“22 ஆம் ஆண்டின் கணிப்பீட்டின் படி, பின்லாந்து, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நோர்வே, சுவிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய ஆறு நாடுகளும், உலகில் சிறந்த குடிநீர் வழங்கும் நாடுகளாக இனம் காட்டப்பட்டுள்ளன.”
பெருமையோடு சொன்ன கைட், சுற்றிலும் உள்ள கட்டிடங்கள் பற்றி, குட்டியாக, மனதில் நிற்கும் படி விளக்கினார்.
அடுத்த அறுபது நிமிடங்களில், சின்னதும் பெரிதுமான 1,500 பாலங்கள், பிரதான கால்வாய்களை ஒட்டியதாக அமைந்திருக்கும் 1550 நினைவுச்சின்ன கட்டிடங்கள் என உள்வாங்கி, மயங்கிப் போனது இவர்கள் விழிகள்; தட்டித் தட்டி ஓயாது, இன்னுமே தட்ட ஆவல் கொண்டன விரல்கள்; புகைப்படக் கருவிகளோ, எவ்வளவு என்றாலும் இரசிக்கத் தயார் என்றன.
ஐவரும், அங்கிருந்து இறங்கிய வேகத்தில், 3 நிமிட தூரத்திலுள்ள ‘Anne Frank Huis’ நோக்கி நடந்தார்கள்.
போர் என்பது பைரவி, சேயோனுக்குப் புதிதானதல்ல; அதன் அனர்த்தங்களை,கொடூர வலியை நேரடியாக அனுபவிக்காவிட்டாலும் கேட்டு கேட்டு, அந்த இரணம் உணர்ந்து வளர்ந்தவர்களாச்சே! அதுவே, இங்கு கட்டாயம் செல்ல வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்திருந்தது.
இரண்டாம் உலகப் போரின் அனர்த்தங்கள் உகலகறிந்தவை. இருந்துமே, இன்னுமே அந்தப் போரை, அது தரும் கொடூர வலியை, கொடுக்கவும் பெறவுமே மனிதர்கள் பின்னிற்கிறார்கள் இல்லையே! கால்வாய்களில் சுற்றுகையில் இருந்த இலகு மனநிலை மாறி, தீவிரமாகக் கதைத்தபடி நடந்தார்கள், ஐவரும்.
ஜெர்மானியர்களின் கொடூரத்துக்குச் சாட்சியாக, இக்குட்டி நாட்டில் பலதுகள் உண்டு. அதில் முக்கியமானது, ‘Anne Frank’ என்ற, யூதச் சிறுமி கைப்பட எழுதிய நாட்குறிப்பேடு!
அன்று, நூறாயிரக்கணக்கான யூதர்கள் மற்றும் சிந்தி ரோமானியர்களைச் சல்லடை போட்டுத் தேடிப்பிடித்து, Kamp Westerbork என்ற இடத்தில், சகல சௌகர்யங்களோடும் வாழ வைத்து, வக்கிரத்தின், பழியுணர்வின் உச்சமாக, அவர்களுள் தெரிந்தெடுத்து, ஒரு புகையிரதத்தில் கிழங்குகள் போல் அடுக்கிச் சென்று, ஜெர்மனியில் வைத்து வதைக்கப்பட்டவர்களில் அந்தச் சிறுமியும் ஒருத்தி!
ஐவரும், தாம் வாசித்தறிந்தவற்றைக் கதைத்தபடியே அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் உள்ளிட்டு, Anne Frank தங்கியிருந்த வீட்டினுள் உள்ளிட்டார்கள்.
நாட்குறிப்பு, வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகள் மற்றும் அசல் பொருட்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தி, அச்சிறுமியின் கதையை கூறி நின்றது, முன் வீடு.
அச்சிறுமி, அவள் குடும்பம், நட்பு, யாரென்றே அறியாத யூதர்கள் என்று, எட்டு ஆட்கள், அந்த வீட்டிலுள்ள புத்தக அலுமாரியின் பின்னாலிருந்த ஒரு ரகசிய இணைப்பில், இரு ஆண்டுகளுக்கும் மேலாக மறைந்திருந்தார்களாம்.
அப்புத்தக அலுமாரி அடுக்கை விலக்கி உள்ளிட்டவர்கள் மனதில் சில்லிடல்!
கழிப்பறையோடு கூடிய சிறு பகுதியது. அங்கு தங்கியிருந்தவர்கள் பற்றிய ஆவணங்கள் மற்றும் பொருட்களோடு, ஆன் ஃபிராங்கின் அசல் நாட்குறிப்புகள் மற்றும் எழுத்துகளும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
என்றோ நடந்த கொடூரம்; ஆனாலும், அதுவரை இருந்த கலகலப்புக்குத் தடை போட்டிருந்தது. இவர்கள் என்றில்லை, உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த ஒவ்வொருவருமே, கனத்த மனதோடு தான் அங்கு நின்று விட்டு வெளிவந்திருந்தார்கள்.
“மறக்கவே முடியாத இடம்!” கதைத்தபடி, அங்கிருந்து பத்து நிமிடமும் வராது, பொடிநடையாகவே ரைக் மியூசியம்(Rijksmuseum) நோக்கிச் சென்றார்கள்.
இந்நாட்டிலுள்ள, கலை மற்றும் வரலாற்றுக்கான மிகப்பெரியதும் மதிப்புமிக்கதுமான அருங்காட்சியம் அது; ஓவியங்களே இதன் அழைப்பு அட்டை; ஒன்று இரண்டல்ல, 6000 க்கும் மேற்பட்ட, ரெம்ப்ராண்ட், ஃபிரான்ஸ் ஹால்ஸ் மற்றும் ஜோஹன்னஸ் வெர்மீர் ஆகியோரின் தலைசிறந்த படைப்புகளுடன், 17 ஆம் நூற்றாண்டின் டச்சு பொற்காலத்தின் ஓவியங்களின் பெரிய தொகுப்பையும் கொண்டுள்ளது, இந்த அருங்காட்சியம்.
கூகிளில் பார்த்தவற்றை நேரில் பார்த்தால்!
உலகப் பிரசித்தி பெற்ற, Rembrandt இன் The Night Watch, Johannes Vermeer வரைந்த Girl With A Pearl Earring என்று பார்த்து, அவற்றோடு புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளிவருகையில் ஐவருக்குமே நல்ல பசி. கண்ணில் தென்பட்ட பிட்சா ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தவர்கள் கலகலத்தபடி வயிற்றை நிரப்பினார்கள். அதன் பின்னரான அன்றைய நாள், ஷொப்பிங் மோல், சைக்கிள் ரைட் என்று முடிந்தது.
மறுநாள், காலையிலேயே ‘Kinderdijk’ என்ற இடத்துக்கு இரயிலேறினார்கள். நெதர்லாந்தில், இன்னமுமே பழைய காற்றாலைகள் ஆயிரம் வரை உள்ளன. இக் காற்றாலைகளின் மிகப்பெரிய செறிவு, ‘Kinderdijk’ கிராமத்திற்கு அருகில் காணப்படுகிறது. கடல் மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள தூண்களில் இருந்து, அதிகப்படியான நீரை வெளியேற்ற, 1740 இல் 19 காற்றாலைகள் கட்டப்பட்டன. அவை, இன்று வரை நன்கு பாதுகாக்கப்பட்டு, பிரபலமான சுற்றுலாத் தலங்களாக உள்ளன.
அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு ஆம்ஸ்டர்டாம் திரும்பியவர்கள், இறைச்சி, மீன், பழங்கள் மற்றும் காய்கறிகள், உடைகள், நகைகள் என எல்லாம் கிடைக்கும் ‘Albert Cuyp Market’ (De Pijp)இல் சுற்றித் திரிந்தார்கள்.
“ஏப்ரல் கடைசி அல்லது மே ஆரம்பத்தில வந்தா, டியூலிப் பீல்ட்ஸ் பார்த்திருக்கலாம்.” ஒருத்தி கவலைப்பட்டாள்.
“அதுக்கென்ன, இன்னொருக்கா வந்திட்டாப் போச்சு! ஆனா ஃபிரெண்ட்ஸா இல்லையப்பா , நான் என்ர பார்ட்னரோட தான் வருவன்.” மற்ற நண்பி சொல்ல, கலகலத்தது, அந்த இடம்.
பைரவி உதட்டில் முறுவல் நெளிந்தது. ‘ஏனாம்’ தன்னைத்தானே நக்கலாகக் கேட்டுக்கொண்டாள். அதிவேகத்தில், ‘வேணாம்’ என்றும் சொல்லிக் கொண்டாள்.
ஐவரும், அன்று மாலை, அமஸ்டர்டாமில் இருந்து பெர்லினுக்கு இரயிலேறினார்கள். தமக்குரிய இருக்கைகளைப் பார்த்து அமர்ந்த வேகத்தில், போட்டோ கலரியில் ஐக்கியமாகிவிட்டாள்,பைரவி. அடுத்த பத்து நிமிடங்களும் சென்றிராது, சல்லடை போட்டுச் சலித்தெடுத்த பத்துப் புகைப்படங்களை இன்ஸ்ட்டாவில் ‘#Holland’ என்று ஏற்றிவிட்டு, தாய் தகப்பனுக்கு ஒரு குறுஞ்செய்தியையும் தட்டிவிட்டு, நண்பர்கள் கலாட்டாவில் இணைந்து கொண்டாள்.