21
“ராது” என்ற தமையனின் கூவலில், மடியில் கிடந்த சின்னவளை கட்டிலில் கிடத்திவிட்டு விரைந்து வெளிப்பட்டாள் நித்தி.
அங்கே, தளர்ந்து நின்ற மதுராவையும், அவள் தோள் பற்றிய தமையனையும், அவர்களின் அதிர்வையும் படம் பிடிக்கத் தவறாத அவள் விழிகள், அவ்விருவர் பார்வையும் தொலைக்காட்சியில் நிலைத்துள்ளதை உணர்ந்து தன்னிச்சையாக அங்கே பாய்ந்தது; செவிகளும் கூர்மையாகின!
திரையில், ஒரு பெண்மணி அழுதுகொண்டே எதையோ சொன்னதோடு அடுத்த செய்தி வந்திருக்க, ‘ஏதோ ஆக்சிடென்ட் போல! ‘ஹைவே’யில் என்றார்கள். லூசுகள்! சண்டைபிடிக்க இடம் கிடைக்காது காருக்குள்ள பிடித்துவிட்டு, ரோட்டில், அதுவும் ‘ஹைவே’யில் இரவில் இறங்கி விளையாடினால், அரைச்சிட்டுத்தான் போவான்கள். சில இடங்களில் வெளிச்சமும் இராது. திடுதிப்பென்று தலையைக் காட்டினால் அவங்களும் தான் என்ன செய்வது?” சலித்துக்கொண்டவள், “அதற்கு ஏன் இவர்கள் இருவரும் இப்படி நிற்கிறார்கள்?!” எனக் குழம்பிப் போனாள்.
“என்ன நடந்தது மதுரா?” என்றவாறே நெருங்கி, அவள் கரத்திலிருந்த பால் போத்தல்களை வாங்கிக் கொண்டவள், மதுராவின் பார்வையில் மிகவும் குழம்பினாள்.
“அழுகிறீங்களா மதுரா? என்னண்ணா ஏன்? ஏதோ ஆக்ஸிடென்ட் என்றார்களே!” என்றவள், தமையனின் விழிகள் காண்பித்த எச்சரிக்கையில் உஷாரானாள்.
“என்னப்பா நடந்துவிட்டது?!” அப்போதும் முணுமுணுத்தபடியே, “பால் கொடுக்க வேண்டாமா மதுரா? பிறகு அவர்கள் நித்திரையாகிப் போவார்கள்; இப்பவே அரை நித்திரை.” பால் போத்தல்களை ஒருகையில் பிடித்துக்கொண்டு மதுராவை இழுத்தவாறே அறையை நோக்கி நடந்தாள்.
நித்தியின் இழுவைக்கு இழுபட்டபடி சென்றவளை விழிகள் தொடர, சிலகணங்கள் அசையாது நின்றான் கார்த்திகேயன்.
‘நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ராஸ்கல்; இந்த ஆட்டம் போட்டானே! எல்லாம் இதுக்குத்தானா?’ மனதில் கறுவியபடி அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் உள்ளம் மிகையான கோபத்தில் ஆடியது.
மதுராவின் கலங்கிய தோற்றம், அவன் உள்ளக் கொதிப்பை மேலும் மேலும் அதிகரித்தது என்றால் சிறிதும் மிகையில்லை.
‘தான் தாலி கட்டியவள் தனக்கு மட்டுமே உரிமை என்பது நம் ஆண்களுக்குள் இருக்கும் எண்ணம் தான்; அதில் யாரும் பிழை கண்டுபிடித்தார்களா? அதே எண்ணம் அந்தப் பெண்ணுக்கும் இருக்குமே! அதை எப்படி இவனைப் போன்றவர்கள் மறந்து போகிறார்கள்!?
தான் மட்டும் இரண்டு குடும்பம் நடத்த வேண்டும். இவனிடம் தாலி வாங்கிய பாவத்துக்கு மனைவி என்று வந்தவள் அதைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டுமா? என்ன ஒரு குரூர எண்ணம்!
முடியாது; உன் இரட்டை வாழ்வில் பங்கெடுக்க நான் விரும்பவில்லை என்று இவள் விவாகரத்துக் கேட்டதும் காதலியின் கையை இறுகப்பிடித்தவாறே விவாகரத்தும் கொடுத்துவிட்டு, “பிறந்தது என் குழந்தைகள்; அவர்களை வைத்தே, அவளை என் காலடியில் விழவைக்கிறேன் பார் என்று நின்றால்?!
அவன் மேல் காதலைக் கொட்டிய அந்த மடச்சியும் எத்தனைக்குப் பொறுப்பாள்.
“நானும் உன்னை இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆக்கினேனே! வேண்டாம் என்று ஒதுங்கியவளை பேசாமல் விட்டு விலகிவிடு. அன்றைக்குப் போல நீ போலீசில் போயிருந்தால் வக்கீலை அழைத்துக்கொண்டு அங்குமிங்குமாக அலைய முடியாது.” என்ற அவள் வாதத்தில் பிழையில்லையே!
பெரிய மகான், கண்டவன் வீட்டிலும் தன் குழந்தைகளை வளர விடமாட்டாராம். குழந்தைகளைக் காரணம் காட்டி, மதுராவை திரும்ப வரவழைத்து காலில் போட்டு நசுக்குவாராம். எந்த யுகத்தில் இருக்கிறான் மடையன்! அதுதான் இந்த முடிவு கிடைத்திருக்கு!’ அன்று காவல் நிலையத்தில் வைத்து சூளுரைத்துச் சென்றதை நினைத்து மனதில் கறுவினான் கார்த்திகேயன்.
“ ‘ஹைவே’யில் போய்க் கொண்டிருக்கும் பொழுது விவாகரத்து வாங்கிப் போன அவன் மனைவி, குழந்தைகள் தொடர்பான பேச்சு முற்றியதும் ‘இங்கேயே இறக்கி விடு!’ என்று கோபத்தில் இரைந்தான்.” என்று விவாகரத்து வாங்கிய மனைவி மதுரா பற்றிச் சொன்னவள்,
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் எப்படியும் அந்தக் குழந்தைகளை அழைத்து வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தான். ‘குழந்தைகள் பிறந்து பத்து நாட்களாகப் போகுது; என்னிடம் சொல்ல வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவே இல்லை.’ என்று மிகவும் கோபம் கொண்டான். எனக்கும் கோபம் வந்துவிட்டது.
‘சரிதான்; இப்படியே புலம்பி புலம்பி எப்பாடும் படு!’ என்று இறக்கி விட்டேன் தான்; அது இப்படியாகும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையே!” என, அழுத அவன் காதலியின் உரு கார்த்திகேயன் மனக் கண்ணில் வந்து போனது.
“நான் அவன் வாழ்வில் இருக்கும் போதே, ‘வீட்டாரின் கட்டாயத்தில் கல்யாணம் செய்து அழைத்து வந்தேன்.’ என்று அந்தப் பெண்ணை ஊரிலிருந்து அழைத்துவர அமைதியாகத்தான் இருந்தேன். அந்தப் பெண் அப்படியில்லை. என்னைப் பற்றி அறிந்ததும் இவனை வேண்டாம் என்று உதறிவிட்டாள்.
அதற்குப் பிறகும் அவள் பின்னால் போக நினைத்ததில் எனக்கும் அடங்காத கோபம். அந்தப் பெண் வேறு வாழ்வு தேடிக் கொள்ளப் போகிறாள் என்றும், அதைவிட அவமானம் தனக்கு எதுவுமே இல்லை என்று ஒரே அட்டகாசம்.” இப்போது வெறுப்புடன் சொன்னாள் அப்பெண்.
“இறங்கிய வேகத்தில் பாதையைக் கடக்கும் பொழுது, அந்த இடத்தில் ஆளை எதிர்பாராது வந்த கார்க்காரன் இடித்து விட்டான்.” தொடர்ந்து அலறினாள் அவள்.
வயிற்றில் குழந்தையும் கையில் சிறுவனையும் பிடித்துக்கொண்டு அவள் நின்ற கோலம் நிச்சயம் மனதை இளக்கவே செய்தது! இதற்கு யார் பரிகாரம் செய்ய முடியும்? தாமே வரவைத்துக் கொண்டவை அல்லவா இவை!
“என் கண் முன்னாலேயே உயிர் போய்ட்டுது.” என்றவள் மதுராவையும் கண்டபடி திட்டித் தீர்த்திருந்தாள்.
‘நேற்றிரவு நடந்ததை இன்றிரவுச் செய்தியில் சொல்லி இருக்கிறார்கள்.’ மனதுள் சொல்லிக் கொண்டான் கார்த்திகேயன்.
‘சதிஷுக்குத் தெரியாது போல!’ நினைத்தவனுக்கு, சதீஷ் ‘பெர்லின்’ போய் இன்னும் வரவில்லை என்பது அப்போதுதான் நினைவு வந்தது.
‘ஹ்ம்ம்…அவன் மதுராவின் காலைச் சுற்றிய பாம்பு; கொடிய விஷப்பாம்பு. குழந்தைகளைச் சுட்டிக்காட்டி இவளை உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பான். கடவுளாகப் பார்த்து அவனுக்கு முடிவு எழுதிவிட்டார்.’ நினைத்தவாறே எழுந்து மதுராவின் அறைக்குள் எட்டிப் பார்த்தவன் திடுக்கிட்டுவிட்டான்.
அறையின் ஒருபுறம் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த நித்தி இளைய குழந்தைக்கு பால் பருக்கிக்கொண்டிருந்தாள்.
கட்டிலில் அமர்ந்திருந்த மதுராவின் கரம் குழந்தையின் வாயில் பால் புட்டியை வைத்திருக்க அவள் கவனமோ அங்கில்லை. முன்னே வெறித்தபடி, குழந்தையின் கடைவாயினால் பால் வழிவதையும் உணராது அமர்ந்திருந்தாள் மதுரா.
“ராது! இதென்ன வேலை? பிள்ளைக்குப் புரையேறப் போகுது. பால் வெளியே வடியுது.” அதட்டியவன் குரலில் திடுக்கிட்டு மீண்டவள், விழிகளை நிறைத்திருந்த நீரை இமைமூடி வெளியேற்றியவாறே குழந்தையைப் பார்த்தாள்.
ரோஜாமொட்டு இதழின் இருபுறமும் பால் வடிய அரைக்கண் மூடலில் சொகுசாகக் கிடந்த மகளைப் பார்த்தவள் நெஞ்சைப் பிசைந்தது என்பதுதான் உண்மை.
கிட்டத்தட்ட இருவருடங்கள், தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்ததே அவர்கள் மணவாழ்வு! அதன் அடையாளமல்லவா இக்குழந்தைகள்!
கண்ணீருக்கோ, இரக்கம், பச்சாத்தாபத்துக்கோ சற்றும் அருகதையற்ற உறவாகிப் போனவனே என்றாலும், நெஞ்சிலிருந்து வழித்துத் துடைத்து விட்ட உறவென்றாலும், வாழ்ந்த நாட்களின் நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் மறந்து போகுமா?
காப்பாற்ற வேண்டியவனே காலைச் சுற்றிய பாம்பாகிவிட்டான் தான்.
தன்மீதே அத்தனை தப்பையும் வைத்துக்கொண்டு, சற்றும் சளைக்காது உன் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிய பின்னும் பின்னால் வந்து வம்பு செய்து, ‘தப்பித் தவறியும் உன்வாழ்வில் நிம்மதி உருவாக இடம் கொடேன்!’ என, நின்றான் தான்.
ஆனாலும், ‘அவனின் இந்த அகால முடிவு?’ மீண்டும் கண்ணீர் தளம்பியது.
‘இருந்தும் இல்லையென்றாகிய தந்தை உறவு இனி இல்லவே இல்லை.’ முனகிய மனமும் கசியவே செய்தது.
இன்னொரு வாழ்வு பற்றி தான் துளியும் எண்ணாது குழந்தைகளே வாழ்வு என எதிர்நீச்சல் போட முயல்கையில், அடைக்கலம் தந்த கார்த்திகேயனோடு தன்னை இணைத்து, ‘ச்சே..இவன் எல்லாம் ஒருமனிதப் பிறப்பா?! அவனுக்கு வந்த முடிவு சரிதான். ’ சட்டென்று கடினப்பட்டது அவள் மனம்.
இவளின் மனப்போராட்டம் செவ்வனே நிகழ்ந்து கொண்டிருக்க, மடியில் கிடந்த குழந்தையைத் தூக்க முயன்றான் கார்த்திகேயன்.
“ச்ச்சு! ச்ச்சு! குட்டிச் செல்லம் வாங்கோ வாங்கோ.” கொஞ்சிக்கொண்டே சுவாதீனமாகத் தூக்க முனைய,திடுக்கிட்டு சுயவுணர்வடைந்தாள் மதுரா.

