Skip to content
அவர் மகனோ, குளித்துவிட்டு, அப்படியே, மலர் இல்லத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்தான். வெறுமையாக இருந்த ஸ்கூட்டி நிறுத்துமிடம் அவள் இல்லை என்றது.
‘வழமையா, இந்த நாளில இந்த நேரம் இங்கனேக்க தானே நிக்கிறவா’ என்றெண்ணியவனுக்கு, தான், இதையெல்லாம் உன்னிப்பாகக் கவனித்திருப்பதே இப்போதுதான் புரிந்தது. முறுவலோடு தான் சாப்பிட வந்தமர்ந்தான்.
“மீன் குழம்போ மா?” ஆழ் சுவாசமெடுத்துவிட்டவனைச் சட்டென்று திரும்பிப் பார்த்தார், கௌசல்யா. எத்தனையோ வருடங்களுக்கு முன்னரான மகனை அக்கணம் கண்டார், அவர். கணவர் இறந்த பின்னர் அவன், அவனது எந்த உணர்வையுமே வெளியில் காட்டிக் கொண்டதில்லை. சிடுசிடுப்பும் கோபமும் மட்டும் விதிவிலக்கு.
கண்கள் கலங்கத் திரும்பியவர், “நாலு மணியாப் போச்சு, மத்தியானம் ஏதாவது சாப்பிட்டீங்களா?” கேட்டபடி, சூடாக்கிய குழம்பை இறக்கி வைத்தார்.
“காலமச் சாப்பிட்டதோட வந்தது தான் மா. பே பசி!” என்றவனை என்ன செய்வது?
முறைப்போடு உணவைப் பரிமாறிக் கொடுத்தார், கௌசல்யா.
“எங்க பைரவிட சிரமனக் காணேல்ல?” ஒருபோதுமின்றிக் கேட்க, அப்போதுதான் உள்ளே வந்த மதி நெற்றியை ஏற்றி இறக்கியபடி, தமையனோடு சில வார்த்தைகள் கதைத்துவிட்டு அறைக்குள் சென்றாள்.
“அதேன் தம்பி, கூட்டிக்கொண்டு போன பிள்ளையை அந்தரிக்க விட்டனீங்க? நம்பி எல்லா அனுப்பினனான்.” குறையோடு கேட்டார், கௌசல்யா.
“ம்மா, என்ன? அந்தரிக்க விட்டனானோ?” நக்கலாகக் கேட்டவனை முறைத்தார், தாய்.
“நான் என்னத்துக்கு வெளிக்கிட்டன்? திடுதிப்பென்று கூட்டிக்கொண்டு போகச் சொன்னீங்க. செய்தன் எல்லா? திரும்பி வர ஏலாமல் போயிட்டு. என்னம்மா செய்யிறது? அவா உலகம் சுத்திரவா. இதில இருக்கிற வவுனியா எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. விடுங்க. இப்ப ஆள் எங்க?”
கடைசிக் கேள்வியைக் காதில் வாங்காது தொடர்ந்தார், தாய்.
“கண்டறியாத வேலை…வேலை…ஆர் தான் வேலை செய்யேல்ல? உங்களைப் போலவா தம்பி!” கவலையோடு கேட்டவரைப் பாராது பொரிச்ச மீனை ரசித்து உண்டான், அவன்.
“சரி, ஆள் எங்க? இந்த நேரம் கம்பசும் இராதே!” என்று, மீண்டும் கேட்கவும் தான் அவர் கருத்தில் அது பதிந்தது.
அவன், வலு இயல்பாக கேட்டது போலவே, அவரும், இயல்பாக எடுத்துப் பதில் சொன்னார்.
சுகுமாரின் தாய்க்கு வருத்தமாம். விடியவே சென்று விட்டாளாம். இரவுக்கு அங்கு தங்கி விட்டு, நாளை வருவதாகச் சற்றுமுன் தான் அழைத்துச் சொன்னாளாம்.
கேட்டவன் முகம் சுருங்கியது. “அங்க தங்கவோ? ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கம்மா.” மகன் சொன்னதை அவர் எதிர்பார்க்கவில்லை. அங்கு வந்த மதியும் தான். தமையனை ஆராய்ச்சியோடு பார்த்தாள். சும்மாவே பைரவி என்றால் சீறுவானே! இன்று என்ன?
“ஏதாவது பிரச்சினையா அண்ணா? வவுனியா போய் வந்ததில இருந்து அவாவும் ஒரே யோசனையா இருந்தது போல இருக்கு. ஃபோனையும் நோண்டிக்கொண்டு இருந்தவா என்னம்மா? நீங்களே கேட்டிங்க தானே?” திரும்பவும் ஏதாவது பிரச்சினையோ அண்ணா?”விசாரித்தாள்,மதி.
“பச்! அப்பிடி எல்லாம் ஒண்டுமில்ல. என்னத்துக்கு எண்டுதான். இப்பத்தான் கொஞ்ச நாள் அமைதியாப் படிக்கிறா.”சமாளித்தான், அவன்.
“என்ன தான் எண்டாலும் சிலநேரம் ஒண்ணும் செய்யேலாது தம்பி. தகப்பன் தாயோடும் கதைச்சவா எண்டு சொன்னவா. அவேயும் நிண்டு போட்டுப் போகச் சொன்னவையாம். வயசு போனவே. அதோட பேரனை நினைச்சு வேதனை வேற.” என்று அவர் முடித்த பின் என்ன சொல்வது.
அழைத்துக் கதைக்க நினைத்துவிட்டு விட்டு விட்டான்.
மறுநாள், ஆறரை போலவே வந்து விட்டாள், பைரவி. முதல் நாளிரவு,பேச்சுவாக்கில் தமையன் வந்த செய்தியைச் சொல்லியிருந்தாள், மதி. அதுவே, ஸ்கூட்டியை அவர்கள் வீட்டுக்கே செலுத்த வைத்தது.
“என்னம்மா இவ்வளவு நேரத்துக்கே?” என்றபடி தான், முன் கதவைத் திறந்தார், கௌசல்யா. அதுவும் மெல்லத் திறந்தபடி, பின்னால் திரும்பிப் பார்த்தவர், “உள்ள வாடாம்மா, தம்பி நேரஞ்செல்லத்தான் வந்து தூங்கினவர், நல்ல நித்திரை.” கிசுகிசுத்தார்.
“சனிக்கிழமை தானே, மதியும் இன்னும் எழும்பேல்ல. தேத்தண்ணி போடவோ?”
“வெள்ளனவே வந்து கரைச்சல் தந்திட்டனோ ஆன்ட்டி? நான் வீட்ட போயிட்டுப் பிறகு வாறன்.” பின்வாங்கினாள், பைரவி. எட்டி, கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றார், கௌசல்யா.
“கரைச்சல் அது இது எண்டு கொண்டு. இதெல்லாம் என்ன கதை? நீரும் இந்த வீட்டுப் பிள்ளை தான்.” என்றவர், “வாரும் தேத்தண்ணி போட்டுத் தாறன். அப்பம்மாக்கு இப்ப எப்படி?” மெதுவாகவே கதைத்துக்கொண்டு அவளுக்குத் தேநீர் தயாரித்தார்.
“சரியாப் பசிக்குது ஆன்ட்டி.” பாண் வாட்டி, வெண்ணெயும் பழக்கலவையும் பூசி எடுத்துக் கடித்தாள், அவள்.
“உங்களுக்கு?” தேநீரை வாங்கிக்கொண்டு, வரவேற்பறை தெரியும் படி கதிரையைத் தள்ளிப் போட்டு அமர்ந்து கொண்டே கேட்டாள்.
“கொஞ்ச முதல் தான் குடிச்சனான் மா. நீர் சாப்பிடும், நான் குளிச்சிட்டு வந்திர்றன். வேலையாட்களும் வருவினம்.” அவசரமாகச் சென்றவரை நமுட்டுச் சிரிப்போடு பார்த்தபடி, நிதானமாக, கையில் இருந்த பாணைச் சாப்பிட்டாள், பைரவி.
அடுத்த இரு நிமிடங்களில் எழுந்து விட்டாள். நுனிக்காலால் நடந்து, ஆரூரன் அருகில் சென்று நின்றவள் மனம் பக் பக் என்று அடிப்பது அவளுக்கே கேட்டது. அறைக்குள் மதி; பெரும் துணிச்சல்காரியான அவளுக்கே பயம் காட்டுகிறார்கள், இந்த வீட்டினர்.
தாமதிக்கவில்லை. “பத்து நாள் எங்க எண்டு இல்லாமல் நிண்டு போட்டு வந்து கிடக்கிற வடிவ…” வாய் முணுமுணுக்க, சட்டென்று குனிந்தவள் இரு கைகளாலும் அவன் காதுகளைப் பிடித்து நல்ல முறுக்கு முறுக்கிவிட்டு, ஒரே பாய்ச்சலில் சமைலறைக்குள் உள்ளிட்டிருந்தாள். அதே வேகத்தில் தேநீர்க் கோப்பை, அவளுதடுகளில் பொருந்திக் கொண்டது.
“ஏய்… ஆர்?” அவன், அடித்துப் பிடித்துக் கொண்டு எழவும், “துவாயை மறந்திட்டுப் போய்ட்டன்.” என்று, கௌசல்யா நுழையவும் சரியாக இருந்தது.
“என்ன தம்பி, கனவு கினவு கண்டீங்களோ?” என்று கேட்ட தாயைக் கடந்து, சமையலறைக்குள் தெரிந்தவளில் அவன் பார்வை பதிந்தது.
“பிள்ள இப்பத்தான் வந்தவா. சத்தம் போட்டுட்டமே? குளிச்சிட்டு வந்து தேத்தண்ணி போட்டுத் தாறன் என்னய்யா?” நடந்துகொண்டே கதைத்தார், கௌசல்யா.
“ஓம் ஓம் குளிச்சிட்டு வாங்கோ.” என்றபடி அவன் எழவும், “ஆன்ட்டி நான் பிறகு வாறன்.” தேநீர்க் கோப்பையோடு எழுந்து ஓடினாள், பைரவி.
பின்னால் செல்ல முயன்ற கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டான், ஆரூரன். விறுவிறுவென்று காலைக்கடன்களை முடித்த கையோடு, தாய் தந்த தேநீரைப் பருகியபடியே வெளியேறியவன், காளான் கொட்டில்கள் நோக்கிச் சென்றான். அதே சாக்கில், பைரவி அம்பிடாளா (பிடிபட மாட்டாளா) என்ற நப்பாசை தான்!
மலர் இல்லத்தில், வாடகைக்கு இருக்கும் பிள்ளைகள் இருவர் மரியாதையாகச் சிரித்துவிட்டுச் சென்றார்கள். பின்னால் சென்ற இன்னொருத்தியோ, ஒரு சாதியான… அப்படியெல்லாம் குழம்பவே தேவையற்ற ஆர்வமான பார்வையோடு சென்றாள்.
அவர்களில் இருவர் பளை, ஒரு பிள்ளை மட்டுவில்; அநேகம், வார இறுதிகளில் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். ஒரு மருத்துவத்துறைப் பிள்ளைதான் மன்னார்; இடையிடை, மூன்று நாட்கள் அப்படி விடுமுறை வரும் போது சென்று வருவாள். இப்போதும் மூவரும் வீட்டுக்குத்தான் போகிறார்கள் போலும்.
பைரவி தென்படவில்லை என்றதும் அழைப்பு விடுத்தான். ஏற்கவில்லையோ உள்ளே போக வேண்டியதுதான் என்று நினைக்க, அழைப்பை ஏற்றவளோ, சத்தமாகச் சிரித்தாள்.
“சரியான பயந்தாங்கொள்ளி நீங்க!”
அவனுக்கும் சிரிப்பே! அதை மறைத்துக் கண்டிப்போடு கதைக்க வைத்தது, இத்தனை நாட்கள், அவள், அவன் அழைப்பை ஏற்காதிருந்தது.
“என்ன சேட்டை இதெல்லாம்? ஓடாமல் நிண்டிருக்க வேணும், தெரிஞ்சிருக்கும்…” என்று ஆரம்பித்தவன், “இந்தப் பத்து நாளும் எத்தினை தடவைகள் ஃபோன் பண்ணியிருப்பன்? எடுக்க இல்ல. எவ்வளவு மெசேஜ்! பதில் இல்லை. இதெல்லாம் என்ன பழக்கம்?” என்ற போது, அவனைக் கண்டதும் இருந்த மகிழ்வு பதுங்கிக் கொள்ள, சுர்ரென்று கோபம் வந்தது, அவளுக்கு.
“ஹலோ…ஹலோ! இந்த அதட்டுற வேலை இங்க வேணாம் ஓகே! அதோட, இப்படித்தான் நாங்களும் எதிர்பார்ப்பம் எண்டுறது நினைவில் இருக்கட்டும். ஏதோ நாங்க கோல் பண்ணினோன்ன எடுக்கிற ஆள் இவர். மெசேஜ் போட்ட கையோட பதிலும் அனுப்பிருவார். பெரிய அக்கறை!” சிடுசிடுத்தாள்.
அதுவே, அவனை வீடியோ அழைப்பேற்படுத்த வைத்திருந்தது. உண்மையில், சமாதானம் செய்விக்கவே முகம் பார்க்க எண்ணினான். ‘ஒருக்கா வெளியில வாரும்’ என்று கேட்கவும் தான்.
அது பார்த்தால், “ஐயே! இதென்ன கரடி போல இருக்கிறீங்க ஆரூரன்? கெதியாப் போய் இந்தத் தாடியை மழியுங்க பாப்பம். ம்ம்ம்.. வேணும் எண்டா கொஞ்சமா இங்க…” என்று, தன் நாடியடியில் வரைந்தாள். “இப்பிடி வையுங்க, வடிவா இருக்கும். தலைமயிர் பிடிச்சுக் கட்டப் போறிங்களா என்ன? அதையும் வடிவா வெட்டி, டிப் டொப்பா இண்டைக்கு வெளில போக வேணும் சொல்லிட்டன்.” வாய் மட்டுமா? கண்களும் சேர்ந்து பேசப்பேச, அவன் அப்படியே பார்த்திருந்தான். பார்வை, கூர்மைக்கு மாறியதை, முகம் கூட மாறி விட்டதை அவள் அவதானிக்கவில்லை.
“என்ன கேக்குது தானே?” நமுட்டுச் சிரிப்போடு அதட்டல் வேறு விட்டாள்.
“கேக்குது கேக்குது…வந்ததும் வராததுமா வரிசையா கட்டளைகள் பறக்குது என்ன விசயம்?” கன்றிய குரலோ என்று, அவள் சுதாகரிக்க முதல் தொடர்ந்தான்.
“இந்த இவனைத் தானே கலியாணம் செய்ய நினைச்சனீர்? பிறகு என்ன? இங்க பாரும் பைரவி, இதுதான் நான். என்ர தோற்றமும் வேலைகளும் ஒருக்காலும் மாறப் போறது இல்லை. அது யாருக்காகவும் மாறாது. முதல், டிப் டொப்பா வெளிக்கிட்டுட்டுப் போய், மேசையில குந்தியிருந்து வேலை பாக்கப் போறதில்ல எண்டுறது உமக்குத் தெரியும் தானே? இப்பயும் ஒண்ணும் பிரச்சினை இல்லை. வடிவா ஆற அமர யோசியும். இது விளையாட்டு இல்ல, வாழ்க்கை! உமக்கு நான் சரி வரமாட்டன் எண்டு நினைக் …” அவன் முடிக்க முதல், அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.
அடுத்த நிமிடமே, அவன் முன்னால் நின்றவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
“நான் இப்ப என்ன சொன்னன், நீங்க என்ன சொல்லுறீங்க?” விழிகள் இடுங்கக் கேட்டவளை நிதானமாகப் பார்த்தான், அவன். மனமோ, இந்த வழியில் பேச்சுவார்த்தையை வழக்காதே ஆரூரா என்று எச்சரித்தது.
“உங்கட நல்லதுக்குத்தான் சொன்னன். அதுக்குப் போய் … சோ… முழு மனமா நீங்க…” வெடுசுடுவென்று கதைத்தவளுக்கு கண்கள் கலங்கி விட்டன. விடிந்தும் விடியாமல், கலா அத்தை கத்த கத்த அல்லவா ஓடி வந்திருந்தாள்!
“ஓ பைரவி! நடைமுறையைக் கொஞ்சம் ஆழமா யோசிச்சுப் பாரும். இன்னும் காலம் போகேல்ல எண்டு தான் சொன்னன். உம்மட நல்லதுக்குத்தான் பைரவி. அண்டைக்கு இப்படியெல்லாம் கதைக்க நேரம் இருக்கேல்ல எல்லா?” என்ற போது அவன் குரல் மாறியிருந்தது. சத்தியமாக, அவசரம் அவசரமாகத் தேடி வந்தானே, இப்படிக் கதைப்பதற்காக இல்லவே இல்லை. ஆனால் நடப்பது… மனம் கனத்தது. அதுவும் அவள் கண்ணீர்?
“அதேபோலத்தான் நானும் சொன்னன். காளான் பண்ணை வேலை, ஹோட்டல் வேலை என்றால் மட்டும் இப்படிக் காட்டான் கணக்கில்லா திரியோணும். நீங்க வாய் வார்த்தையால என்ன விரும்புறன் எண்டு இன்னும் சொல்லேல்ல. வேண்டா வெறுப்பா ஆரும் இங்க…” பீறிட்டு வந்த விம்மல் தொண்டையை ஆக்கிரமிக்க, விருட்டென்று சென்றுவிட்டாள்.
“டேய் பைரவி நில்லும். நில்லும் எண்டுறன்.” பின்னால் துரத்திய குரலுக்கு அவள் திரும்பவே இல்லை. கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே இருந்து விட்டாள். மன்னார்ப் பிள்ளை வேறு இருவரையும் மாறி மாறிப் பார்த்தாளா! பழக்கமில்லா சூழல் பெரும் சங்கடமாக இருக்கவே, தம் வீட்டுக்கு வந்துவிட்டான், ஆரூரன்.
அவள் தான், அடுத்து வந்த நாட்களில் இவர்கள் வீட்டுப் பக்கம் வராது சாதித்தாள். மதியும் கௌசல்யாவும் கேட்க, படிப்பு படிப்பு என்று அடித்து விட்டிருந்தாள். அவன் அழைத்துப் பார்த்தான்; வீட்டில் தட்டினான். தலை காட்டினால் தானே? போதாக்குறைக்கு அடிக்கடி அவள் அத்தை வீட்டில் தங்கினாள். என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த போது , யோசித்துப் பார்த்திருப்பாளோ…சரி வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டாளோ என்றுதான் எண்ண வேண்டியிருந்தது.
error: Alert: Content selection is disabled!!