Skip to content
அன்று, அந்த நவீன கப்பலுள் பிரவேசித்துவிட்டுத் திரும்பியிருந்த மிகுதி மூவரும், முனைப்போடு செயல்பட நினைத்தார்கள்; மரண பீதி அந்தளவுக்குப் பீடித்திருந்தது; தம் விசுவாசத்தை, போதைப்பொருள்க் கடத்தல்காரருக்குக் காட்டியே தீருவோம் என்று செயல்பட முனைந்தார்கள். அந்தோ பரிதாபம், மறுநாளே, தத்தம் வீடுகளில் முடக்கப்பட்டார்கள். அவர்கள், கப்பலுள் பிரவேசிக்க முன்னால் கதைத்தவை தொடங்கி, அங்கு சென்றதிலிருந்து நடந்தது அத்தனையும் துல்லியமாய்க் காட்டும் காணொளிகள் மூலம் பயங்கரமாக மிரட்டப்பட்டார்கள். ஒரு குரல், அவர்கள் புலன்கள் அத்தனையையும் முடக்கியது மட்டுமல்ல, அவர்களிடமிருந்து, பல கோடி பெறுமதியான தகவல்களையும் உருவியிருந்தது. அவ்வளவும் அலுங்காமல் நலுங்காமல் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவுக்குக் கையளிக்கப்பட்டது.
இதன் பின்னணி யார்? அரசோடும் இராணுவத்தோடும் கண்ணாமூச்சி ஆடுவது யார்? அவர்களே, அவர்களுள், சந்தேகப் பார்வைகள் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள். இருந்தாலும், தம் வேலையை இலகுவாக்குகிறார்களே என்று, கடமையைச் செய்தார்கள். உயர்மட்டத்தில் சிலர், இன்னுமொரு இயக்கம் உருவாகிவிடுமோ என்றளவுக்குப் பயந்தார்கள். அதுவே, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவுத் தலைவர் தலைமையில், குழு அமைத்துத் தேடுதலும் ஆரம்பித்து விட்டார்கள்.
‘நீயே திரும்பி வாறது பற்றிப் பார்த்துக்கொள்!’ என்று, கோபத்தில் தான் சொல்லியிருந்தான், ஆரூரன். அதன் பின்னர், எவ்வித முன்னேற்பாடுமின்றி நடந்ததுவோ, இருவரையும் ஒரே புள்ளியில் சேர்த்து வைத்திருந்தது; இருந்தாலும், திரும்பி வருவது, அவன் முதல் சொன்னது போல் தான் நடந்தது.
எவ்வளவோ முயன்றான்; இருந்தபோதும், மறுநாளே, யாழ்ப்பாணம் வர முடியவில்லை. முல்லைத்தீவிலிருந்தே, “கவனமாப் போயிட்டு ஃபோன் பண்ணும் பைரவி!” என்றிருந்தான்.
அவனோடு திரும்பிச் செல்லலாம் என்ற ஆவலில் காத்திருந்தவளுக்கு மனச் சுணக்கம். என்ன செய்வது? மனச் சுணக்கமோ, கோபமோ, தேக்கி வைத்திருக்கும் பழக்கமே அவளுக்கில்லை; அதுவே, பதில் சொல்ல விடவில்லை; வீடு வந்த பின்னும் அவனுக்குத் தெரிவிக்கவில்லை. அழைத்தான், ஏற்கவும் இல்லை.
அவன் தோளில் தலை சாய்த்தாளே! சாய்த்தாளா என்ன? அன்போடு சாய்த்துக் கொண்டானே, அந்தக் கணம் தான் மனமெங்கும்! அவன், தன் நேசத்தை வெளிப்படையாக அங்கீகரித்த கணம் அதுவென்றாலும், இப்போ யோசிக்கையில், வார்த்தைகளால் வெளிப்படுத்தவில்லை என்பது புரிந்தது.
சில நிமிடங்களும் இல்லை சுதாகரித்திருந்தான்; வலு இயல்பாக நேரமாவதைச் சொல்லி, அவள் தங்கப் போகும் இடம், பிறந்தநாள் வீடு, அது இதுவென்று கேட்டபடி உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். வழியிலும், வவுனியா வந்துள்ள நண்பர்கள் பற்றி, படிப்பு, ஐரோப்பியச் சுற்றுலா என்று, பொதுவாகவே தான் கதைத்துக் கொண்டார்கள். அவனுக்கென்று வாங்கி வந்த காளான் சம்பந்தமான புத்தகங்களையும் , டீ சேர்ட்டுகளையும் கொடுத்த போது முகம் மகிழ்ந்திருந்தது. “இதெல்லாம் என்னத்துக்கு?” என்று சொன்னாலும், சந்தோசமாக வாங்கிக் கொண்டான். “நன்றி!” சொல்லி, மெல்ல அவள் தலையைத் தடவியவன் கொஞ்சத் தூரம் புன்சிரிப்போடு தான் வாகனத்தைச் செலுத்தியிருந்தான்.
அந்த நினைவு மனதில் இதம் பரப்பினாலும், அப்படியும் இப்படியும் வாயைச் சுழித்துக் கொண்டாள், பைரவி. தேடி தேடி அந்தப் புத்தகங்களை வாங்கியிருந்தாள். அவனுக்குப் பொருந்துமோ என்று நினைத்து நினைத்து ஆடைத் தெரிவும் செய்திருந்தாள். அவனோ, அவற்றை விரித்தும் பார்க்கவில்லை. பின்னால் வைத்து விட்டான்.
சில சமயங்களில்,மனதின் எதிர்பார்ப்பு எங்கோ உயரத்தில் இருந்து விடும்; கிடைப்பதோ, அதன் அடியில் கூட இனம் காண முடியாத அளவுக்கு இருக்கும்.
“ம்ம்ம்” மனதுள் எழுந்த பரபரப்பு முறுவலாகி முகத்தை முற்றுகையிட்டது. அவனறியாது பதுங்கி பதுங்கிச் சென்று கழுத்தை வளைத்துக்கொண்டு அவனில் தொங்க வேண்டும் போலிருந்தது. அவளுக்குத் தெரிந்த காதலர்கள் வேறு, அநியாயமாக நினைவில் வந்து வந்து சென்றார்கள்!
“பைரவி!” தன்னைத்தான் மெல்ல அதட்டிக் கொண்டாள். இருந்தாலும், அவன் நினைவு அடிக்கடி தொல்லை செய்யத்தான் நடமாடினாள். அழைப்போமா என்று கைப்பேசியைப் பார்ப்பதும் பின் வைப்பதுமாகவும் தான்.
ஆருரனோ, திடுமென்று பொறுப்பு அதிகரித்தாற் போலுணர்ந்தான்.அது, இதயத்துக்கு, சுறுசுறுப்பும் உத்வேகமும் தரும் பொறுப்பே தான்! அதிசயமாக, அவனையும் மீறியே, அடிக்கடி உதடுகளில் மென்முறுவல் நெளிந்து மறையவே தான், தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றான்.
‘இரவு பேர்த் டே சர்ப்ரைஸ் எப்படி?’ என்று, ஒரு குறுஞ்செய்தியில் தம்மிடையேயான பிரத்தியேக தொடர்பைத் தொடங்கியிருந்தான். வெகு மகிழ்வோடு,பெரிய பந்தியில் நடந்ததைப் பகிர்ந்தவள், அழைப்பு விடுத்தாள்; அதை ஏற்கும் சூழ்நிலையில் இவன் இருக்கவில்லை. அதோடு, தனியாகப் போ என்றும் இருந்தானா?அதன் பின், பைரவி வீட்ட போய்ட்டீரா என்றது வரை அழைப்பும் குறுஞ்செய்திகளும் பறந்தும் அவள் புறம் அமைதி மட்டுமே!
மீண்டும் மீண்டும் அழைத்து விட்டு, ‘இவளை…’ என்று கோபப்பட்டாலும் நேசம் என்கிற வலைக்குள் உள்ளிட்டிருந்தவன், அதன் சந்தோசங்கள், சுகங்கள் மட்டுமா? இப்படிப்பட்ட மனச் சுணக்கங்களுக்கும் பழகத்தானே வேண்டும்! தாய்க்கு அழைத்துக் கேட்டிருந்தான்.
வழமையாக, சில நாட்களுள் திரும்பி விடுவானே. இம்முறை, பத்து நாட்கள் ஆகியிருந்தது. வந்தவனை, புறுபுறுப்போடு தான் எதிர்கொண்டார், கௌசல்யா. அதுவும், மறுநாள் இரவே வாகனத்தை அனுப்பிவிட்டிருந்தான். அது, இத்தனை நாட்கள் நின்றுவிட்டு வர என்று அவர் என்ன கண்டார்!
“மன்னாரில நிண்டன் அம்மா. அங்க டவுனுக்க ஒரு ஹோட்டல் வருது. லீசுக்கு சரி எடுக்கலாம் எண்டு பாக்கிறன்.” என்றானா, அவருக்கு சரியான கோபம்.
“வயசு போய்க்கொண்டு இருக்கே, கல்யாணத்தைக் கட்டு என்றால்…இன்னும் இன்னும் என்ன தம்பி இது? சரி, கட்டிப்போட்டு அலுவலப் பாரன். இந்தா வாறன் எண்டு போயிட்டு, பத்து நாட்களுக்குப் பிறகு வந்து நிக்கிறீங்க. முதல், இதென்ன காஞ்சு வறண்டு உங்கட கோலம்?” மனதை வெளிப்படுத்தியவருக்கு, என்ன செய்வது என்றே தெரியவில்லை.
அதுவும் “அம்மா என்ன நீங்க? இப்ப உழைக்காமல் எப்பம்மா உழைக்கிறது? அடுத்தது கலியாணம்…” என்று விட்டு ஒரு சிரிப்புச் சிரித்தானே!
அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று, கௌசல்யா மண்டை குழம்பியது தான் மிச்சம்.
“இல்ல, ஏதோ கட்டினால் என்னைத்தான் கட்டுவன் எண்டு கொண்டு பொம்பளைகள் வரிசையில நிக்கிற கணக்கில எல்லா கதைக்கிறீங்க!” ஒருபோதுமின்றி, வெகு இயல்பாக, கூடவே நமுட்டுச் சிரிப்போடு சொல்லிவிட்டுக் கடந்து செல்ல, அப்படியே வருத்தத்தோடு நின்றார், தாய்.
கடும் உழைப்பாளி, அறிவாளி, குணநலன் பற்றி எல்லாம் குறையே கண்டுபிடிக்க முடியாது, நல்ல முகவெட்டும் திடகாத்திரமுமானவன். ‘சரி, சரி, கொஞ்சம் கோபப்படுவான். மற்றும்படி என்ர செல்லன் தங்கம். கட்டுற பிள்ளை குடுத்து வச்சிருக்க வேணும்!’ எண்ணியவர், கண்கள் கலங்கிப் போனார்.
இவ்வளவு இருந்தும் ஒரு சம்பந்தம் சரி வருதில்லையே! மனதுள் அரற்றியவர், பக்கத்து வீட்டுத் தங்கம் அக்கா சொன்ன இடத்தில் அவன் சாதகத்தைப் பார்க்க வேண்டும், அதுவும், முதல் வேலையாக என்று எண்ணிக் கொண்டார்.
error: Alert: Content selection is disabled!!