அன்றைய பத்திரிகைகளின் முன் பக்கத்தில், ‘முல்லைத்தீவில் சாமியார் கைது’ என்றதின் கீழ், அதுவரை, மக்கள் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்த இளைஞனின் புகைப்படத்தோடு செய்தியிருந்தது. அவன் வசித்து வந்த வீட்டின் நிலக்கீழ் அறை, போதைப்பொருள் பதுக்கல் கிடங்காக இயங்கியதும் அம்பலமாகியிருந்தது.
வீரத்துக்கு, விடிவுக்கு என்றெல்லாம் இரத்தம் சிந்திய மண்ணில், சர்வசாதாரணமாக மாயையும் போலிகளும் போதைகளும்!
ஒவ்வொரு மனிதனும் கடமையைக் கருத்தாகச் செய்து உழைப்பையும் போட்டால், இயற்கை, அவனுக்கானதை வழங்கும் என்றறியாமல், சாமியென்ற போலிகளை நம்பிய ஏமாளிகள் அதிர்ந்து நின்றது தான் மிச்சம்!
கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருப்பது, அதுவும் மிக மிக விருப்பமானவர்களில் …இந்த, ‘விருப்பம்’ என்ற சொல் நினைவிலாடியதும் கோபம் கூடும் போலிருந்தது, பைரவிக்கு. அப்படியே, பெரிசா விருப்பம் உள்ள ஆள் அவர்! அப்படிக் கொஞ்சம் சரி இருந்திருந்தா, உனக்கும் எனக்கும் சரி வராது என்ற கதை வாயில் வருமா? அதுவும் விரும்புகிறேன் என்று சொன்ன பத்து நாட்களில்!
அவளுக்குப் பழக்கமேயில்லா அழுகையைப் பழக்கப்படுத்தியிருந்தான், இந்த ஆரூரன் என்ற, “முரட்டு முசுடு! காட்டான்!”
அவனைப் பார்க்கவே கூடாதென்று, பார்த்து பார்த்து நடந்ததின் விளைவே, அத்தை வீட்டு வாசம்.
ஆரம்பத்தில், மலர் இல்லத்தைத் தட்டினான் தான், கைப்பேசி அழைப்புகளும் வந்தன. சரி வராது என்றவன், மீண்டும் அதை விளங்கப்படுத்தத் தேடுகிறானோ என்று கோபம் கூட கூட, இவள் அவனைத் தவிர்த்தாள். பின், அவனும் விட்டு விட்டான். ஆனால், அவன் நினைவுகள், அவளை விட்டு விலகுவேனா என்றளவில் அவளோடு பிணைப்பில் இருந்தது; இன்னும் இன்னும் அதிகமாக! உதறித் தள்ளவோ மறக்கவோ அவள் நினைக்கவில்லை; நினைத்தாலும் இலேசான காரியமாகத் தோன்றவும் இல்லை.
அன்பின் ஆழம் உணர்த்தும் அருமையான கணங்களாக, கோபதாபங்களும் பிரிவுகளும் அமைந்துவிடும் என்ற உண்மையை,உணரச் செய்யும் நாட்களாக, அடுத்துருண்ட பத்து நாட்களும் கடந்திருந்திருந்தன.
நாட்கள் கடக்க கடக்க, பைரவியின் கோபம் எப்படியென்றில்லாது வடிந்து போயிருந்தது; மனத்தாங்கல் இருக்குதே, துக்கத்தோடு கலந்துகட்டி ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருந்தது.
“இனியும் ஏலாது, பிரேக் அப் எண்டு தான் இருந்தனான். ஆனா, என்னட்ட இருந்து அந்தளவு கெதியா நீ தப்பிவியோ! உன்ன…”அப்படியே அவனைச் சுருக்கிச் சின்னவானாக்கிவிட்டு, நங் நங் என்று தலையில் குட்டுக் கொடுக்க வேண்டும் போலிருந்தது, பைரவிக்கு. இந்த மனநிலை, ஒன்றுமே நடவாத பாவனையில் அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தது.
“நல்ல பசியோட வந்தனான், சுட சுட கட்லட்…” உள்ளே வந்த வேகத்தில் நாலு கட்லட்டுகளை உண்டுவிட்டு, “ஆன்ட்டி டீ ?” என்று, எப்போதும் போலவே பழகியவள், மதிக்கோ, கௌசல்யாவுக்கோ சந்தேகம் கொடுக்கவில்லை.
ஆரூரன் தான் கண்ணில் படவேயில்லை. கேட்கலாம் என்றால் திடீரென்று எப்படி? ஒரு மாதிரியாக இருக்கவே, மலர் இல்லத்துக்கு நடையைக் கட்டினாள். அது பார்த்தால், மலர் இல்ல வளவின் கடைசியில், கறிமிளகாய்த் தோட்டத்தினுள் நின்றான், அவன்.
வளவின் பின்புறத்தைத் துப்பரவாக்கி, கொத்திப் பதப்படுத்தி கறிமிளகாய் நட்டிருந்தான், ஆரூரன். வீட்டுக்குத் தேவையானவை என்று, கௌசல்யா சிறு தோட்டம் வைத்திருந்தாலும் இப்படி, கிட்டதட்ட 600 கன்றுகள் நட்டுச் செய்வது புது முயற்சி. அதுவோ, நிறைந்த பலன் தருவேன் என்று, முதல் முறை வியாபாரத்திலேயே காட்டிவிட்டிருந்தது. சுளையாக வருவாய் தரும் விவசாயம். பிறகென்ன!
காளான் கொட்டிலில் வேலை செய்யும் பெடியன்களே இதையும் பார்த்துக் கொண்டாலும், நேரம் கிடைக்கையில் எல்லாம், தண்ணீர் பாய்ச்சுவதும் சந்தைக்குக் கொடுக்க, கறிமிளகாய்களைப் பறிப்பதும் ஆரூரன் ஆசையோடு செய்யும் வேலைகளில் சேர்ந்திருந்தது.
அப்படித்தான் இன்று, அதிகாலையே கொக்குவில் காளான் பண்ணைக்குச் சென்று விட்டு, கொஞ்சம் முதல் தான் வந்தவன், சந்தைக்குக் கொடுக்கவென மிளகாய்களைப் பறித்துக்கொண்டு நின்றான். கரங்கள் தான் வேலை செய்தன; மனம் தான் தடம் மாறி ஒருத்தியிடம் சிக்குப்பட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறதே!
பேசாமல் அவள் அத்தை வீட்டுக்குச் சென்று இழுத்துக்கொண்டு வந்தால் என்ன?
கலியாணம் கலியாணம் என்று மூச்சுக்கு முந்நூறு தடவைகள் சொல்லிக்கொண்டு திரியும் தாயிடம், இப்படி, நாங்க விரும்பிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன?
பாமினி ஆன்ட்டிக்கு அழைத்துச் சொல்லிவிட்டால் தான் என்ன?
தவித்த மனமோ, எதையாவது செய் ஆரூரா என்றது. எதையும் செய்ய விடாது பிடித்திழுப்பதும் அதுதான்.
அன்று சொன்னது போல், அவள் மீதும் அவள் சொன்ன நேசத்தின் மீதுமான உறுதியான நம்பிக்கை உன்னுள் இல்லை, ஆரூரா. அதுதான், அன்று நீ கதைத்த விதத்திற்குக் காரணம். அவள் மீது உனக்குள்ள அன்பு தானே உன்னை இந்தளவுக்குத் திண்டாட வைக்குது? பேசாமல் போய் வாய்விட்டுக் கதையேன்!
இப்படி, அதட்டி உந்தித் தள்ளும் வேலையையும் அதே மனம் தான் பார்த்தது. அவள், அவனை விட்டுத் தூரமாகச் சென்று, எட்டாதவளாகி விடுவாளோ என்ற பயம் வேறு வந்திருந்தது.
தலையிடிக்கும் போலிருந்தது, அவனுக்கு. நெடிய மூச்சு விட்டபடி, பறித்த மிளகாய்களைப் போட நிமிர்ந்து திரும்பியவன், அப்படியே அசையாது நின்று விட்டான்.
நொடிகள் சில கடந்திருக்கும். இடுப்பில் கரங்களை ஊன்றிக்கொண்டு பத்திரகாளியொன்று நின்று கொண்டிருக்கிறதே! இந்த எண்ணத்தில் முறுவல் படர அசைந்தான், ஆரூரன். அங்கிருந்த பெட்டிக்குள் பறித்த காய்களைப் போட்டவன், “காலை வணக்கம் டொக்டர்!” மனம் மறைத்துத் திடமாகவே சொல்லியிருந்தான். அந்த வணக்கத்தில் நக்கல் கூட கலந்திருந்தது.