அத்தியாயம் 28 – 1

சிறு தகவலும் இன்றி, குடும்பத்தினர் மலைத்தார்கள்; பதைத்துத் துடித்தார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் முக்கிய செய்தியில் கம்பீரமாக இடம் பிடித்தார், நெற்றிப் பொட்டில் குண்டு தாங்கியவர். அவர் நாணய நடத்தை, தொழில் பக்தி, நாட்டு நலன் பற்றியெல்லாம் பந்தி பந்தியாக எழுதித் தள்ளினார்கள்; வட்ட மேசை மாநாட்டில் வாய் கிழியக் கத்தினர். 

 த்தனைக்கும், பொலிஸ் போதைப்பொருள்த் தடுப்புப் பிரிவின் தலைவரோ,  இரும்பென இறுகிப் போயிருந்தார். காணாமல் போனவர், இறுதியாக நடந்த போதைப்பொருள் தேடுதல் வேட்டையில், தொகையாகப் போதைப்பொருட்களைக் கைப்பற்றி, அரச விருது கூட வாங்கியவர். கசப்போடு எண்ணிக்கொண்டார். மீண்டும் அவர் புத்தியும் புலன்களும் ஏமாந்து போயிருக்கிறதே! இலகுவாக, பணம் சேர்க்கும் ஆசை யாரைத்தான் விட்டிருக்கு? உழைப்பையும் சுயத்தையும்  நம்பாமல் எப்போது நடக்க ஆரம்பிக்கிறோமோ, இறுதியில் இதுதான் கதி! கத்தை கத்தையாகப் பணம், சொகுசு இருப்பிடங்கள், வாகனம் என்று இருந்து என்ன பயன்? நிமிர்ந்தமர்ந்தவர் முகத்தில் சின்னச் சிரிப்பு! தன் பிரத்தியேகக் கைபேசியில், சில செய்திகளை அனுப்பத் தொடங்கினார், அவர். 

அடுத்த ஒரு மணித்தியாலம், நீண்டு செல்வதாக உணர்ந்தார்கள், இருவரும்; அந்தளவுக்கு, மௌனம் ஆட்சியில் இருந்தது. கிளிநொச்சி டவுனில் உள்ள, ‘ஆரூர்  மஷ்ரூம்’ ஸ்டோல் வந்து, வாகனத்தை நிறுத்தியவன்  பார்வை, அவள் புறம் திரும்பியது. 

கழுத்து வலிக்கும் வரை, வெளிப்புறம் திரும்பியிருந்த பைரவி, காதுக்குள் I Ain’t Worried இல் ஆரம்பித்த பாடல், தளும்பி நின்ற மனதை நிலைப்படுத்த ஆரம்பித்திருந்தது. அதுவே, Harry Styles இன், அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்புத் தொடர தொடர, கண்களை மூடிக்கொண்டு அதோடு ஒன்றி விட்டாள்.

 அப்பப்போ, கடைக்கண்ணால் பார்த்தான், ஆரூரன். துள்ளளோடு  வந்தேறியவளாச்சே! அவளிடம் அரிதாகக் காணும் இந்த அமைதி சகிக்க முடியாததாக, அதுவும், விழிகளை மூடியபடி அவள் அமர்ந்திருக்கும் விதம் மனத்தைத் தாக்குவதாக இருந்தது; கதைக்க மனம் உண்ணினாலும் கட்டுப்படுத்திக் கொண்டான்.

இப்போதும் கூட கதையேன் என்று உந்தியது மனம்; வார்த்தை வரவில்லை; இறங்கி விட்டான். அங்கு நின்ற ஒரு மணி நேரமும் அவள், வாகனம் விட்டு இறங்கவே இல்லை. 

மதியப் பொழுது! அவனுக்கே பசித்தது. நேரம் தவறாமல் உண்பவளுக்கு? சாப்பிடலாமா என்று கேட்க உண்ணிவிட்டு அமைதியாக ஏறியமர்ந்தவன், வவுனியா நோக்கி வாகனத்தைச் செலுத்தினான். பத்து நிமிடமும் ஓடியிரான், மடமடவென்று தண்ணீரை அருந்தியவள் தொடர்ந்து செல்ல விடவில்லை; வாகனம், பெரிய மரநிழலில் தரித்து நின்றது. 

அப்போதும் அவனை ஏறிடவில்லை, அவள். ஏன் நிறுத்தினான் என்று கேட்கவும் இல்லை.

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன் மனம், என்ன உணர்கிறது என்றே வரையறை செய்ய முடியவில்லை. அவளை விட்டுத்  தள்ளி நிற்பதே பொருத்தமானது என்று முடிவெடுத்தே கதைத்தான்; அவள் அருகண்மையில் அது முடியாதிருக்கே! என்னதான் மனதை அடக்கினானாலும் அது, அவள் புறமே சாய்வதும்…

நீளமாகப் பெருமூச்செறிந்தான், ஆரூரன்.

“பைரவி… சாப்பிடலாமா?” கேட்டே விட்டான். காது கேளாதவள் போல் கைப்பேசியில் கவனமாக இருந்தாள், அவள்.

பற்களை நறும்பியபடி கீழே இறங்கினான். சில நிமிடங்களில்  ஏறியமர்ந்தவன் கையில், கௌசல்யா கொடுத்து விட்டிருந்த  மதியவுணவுள்ள பின்னல் கூடை. கடைக்கண்ணால் பார்த்தவள், மீண்டும் கைப்பேசியில் பார்வை பதித்தாள். 

கூடைக்குள், மேலாகவிருந்த இரு கடதாசி உணவுத் தட்டுகள் ஆரூரன் மடியில் வந்தமர்ந்தன. பெரிய கரண்டியோடு ஹொட்  பாக்கை வெளியில் எடுத்துவிட்டு, காலுக்குள் கூடையை வைத்தான், அவன்.

அடுத்து, சில நொடிகள்  கடந்திருக்கும்; மஷ்ரூம் பிரைட் ரைஸ் வாசம் நாசியில் நுழைந்தது; உள்ள பசி அகோரமாகியது; சிக்கன் பிரட்டல் வேறு!

வாயில் எச்சில் ஊறித் தொலைக்க, வயிறு சுரண்ட சற்றே அசைந்தமர்ந்தாள், பைரவி. என்ன எல்லாம் சொன்னவன். அவன் தரும் சாப்பாட்டை வாங்கியுண்ணும் அளவுக்கு இல்லை , இந்தப் பைரவி. தனக்குள் சொல்லிக்கொண்டே பசிக்கு நல்லதொரு குட்டுக் கொடுத்தாள்.

“இப்ப என்னத்துக்கு நீர் சீன் போடுறீர்? இஞ்ச பாரும், உம்ம அப்பிடி ஒண்ணும் கனநாள் தெரியாட்டியும் நான் என்ன சொன்னாலும் செய்தாலும் உம்மட நல்லதுக்குத்தான் பைரவி. அத முதல் விளங்கிக் கொள்ளும்!”  அவன், ஒரே மூச்சில் சொல்லி முடிக்க முதல், வெடுக்கென்று நிமிர்ந்தாள், அவள்.

“இப்ப உங்களுக்கு என்ன வேணும்? நீங்க சொல்ல வேண்டியது எல்லாம்  சொல்லியாச்சு எல்லா? ஆன்ட்டி  கேட்ட ஒண்டுக்காக என்னைக் கூட்டிக்கொண்டு வந்தனீங்க ரைட்? வவுனியாவில  கொண்டு போய் விடுறது மட்டும் தான் உங்கட வேலை. மற்றும் படி, என்னோட ஒரு கதையும் வேணாம் ஓகே! பசிச்சா… நீங்க சாப்பிடுங்க!” 

சற்றும் கூட இளக்கமின்றிச் சொன்ன வேகத்தில் இறங்கி விட்டாள்.

“இவள” முணுமுணுப்போடு இறங்க எத்தனித்தான், ஆரூரன். சிணுங்கிய  கைப்பேசி தன்னைக் கவனியேன் என்றது.

இன்று, வெளிக்கிடும் போதே, முக்கிய வேலைகள் சிலவற்றை முடிக்கத் திட்டமிட்டிருந்தான். அப்படிச் சொல்வதையும் விட, வேலைகளைத் திட்டமிட்ட பின்னரே அவன் இப்படிப்  புறப்படுவது. இப்போ, பைரவியும்  இருக்கிறாளே! கோபத்தில், வாய் சொல்லி விட்ட கணக்கில், என்னவும் செய்துவிட்டு வீடு போய்ச் சேர் என்று விட முடியுமா என்ன? அதுவே , “நானே எடுக்க இருந்தனான்” என்றபடி கதைத்தவன், அடுத்த இருபது நிமிடங்களில், செய்ய வேண்டிய வேலைகளில் சில மாறுதல்கள், பொறுப்புக் கையளிப்பு என்று ஒழுங்கு செய்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

விசுக்கென்று இறங்கிவிட்ட பைரவிக்கு, அவனில், கோபம் கடந்த வருத்தம். அதுவும் இந்தப் பயணத்தில், அவனோடு கழிக்க இருந்த நேரத்தை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். அதுவும் திட்டமிட்டுக் கிடைத்த வாய்ப்பும் இல்லை; கௌசல்யாவே ஏற்படுத்தித் தந்த வாய்ப்பு. ஆனால், அவன்…

 

error: Alert: Content selection is disabled!!