அதைக் கவனித்த நித்தி, “அண்ணா எல்லாம் சொன்னார் மதுரா. அவர் மனதை சொல்லும் போதே உங்களைத் துன்பப்படுத்தும் எதையும் செய்ய வேண்டாம் என்றுதான் சொன்னேன் தெரியுமா?” நேரடியாகவே பேசினாள்.
சற்றும் தெளிவின்றி கன்றிவிட்ட மதுராவின் வதனத்தை ஆராய்ந்தவள், “அண்ணாவின் விருப்பத்தைக் கட்டாயம் ஏற்க வேண்டுமென்று இல்லையே! விருப்பமில்லை போ என்றால் அவர் தன்வழியில் போகப் போறார். கெதியா ஒரு பெண்ணைப் பிடித்துக் கட்டி வைத்தால் போச்சு!” இலகுவாகத் தீர்வு சொல்லி அவளைச் சமாதானம் செய்ய முயன்றள்.
மதுராவோ கசியும் கண்ணீரை அடக்க முடியாது தடுமாறினாள்.
“ப்ச்…ஒன்றுக்கும் யோசிக்காதீங்க.” என்றவள், “அதற்காக, என்னையும் ஒதுக்க முடியுமா!? வீட்டுக்கு வரமாட்டேன் என்பீர்களா?” மீண்டும் கட்டிக்கொண்டு தேம்பி விட்டாள்.
“அன்றைக்கு ஏதோ கோபம் நித்தி. யாரிலும் இல்லையம்மா; இப்போ யோசித்துப் பார்த்தால் உன் அண்ணனிலும் இல்லை. நீ சொன்னது போல அவர் தன் விருப்பத்தைச் சொன்னார். நிச்சயம் என் மீது கொண்ட பரிதாபத்தில் வந்த வார்த்தைகள் தான் அவை. அதைப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ சொல்லிவிட்டேன் என்றாலும், என்னிலே எனக்கு மிகவும் கோபம் நித்தி. நான்..நான் மிகவும் கேவலமானவள் போல உணர்கிறேன்.” எவரிடமும் வாய்விட்டுச் சொல்லாது அடக்கி அடக்கி புழுங்கிக் கொண்டிருந்தவள் அழுதுவிட்டாள்.
“எப்படி நித்தி? உங்க அண்ணா யார்? எத்தனை நாட்கள் அறிமுகம்? என்னதான் என்றாலும் அவர் எனக்கு அந்நியம் தானே! எப்படி அவரை பிள்ளைகள் பிறக்கும் இடம் வரை வரவிட்டேன் என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை.
இதைக் கேட்டால் என் அம்மாவே என்னை எவ்வளவு கேவலமாகப் பார்ப்பார்.” சிவந்த விழிகளால் அவள் பார்த்த பரிதாபப் பார்வையில் எப்படித் தேற்றுவது என்று தெரியாது தடுமாறினான் நித்தி.
“அப்படியெல்லாம் ஏன் நினைக்கிறீங்க மதுரா. அந்த இடத்தில் உங்களுக்கென்று இருந்த ஒரே ஆறுதல் அண்ணா மட்டும் தான்.” சமாதானம் செய்ய முயன்றவள், “நடந்ததை நினைத்து யோசித்துக் குழம்ப வேண்டாம் மதுரா.” தன்னால் முடிந்தளவு ஆறுதல் படுத்த முயன்றிருந்தாள்.
இப்படி, கடந்த சில நாட்களில் தன்வாழ்வில் நிகழந்தவற்றைப் புரட்டிப்பார்த்துக் கொண்டிருந்த மதுரா, “செல்லக் குட்டிகள் வீட்டுக்குப் போகப் போறீங்களா? இங்க பாருங்க… இங்க இங்க…” குழந்தைகளின் கன்னங்களை இரு கரங்களாலும் ஒன்றாகத் தடவிக் கொடுத்த நித்தி, “ஹலோ..மேடம் என்ன இங்கு இல்லை போல!” என்று சீண்ட, சட்டெனக் கலைந்தாள்.
நடந்தவைகளிலிருந்து விடுபட்டவளின் விழிகளும் தன் செல்வங்களில் தான் நிலைத்திருந்தன. அவளால் சிறிதும் நம்பமுடியவில்லை. ‘இவர்கள் இருவரும் என் குழந்தைகளா?’ மனதில் ஓடிய பரவசத்தோடு வெறுமையான வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.
‘ஆனாலும்…’ மனதின் முனகல்! ‘என் வயிற்றில் பிறந்ததுதான் உங்கள் குற்றமா? தகப்பன் இல்லாதவர்கள் என்கின்ற பெயரும் கூடவே ஒட்டிக் கொண்டுள்ளதே!’ கசந்தது இதயம்.
அமைதியாகிவிட்ட மதுராவை ஒருகணம் உற்றுப் பார்த்தாள் நித்தி.
“திரும்பவும் என்ன யோசனை மதுரா?” என்றவள் குழந்தைகளிடம் திரும்பி, “உங்க அம்மா சரியான மோசம்டா குட்டிகள். என் ஏஞ்சல்ஸ் அப்படியில்லை. இரவில் நல்லா நித்தா கொள்வார்களாம்; கொடுக்கும் பாலை சத்தம் செய்யாது குடிப்பார்களாம்; நேர்ஸ் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்.” மதுராவின் முழுக் கவனைத்தையும் குழந்தைகள் பக்கம் திருப்பினாள்.
“உண்மையைச் சொன்னால், இப்போ உங்க வீட்டுக்கு வரவே எதுவோ போலிருக்கு நித்தி. முதலில் என் வீடு போல எவ்வளவு இயல்பாக இருந்தேன். இனி அது முடியும் போலத் தெரியவில்லை. பேசாம, போக இடமில்லை என்று உதவி கேட்கலாமா…” கலக்கமாகச் சொல்லிக்கொண்டு வந்தவள் நித்தியின் சுருங்கிச் சிறுத்த வதனம் கண்டு பேச்சை நிறுத்திவிட்டாள்.
“ஹையோப்பா! இதோடு எத்தனையாவது தடவை இந்தப் பேச்சை எடுத்திட்டீங்க. நீங்களாக இல்லாததையும் பொல்லாததையும் கற்பனை பண்ணாதீங்க மதுரா. அண்ணா இனி உங்க பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்; விருப்பமில்லை என்ற பின்னும் உங்களைத் தொந்தரவு செய்யும் அளவுக்கு அவர் ஒன்றும் கெட்டவர்…” நித்தியின் குரலில் அடங்க மறுத்த காரம் தெறித்தது.
அவள் சொல்லி முடிக்க முன் அவள் வாயில் கைவைத்துத் தடுத்திருந்தாள் மதுரா.
“உங்க அண்ணாவைப் பற்றி குறையாக நினைக்கவில்லை நித்தி. அது என்னால் முடியாதம்மா. அன்றைக்கு கோபம் வந்தது உண்மைதான்; பிறகு யோசித்துப் பார்க்கும் போது…என்னில் தான் எனக்கு கோபம்.
நீங்க செய்த உதவிகளுக்கு உங்களைப் பற்றிக் குறையாக நினைத்தால் அந்தப் பாவம் என்னச் சும்மா விடாது.” தழுதழுத்தவளை அவள் பேசத் தொடங்கியபோதே வாயிலில் வந்திருந்த கார்த்திகேயன் செய்வதறியாது பார்த்தான்.
‘கலக்கம் தேவையில்லை மதுரா. உனக்கு விருப்பம் இல்லையா அந்தப் பேச்சை விட்டு விடு!’ என, ஒப்புக்காகக் கூட எண்ணவில்லை அவன்.
‘அன்று உனக்கு கஷ்டம் என்றதும் என் ஆறுதல் தேவைப்பட்டது. அந்த இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் அவர்களிடம் ஆறுதலைத் தேடி இருக்க மாட்டாய். என்னை நெருக்கமாக நினைத்ததால் தான் உன்னால் அது முடிந்தது; ஆனால், அதை நீ உணர்ந்து கொள்கிறாய் இல்லை!’ ஆயாசம் கொண்டான்.
‘நீ மாறுவாய் மதுரா; இதே வாயால் இது என் வீடு என்று சொல்லிலும் செய்யலிம் காட்டுவாய்.’ இப்படியே எண்ணிக் கொண்டவன், “போகலாமா நித்தி?” என்றவாறே உள்ளே நுழைய, சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டெழுந்தாள் மதுரா.
“வாங்கடா வாங்க இதுதான் எங்க ஏஞ்சல்ஸின் பலஸ்; டொட்ட டொயிங்.” ஆரணியோடு நித்தி நுழைய, ஆரபியோடு பின்னால் நுழைந்தான் கார்த்திகேயன். கடைசியாக உள்ளே கால் வைத்தாள் மதுரா.
மறுநொடி, அப்படியே நின்றுவிட்டாள்.
நாற்பக்கச் சுவர்களும் மெல்லிய ரோஸ் வண்ணத்துக்கு மாறியிருக்க, அறையில் உள்ள பொருட்கள் எல்லாமே வெள்ளையும் ரோஸுமாக பளிச்சிட்டது. ஒருபக்கத்தை முழுதாகப் பிடித்திருந்த பெரியகண்ணாடி யன்னல் ரோஸும் வெள்ளையுமாக புத்தாடை அணிந்திருந்தது.
அப்பெரிய சதுர அறையின் நடுவில் டபிள்பெட்; வெள்ளையும் ரோஸும் கலந்த படுக்கை விரிப்பும் தலையணைகளும் நேர்த்தியாக வைக்கப்பட்டிருக்க, பார்த்தும் அறைக்கு கம்பீரம் சேர்த்தது.
அதன் ஒருபக்கச் சுவரோடு அடுத்தடுத்து இரு அழகிய வெண்மைநிறத் தொட்டில்கள்; சிறுகட்டில்கள் போலவே இருந்த தொட்டில்களின் கால்மாட்டில் சிறு அலுமாரி பொருத்தப்பட்டிருக்க, அதன் மேலே குழந்தைக்கு ஆடைமாற்றும் வகையில் வசதியாக ஸ்பொஞ்மெத்தை போடப்பட்டுத் தயாராக இருந்தது.
அறையின் ஒரு கோடியில் குழந்தைகளுக்கான இரு அலுமாரிகள்; ஆங்காங்கே சுவர்களில் பூ அலங்காரங்கள் பொம்மைகள் என, தம் சொந்தக் குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்து செய்வதைப் போன்ற பாசம் ஒவ்வொரு இடத்திலும் தெரிய அவ்வறையை அலங்கரித்திருந்தார்கள் அண்ணனும் தங்கையும்.
அவற்றைப் பார்த்த மதுராவின் மனமும் விழிகளும் தளர்ந்து நிறையவே செய்தது.
கார் சீற்றினுள் இருந்த குழந்தைகளை தொட்டில் அருகில் வைத்த நித்தி, வாயிலருகில் அசையாது நின்றுவிட்ட மதுராவை திரும்பிப் பார்த்தாள். அவளின் கலக்கத்தை கவனியாத பாவனையில், “தொட்டிலில் கிடத்துவோமா மதுரா?” ஆவலோடு கேட்டாள்.
“இதையும் கேட்டுவிட்டா செய்ய வேண்டும் நித்தி.” என்ற கார்த்திகேயன் தான் துக்கி வந்த குழந்தையை கார் சீற்றிலிருந்து தூக்கி, “செல்லக் குட்டி.” அவள் வயிற்றில் கொஞ்சியவன் பூப்போல மெல்ல தொட்டில் ஒன்றில் கிடத்த, “இவளை நான் கிடத்துகிறேன்ணா.” அடுத்தவளைத் தூக்கிக் கிடத்தினாள் நித்தி.
“ஹ்ம்ம்…இனி வா நித்தி; கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்.” முணுமுணுப்பாகச் சொன்னவாறே, கவனமாக மதுராவின் பார்வையைத் தவிர்த்து அவளைத் தாண்டி வெளியில் சென்று விட்டான் அவன்.
குழந்தைகள் பிறந்து பத்து தினங்கள் கடந்திருந்தன!
என்னதான் முன்னரைப் போல வீட்டில் இயல்பாக இருக்க முடியவில்லை என்றாலும் அதற்கும் தன்னைப் பழக்கிக் கொண்டாள் மதுரா. குழந்தைகளோடு, அவளுக்கு வேறு சிந்தனைகளுக்கு நேரம் இல்லாமல் போனதும் இலகுவாகிப் போனது.
வீடு வந்ததிலிருந்து ஆறு மணித்தியாலங்களுக்கு உதவ என்று ஒரு உதவியாளர் வந்து போனார்.
“குறிப்பிட்ட நாட்களுக்கு அதை இன்சூரன்ஸ் நிர்வாகமே ஒழுங்கு செய்யும். மேலதிகமாக நாமே ஒழுங்கு செய்து கொள்ளலாம்.” என்ற கார்த்திகேயன் ஒருமாதம் வரை வந்து போகுமாறு ஒழுங்கு செய்திருந்தான்.
“இதென்ன! ஒருமாதத்துக்கு ஏன்? இப்போதே அவர் வந்து போவது எனக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கு. அவர் வரவில்லை என்றால் நான் என் பாட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வேன். அதைவிட வேறென்ன வேலை எனக்கு.” கார்த்திகேயனின் முகம் பாராது நித்தியிடம் சொன்னாள் மதுரா.
அதை அவர்கள் பொருட்படுத்தினால் தானே!
“எனக்கு இப்போ ஒன்றுமில்லை. நான் நன்றாகத் தானே இருக்கிறேன். முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை.” என எவ்வளவோ சொன்னாலும், அவளை எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்கவில்லை.
அவர்களின் கரிசனையான கவனிப்புகளை சந்தோசமாக ஏற்க முடியாது திணறுவதே இவள் வேலையாகியது.
“ஹாஸ்பிட்டலில் இருக்கும் பொழுது அவர்கள் தந்த சாப்பாட்டைத்தானே சாப்பிட்டேன். இப்படி பத்தியம் எல்லாம் எனக்கு வேண்டாம்.” என்றதைச் சற்றும் பொருட்படுத்தாது அண்ணனும் தங்கையும் மாறி மாறி சமைத்து, உண்ண முடியாது திணறுபவளை வெருட்டி உருட்டி உண்ண வைத்தார்கள்.
“ஒரு வேலையும் இல்லையென்றால் எப்படி? குழந்தைகளின் வேலையைச் சரி நானே பார்த்துக் கொள்கிறேன். அந்த மனிசி இனி வேண்டாம்.” எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். பயன்தான் பூச்சியம்.
“முதல் குழந்தைகள்; அவர்களைப் பற்றி என்ன தெரியும்? ஒருவர் என்றாலும் பரவாயில்லை; இருவரையும் முறையாகப் பராமரிக்கத் தெரியுமா? நாளைக்கு எதுவுமென்றால் போய் நிற்பதை விட இது நல்ல முடிவு. இவர் ஒருமாதம் வந்துபோக, பிறகு கமலா ஆன்ட்டி வந்து நிற்பார். குழந்தைகளும் கொஞ்சம் வளர்ந்து விடுவார்கள்; பராமரிப்பது சுலபம்.” குழந்தைகளுக்காகவே யோசித்தவன் அவள் வாயைக் கட்டிவிட்டான்.
அன்று மாலை ஏழுமணியளவில் தாய்ப்பாலோடு மாப்பாலும் கொடுப்பதால் அதைக் கரைத்து வர சமையலறைக்குள் சென்றாள் மதுரா.
தொலைக்காட்சியில் இருந்த கார்த்திகேயன், தொலைபேசி அழைப்பு வர எழுந்து அப்பால் சென்று நின்று கதைத்துக் கொண்டிருந்தான்.
நித்தியோ குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டு அறைக்குள் இருந்தாள் .
பாலைக் கரைத்து எடுத்துக்கொண்டு வந்த மதுராவின் விழிகள் தற்செயலாகத் தொலைக்காட்சியில் சென்று கொண்டிருந்த செய்தியில் பதிய, கால்கள் தயங்கின. பிறகு, நின்று கேட்டவளோ, உடல் அதிர அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டே திரையை வெறித்தாள்.
அவளைச் தற்செயலாகக் கண்ட கார்த்திகேயன், “ராது! என்ன செய்யுது?” கூவிக்கொண்டே ஓரெட்டில் அணுகியவன், அவள் தடுமாறுவதைப் பார்த்து தோள்களைப் பற்றியவாறே, அவள் விழிகளைத் தொடர்ந்து தொலைக்காட்சித் திரையைப் பார்த்தவனின் உடல் தன்னையும் அறியாது நிமிர்ந்தது.

