அத்தியாயம் 24 – 2

அவளில் குத்திட்ட ஆரூரன் பார்வை அசைய மறுத்து நின்றது. ரசிக்கிறதோ! அதற்குப் போட்டியாக முகம் சுளித்தான். அதைத் தாயும் சகோதரியும் கவனித்தும் இருந்தார்கள். அப்புகைப்படத்தில், எல்லோருமே குதூகலமாக கைகளை மேலே தூக்கியபடி  நின்றிருந்தார்கள். 

முழங்காலுக்கு மேலே நின்ற, தொள தொள வெள்ளை அரைக்கால் சட்டை; மேலுடலோடு ஒட்டிக்கொண்டிருந்த மொட்டைக் கை வெள்ளைச் சட்டை, அதன் மேல் ஒட்டிக்கொண்டு நின்றிருக்குமாக்கும், இவள் கரங்களைத் தூக்கவும் பளிச்சென்று தெரிந்தது, வயிற்றுப் பகுதி. பார்வையை விலக்க நினைத்தான், ஆரூரன். பார்வை சொல் கேட்டால் அல்லவா? கால்களில்  வெள்ளை ஸ்போர்ட்ஸ் சாப்பாத்து, முயல் குட்டியாக; விரித்த தலை; பெரிய குளிர்க் கண்ணாடி; கழுத்தில் பலவண்ண மாலைக் குவியல்! 

மீண்டும் மீண்டும் பார்த்தவனுள் இப்போது பெரிய சந்தேகம். தம்மோடு இருக்கும் தமக்கு அறிமுகமான பைரவியா இவள்? எப்போதும் சட்டை, பாவாடை சட்டை, குர்தி, ஏன் முழங்கால் வரை பாண்ட், டைட் ஜீன்ஸ் என்று எல்லாம் போட்டுக் கண்டிருக்கிறான். ஆனால், இது?   

இடக்கை பெருவிரல் பட்டு பட்டென்று அடுத்தடுத்த புகைப்படங்களைத் தட்டியது. விழிகள் இடுங்க, முகம் இறுகிக் கொண்டே சென்றது. ஐவரும் நின்ற ஒவ்வொன்றும் அந்நாட்டுத் தலைநகரின் முக்கிய இடங்கள் தான். அவை, அவன் கருத்தில் பதிந்தால் தானே? பத்தாவது புகைப்படம் பார்த்த கையோடு, அவள் இன்ஸ்ட்டா ஐடியை மனதில் இருத்திக் கொண்டவன், சகோதரியிடம் கைப்பேசியைக் கொடுத்துவிட்டு வெளியேறியிருந்தான். அதே வேகத்தில், அவளுக்கு ஃபளோவிங் ரிக்வெஸ்ட் பறந்துமிருந்தது.

அடுத்த நொடியே ஏற்கப்பட்டிருந்தது. ஜேர்மனியில் நிற்கிறாள் என்றால்,  அங்கு, இப்போதுதான் அதிகாலையாக இருக்கும். அவன் எண்ணம் செல்ல, விரல்கள் கடகடவென்று தட்டி சாட்டில்(chat)  அனுப்பிவிட்டிருந்தது.

‘இதைவிடவும் சின்னனா உடுப்புக் கிடைக்கேல்லையா?’ 

அனுப்பி, சில பல செக்கன்கள் பார்வை அந்த வார்த்தைகளில்! மெல்ல மெல்ல மனம் விழித்துக் கொண்டது.

 ‘இப்ப நான் என்ன  செய்திருக்கிறன். ஆர் தந்த உரிமையில்?’ மனம் அதட்ட முகம் இறுகிற்று. பட்டென்று அதை அழித்து விட்டிருந்தான். பார்த்திருப்பாளோ! என்னைப் பற்றி என்ன நினைப்பாள்? 

“ப்ச்! என்னவும் நினைச்சிட்டுப் போகட்டும். அவளிட நல்லதுக்குத்தான் சொன்னனான்.” முணுமுணுத்துத் தன்னைத்தான் சமாதானம் செய்ய முனைந்தான். இருந்தாலும் அவனுள், உரிமையில்லா இடத்தை எட்டிப் பார்த்துவிட்ட அசௌகர்ய உணர்வு! 

எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி விரல்கள் வினையாற்றிவிட்டதில் வந்த விளைவு! அவனுக்குத் தன் கை விரல்களில் தான் கோபம் வந்தது. மனம், ஒரு கேவலமான பார்வை வேறு பார்த்து வைத்தது. 

“அம்மா, வேனுக்க ஏத்த வேண்டியதுகள எடுத்து வையுங்க. அரை மணித்தியாலத்தில வாறன்.” மோட்டார் சைக்கிளில் ஏறிச் சீறவிட்டவனுக்கு, தாய், சகோதரி முகம் பார்க்கவே பெரும் தவிப்பாக இருந்தது.

ஒரு நிமிடமும் ஓடியிரான், போன் அதிர்ந்தது. ஏதோ தோன்ற நிறுத்திப் பார்த்தால், அவள் தான். அவள் புறமிருந்து வந்த அச்சிறு செயலால்,  அவனுள், அதுவரை இருந்த இறுக்கம் பட்டென்று விலகிற்று. உதடுகள் நகைப்பில் விரிந்தன. இருந்தும் அழைப்பை மட்டும் ஏற்கவில்லை.

“நான் எப்பிடியும் உடுத்துவன். நீர் ஆர் அதைச் சொல்ல?” என்று விட்டால் என்ற பயம் மனதில் இருக்கிறதே!

இரு தடவைகள் அழைத்துப் பார்த்தாள், பைரவி. பதிலில்லை. ஒருகணம் யோசித்தவள் முகத்தில் சேட்டைத்தனம்! வாயைச் சுழித்தபடி, ஒரு கிளிக். மறுநொடியே அந்தப் புகைப்படம் அவன் ‘சேட்’டுக்குப் போயிருந்தது. 

இன்னமும் படுத்து இருக்கிறாள் போலும். கலைந்து கிடந்த முடிக்கற்றைகள் முகத்தில் சிதறிக்கிடக்க, விசமத்தனத்தோடு பெரிய விழிகள் விரிந்து கிடக்க, பளிச்சென்ற முகம் மட்டும் தெரிந்தது; தன்னை முழுவதுமாக குயில்டுக்குள் மறைத்திருந்தாள், பைரவி. அதோடு விட்டாளா?

‘இப்பிடி உடுப்புப் போட்டால் சரியா? இல்லாட்டி முகத்தையும் மறைக்க வேணுமோ?’ என்ற கேள்வியும் நாக்கைத் துருத்திய ஸ்மைலியும் வந்திருந்தது. 

அதையே மீண்டும் மீண்டும் வாசித்தான், ஆரூரன். நிச்சயம் இலகுவாகவே எடுத்துப் பதிலளித்திருந்தாள்; மிக்க பெருந்தன்மையோடு! அப்படித்தான் ஆரூரன் மனம் எண்ணியது. அதுவே, ‘ sorry… really sorry’ என்று அனுப்ப வைத்திருந்தது. மறுநொடியே, மோட்டார் சைக்கிளைச் சீறவிட்டான். மீண்டும் மீண்டும் அழைத்தாள், பைரவி. அவன் எடுக்கவேயில்லை.  

“முசுடு ஒண்டு” முணுமுணுப்போடு எழுந்தமர்ந்தாள், அவள். நண்பிகள் இருவரும் ஆழ்ந்த நித்திரை. பக்கத்து அறையில் நண்பர்களும் குறைட்டை தான் விடுவார்கள். படுக்கையை விட்டு எழுந்து கொண்டவளுக்கு, அப்போதுதான், யாழ்ப்பாணத்திலிருந்து வந்ததுக்கு ஆரூரன் வீட்டுக்கு அழைக்கவில்லை என்றதே உறைத்திருந்தது. அவள்தான் ஒருவருக்கும் அழைக்கவில்லையே! என்றாலும் சொந்த மகள் போல் பார்த்துக் கொண்டவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? 

நண்பிகளின் நித்திரைக்கு இடைஞ்சல் கொடுக்காதிருக்கும் பொருட்டு, குளியலறைக்குள் நுழைந்த வேகத்தில், தவிப்போடு மதிக்கு அழைத்தாள்.

அவளோ, எடுத்த எடுப்பிலேயே, “அவ்வளவு கெதியா எங்களை மறந்திட்டீர் என்ன?” கடித்தாள். குரலில் குறை பளிச்சென்று தெரிந்தது. கெஞ்சி, ஒருவாறு சமாளித்தாள், பைரவி. 

கௌசல்யாவோ அப்படியில்லாமல், “ஃபோட்டோ எல்லாம் பிள்ளை காட்டினா மா. நல்ல வடிவா இருக்கிறீர். கவனம் என்னம்மா?” தாயின் பரிவோடு கதைத்தார். அந்தக் கவனத்தில் அவர் அக்கறையும் பாசமும் தெரிந்தது.

“சொறி ஆன்ட்டி, நெதர்லாந்து வந்து இறங்க பிரெண்ட்ஸ் வந்து நிண்டவையா, அதோட பிசியாகிட்டம். சொறி சொறி நீங்க பார்த்துக்கொண்டு இருந்தனீங்க எண்டு மதி சொன்னவா. சொறி ஆன்ட்டி!” என்றவளை, கௌசல்யா தான் சமாதானப்படுத்தும் படியானது. 

“சரி, மதியோட கதையும். கவனம் குஞ்சு!” என்றுவிட்டு, அவர் அப்பால் செல்ல, “மதி, எங்க உங்கட அண்ணா?” மெல்லக் கேட்டாள். தமையன் இன்ஸ்ட்டா பார்த்தது, முகம் சுளித்தது தான் மதியின் நினைவில்.

“அவர் வெளில போய்ட்டார் பைரவி.” சமாளித்தாள்.

“உம்மட பிரெண்ட்ஸ் பெயர்களைச் சொல்லும் கேப்பம்.” கதையை மாற்றி விட்டாள், இல்லையோ, அண்ணாவும் போட்டோஸ் பார்த்தவர் என்று அவளே உளறியும் விட்டிருவாள்.

பைரவி பெயர்களைச் சொல்கையில், “டோய்! அப்ப அந்த முதல் படத்தில உமக்கு வலப்பக்கம் நிற்கிறவரா உம்மட ஆள் சேயோன்!” வியப்போடு கேட்டாள், மதி. 

முகம் கொள்ளாச் சிரிப்போடு தலையாட்டினாள், பைரவி. 

“அப்ப உண்மையாவே போய் ஃபிரெண்ட் இருக்கிறாரா? நாங்க பகிடிக்கு எண்டு நினைச்சிட்டம்!” ஆச்சரியப்பட்டாள், மதி.

“பின்ன? இதில எல்லாம் பொய் சொல்லுவினமோ?” என்று கலகலத்து,  பொதுவாகக் கதைத்துவிட்டு வைத்தாலும் ஆருரனோடு, ஒரு தடவைவையேனும் கதைக்க வேண்டும் என்றது, அவள் மனம். கிடைத்தால் அல்லவா?

அதையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, அன்றும் அடுத்து வந்த இரு நாட்களும் ஜெர்மனியில் பரபரவென்று பொழுது போனது. 

பெர்லின் ஸ்ப்ரீ நதியில், கிட்டத்தட்ட இரண்டே கால் மணிநேரப் படக்குச் சுற்றுலாவில், நகரின் முக்கிய இடங்களைப் பார்வையிட்டு மகிழ்ந்தார்கள். குறிப்பாக, கலைநயமிக்க பாராளுமன்றக் கட்டிடம், (the Government Quarter) ஜனாதிபதியின் அலுவலக பூர்வ இருப்பிடமான பெலவி பலஸ் (Bellevue Palace), பெர்லின் தேவாலயம் (Berlin Cathedral) மற்றும் மியூசியம் ஐலண்ட் (Museum Island) உள்ளிட்ட, நகரத்தின் சில முக்கிய  அடையாளங்களைக் கண்டு கழித்தார்கள். 

18 ஆம் நூற்றாண்டின்  நினைவுச் சின்னமான பிராண்டன்பர்க் கேட்  (Brandenburg Gate),பெர்லின் நகரை 360 பாகையில் பார்க்கக் கூடிய பெரிய ரிச்ஸ்டாக் கண்ணாடிக் குவிமாடம் (Reichstag & glass dome), மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான, புகழ்பெற்ற பெர்லின் சுவர் (Berlin Wall) மற்றும் உலகின் மூன்றாவது உயரமான தேவாலயமாக கின்னஸ் புத்தகத்தில் தனது முத்திரையை பதித்துள்ள Kölner Dom என்று, ஜெர்மனியில் நின்ற மூன்று நாட்கள் எப்படிப் போனதென்று தெரியாது சுற்றித் திரிந்தார்கள். 

அதற்கிடையில், அழைத்தால் எடுக்கிறான் இல்லையே என்ற விசரில், சேயோன் தோளில் சாய்ந்து நின்றபடி எடுத்த புகைப்படத்தை ஆரூரனுக்கு அனுப்பி வைத்தாள், பைரவி. 

‘எப்படி இருக்கிறார் என்ர போய் ஃபிரெண்ட்?’ என்று எழுதியிருந்ததையும் புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்த ஆரூரனுக்கு, என்னவோ தனக்குச் சொல்லாமல் சொன்ன மாதிரியே இருந்தது. 

‘எட்ட நின்று விடு என்கிறாளா? நீ யார் என்னைக் கேள்வி கேட்க, எனக்கு என்று ஒருத்தன் இருக்கிறான் என்கிறாளா?’ அவன் மனம் பயங்கரமாக அலைமோதியது. அவமான உணர்வு மனதைக் கவ்விக் பிடித்துக்கொண்டது. 

“ஏன் தம்பி ஒரு மாதிரி இருக்கிறீங்க?” தாய் கேட்டதுக்குப் பதிலே சொல்லவில்லை, அவன். இரண்டாம் நாள் நடுயிரவில், இடது காலில் பத்துப் போட்டு, கைத்தடி உதவியோடு நொண்டியபடி வீடு வந்தான், ஆரூரன். கைகள் இரண்டிலும் நல்ல சிராய்ப்பு வேறு. பதறிப் போயினர்,  அன்னையும் மதியும். 

“பச் ஒண்டுமில்ல,  மோட்டார் சைக்கிளில தவறி, சறுக்கி விழுந்திட்டன்.” இலகுவாகச் சொல்லிவிட்டுச் சென்றான், அவன்.

error: Alert: Content selection is disabled!!