்புக்கு என்னவாவது செய்து துலையும்!” சீறிவிட்டுச் சென்றிருந்தான், அவன். 

 

அது ஏனோ தெரியாது, அவனுடனான அத்தனை முட்டல் மோதல்களை விடவும் இந்தக் கால் மணி நேரம், அவளிதயத்தில் முன்னின்று, அவள் மனதை இலேசாக்கி விடும். ‘அது ஏனாம்?’ என்ற கேள்விக்குள் நுழையவோ, பதில் தேடவோ பஞ்சியாக இருந்தது. பதில் தேடப்போய், அந்த இரும்பன் ஏமாற்றம் தந்துவிட்டால்? மனதோரம் இருந்த எச்சரிக்கை, அவளுக்கு, அவளுணர்வுகளுக்கு மிகவும் கவனமாக எல்லையிட்டுக் கொண்டது.    

அத்தனையையும் மீறி, மலர்ந்த முறுவலோடு, “ஹி ஐஸ் சோ சோ ஸ்பெசல்!” மெல்ல முணுமுணுத்தாள், பைரவி.

ஆரூரன், கடும் உழைப்பாளி; பாசமான மகன், சகோதரன்; அக்கறையும் கட்டுப்பாடும் மட்டுமா? அன்பும் காட்டுவான். என்னதான் சிடுசிடுத்தாலும் அவனோடு மல்லுக்கு நிற்க, அவன் குணங்களே காரணம்.

இப்படியே, அவன் நினைவுகளோடு தான் கண்ணயர்ந்திருந்தாள், பைரவி. எல்லாமே, நெதர்லாந்தில் விமானம் தரையிறங்கி நண்பர்களைக் காணும் வரை தான்; இலங்கையையே மறந்துவிட்டாள், அவள்.

 

error: Alert: Content selection is disabled!!