சற்றுமுன் கேட்ட செய்தி ஒன்றுமே இல்லையென்றளவில் அமைதியாக இருந்தது கார்த்திகேயனின் முகம். குழந்தைகளைக் காண்கையில் அவனை ஆக்கிரமிக்கும் பரவசமும் கனிவுமாக, பார்த்துப் பார்த்து மடியிலிருந்தவளைத் தூக்க முனைய, பார்த்திருந்த மதுராவின் மனமோ விறைத்துப் போனது.
கணேஷ், இவனைத் தன்னோடு இணைத்துச் சந்தேகம் கொண்டது, அது ஒன்றும் முழுவதும் பொய்யில்லையே எனும் வகையிலான இவனின் வெளிப்படையான நடவடிக்கைகள் என, ஒவ்வொன்றும் மின்னலென நினைவில் உரச, தன்னையும் மறந்து அவனைப் பிடித்து தள்ளிவிட்டாள்.
“என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும். எப்போதுமே உங்க உதவி எனக்குத் தேவைப்படாது. இதை எத்தனை தடவைகள் தான் உங்களுக்குச் சொல்வது? இந்த அறையை விட்டு வெளியே போங்க.” பெருங்குரலில் கிரீச்சிட்டாள்.
அவளின் ஆவேசக் குரலில் மடியில் கிடந்த குழந்தையின் உடல் ஒருதரம் அதிர்ந்து அடங்கியது.
அதிர்வோடு அவளைப் பார்த்த கார்த்திகேயன் சட்டென்று தங்கையைப் பார்த்தான்.
மதுராவின் இத்தகைய சீறல் நித்திக்கு முற்றிலும் புதிதல்லவா? அதோடு, ‘என் அண்ணாவை ஒருவர் அவமதிப்பதா? அதுவும், ஒன்றொன்றாக பார்த்துப் பார்த்து இவரை நாங்கள் கவனித்துக் கொள்ள, சற்றும் யோசியாது இப்படிச் சொல்வதா? முதல் ஏன்?’ மனம் குழம்பினாலும் அவள் முகத்தில் பயம் பரவி, விழிகள் கலங்க, பால் பருக்கிய குழந்தையை அணைத்துக்குக்கொண்டே சட்டென்று எழுந்துவிட்டாள்.
நடந்தது இதுதான் என்று தெரியாதவளுக்கு மதுராவின் முகம் பிரதிபலித்த உக்கிரத்தில் மனதில் நடுக்கம் சுரக்க, “நீங்க வெளியே போங்கண்ணா; ப்ளீஸ்ணா.” அழுதே விட்டாள் நித்தி.
தங்கையின் கலக்கத்தையும் மதுராவின் சினத்தையும் அளவிட்டவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
அவன் உருமறைந்த பின்னரே மதுராவின் மூச்சுச் சீரானது! சட்டென்று உள்ளுக்குள் தொய்ந்தாள். உடல் பஞ்சாகிப் பறக்க, மனமோ பெரும் பாராங்கல்லின் கனத்தை உணர மிகவும் தத்தளித்துப் போனாள்.
மடியில் கிடந்த குழந்தையின் அசைவிலும் சிணுக்கத்திலும் மெல்ல உணர்வு பெற்றவள், அப்போதுதான் கண்ணீரும் பயந்த பார்வையுமாக நின்ற நித்தியை உணர்ந்தாள்.
“நித்திம்மா..” தழுதழுத்தாள் மதுரா.
“ஸா..ரி..டாம்மா ஸாரி.” விழிநீரோடு சொல்ல, விரைந்து அவளருகில் நெருங்கினாள் நித்தி.
“என்னாச்சு மதுரா! திடீரென்று ஏனிப்படி நடந்து கொள்ளுறீங்க?! அண்ணா அப்படி என்ன செய்தார்?” என்றவள் குரலில் இப்போது கோபம் தலைகாட்டியது.
“உங்க வீட்டிலிருந்து கொண்டே அவரை…” தடுமாறியவள் விம்ம, “என்ன நடந்தது என்று கேட்டேன் மதுரா; எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்த செய்தியில் அப்படி என்ன சொன்னார்கள்?” அழுத்திக் கேட்டவள்,
“முதல் பாப்பாவைப் பாருங்க! அய்யோ தலையெல்லாம் நனைந்திருக்கு மதுரா.” மதுராவின் மடியில் இருந்த குழந்தையைத் தொட்டுப் பார்த்துவிட்டு, தன் கரத்திலிருந்தவளை தொட்டிலில் கிடத்திவிட்டு வர, எழுந்த மதுரா, தன்னிடமிருந்த குழந்தையைச் சுத்தப்படுத்த ஆரம்பித்திருந்தாள்.
குழந்தையைச் சுத்தப்படுத்தி தொட்டிலில் போட்டுவிட்டு வருவித்துக் கொண்ட அமைதியுடன் நித்தியை ஏறிட்டவள் செய்தியைச் சொல்லச் சொல்ல, அதைக் கேட்ட நித்தியோ, சிறகின்றியே மகிழ்வெனும் வானில் ஆரவாரத்தோடு பறக்கத் தொடங்கினாள்.
‘அந்த ராஸ்கல் இறந்து போனானா? ஹூர்ரேரேரே!’ நித்தியின் உள்ளம் அடைந்த ஆனந்தத்திற்கு அளவேயில்லை. எழுந்து நின்று துள்ளி ஆர்ப்பரிக்கும் ஆவலை அடக்கப் பெரும்பாடு பட்டுவிட்டாள் அவள்.
‘அவனுக்கு யார் தக்க தண்டனை வழங்குவது?’ மனதுள் குமைந்து கொலைவெறியில் இருந்தாளே! அதுவும், தான் டூர் போயிருந்த போது அவன் இங்கு வந்து செய்த ரகளையை, நிறைமாதமாக இருந்தவளை தள்ளி விட்டதை, அன்று வைத்தியசாலையில் இவர்கள் பட்ட பாட்டையெல்லாம் தமையன் சொல்லக் கேட்டவள், “அவனை என்ன செய்தாலும் எனக்கு அடங்காது!” என்று கொதித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னொருதரம் என் கண்ணில் பட்டான் என்றால் கட்டாயம் கேள்வி நியாயம் இல்லாமல் காலில் கிடப்பதால் விளாசுவேன்.” தமையனிடம் சொல்லியிருந்தாள்.
அப்படி இருந்தவளுக்கு, அவன் இறந்தான், அதுவும் அகோர மரணம் என்ற செய்தி, தேனாகச் செவிகளை நனைத்து உள்ளத்தை குளிரச் செய்ததில் வியப்பில்லையே!
“அட! என்ன மதுரா நீங்க? இதற்குத்தானா இப்படி இருந்தீங்க! நானும் என்னவோ ஏதோ என்று நினைத்து விட்டேன்.” சொல்லிக்கொண்டு வந்தவள் நிறுத்தி, நிதானமும் கூர்மையுமாக மதுராவை உற்றுப் பார்த்தாள்.
“ஏன் மதுரா, அவன் செத்துவிட்டான் என்பதில் உங்களுக்கு வருத்தமா?” என்றவளுக்கு, அக்கேள்வியில் அபத்தம் சிறிதும் இருப்பதாகத் தெரியவில்லை.
நித்தியின் மகிழ்வை உணர்ந்த மதுராவோ சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள்.
அவள் கேள்விக்கு, “எனக்கு அப்படியொரு வருத்தமும் இல்லவே இல்லை.” என, தீர்மானமாகப் பதில் தர முடியவில்லை அவளால்.
மதுராவின் அமைதியில் உள்ளத்தில் புஸுபுஸு வென கோபம் சுரக்க, அவள் முகத்தைப் பிடித்துத் தன்புறம் திருப்பினாள் நித்தி.
“அப்போ, அவன் மனதில் உள்ளதுதான் உங்க மனதிலும் இருந்ததா மதுரா? எப்போதாவது அவனோடு சேர்ந்து வாழலாம் என்று இருந்தீங்களா?” அவள் குரலின் கூர்மையில், “நித்தீ!” கூவலோடு எழுந்தாள் மதுரா.
“ஏன் மதுரா, நான் கேட்டதில் என்ன தப்பு? அவனுக்கு அதுதானே அடிமனதில் இருந்திருக்கு. அன்று போலீஸ் ஸ்டேசனில் வைத்து அண்ணாவிடம் சொல்லிவிட்டுத்தானாம் சென்றான். அதை அண்ணா உங்களிடம் சொல்லவில்லை. அப்போ நீங்க இருந்த நிலையில் எந்தக் குழப்பமும் கூடாது என்று விட்டு விட்டார். பிள்ளைகளை வைத்தே உங்களை தன்னிடம் வரவைக்கிறேன் என்று சவால் விட்டுச் சென்றானாம்.” என்று சொல்லி மதுராவை மரத்துப் போக வைத்தாள்.
மதுராவின் அமைதியும் அவள் அதிர்ந்து கலங்கி நின்ற நிலையும் சற்றுமுன் தமையனோடு சீறியதும் சேர, நித்தியின் மனம் முற்றிலும் கோபத்தின் பிடியில் சிக்கிக் கொண்டது.
“உங்களுக்கு அவன் செய்தது ஒன்றா இரண்டா மதுரா? இத்தனைக்கும் பிறகு, அவனுக்காக கண்ணீர் விட உங்களால் எப்படி முடியுது! பெரிதாகத் தனது குழந்தைகள் என்று தம்பட்டம் அடிப்பவன், அன்று உங்களைப் பிடித்து தள்ளி விட்டான் தானே! உங்களை விடுங்க; அவன் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால்! இதெல்லாம் கொஞ்சமும் யோசித்தே பார்க்க மாட்டீங்களா மதுரா? உங்க கண்ணீருக்கோ அனுதாபத்துக்கோ துளியும் தகுதியில்லாதவன் அவன். அதற்கும் மேல, ‘இல்லை நான் கண்ணீர் விடுவேன்; அவன் தான் எனக்கு முக்கியம்.’ என்று நினைத்தால் தாராளமாக விடுங்க; நல்லா அழுங்க மதுரா; யார் வேண்டாம் என்றா!” குரலை உயர்த்திய நித்தி மதுராவுக்கு முற்றிலும் புதியவள்.
அந்தக் கயவனுக்காக தன் அண்ணாவை அவமதித்ததை அவளால் சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை.
“நீங்க அந்தளவுக்கு வெறுக்கும் வகையில் அண்ணா என்ன மதுரா செய்தார்? நான் முதலும் சொன்னேன்; உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் அதை உறுதியாகச் சொல்லி விட்டு பேசாது இருங்க. இப்போதெல்லாம் அவர் உங்களிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்வதை நான் காணவில்லையே. குழந்தைகளோடுதானே பேசுகிறார். அதற்கும் எங்களுக்கு உரிமை இல்லையா?
நீங்க எல்லாம் யார் என்று கேட்டாலும் கேட்பீங்க போலிருக்கே! சுதா சித்தி ஒருபுறம் அக்கா ஒருபுறம் அண்ணாவோடு ஒரே பிரச்சனை; எல்லாம் உங்கள் விடயமாகத்தான்.
அண்ணாவின் விருப்பத்திற்கு நான் அமைதியாகச் சம்மதிக்க ஒரே ஒரு காரணம்; உங்க மீதிருந்த அன்பு மட்டும் தான். ஆனால், அதை நீங்க …பச்…எதுவுமே தானாகத் தேடி வந்தால் அதன் அருமை புரியாது மதுரா; புரியாது. இழப்பமாகத்தான் இருக்கும்.” படபடவென்று பேசியவள், “இனி ஒருதரம் அண்ணா உங்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார். இது நான் தரும் உறுதி.” விசுக்கென்று வெளியேறினாள்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்தில் அறைய, உற்ற உறவாகியிருந்தவளின் கடுமை ஆடச் செய்துவிட, மிகவும் கலங்கிப் போனாள் மதுரா.
நித்தியின் கோபத்தை சகித்துக் கொள்ளும் மனோதிடத்தை சற்றும் பெற முடியாது, “நித்திம்மா…” அவள் பின்னால் தானும் விரைந்தாள்.

