Skip to content
அவள் பின்னால்… குடுகுடுவென்று ஓடியது இவன் பார்வை! அதேநேரம், அருகில் நிற்பவன் பார்வையும் சேர்ந்து வந்ததை உணர்ந்தவன், அவனோடு சேர்ந்து ஸ்டோலுக்குள் உள்ளிட்டான்.
அடுத்த பத்தாவது நிமிடம், அவன் சாரதி ஆசனத்தை நிறைக்க, அவள் புறமாக, சிறு காகிதப் பெட்டியோடு வந்து நின்றான், ஸ்டோல் பொறுப்பாளன்.
“வழியில சாப்பிட…” நீட்டியதை வாங்கவில்லை, அவள்.
“சாப்பாடு கொண்டு வந்தனாங்கள். இப்ப சாப்பிட்டதே போதும்.” இன்முகமாக மறுத்தாள்.
“அண்ணாதான் கேட்டவர்.”
“ஓ சரிதான். மிக்க நன்றி!” அவள் கைக்கு, அப் பெட்டி வந்த அடுத்த நொடி வாகனம் அசைந்தது.
மெல்ல எட்டி, இடக்கையிலிருந்த கைபேசியை முன்னால் வைத்தாள், பைரவி. அந்த பேப்பர் பெட்டியை மடியில் வைத்தாள்; பெட்டியையும் போட்டிருந்த உடையையும் தாண்டி, தேகத்தைத் தொட்டது, வெம்மை. வாசம் வேறு விரைவில் திறவேன் என்றது. பொறுமையாகத் திறந்தாள். உள்ளே, சுட சுட காளான் கட்லெட், பஜ்ஜி, ரோல்ஸ் என்று நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.
சில மாதங்கள் முன்னர் தான், ஸ்டோல்களில், ‘டேக் அவே’ ஆரம்பித்ததாக வீட்டில் கதைத்தார்கள். வெளிநாடுகளின் தரத்துக்கு கொஞ்சமும் குறையாதிருந்தது, அப்பெட்டி! அந்தச் சிற்றுண்டிகள் தரமும் ருசியும் பற்றிச் சொல்லவே தேவையில்லை. நாவில் எச்சிலூற, பெட்டியை முகத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்துச் சத்தமாகவே வாசித்தாள்.
“ஆரூர் மஷ்ரூம் பூட்” கடைக்கண் அருகில் இருப்பவனைப் பார்த்தது. அவனோ, ரோபோ போலவே வாகனமோட்டிக் கொண்டிருந்தான். வாயை அப்படியும் இப்படியும் சுழித்தவள், மீண்டும் பெட்டியை வைத்துவிட்டு, எதை முதலில் எடுக்கலாம் என்று, தன் ஆட்காட்டி விரலால் சுற்றி வந்தாள்.
அவன், வாகனம் தான் செலுத்திக் கொண்டிருக்கிறான்; இருந்தாலும் கவனம் அவளிலும் தான். அது, அவளின் சின்ன சின்னச் செய்கையையும் ரசியடா ஆரூரா என்று சொல்லுதே! என்னதான் செய்வது? இறுக்கமும் இயற்கைக் குணமும் அவ்வளவு இலகுவில் தளர்வேனா என்று அடமும் பிடிக்கிறது. மதில் மேல் பூனை நிலையில் தத்தளித்தான், ஆரூரன்.
“எடுத்திருக்கேல்லையோ தீத்தி விட்டிருப்பன். தப்பிச்சிட்டீங்க!” கட்லட்டை, சின்னக் கடி கடித்தவாறே அவனை முறைத்தபடி சொன்னாள்,பைரவி.
தொடங்கிறாளே! மனம் எச்சரிக்கை நிலைக்குத் தாவிவிட, ‘என்ன இப்ப?’ என்பதாகப் பார்த்தான், ஆரூரன்.
“என்ன விளங்கேல்லையா? இதுகள் எல்லாம் திவ்வியமா விளங்காதே!
அண்டைக்கு, மதியின்ட பிறந்தநாளில ரோல்ஸ் சாப்பிடத் தர, பெரிசா பிகு பண்ணி நடிச்சனீங்க எல்லா? அதைச் சொல்லுறன். அப்பிடி, இண்டைக்கும் புறியம் காட்டியிருக்க, அதும் அந்தப் பெடிக்கு முன்னால வச்சு, தீத்தி என்ன, ஒரேயடியா வாய்க்க திணிச்சே விட்டிருப்பன்.” என்றவள் கரம், கையில் இருந்த கட்லட்டை அவன் வாய் நோக்கிக் கொண்டு சென்றது. சட்டென்று தலையை அப்பால் நகர்த்தியவன் விழிகளில் கோபம்.
“வாட்? ஓ நான் சாப்பிட்டது! ம்ம்ம்ம்” என்றவள் முகம் சட்டென்று பொலிவிழந்திட்டு. சமாளித்தபடி, “சரி சரி, நீங்களே எடுத்துச் சாப்பிடுங்க.” பெட்டியை அவன் புறமாக நகர்த்தினாள்.
“எனக்கு ஒண்ணும் வேணாம்.” என்றவன் குரலின் இறுக்கம், அவனைப் பார்க்க வைத்தது.
“இப்ப என்னத்துக்கு இப்பிடி முறைக்கிறீங்க?” நெற்றி சுருங்கக் கேட்டவளைப் பார்த்தால் கதைக்க ஏலும் போலிருக்கவில்லை, அவனுக்கு.
பார்வை வாகனமோட்டுவதில் கவனமாக, குரலில் கடுமையோடு வார்த்தைகளை விட்டான், ஆரூரன்.
“நீர் இங்க என்னத்துக்கு வந்தனீர்?” என்றவனை, பதில் சொல்லாது முறைத்தாள், அவள்.
“அத்தூரம் இருந்து படிக்க வந்தா, அதை மட்டும் பார்க்க வேணும். அது பார்த்தா, வந்து ரெண்டு வருசத்தில படிப்ப விட வேற வேற சோலிகள் தான் பாக்கிறது!” கண்டிப்போடு குற்றம் சாட்டியவனைத் தொடரவிடாது இடையிட்டிருந்தாள், பைரவி.
“சோ… பாக்காத மாதிரி என்னையே கவனிக்கிறீங்க எண்டு சொல்லுங்கவன்.” நக்கலாகத் தொடங்கியவளை நேராகப் பார்த்து முறைத்தான், அவன்.
“என்னடா நாம கவனமாப் பாத்து பாத்துக் கவனிக்கிறது இவாக்கு எப்பிடித் தெரியும் எண்டு இருக்கோ!” விழிகள் சுருங்கக் கேட்டவளை என்ன செய்வதென்று இருந்தது.
அவளோ, அவன் கதைக்க இடம் கொடாது தொடர்ந்தாள்.
“சரி அதை விடுங்க, இப்ப என்னத்துக்கு இதைச் சொல்லுறீங்க?” பார்வை கூர்மையாகி அவன் விழிகளைப் படிக்க முயன்றது. அவன் முன்னால் நகர்த்தி விட்டான்.
“அப்ப…” இராகம் இழுத்தாள். “படிக்கிற மனுசர் லவ் பண்ணக்கூடாது எண்டு சொல்ல வாறீங்களா?” மீண்டும் சீண்டல் குரல்; அது, அவன் நெஞ்சாழம் வரை சென்றது.
அவனோ, அவளைக் கண்டித்து, தன் மனதை மறைத்தடக்கி விலகிச் செல்லவே இந்தக் கதையை எடுத்தான். அவளோ, நேருக்கு நேராய் ஆரம்பித்து விட்டாளே!
சட்டென்று வாகனத்தைப் பாதையோரமாக நிறுத்தியவன் முகம் இரும்பென மாறியிருக்க, விழிகளில் கடுமையோடு பார்த்தான்.
முதல் முதல் கண்ட ஆரூரன் சாயல் அடித்தது. ஆனால், அன்றைய பயத்துக்கும் வெறுப்புக்கும் பதிலாக…
அழகிய முறுவல் தவழ அவனையே பார்த்தாள், பைரவி. அது, அவனை மிகையாகவே பாதித்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
“இங்க பாரும், அம்மா அடிக்கடி மதி போல எண்டு உம்மச் சொல்லுறவா. அப்படித்தான் நானும் நினைக்கிறன் சரியோ!”
“ஓஓ….” வாயைக் குவித்து விழிகளை விரித்தவள், “சரி, சொல்லுங்க அண்ணா!” பவ்வியமாகக் கேட்டாள்.
ஆரூரன் முகம் சிவந்தது. பற்களை நறும்பினான்.
“ஓம், இனி என்னை அண்ணா எண்டே கூப்பிடும். மற்றது, உம்மட தனிப்பட்ட விசயங்கள் பற்றி எனக்குத் தேவையில்லை. உம்மட அம்மா அப்பா எங்களையும் நம்பித்தான் மலர் இல்லத்தில உம்ம இருக்க விட்டவே. அந்த ஒண்டு தான். எது எப்பிடி எண்டாலும் ஒண்டுக்குப் பத்தா யோசிச்சுச் செய்யும்.” அவன் குரலில் அப்பட்டமாக அந்நியத்தன்மை. அதற்கு மேல் உன்னோடு கதை இல்லை என்ற கணக்கில் வாகனத்தை இயக்க முயன்றான். அவள் முகம் பார்த்துப் பொய் பொய்யாகக் கதைக்க, கண்டிக்கப் பயந்தது அவனுள்ளம்.
கேட்டிருந்தவள் முகம் தீவிரத்துக்கு மாறியிருந்தது. கண்கள் கூட கலங்கிவிட்டன. அவனுக்கு, அவள் மனம் விளங்கி இருக்கு. இல்லையோ, இந்தக் கதையே வீண் எல்லா? இனி என்ன? வெளிப்படையாகவே கதைக்க நினைத்தாள்; கதைத்துவிடு என்று வற்புறுத்தியது, அவளுள்ளம்.
“நீங்க என்னவும் சொல்லுங்க. ஆனா… நான் உங்கள விரும்பிறன் சரியோ! என்ன புதுக்கதை கேட்கிறது போல நடிக்கிறீங்க? இது உங்களுக்குத் தெரியாது என்ன?” என்ற போது, விழிகளால் நீர் முத்துக்கள் தெறித்து விழுந்தன.
மனம் பதற, அந்தரப்பட, பேச்சின்றி இருந்தான், ஆரூரன். முதன் முதல் ஒருத்தியிடம் பதிலிறுக்க வார்த்தைகளின்றி தளர்ந்து இருக்கையில் சாய்ந்தான். பார்வை மட்டும் அவள் விழிகளை விட்டு விலகவில்லை. அப்போதும் தன் தளர்வை அப்பட்டமாக வெளிக்காட்ட விரும்பவில்லை அவன். அதுவே, அவசரமாகச் சுதாகரிக்கும் அவசியத்தை உணர்த்தியது.
“என்ர மிச்ச வாழ்க்கையை உங்களோட வாழ ஆசைப்படுறன். ஆசைப்பட்டுக்கொண்டே இருப்பன் ஆரூரன்.” அவன் பெயரை அழுத்தி உச்சரித்தபடி, கண்களைத் துடைத்துக் கொண்டாள், பைரவி.
விலுக்கென்று நிமிர்ந்தமர்ந்தவன், “விசர்க் கதை கதைக்காத சரியோ! இது கடைசிவரை நடக்காது. நீ விரும்பி ? என்னை என்ன எண்டு நினைச்சிட்டு இருக்கிற? இதுக்குப் பிறகு இந்தக் கதையோட, எண்ணத்தோட என்ர வீட்டு வாசலுக்கு வரக்கூடாது சொல்லிப் போட்டன்.”
உறுமிய வேகத்தில் வாகனம் சீறிக்கொண்டு புறப்பட்டது.
“அம்மாட்ட சொன்ன ஒண்டுக்காக கூட்டிக்கொண்டு போய் விடுறன். வாறது பற்றி நீயே பாத்துக்கொள்!” அவன் உறுமலுக்கு, இவள் பதிலே சொல்லவில்லை.
error: Alert: Content selection is disabled!!