அத்தியாயம் 30 – 2

பார்வை மட்டும், அவள் விழிகளால் உள் நுழைந்து மனதை ஆராய முயன்றது. இவன் சரிவரான் என்றேதும் முடிவுக்கு வந்து விடவில்லையே? நா கேட்க உண்ணியது. 

இதனிடையில், “இங்க ஒருத்திய விசராக்கிப் போட்டு, நல்ல வடிவா நிண்டு விவசாயம் பார்த்து உழைக்கிறீர் என்ன? உம்ம…” என்று பாய்ந்தவளைத்  தன்னியல்பாய்த் தடுக்கப் பார்த்தான்.

“பைரவி அடி வாங்குவீர்! டேய்ய்ய் மிளகாய்க் கண்டுகள மிதிக்கிறீர்! இதெல்லாம் விளையாட்டா உமக்கு?” என்றவன், “அம்மோய்! நரம்பி! கழுத்தைப் பிடிச்சு நெரிச்சுக் கொல்லப் பாக்கிறா! அம்மா… ஓடி வாங்கோ!” என்றபடி, அவளைத் தடுக்க நினைத்துப் பிடித்துத் தள்ளி நிறுத்திவிட்டுப் பார்த்தால், அவள் பிடரித் தலையில் இவன் பிடியிருந்தது. அந்நேரம் பார்த்தா அவன் தாய் வரவேண்டும் .

“டேய் தம்பி!” அதிர்வோடு அதட்டினார், கௌசல்யா. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதுவும் தன் மகனா? தங்கைகளுக்கே கையோங்கி அறியார்! ஊரார் வீட்டுப் பிள்ளையின் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டு நிற்கிறானே!

நெஞ்சு கிடுகிடுக்க, ஓட்டமாக வந்தவர், “விடடா பிள்ளைய!” குரல் உயர்த்தினார்.

இருவர் பார்வையும் கௌசல்யாவில். 

“என்ன துணிவு உனக்கு? வாயால கதைக்கிறது வேற. இது என்ன வேலை? முதல், நீ எப்பிடி அவவில கை வைக்கலாம்?  ஐயோ ஐயோ என்ர மகன் தங்கம் எண்டு இருக்க…” கோபத்தில் கத்திக்கொண்டு வந்தவர் அரற்றி அழவே தொடங்கியிருந்தார்.  

தன் தோள் உயரத்துக்கு நின்றவளை, அடக்கிய சிரிப்போடு பார்த்தான், ஆரூரன்.

அவளோ, நிறைந்து போன விழிகளோடு அவன் நெஞ்சில் முகம் பதித்தாள். 

“டேய் பைரவி, வியர்வ பாரும். ஒரே அழுக்கா…” பெரும் அந்தரத்தோடு அவளைப் பிரித்து விலக்க நினைத்தான், ஆரூரன். அவள் செவிமடுத்தாற் போலவே தெரியவில்லை. அவள் வலக்கரம், அவன் முதுகுப் புறமாகச் சென்று, மறுபுறமாகச் சுற்றி வந்த இடக்கர விரல்களோடு கோர்த்துக் கொண்டது. 

“சொறி ஆரூரன். நான், உண்மையாவே நீங்க சொன்னது போல எல்லாம் நினைக்கவே இல்லை. ப்ரொமிஸ்!” விம்மலோடு சொல்ல, “அச்சோ! அடிவாங்கப் போறீரா? அப்பிடி எல்லாம் நான் ஒண்டும் நினைக்கேல்ல. நானும் அப்படிக் கதைச்சிருக்கக் கூடாது. சொறி!”அவள் தலையைத்  தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் பார்வை மெல்ல நகர்ந்து தாயில் தரித்திட்டு.

அவரோ, கோபம் இருந்த இடம் தெரியாது பறந்திருக்க, உச்சபட்ச அதிர்வோடு நின்றிருந்தார்.  

மகனில் காணும் மகிழ்வும் கனிவும் முற்றிலும் அவருக்குப் புதிது! ஆனால்… மனதுள் பதற்றமோடியது! இது எப்படிச் சாத்தியம்? அவர் கண் முன்னால் நடமாடியவர்கள்; அதுவும், எலியும் பூனையும் போல்!

‘பாமினி எவ்வளவு நம்பிக்கையா, பொறுப்பா விட்டிட்டுப் போனவா’ அவருள், மகிழ்வுக்குப் பதில் பதற்றம் தான் உருவானது. முக்கியமாக பைரவியைச் சின்னப்பிள்ளை என்ற கண்ணோக்கில் மட்டுமே பார்த்தவருள் பதற்றம் கூடவே செய்தது.

அசையவோ கதைக்கவோ முடியாது தடுமாறி நின்ற தாயை நெருங்கினான், ஆரூரன். அவனில் அணைந்தபடியே வந்தாள், பைரவி.

“என்னம்மா பைரவி இதெல்லாம்?” கண்ணீரோடு அவர் கேட்க,  “ம்மா… இந்தாங்க உங்கட மருமகள்!” விழிகள் கலங்க, அவளை விலத்தி அவர் கையில் பிடித்துக் கொடுத்திருந்தான், ஆரூரன்.

“தம்பி என்னய்யா? பைரவி… குஞ்சு என்னம்மா? எனக்குக் கையும் ஓடேல்ல காலும் ஓடேல்ல!” பதறியவர் தன்னோடு அணைந்தவளை எப்படித் தள்ளி நிறுத்துவார்?

‘ஒரே மகள்! விரும்பிட்டினமா? சரி செய்து குடுப்பம் எண்டு சொல்வார்களா?’ அவர் மனம் அடித்துக் கொண்டது.

அவர் மௌனம் தாக்கியதில் பைரவி விம்மினாள்.

“ஒராள் வேண்டப்போறா அம்மா!”அவளுக்குப் பத்திரம் காட்டியவன், “ஒண்டு ரெண்டு…” என்று எண்ணினான்.

“ஆறு கண்டுகள். அதுவும் காய் பிஞ்சுகளோட! யானை மிதிச்ச கணக்கில, என்ர தோட்டத்தச் சரியாக்கிப்போட்டு கண்ணைக் கசக்கிறீரா என்ன? மரியாதையா அண்டைக்குத் தந்தது போல ஒரு ஐம்பதாயிரத்த எடுத்து வைக்கிறீர் விளங்கிச்சோ!” பொய்யாக ஏசியவனிடம் ஓடடி என்றதுள்ளம்; மாறாக, கௌசல்யாவின் மௌனம் அசைய விடவில்லை.

 

error: Alert: Content selection is disabled!!